காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது பெருந்தவறு! | தினகரன் வாரமஞ்சரி

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது பெருந்தவறு!

நாட்டை பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று அமைச்சர் பிரசன்னரணதுங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு வழங்கியபேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரித்தார்.

கே: புதிய பிரதமர் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் மூலம் நாடு எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, சமூகப் பிரச்சினை ஆகிய மூன்றும் நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாகும். பொருளாதார நெருக்கடி என்பது நாடு நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். கொவிட் -19தொற்றுநோய் காரணமாக வெளிநாட்டு கையிருப்பு வெகுவாகக் குறைந்ததுடன், சுற்றுலாத் துறை கடுமையான பின்னடைவைச் சந்தித்தபோது, கடந்த பல ஆண்டுகளாக உருவாகிய பிரச்சினைகள் எம்முன்னால் காணப்படுகின்றன.

இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொவிட்-19தொற்றுநோயைக் கட்டுப்படுத்த செலவழித்த பெரும் தொகைப் பணம் மற்றும் கடன்களுக்காக செலுத்தப்பட்ட பணத்தின் காரணமாக போதிய டொலர் எமது கையிருப்பில் இல்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், நாங்கள் கடன்கள் மற்றும் திறைசேரிப் பத்திரங்களைப் பெறவில்லை. ஆனால் 5ஆண்டுகளுக்குள் அடைக்க வேண்டிய கடனை நாங்கள் செலுத்த வேண்டியிருந்தது. இதனை நாம் ஒரு சாட்டாகச் சொல்லவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதை இடைநிறுத்தவும், வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தை நாங்கள் கண்டதால், நமது வெளிநாட்டு கையிருப்புகளைப் பாதுகாப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக, 2020இல் கொவிட்-19தொற்றுநோய் உருவானது. அதன் விளைவாக நமது வெளிநாட்டு இருப்புக்கள் வெகுவாகக் குறைந்தன. சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாகப் பழகும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிலையைப் போக்குவதற்கு சில முயற்சிகளை மேற்கொள்வார் என நம்புகிறோம். இருப்பினும், இது முற்றிலும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை அல்ல.

இரண்டாவதாக, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எமக்கு டொலர்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் சுமார் 100,000சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை 4,000ஆகக் காணப்பட்ட நிலையில், இது தற்பொழுது 1000இற்கு கீழ் குறைந்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை குறைப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. நாடு தழுவிய போராட்டங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததையும் காண முடிந்தது.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முற்பட்ட போது அது உச்சக்கட்டத்தை எட்டியது. இந்தச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துள்ளது. முன்னணி சோசலிசக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கியன இந்தப் போராட்டங்களின் பின்னணியில் உள்ளன. அதை அவர்கள் முகநூலில் பிரசாரம் செய்யும் விதத்தில் பார்க்கலாம். அவர்கள் கைகோர்த்து எங்கள் வீடுகளைத் தாக்க வந்தனர். எனவே, திங்கட்கிழமையும் அதன் பின்னரும் நடந்த கலவரச் சம்பவங்களின் பின்னணியில் சதி இருப்பதைப் பார்க்கிறோம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், நாட்டில் அமைதியான சூழலை உருவாக்கவும் அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும். கொழும்பில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்ற போது கிராம மட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்பதை போராட்டக்காரர்களுக்கு உதவும் மதத்தலைவர்களும் உணர வேண்டும். திங்கட்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து, பாதாள உலக பிரமுகர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் உதவியுடன் பல அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த வீடுகளில் உள்ள சொத்துகளை மற்றவர்கள் சூறையாட முன்வந்து மக்களைத் தூண்டிவிட்டு ஒதுக்கி வைத்தனர். இந்த வன்முறைச் செயல்களுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்.

மூன்றாவதாக, அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால், அவர்களின் சொத்துகளை கணக்காய்வுகளுக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்காய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தை கேட்குமாறும் நான் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். எந்தவொரு அரசியல்வாதியும் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டிருந்தால், அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். 225நாடாளுமன்ற உறுப்பினர்களும் தியாகம் செய்ய வேண்டும். முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் நாம் அதிக தியாகங்களை செய்துள்ளோம். நாட்டின் சார்பாக இன்னும் பல தியாகங்கள் இருந்தால் அதைச் செய்ய வேண்டும்.

கே: காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று, அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நாட்டில் ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு ஆட்சியில் இருக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல், 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்போதைய ஆட்சியில் இருந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, காலிமுகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாமே பொறுப்பேற்க வேண்டும். காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்களை வன்முறை கும்பல் சென்று தாக்கியது முற்றிலும் தவறானது. அவர்கள் செய்தது முற்றிலும் தவறு என்று நாங்கள் கண்டிக்கிறோம். அது நடந்திருக்கக் கூடாது.

பிரதமர் இராஜினாமா செய்யப் போகும் போது அவருக்கு ஆதரவளிப்பதற்காக கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழுவினர் காலிமுகத்திடலில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த மக்களைத் தூண்டிவிட முயற்சித்தது தவறு. இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை தாக்க சில பிரிவினர் போதைக்கு அடிமையானவர்களின் துணையுடன் முயற்சிப்பதும் தவறு. அப்படியானால், 2019உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமான மக்கள் காயமடைந்தனர்.

அச்சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, அலரிமாளிகைக்கு மக்களை அழைத்து வந்த பேருந்துகளைத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று சிலர் மக்களிடம் கோரியதைக் காண முடிந்தது. இருப்பினும், இந்த இரண்டு சம்பவங்களிலும் அவர்கள் இரு வேறு நிலைப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர். திங்கட்கிழமையும் அதற்குப் பின்னரும் நடந்த அந்தக் கலவரச் சம்பவங்களுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது.

திங்கட்கிழமை நடந்த சம்பவங்கள் முற்றிலும் தவறானவை என்றும், இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதைச் செய்திருக்கக் கூடாது என்றும் நாங்கள் திட்டவட்டமாக கூறுகிறோம்.

அந்தச் சம்பவங்களின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரிகள் உள்ளனர் என்பதை பொறுப்புடன் கூற விரும்புகின்றேன். எனவே, நான் முன்பே கூறியது போல், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உண்மையில், நான் அலரிமாளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அல்லது அந்த எதிர்ப்பாளர்களைத் தாக்குவதற்காக காலிமுகத்திடலுக்குச் செல்லவில்லை. அந்தச் சம்பவங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவன் நான். பிறகு எப்படி என் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது? அவர்கள் என் வீட்டிற்கு தீ வைப்பதற்கு முன் உடைமைகள் கொள்ளையிடப்பட்டன.

கே: முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்துள்ள நிலையில், ஜனாதிபதி பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி நீங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கர்தினால் மற்றும் வண. ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் இதனை விமர்சித்தனர். உண்மையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற ஒரு அரசாங்கத்தின் பிரதமர்தான் தனது இராஜினாமாவைச் சமர்ப்பித்தார். மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 6.9மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யுமாறு சில பிரிவினர் கோருகின்றனர். அப்படியானால் அதுவும் தவறு. இது அவர்களின் இரட்டை வேடத்தை தெளிவாகக் காட்டுகிறது. இந்தச் செயல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் கண்டறிய முயற்சிப்பார்கள். அங்கு அமைதியான போராட்டம் நடத்தப்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். அந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியும். கிராமங்களில் உள்ளவர்கள் இதுபோன்ற போராட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்களா?

நாட்டில் நெருக்கடியான சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும். நாடு அராஜகமாக மாறினால், மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் கட்சிகள் புரட்சிகரமான அரசியல் நெருக்கடியை உருவாக்கி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும். ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர் வரவேற்கப்பட்டதே தவிர, தாக்கப்படவில்லை. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவோ அல்லது நாமோ அங்கு சென்றால், நாங்கள் தாக்கப்படுவோம். எனவே, இது ஏன் நடக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

அர்ஜூன்

Comments