இலங்கை – பங்களாதேஷ்; டெஸ்ட் தொடர் இன்று சிட்டகொங்கில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை – பங்களாதேஷ்; டெஸ்ட் தொடர் இன்று சிட்டகொங்கில் ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரின் 2வது அத்தியாயம் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன் முதல் சம்பியனாக நியூசிலாந்து மகுடம் சூடிக்கொண்டது. முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் தொடரில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட இலங்கை அணி இம்முறை இத்தொடரின் கீழ் இதுவரை தாம் சந்தித்த இரு டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் வெற்றிபெற்று 50சதவீத வெற்றியுடன் ஐந்தாவது இடத்திலுள்ளது. டெஸ்ட் உலகக் கிண்ண வரிசையில் இலங்கை அணி சந்திக்கும் முன்றாவது தொடராக பங்களாதேசுக்குச் சுற்றுப்பயணம் செய்து இருபோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று சிட்டகொங்கில் நடைபெறுகிறது. 

டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் கடந்த நவம்பர் மாதம் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடருடன் ஆரம்பமாகி 2023ம் ஆண்டு நடுப்பகுதிவரை ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற 12நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகளைத் தவிர ஏனைய 9நாடுகளும் இத்தொடரில் பங்குபற்றுகின்றன. ஓர் அணி மற்றைய ஆறு அணிகளுடன் 6தொடர்களில் விளையாட வேண்டும். இவ்வடிப்டையில் உள்நாட்டில் 3தொடர்கள், வெளிநாடுகளில் 3தொடர்களில் பங்குகொண்டு விளையாடி வருகின்றன. 

இதுவரை இலங்கை அணி பங்குகொண்ட இரு தொடர்களில் நடைபெற்ற 4டெஸ்ட் போட்டிகளில் இலங்கையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடன் நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் கடந்த பெப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற இரு போட்டிகள் கொணட தொடரில் தோல்வியுற்று 50சதவீத வெற்றியுடன் ஐந்தாவாது இடத்திலுள்ளது. அண்மையில் முடிவுற்ற பாகிஸ்தான் அணியுடனான தொடரை 1-0என்ற ரீதியில் வெற்றி பெற்றதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 75சதவீத வெற்றியுடன் முதலாவது இடத்திலுள்ளது. தென்னாபிரிக்கா 71.42சதவீத வெற்றியுடன் இரண்டாவது இடத்திலுமுள்ளது. 3வது இடத்தில் இந்தியாவும், 4வது இடத்தில் பாகிஸ்தானுமுள்ளது. 

இம்முறை இலங்கை அணி சந்தித்த முதல் தொடரிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2- 0என்ற ரீதியில் வென்று நல்ல ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் . அடுத்து கடைசியாக நடைபெற்ற இந்தியத் தொடர் இலங்கை அணிக்கு கடினமான தொடராக அமைந்தது. அத்தொடரில் இலங்கை அணி 2-0என்ற ரீதியில் தோல்வியுற்றது. 40வருட கால இலங்கை டெஸ்ட் வரலாற்றில் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதில்லை என்ற மோசமான சாதனையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்கு பங்களாதேஷுடனான தொடர் முடிவுடன் உலக டெஸ்ட் கிண்ணத் தொடரின் அடிப்படையில் எஞ்சிய மூன்று தொடர்களில் கடினமான இரு தொடர்கள் இலங்கையில் நடைபெறவுள்ளன. இவ்வருட ஜூன் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடனும், ஜுலை மாதத்தில் பாகிஸ்தான் அணியுடன் இரு தொடர்கள் நடைபெறவுள்ளன. இவ்விரு அணிகளும் பிரபல அணிகளானாலும் தொடர் இலங்கையில் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு அது அனுகூலமாக அமையலாம். டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கான கடைசித் தொடர் அடுத்த வருட ஆரம்பத்தில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது . இதுவரை பங்களாதேஷ் அணி பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் இரு தொடர்களில் 4போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 1போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 3போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2போட்டிகள் கொண்ட தொடரில் 1- 1என்ற ரீதியல் சமநிலையில் முடிவடைந்துள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்தது அவ்வணி. 

இரு அணிகளையும் பொறுத்த வரையில் இலங்கை அணியே முன்னிலையில் உள்ளது. அவ்வணி சுழற்பந்து, வேகப்பந்து என இரு துறைகளிலும் சம பலத்திலுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த இங்கு நடந்து முடிந்த மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் திறமையாகவே பந்து வீசியிருந்தனர். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான பிரவீன் ஜயவிக்ரம, லசித் எபுல்தெனிய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பங்களாதேஷ் மண்ணில் அவ்வணிக்கு எதிராக சிறப்பாகப் பந்து வீசுவர் என எதிர்பார்க்கலாம். துடுப்பாட்டத்தைப் பொறுத்த வரை அஞ்சலோ மெத்தியூஸ், தலைவர் திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்டம் மட்டுமல்லாது நடுவரிசைகூட பலமாகவே உள்ளது. கடந்த இரு வருடங்களாக தலைவர் திமுத் கருணாரத்ன தனி ஒருவராக பிரகாசித்து சதங்கள், அரைச்சதங்கள் எனக்குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்து வந்துள்ளார். கடந்த வருடம் ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டுக்கு அடுத்த இடத்தில் இவரே உள்ளார். இத்தொடரில் அவரின் துடுப்பாட்டத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளது இலங்கை அணி. 

பங்களாதேஷ் அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் தலைவர் மொமினுல் ஹக்கையே பெரிதும் எதிர்பாத்துள்ளது. மற்றைய வீரர்களான சிரேஷ்ட வீரர் தமீம் இக்பால், நஜ்முல் ஹுசைன் சென்டோ, லிடன் தாஸ் இவர்களுடன் அனுபவ வீரர்களான சகிப் அல் ஹசன், முஸ்பிக்கூர் ரஹீம் போன்ற வீரர்களும் சோபித்தால் சிறந்த போட்டித் தொடராக இது அமையும், பந்து வீச்சைப் பொறுத்த வரை சுழற்பந்து வீச்சாளர்களான மெஹிதி ஹசன் மிராஸ், தாஜில் இஸ்லாம் ஆகியோரையே பங்களாதேஷ் அணி பெரிதும் நம்பியுள்ளது. 

இலங்கை பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 22போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 17போட்டிகளில் இலங்கை அணியும் 01போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றுள்ளதுடன் 04போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையில் கூடிய ஓட்டங்களாக 2014ம் ஆண்டு பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி பெற்ற 730ஓட்டங்களே பதிவாகியுள்ளது. பங்களாதேஷ் அணி சார்பாக பெற்ற கூடிய ஓட்டங்களாக 2013ம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் பெற்ற 638ஓட்டங்களும், குறைந்த ஓட்டங்களாக 2007ம் ஆண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் அணி பெற்ற 62ஓட்டங்களுமே பதிவாகியுள்ளன. 

ஒரு வீரர் பெற்ற கூடிய ஓட்டங்களாக 2014ம் ஆண்டு பங்களாதேஷ் சிட்டாகோன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் குமார் சங்கக்கார பெற்ற 319ஓட்டங்களே பதிவாகியுள்ளது. பங்களாதேஷ் சார்பில் 2013ம் ஆண்டு காலி சர்வசே மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் முஷ்டபிசூர் ரஹீம் பெற்ற 200ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இதுவரை பெற்ற கூடிய மொத்த ஓட்டங்களாக இலங்கை வீரர் குமார் சங்கக்கார 15போட்டிகளில் பெற்ற 1816ஓட்டங்கள் பதிவாகியுள்ளதுடன் பங்களாதேஷ் சார்பாக மொஹம்மட் அஷ்ரபுல் 13போட்டிகளில் பெற்ற 1090ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு வீரர் பெற்ற கூடிய சதங்களாக குமார் சங்கக்கார பெற்ற 7சதங்கள் பதிவாகியுள்ளதுடன், பங்களாதேஷ் சார்பில் மொஹம்மட் அஷ்ரபுல் 5சதங்கள் பெற்றுள்ளார். இதுவரை ஒரு வீரர் பெற்ற மொத்த விக்கெட்டாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 11போட்டிகளில் பெற்ற 89விக்கெட்களே பதிவாகியுள்ளதுடன் பங்களாதேஷ் சார்பில் சகீப் அல் ஹசன் 7போட்டிகளில் 29விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். ஒரு இன்னிஸ்சில் சிறந்த பந்து வீச்சாக 2013ம் ஆண்டு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ரங்கன ஹேரத் 89ஓட்டங்களுக்கு 7விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், பங்களாதேஷ் சார்பில் சகீப் அல் ஹசன் 2008ம் ஆண்டு மீர்பூர் மைதானத்தில் 70ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுகளைப் பெற்றார்.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments