நரேந்திர மோடியின் ஐரோப்பிய விஜயம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துமா? | தினகரன் வாரமஞ்சரி

நரேந்திர மோடியின் ஐரோப்பிய விஜயம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துமா?

இந்தியப் பிரதமரது ஐரோப்பிய விஜயம் அதிக அரசியல் முக்கிய த்துவத்தை சமகாலத்தில் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய- உக்ரைன் போர் முடிவுறாத சூழலில் ரஷ்யாவினதும் அதே நேரம் மேற்கினதும் நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டமை அதிக அரசியல் முக்கியத்துவத்தை தந்துள்ளது. மூன்று நாள் ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் பயணம் செய்துள்ளார். இந்தியாவின் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவம் சார்ந்து ஐரோப்பிய இந்திய உறவைப் பலப்படுத்தும் நோக்கிலானதாக அமைந்தாலும் ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பிலான செய்தியையும் அவரது விஜயம் ஐரோப்பியருக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. இக்கட்டுரையும் இந்தியப் பிரதமரது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஏற்படுத்தியுள்ள அரசியல் தாக்கங்களைத் தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு இந்தியப் பிரதமரது விஜயத்தின் போது பெரும் உலகத் தலைவரை வரவேற்றது போன்று அமைந்திருந்தது. இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இந்தியப் பிரதமருக்கு ஜேர்மனிய ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது. அவ்வாறே டென்மார்க் பிரான்ஸ் நாட்டுத் தலைவர்களால் இந்தியப் பிரதமர் உலக முதல்தலைவராக கருதப்படுமளவுக்கு வரவேற்பளித்தனர். இந்நாடுகளில் தலைவர்களுடன் உரையாடியதுடன் பொருளாதார ரீதியிலும் வர்த்தக அடிப்படைகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கிலும் இந்தியப் பிரதமரது உரையாடல் அமைந்திருந்தது. அது மட்டுமன்றி டென்மார்க் பிரதமருடனான சந்திப்பின் போது 'உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். உக்ரைனில் நிலவும் மனிதாபிமானப் பிரச்சினை கவலையளிகிறது. ஐ.நா. விதிகள் மற்றும் சர்வதேச விதிகளுக்கும் மற்றைய நாடுகளின் இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். அதேபோன்று ஜேர்மன் பிரதமரான ஓலப் ஸ்கால்சை உடனான சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது 'உக்ரைன்-ரஷ்யாவுக்கும் இடையிலான போரில் யாரும் வெற்றியடையப் போவதில்லை. இந்தப் போரில் அனைவரும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதனால் தான் அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது' என்று தெரிவித்தார். இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல்கள் வெளிப்படுத்தும் அரசியல் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

முதலாவது, இந்தியப் பிரதமரது ஐரோப்பிய விஜயத்திற்கு பின்னால் வலுவான அம்சம் ஒன்று காணப்படுகிறது. இந்தியாவின் ரஷ்யா பற்றிய அணுகுமுறையிலுள்ள அடிப்படையான விடயமே அதுவாகும். அதாவது ரஷ்யாவுடனான உறவு இந்தியாவுக்கு முதன்மையானது என்பதை உக்ரைன் -ரஷ்யப் போரில் இந்தியா தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தோ -பசுபிக் தந்திரோபாயம் மற்றும் குவாட் அமைப்பு போன்றவற்றில் இந்தியாவை மேற்கு முதன்மைப்படுத்தினாலும் இந்தியா தெளிவான வெளியுறவுக் கொள்கையாக ரஷ்யவை நோக்கியதென்பதை மேற்குலகத்தின் எச்சரிக்கைகளுக்கப்பால் நிலைநிறுத்தியுள்ளது. அதனால் இந்தியாவை மேற்குலகம் வளைத்துப் போடும் உபாயத்தை அதிகம் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியா நோக்கிய ஜப்பான் அவுஸ்ரேலியா பிரித்தானியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் தலைவர்கள் இராஜதந்திரிகள் பயணங்கள் தொடராக இந்தியா நோக்கி முதன்மைப்படுத்தப்பட்டன. அவ்வாறே முதலீடுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் உபாயங்களாக இந்தியாவுடன் மேற்கொள்ள முயன்றன.

இரண்டாவது, இத்தகைய மேற்குலகத்தின் நகர்வுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே இந்தியப் பிரதமரது ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயம் அமைந்துள்ளது. ஆனால் இந்தியப் பிரதமர் குவாட் நாடுகளை தவிர்த்தே இந்த விஜயத்தை திட்டமிட்டுள்ளார் என்பது கவனத்திற்குரியதாகும். இது இரு தரப்பினது இராஜதந்திர அணுகுமுறையாகவே தெரிகிறது. அதாவது இந்தியா குவாட் நாடுகளைத் தவிர்த்துள்ளது எனக் குறிப்பிட்டாலும் அதே அணுகுமுறையுடைய நாடுகளை நோக்கியே நரேந்திர மோடி நகர்ந்துள்ளார். அப்படியாயின் அமெரிக்கா தலைமையிலான குவாட் அணி ஐரோப்பாவுக்குள்ளால் இந்தியாவை கையாள முனைகிறதாகவே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் ஐரோப்பாவுக்குள் அதிக முக்கியத்துவம் உடைய அதேநேரம் அமெரிக்காவுடன் அவ்வப்போது முரண்பாட்டைக் கொண்டுள்ள மறுபக்கத்தில் ரஷ்யாவுடன் பொருளாதார உறவை பேணவிரும்புகின்ற நாடுகளான ஜேர்மனி டென்மார்க் பிரான்ஸ் போன்ற தேசங்களுக்கு இந்தியப் பிரதமர் பயணம் செய்துள்ளார் என்ற புரிதலும் தவிர்க்க முடியாதது.

மூன்றாவது, இந்தியப் பிரதமர் ஐரோப்பாவில் நின்று கொண்டு ரஷ்ய-உக்ரைன் போரில் இரு நாடுகளுமே வெற்றி கொள்ள முடியாது எனவும் தெரிவித்ததுடன் இந்தியாவின் நடுநிலைத் தன்மைக்கான காரணங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இன்னோர் வகையில் பார்த்தால் இந்தியாவை நடுநிலையுடைய நாடாக்குவதில் மேற்குலகம் அதிக வெற்றியை எட்டியுள்ளமை தெரிகிறது. ஆனால் இந்தியா எப்போதும் நடுநிலையை ஒரு கொள்கையாகக் கொண்டது என்பது யதார்த்தமானதே. இந்தியாவின் நடுநிலையானது ரஷ்யாவுக்கு உக்ரைனுடனான போரில் எதிர்கொண்டதை விட அதிக தோல்வியாகவே தெரிகிறது. ரஷ்யா சீனா மற்றும் இந்தியா ஓரணியில் அமையுமாயின் மேற்குலகத்திற்கு அதிக நெருக்கடியாக அமைந்திருக்கும். அதனைக் கடந்து இந்தியா நடுநிலமை வகிப்பதென்பது இந்தியாவுக்கும் மேற்குலகத்திற்கும் இலாபகரமானதே..

நான்காவது, இவ்வகை விஜயம் இந்தியாவை வலுவான தேசமாக்குவதன் பெயரில் மேற்குலகிடம் முழுமையாக தங்கியிருக்கச் செய்வதாக அமைந்துவிட வாய்ப்பு அதிகம். அதாவது இந்தியாவை கௌரவப்படுத்துவதன் மூலம் மேற்குலகத்தின் சந்தை வாய்ப்புக்களை தக்கவைப்பதுடன் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான பொருளாதார உறவை தகர்க்க முடியும் என்பதே மேற்கின் பிரதான உபாயமாகும். அவ்வாறே இந்தியப் பிரதமரும் ஐரோப்பாவுடனான வர்த்தக நடவடிக்கையை இறுதி செய்ய வேண்டும் எனவும் இந்தியப் பொருட்களுக்கான சந்தைக்காக ஐரோப்பா திறந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். இது இந்தியாவின் உபாயமாகவே தெரிகிறது. தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பாவுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்களில் நெருக்கமான உறவை நிலைப்படுத்துவதே நரேந்திர மோடியின் தந்திரோபாயமாக தெரிகிறது. ஏற்கனவே பிரான்ஸிடமிருந்து ரம்போல் போர் விமானங்களை இந்திய எல்லையோரப் பாதுகாப்புக்காக கொள்வனவு செய்துள்ளது. தொடர்ந்தும் ஐரோப்பாவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்க முயலுகிறது.

ஐந்தாவது, இந்தியப் பிரதமர் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஐரோப்பாவுக்கு அழைப்பு விட்டதன் நோக்கம் தனித்துவமானதாகவே தெரிகிறது. குறிப்பாக அமெரிக்கா வெளிப்படையாக பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்வதை கைவிட்டு அமெரிக்காவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்யுமாறும் அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவைக் கேட்டிருந்தமை கவனத்திற்குரியதாகும். ஆனால் இந்தியா அமெரிக்காவை விட ஐரோப்பாவை நோக்கி நகர்ந்திருப்பது ரஷ்யா சார்ந்ததாக அமையும் என்றே கருதப்படுகிறது. இந்தியப் பிரதமர் ரஷ்ய- உக்ரைன் போர் தொடர்பில் புலம்பெயர்ந்த இந்தியர் மத்தியலும் மேற்படி மூன்று நாட்டுத் தலைவர்கள் மத்தியிலும் போரை தவிர்க்குமாறு கேட்டிருந்தமை கவனத்திற்குரியதாகும். குறிப்பாக ரஷ்ய- உக்ரைன் போரில் அனைவரும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரும் என எச்சரிக்கைப் பாணியில் செய்தி வெளியிட்டார்.

எனவே இந்தியப் பிரதமரது மூன்று நாடுகளுக்கான ஐரோப்பிய விஜயம் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியல் இந்தியாவினதும் ஐரோப்பியத் தலைவர்களதும் உபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததுடன் ரஷ்யாவுடனான இந்திய உறவை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அதேநேரம் ஆபத்தான ஐரோப்பாவை எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உக்ரைன் மீதான போரால் ஏற்படும் என்பதை மறைமுகமாக மோடி ஐரோப்பியத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். அதனால் போரை தவிர்க்க முயலுவது அவசியம் என்பதை கோடிகாட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். வர்த்தகம் சந்தை பாதுகாப்பு என்ற விடயங்களை மோடி முதன்மைப்படுத்தினாலும் ரஷ்ய- உக்ரைன் போரே முதன்மையானது என்பதை தெளிவாக ஐரோப்பியத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் உணர்த்தியுள்ளார்.

கலாநிதி

கே.ரீ.கணேசலிங்கம்

யாழ். பல்கலைக்கழகம்

 

Comments