தேசிய பேரிடருக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம் | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

தேசிய பேரிடருக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம்

பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்று வந்த சமயத்தில் பிரதமராக ரணில் பதவியேற்கலாம் என்ற தகவல் முகிழ்ந்தது. அவர் பதவி ஏற்றதும், ராஜபக்‌ஷ குடும்பத்தைக் காப்பாற்றுபவர் என்றுதான் முன்னரேயே சொல்லி விட்டோமே என்று பல அரசியல்வாதிகள் அடித்துச் சொன்னார்கள். சரி, அவர் இச் சமயத்தில் இப்பதவியை ஏற்காது விட்டிருந்தால் வேறொருவர் வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தபோது அந்த எதிர்ப்பு மங்கிப் போனது. பிரதமர் பதவி என்பது ரோஜா மலர்ப்படுக்கையாக இருக்கலாம். ஆனால் அது முள்படுக்கையான பின்னர் அதை விரும்பி ஏற்க ஒருவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்! இதை உணர்ந்த பின்னர் இந்தப் புதிய அரசுக்கு - அவர் குடும்பத்தை காப்பவரா இல்லையா என்பதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு - ஆதரவு அளிப்பதே உண்மையான தேச பக்தி என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் இன்று உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது.

கட்சிகள் மத்தியில் கொள்கை வேறுபாடுகளும், தனி மனித வெறுப்பு, விருப்புகளும் இருக்கலாம். ஆனால் தேசிய பேரிடர் ஒன்றின்போது கட்சி அரசியலை மூட்டை கட்டிவைத்து விட்டு தேசிய நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பதே உண்மையான அரசியல்வாதிகளின் கடமையாக இருக்க வேண்டும். தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை தற்காலிகமானது.

இந்த அரசும் தற்காலிகமானது. இந்த பிரதமர் பதவியும் தற்காலிகமானதே. நாட்டை தூக்கி நிறுத்தி பயணப்பாதையில் மீண்டும் பயணிக்கச் செய்யும் ஒரு கடினமான முயற்சியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஈடுபட்டுள்ளார். இவருக்கு தற்போது உதவுவதை அல்லது இக்கடினமான பணியில் தோள் கொடுப்பதை குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சி என்றும் அரசின் இழந்த செல்வாக்கை கட்டி எழுப்பும் சதி முயற்சி என்றும் விஷமத்தனமாக விளக்கமளிப்பது ஒரு மட்டமான அரசியலாகவே பார்க்கப்பட வேண்டும்.

இது நாட்டுக்காக கை கொடுக்க வேண்டிய தருணம். கட்சி அரசியல் செல்வாக்கை கட்டிக் காக்கும் தருணம் அல்ல. அந்த வகையில் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏனையோர் உதாரணமாகக் கொள்ள வேண்டும். அவர்கள் தாம் கட்சியைத் துறக்கவில்லை. மக்களுக்கான அரசியல்வாதி என்ற வகையில் இக்கட்டான சூழலில் அரசுக்கு கை கொடுக்கவே அமைச்சு பொறுப்புகளை ஏற்றோம் என்று தெரிவித்துள்ளனர். நாட்டுக்காக உழைப்பதுதானே அரசியல்வாதியின் பணி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன் நிலைப்பாட்டைக் கை விட்டு அமைச்சு பொறுப்புகளை ஏற்க முன்வரவேண்டும். இந்த அமைச்சு பொறுப்புகளை ஏற்போருக்கு சம்பளம், சலுகைகள் கிடையாது என பிரதமர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனவே இது ஒரு மக்கள் சேவை என்பது வெளிப்படையானது. எனவே இணைவோர் தியாகிகளாகவே பின்னர் பாக்கர்ப்படுவார்கள். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்பது வேறு அதே ஆதரவை உத்தியோகபூர்வமாகவும் தன் திறமை,அனுபவத்தை பயன்படுத்தியும் நேரடியாகத் தருவது என்பதுவேறு. சுமந்திரன், மனோ கணேசன், சி.வி. விக்னேஸ்வரன், ரிஸாத் பதியுதீன் போன்றோர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

Comments