நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகளின் பின்னணியில் சகல அரசியல் கட்சிகளும் பொதுமக்களின் சக்தியை உள்வாங்கிக் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம். குறிப்பாக இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் விளைவுகள் பாடம் கற்பித்திருக்க வேண்டும். இதனால் மலையக கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன. 74வருடகால அரசியல் ஏமாற்றங்கள் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 200வருடகால ஏமாற்றங்ககளின் உணர்வுகள் மலையகக் கட்சிகளை அச்சுறுத்தவே செய்யும். வயிற்றுப் பிழைப்புக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் அரசியல் செய்ய வருவோர் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம்.
அரசியல் ஆடுகளம் தடுமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் மலையகத்தின் தொழிற்சங்கங்களின் தேவை மீண்டும் அவசியமாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் மூலம் பெருந்தோட்ட மக்களோடு நேரடியாக தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முடிவதால் அரசியல் ரீதியிலான உள்வாங்கல்களை மேற்கொள்வது இலகுவாகி விடுகின்றது. அரசியலுக்கென்று தனியாக பணிமனைகளும் தேவையில்லை. செயற்பாட்டாளர்களும் தேவையில்லை.
மலையகத்தில் 70இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இயங்குதன்மை கொண்டவை. இதனை என ஆராய்வது வீண் வேலை. ஏழு பேரை வைத்துக்கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்து விடலாம் என்றால் எண்ணிக்கைக்கு ஏது அளவு.
சிவில் அமைப்புகள் மலையகத்தில் புதிதாக தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதில் நெடுநாட்களாகவே நாட்டம் காட்டி வந்துள்ளன. இவற்றுள் சில மலையக தேசிய கட்சிகளின் முகவர் அமைப்புகளாகவே குப்பை கொட்டுகின்றன.
மலையகத்தில் கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன நிலைமையிலேயே பெரிய தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தெரிந்து கொண்டும் புரிந்துகொண்டும் அவர்களை விமா்சனம் செய்து கொண்டுமே இந்த சிவில் அமைப்புகள் தாமும் தொழிற்சங்கங்களை அமைக்க தலைப்படுவதன் மர்மம் இதுதான்.
உண்மையில் மலையகத்தில் தொழிற்சங்க அமைப்புகள் பலவீனப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமல்ல. ஏனெனில் தொழிற்சங்க முறைமையானது இம்மக்களின் தொழில்சார் உரிமைகளோடு மட்டும் சம்பந்தப்பட்டு வளரவில்லை. வாழ்வியல் அம்சங்களோடும் இரண்டற கலந்து விட்டவை. இணையாகி வளர்ந்தவை.
1931களில் இவ்வாறானதொரு பின்புலத்துடன்தான் கோ. நடேசய்யர் முதன்முறையாக பெருந்தோட்ட மக்களுக்கான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கினார். பிந்திய தொழிற்சங்க பிறப்புகளுக்கெல்லாம் கருவாக அமைந்தது இவரது முயற்சி.
1939களில் இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றம் 1950களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றதன் தேவை எல்லாமே கோ. நடேசய்யரின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டவையே. இ.தொ.கா.வின் தலைவராக இருந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் ஆளுமைமிக்க தலைமைத்துவத்தால் ஆலவிருட்சம் என அமோக வளர்ச்சி கண்டது. இன்று மலையகத்தில் காணப்படும் தொழிற்சங்கங்களின் வரலாறு இ.தொ.காவை பற்றிப்படர்ந்து நிற்பதாகவே அமைகின்றது. இந்த தொழிற்சங்கத்திலிருந்து பிளவுண்டதே பின்னால் புதியபுதிய தொழிற்சங்கங்களைப் படைத்தனர்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக தொழிலாளர் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் எல்லாமே இ.தொ.காவில் இருந்து வெளியேறியோர் உருவாக்கிய தொழிற்சங்கங்களேயாகும். ஒரு காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை தாங்கிநின்ற பலமிக்க ஆளணி வளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமைக்குரியவையாகவே இந்த மலையக தொழிற்சங்கங்கள் விளங்கின.
தொழிற்சங்கங்கங்களின் ஆதிக்கமானது 1978களின் பின்னரே சிறுகச் சிறுக வலு குன்றி வரலானது. இக்காலக்கட்டத்தில் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்பு, 1978களில் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் அறிமுகம் எல்லாமே மலையக தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்தினை ஆட்டம்காண வைத்தது.
இக்காலங்களில் அரசியல் ரீதியாக பெறப்பட்ட உரிமைகளின் பலனாக தொழிற்சங்க செயற்பாடுகள் அருகி அரசியல் வழிமுறைகளை மேற்கொள்வதற்கான ஊடகமாக இவை மாற்றம் பெறலாயின. ஆனால் தொழிற்சங்கங்களாக அரசோச்சிய நிலையில் அதன் சேவைகள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்தன்மைக்கு இட்டுச் செல்வதற்கான அத்திவாரம் எதனையுமே இடவில்லை என்பதே பலரதும் அபிப்பிராயமாகும். கவனம் செலுத்தப்படவேண்டிய பல அடிப்படை அம்சங்கள் கண்டுக்கொள்ளப்படாமலே விடப்பட்டன. எனவே தான் அச்சமூகம் இற்றைவரை முழுமை பெறாத வாழ்வியல் இயங்கு நிலைக்கு ஆளாக நேர்ந்துள்ளது.
இதேநேரம் தொழிற்சங்கங்கள் அரசியல் பாசறைகளாக ஆக்கப்பட்ட நிலையிலும் அதன் முனைப்புகள் சமூக மாற்றத்துக்கான விதிமுறைகளை இனம்காண தவறிவிட்டன என்றால் பொருந்தும்.
இதனால் தொழிற்சங்க முயற்சிகளும் முடக்கம் கண்டன. அரசியல் அணுகு முறைகளும் ஆக்கம் இழந்தன. இதனாலேயே வாக்குரிமையின் பெறுபேறுகள் வரையறைக்குள்ளாகி காணப்படுகின்றன. எந்த வாக்குரிமை தொழிற்சங்க சக்தியை தோற்கடிக்க உதவியதோ அதே வாக்குரிமை அவர்களை தேசிய ரீதியில் பேசப்படும் நிலையை தோற்றுவிக்க உதவ முடியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாகவே இம்மக்களின் பலம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதே இதற்கு காரணம்.
மக்களிடம் பழையபடி நேரடி தொடர்பாடலை மேம்படுத்தக்கூடிய தொழிற்சங்க முறைமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகினறது. இதற்காக கண்டறியப்பட்ட காரணமாக மலையகம் எனும் அடையாளம் காக்கப்பட அரசியல் கட்சிகளை விட தொழிற்சங்க அமைப்புகளே காக்கப்பட வேண்டும் என்பது நிறுவப்படுகின்றது.
ஏனெனில் மலையக மக்களின் வரலாற்றுக் குறிப்புகளை வரைவிலக்கணம் செய்ய தொழிற்சங்க பாரம்பரியங்கள் நிறையவே உதவுகின்றன. எனினும் இன்று நடைமுறையில் காணப்படுவது என்னவோ பலவீனமான நகர்வுத் தன்மைகளே. இதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள் மூலம் ஆள்பிடிக்கும் அரசியல் கட்சிகள் அவர்களை வைத்து அரசியல் சதுரங்கம் ஆட முற்படுகின்றன. இதன்மூலம் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்கவும் முடிகின்றது.
எனினும் ஏகப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதித்துவங்களின் காரணமாக தொழிலாளர்கள் கூறு போடப்படுகிறாா்கள். இன்று பிரதேச ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க இயக்கங்கள் ஏராளம். அவதானிகளின் கணிப்பின்படி இவ்வாறு இயங்கும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளாக மலையகத்தைச் சாராதவர்களே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில் சந்தா அறவிட சாதகமாக தொழிற்சங்க முறைமை கைகொடுப்பதால் இது சிலருக்கு வயிறு வளர்க்கும் தொழிலாக மாற்றம் கண்டுள்ளது. பெரிய தொழிற்சங்கங்கங்கள் தொழிற்சங்க இலக்கணங்களை மூட்டைக் கட்டிவிட்டு அரசியல் செயற்பாடுகளில் மட்டுமே அக்கறை கொள்கின்றன. இதற்காக அறவிடப்படும் சந்தாப்பணம் பயன்படுத்தப்படுவும் நடக்கின்றது. இதனால் தொழிலாளர்களரது தொழில்சார் நலன்புரி நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. சந்தாப்பணம் மூலம் சாதகமான ஏது நிலைகள் எதுவுமே தொழிலாளர்களை எட்டுவதாக இல்லை. இதனால் விரக்தியடைந்து போகும் தொழிலாளர் சமூகம் அடிக்கடி தொழிற்சங்கங்களை மாற்றிக்கொள்ள தலைப்படுகின்றன.
நாட்டில் ஆகக்கூடிய தொழிற்சங்கங்களை உள்வாங்கிக் கொண்டுள்ள தொழிற்துறையாக பெருந்தோட்ட கட்டமைப்பு விளங்குகிறது. தொழிற்சங்கங்களாலோ அதனையொட்டி அரசியல் நடத்தும் கட்சிகளாலோ ஆகக்கூடிய பயன்கள் எதனையும் அடையாத சமூகம் வாழும் இடமாக மலைத்தேசமாக காணப்படுகின்றது. அரசியல், தொழிற்சங்க, வர்த்தகப் பண்டமாக இச்சமூகம் பாவிக்கப்படக்கூடாது. தொழிற்சங்க பலம் பழையபடி பெறுகுவதோடு அரசியல் ரீதியில் ஆக்கம்பெற அது உதவுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
பன். பாலா