எமக்கு முன்னால் தென்படுவது சவால்கள் நிறைந்த எதிர்காலம்! | தினகரன் வாரமஞ்சரி

எமக்கு முன்னால் தென்படுவது சவால்கள் நிறைந்த எதிர்காலம்!

பொருளாதார ரீதியிலும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையாலும் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. குறிப்பாக எரிபொருட்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்நிலைமையானது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதும் தன் முன்னால் காணப்படும் சவால் குறித்தும் நாட்டின் உண்மையான நிலைமை குறித்தும் பிரதமர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விபரமாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

'நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதை விட பயங்கரமான சவாலாகும். மிகவும் ஆழமானது. அதன் அடிப்பகுதியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் அகற்ற முடியாத பாதணிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்தச் சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன். எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தைப் பாதுகாப்பது அல்ல. முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதேயாகும். உயிரைப் பணயம் வைத்து இந்தச் சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்தச் சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்' எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் ஏற்றுக் கொண்டுள்ள சவால் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விபரித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதும் அவர்கள் தரப்பிலிருந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டனவே தவிர பொறுப்பை ஏற்பதற்கு அவர்கள் முன்வந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை அழைத்த ஜனாதிபதி, அவரை பிரதமர் பதவியில் நியமித்தார்.

நாடு மிகவும் மோசமான பின்னனடைவுகளைச் சந்தித்துள்ளமை நாம் அறிந்த விடயமாகும். கடந்த காலங்களில் நாடு பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உண்மையான தகவல்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் உண்மையான நிலைமையை விளக்கிக் கூறியிருந்தார்.

அவருடைய தகவல்களுக்கு அமைய, 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் 2.3ட்ரில்லியன் ரூபா வருமானமாக உள்ளது எனக் காட்டப்பட்டாலும், இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வுகூறல் 1.6ட்ரில்லியன் ரூபாவாகவே உள்ளது. அரசின் செலவு 3.3ட்ரில்லியன் ரூபா. எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி வீதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4ட்ரில்லியன் ரூபாவாகும். வருடத்திற்கான வரவுசெலவுப் பற்றாக்குறை 2.4ட்ரில்லியன் ரூபாவாக உள்ள அதேவேளை, அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13வீதமாகும்.

அதே போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200பில்லியன் ரூபாவாகும். மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1950மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணளவான மிகுதி 1250மில்லியன் ரூபா. அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000பில்லியனில் இருந்து 4000பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.

2019நவம்பர் மாதத்தில் எமது அந்நிய செலாவணி கையிருப்பு 7.5பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலரைக் கூட தேடிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக் கொடுக்க முடியாதுள்ளது.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75மில்லியன் அமெரிக்க டொலர்களை தேட வேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் ஒன்றினால் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19மற்றும் ஜூன் 01ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும், மே 18மற்றும் மே 29ஆகிய தினங்களில் இரண்டு பெற்றோல் கப்பல்களும் வரவுள்ளன. இன்றுவரை 40நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் 3நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்' எனவும் எதிர்காலத் திட்டம் பற்றிப் பிரதமர் குறிப்பிட்டார்.

மருத்துவ மருந்துகளுக்கான தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திரசிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 34பில்லியன் ரூபாவாகும்.

அதே போன்று அரச ஒளடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை. அதனால் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 14அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவுக்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இதற்கிடையில் 2022ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவுத் திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவுத் திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவுத் திட்டமாக முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும், தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டுமே அதனைச் செய்ய வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக் கூட தேட முடியாதுள்ளது. எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலகட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

'மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்த வகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தை விட மிகவும் கஷ்டமான காலத்திற்கு முகம் கொடுக்கப் போகின்றோம். இந்த நேரத்தில் நம்மால் கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன் பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்' என்ற உண்மையை பிரதமர் கூறினார்.

பிரதமரின் இந்த உரை நாட்டு மக்களுக்கு பொருளாதாரம் குறித்த உண்மையை உரைப்பதாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் மத்திய வங்கி மற்றும் திறைசேரி பொருளாதாரம் குறித்த உண்மையான தகவல்களையோ அல்லது சரியான புள்ளிவிபரங்களையோ வழங்கியிருக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. நாடு மோசமான நிலைக்குச் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் உண்மையை மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்யுக்தன்

Comments