ஐந்து கவிதைத் தொகுப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு லண்டனில் | தினகரன் வாரமஞ்சரி

ஐந்து கவிதைத் தொகுப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு லண்டனில்

'யுத்தம், காதல், வாழ்வின் சலிப்பு, கையாலாகாத்தனம், காலத்தின் கொடூரம், சின்ன விஷயங்களைக் கொண்டாடும் மனோநிலை, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் கேலிக்கூத்து என்பன பற்றிய அனுபவங்கள் தர்மினியின்'அயலாள் கவிதைகள் ' நூலில் மலர்ந்திருக்கின்றன. புலம்பெயர் வாழ்வின் வலியும் இயலாமையும் விரக்தியும் தர்மினியின் கவிதைகளில் இழையோடுகின்றன. உண்மைகளுக்கு நெருக்கமாக அவரின் கவிதைகள் அமைந்திருப்பது அவரது கவிதையின் சிறப்பு' என்று விமர்சகர் கஜமுகன் லண்டனில் சென்ற சனிக்கிழமை (14.5.22) நடைபெற்ற 'கவிதை வனைத்த உலகு' என்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்தார். 

கோகுலரூபன் தலைமையில் கிழக்கு லண்டனில் நடைபெற்ற கவிதை விமர்சன நிகழ்வில் 'செல்வி - சிவரமணி கவிதைகள்' பற்றி அஞ்சனா உரையாற்றியபோது, ' பெண்ணியவாதிகள் என்ற பதத்தை இன்று கூட சரிவரப்புரிந்து கொள்ள முடியாத சூழல் ஐரோப்பாவிலேயே நிலவும்போது எண்பதுகளில் யுத்த நெருக்கடிகளுக்குள் முற்போக்குச் சிந்தனைகளோடு போராடிய செல்வி, சிவரமணி போன்றோர் உன்னத நாயகிகளாகவே செயற்பட்டிருக்கிறார்கள். மனவலிமையுடனும், உத்வேகத்துடனும் இப்பெண்கவிகள் தங்கள் காலத்தில் செயற்பட்டவிதம் இன்றும் நமக்கு பெரும் மனவலிமையைத் தருகிறது' என்று குறிப்பிட்டார். 

'கடத்தலும் காணாமல் போதலும் கொலைகளும் மலிந்துபோன யுத்த சூழ்நிலையில் இப்பெண்மணிகள் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து, மக்களிடமிருந்து வெளியேறிவிடாமல் தங்கள் உயிரை அர்ப்பணித்திருப்பது முக்கிய வரலாற்று செய்தியாகும்' என்று 'பனிமலர்' இதழாசிரியர் நா.சபேசன் தெரிவித்தார். 

'மலையக மக்கள் மீதான அக்கறை முக்கியமானது என்ற கருத்தினை வலியுறுத்தி, அந்த உறுதியை மேற்கொள்ளும் உத்வேகத்தை சி.கிருஷ்ணபிரியனின் 'மூதன்னையின் பாடல்' கவிதைகள் நமக்குள் ஏற்படுத்துகின்றன.

 

ஒரு பொறுப்பற்ற சமூகத்தின்மீதான கோபத்தை வெளிப்படுத்தும் இவரது கவிதைகள், சிறியதுயரத்தையேனும் கடந்து செல்லமுடியாத எமக்கு எப்படி பசித்தவனை, நைந்து மெலிந்தவனை கடந்து செல்லமுடிகிறது என்ற ஏக்கத்தில் முடிகின்றன.

ஆற்றாமைகளும் துயரங்களும் வாழ்வில் நிறைந்து போய்க்கிடந்தாலும், எல்லாத் துயரங்களுக்குப் பிற்பாடும் ஒரு வாழ்க்கை மீதமிருக்கிறது என்றும் அது மகிழ்ச்சிக்காக மாத்திரமே காத்திருக்கிறது என்றும் இவது கவிதைகள் ஒலிக்கின்றன.

நம்பிக்கை என்ற ஒற்றைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டுதான், இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை நம்முள் கிருஷ்ணபிரியன் விதைக்கிறார்' என்று வேணி சதீஸ் தனது விமர்சன உரையில் தெரிவித்தார்.  

'மலையகத்தின் இடதுசாரிக்கவிஞராகத் திகழும் கிருஷ்ணபிரியன் மலையக மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தை வலியுறுத்தி, எளிமையான மொழியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையும் நோக்கில் தனது கவிதைகளை ஆக்கியிருப்பது சிறப்பானதாகும். மூதன்னை என்ற படிமம் மனதில் எத்தனையோ உணர்வுகளை எழுப்பிச் செல் கின்றன. மூதன்னையின் பாடல் என்ற தலைப்பே அற்புதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன' என்று 'நிறமற்ற மனிதர்கள்' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியை பூங்கோதை தனது உரையில் தெரிவித்தார். 

'கருணாகரனின் காட்சிப்படுத்தல்களும் அலாதியான கற்பனையும் புதுமை நோக்கும் அழகியலும் அவரது கவிதைகளுக்கு புதிய மெருகு சேர்க்கின்றன. இரவு என்பதையே ஒரு மனிதனாக உருவகித்து தனது கற்பனை வீச்சை தனது 'இரவின் தூரம்' என்ற கவிதைத்தொகுப்பிலே நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கவிதையின் வடிவமும் பாடுபொருளும் வாசகனை நன்கு ஈர்ப்பனவாய் உள்ளன ' என்று மாதவி சிவலீலன் தனது விமர்சன் உரையில் குறிப்பிட்டார்.  

'ஈழத்துக் கவிஞர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அரிய பணியை இம்மாதிரி விமர்சன அரங்குகளே முன்னெடுக்கின்றன. யாப்பு சிம்மாசனத்தில் வீற்றிருந்த காலம் போய், கருத்துகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு , புதிய வீச்சுடன் எழுந்திருக்கும் புதுக்கவிதையின் செழுமையை கருணாகரனின் 'இரவின் தூரம்' கவிதைகள் புலப்படுத்துகின்றன. கருணாகரனின் கவிதைகள் இத்தொகுப்பில் புதிய களத்தில், விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் வலியோடும் துயரோடும் போராடும் மனநிலையில் எழுதப்பட்டுள்ளன.

மோதலில் ஆரம்பித்து, காதலாகிக் கசிந்து முடிகிற தன்மையில் இயல்பான வரிகளில் வந்திருக்கின்றன. விரிந்து பரந்த ஈழத்துப் பூங்காவில் 'இரவின் தூரம்' நிலைபெற வல்லது' என்று விமர்சகர் மயூரன் கருத்துத் தெரிவித்தார். 

'அகதிகளை சட்ட விரோதக் குடியேறிகளாகக்கருதி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் முப்பது ஆண்டுகளாக வாழும் விஜிதரனின் கொடூர வாழ்வின் பாடுகளை 'குருதி வழியும் பாடல்' கவிதைத்தொகுப்பு வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 'மொழி கொண்டு ஒன்றாவோம் என்று கூவித்திரிகையில், மொழி ஒன்றாகினும் நிலம் வேறான பரதேசிகளில் நானும் ஒருவன்' என்று குரல் தரும் தமிழகத்து மலையக அகதி ஒருவரின் குருதி வழியும் பாடல் இந்தக்கவிதை. உலகின் மிக இழிந்த வர்க்கமாக தொழிற்படும் கியூ பிராஞ்சின் வதைகள் சகித்துக்கொள்ள இயலாதவை.

இவர்களின் கைகளில் ஈழத்து அகதிகள் படும் அவஸ்தையை விஜிதரன் தனது அனுபவத்திலிருந்து கவிதைகளாக வடித்திருக்கிறார்' என்று அரசியல் செயற்பாட்டாளர் தோழர் வேலு தனது விமர்சன உரையில் தெரிவித்தார். 

கவிதைத்தொகுப்புகளின் வித்தியாசமான தேர்வும், பெண் விமர்சகிகள் பெருமளவு பங்கு கொண்டதும், பெருந்தொற்று நோய்க்குப்பின்னரான கூட்ட ஒழுங்கும் குறிப்பிட்டுக்கூற வேண்டிய அம்சங்களாகும். 

மயிலங்கூடலூர் நடராஜன், 'நடு' கோமகன், ஐ.தி.சம்பந்தன் ஆகியோரின் மறைவிற்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  

பதினெட்டு ஆண்டுகளாக கலை, இலக்கியம், சினிமா, ஓவியம் என்று கனதியான செயற்பாட்டை மேற்கொண்டுவந்த விம்பம் அமைப்பு, பெருந்தொற்றுக்குப் பின்னர் லண்டனில் நிகழ்த்திய இரண்டாவது தொடர் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments