தேர்தல் விரைவில் வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் விரைவில் வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு

உடனடி மாற்றத்திற்கு குற்றப்பிரேரணை பொருத்தமற்றது. ஆகையினால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி, ஜனநாயக அழுத்தத்தை கொடுக்கலாம் என்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி பின்வருமாறு:- சுமித்தி தங்கராசா

கேள்வி:- ஜனாதிபதிக்கெதிரான குற்றவியல் பிரேரணை கொண்டு வரவுள்ளீர்களா?

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஒரே நேரத்தில் கொண்டு வரச்சொல்லியிருக்கின்றேன். மக்களுக்கு அரசியல்வாதிகள்ள மீது நம்பிக்கையில்லாமல் இருப்பது நியாயமானது. அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவில்லை. பிரதான எதிர்க்கட்சிதான் பிரேரணையைக் கொண்டு வர வேண்டும். ஆகையால் பிரதான எதிர்க்கட்சி அந்தப் பிரேரணையைக் கொண்டுவரும்.

அடுப்பில் இருந்து நெருப்புக்குள் பாய்ந்த கதை போன்று எமது கதை மாறிவிடக்கூடாது. அதற்காக சில சமயோசித நடவடிக்கைகளை எடுப்போம். இந்த நடவடிக்கைகளை எடுக்கிற போது தமிழ் மக்கள் சந்தேக கண்கொண்டு பார்க்கக்கூடாது. நாங்கள் என்னத்தைச் செய்கின்றோம் என்பதில் மக்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகத் தான் இந்த விடயங்களைச் சொல்கின்றேன்.

சில சந்தர்ப்பங்களில் சில பிரேரணைகளைக் கொண்டு வருவது எமது நிலை மோசமாகிவிடக்கூடாதென்பதற்காக மாத்திரமேயன்றி யாரையும் காப்பாற்றுவதற்கான நகர்வு அல்ல. எங்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை தான்.

அடிப்படையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவாகத் தான் வாக்களிக்க வேண்டும். கட்சியாக இன்னும் முடிவெடுக்காவிட்டாலும், அதைவிட வேறு எந்த முடிவையும் நாங்கள் எடுப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனுடன் இணைந்ததாக தமிழ் மக்களுக்கான விடிவையும் எவ்வாறு கொண்டு வரலாம் என்பது குறித்தும் நாங்கள் சிந்திக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவது மிகவும் முக்கியமான ஒரு விடயம். பிரதான எதிர்க்கட்சி தலைவரின் பெயரில் தனிநபர் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதைச் செய்கின்ற போது அதிகாரப் பகிர்வு என்கின்ற விடயத்தில் சில சில நன்மைகள் எங்கள் சார்பாகவும் வரும். ஆனால் முழுமையான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கான நகர்வுகளையும், நாங்கள் தற்போது முன்னெடுக்கின்றோம். அது உரிய காலத்தில் சரியான சந்தர்ப்பத்தில், மாற்றம் நிகழ்கின்ற வேளையில், நிலைமாறுகால ஆட்சி ஒன்று இருக்க வேண்டுமென்று சொன்னால், இந்த முற்போக்கான காலத்தில் அதிகாரப் பகிர்விற்கான மாற்றங்கள் இந்த விதமாக கொண்டு வரப்படலாம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் இது செயற்படுத்தப்படலாம் என்பது குறித்து நாங்கள் ஆழமாக சிந்திக்கின்றோம். மற்றவர்களுடன் இணங்கி, இணைந்து இந்த முன்னெடுப்புக்களை செய்கின்றோம். சிங்கள இளைஞர்களின் கைகளைப் பற்றிக்கொண்டு, உங்களுடன் இந்தப் பயணத்தில் சேர்ந்து பயணிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்.

 

கேள்வி:- தேசிய அரசாங்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

தேசிய அரசாங்கம் என்பது இதே தலைமையின் கீழ் செயற்படுத்தப்படுமாக இருந்தால், அதில் இணையவும் மாட்டோம், அதற்கு எங்களுடைய ஆதரவும் இருக்காது. வெறுமனவே மக்களை ஏமாற்றுகின்ற செயலாகத்தான் இருக்கப் போகின்றது. ஆனால், உண்மையான மாற்றம் ஒன்று ஏற்பட்டு, அதற்குப் பிறகு அமைக்கப்படுகிற ஆட்சி, அது எப்படியான ஆட்சியாக இருக்கிறதென்பதை பார்த்து நாங்கள் உத்தேசிப்போம்.

 

கேள்வி:- பிரதமரை மாற்றி, புதிய அரசாங்கத்தை அமைப்பதை விரும்புகின்றீர்களா? அல்லது தேர்தல் நடாத்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

தேர்தல் ஒன்று விரைவில் வர வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு, ஏனெனில் இந்தக் குழப்பத்தின் பின்னர் மக்களின் ஆணை ஒன்று புதிதாகப் பெறப்பட வேண்டும். அதற்கான கால சூழல் தற்போது கிடையாது என சிலர் சொல்கின்றார்கள். நான் அப்படி நினைக்கவில்லை எவ்வளவு விரைவாக தேர்தலை நடாத்தலாமோ, அவ்வளவுக்கு அது சிறப்பாக இருக்கும். பண விடயத்திலும் கூட, இன்று தேர்தல் வைப்பதை விட நாளைக்குத் தேர்தல் வைப்பது இலகுவானது. ஏனெனில், நிைலமையும் மிக மோசமாக போகப்போகின்றது. ஆகையினால், தேர்தல் ஒன்றுக்குச் செல்வது மிகவும் நல்ல விடயம். அப்போது தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சி, சரியான சட்ட வரையறைக்குள்ளே, நாட்டிலே உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

 

கேள்வி:- 21திருத்தத்தை கொண்டு வந்து ஆட்சி செய்ய வேண்டுமென்ற கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்?

21வது சட்டத் திருத்தம் என்பது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதற்கான ஒரு முன்மொழிவு. அதற்கு எங்களுடைய ஆதரவு இருக்கும். வெறுமனவே சில அதிகாரங்களைக் குறைத்து, 20வது திருத்தத்தை விலக்கி, 19வது திருத்தத்தை திரும்பவும் ஏற்படுத்தி, அந்த முறையில் ஆட்சியை ஏற்படுத்துவதாக இருந்தால், அதைக் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். அது போதுமானதாக இருக்காது.

 

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒன்று தான். எமது நிலைப்பாடு உறுதியானது. அதில் மாற்றமில்லை. உடனடி மாற்றத்திற்கு குற்றப்பிரேரணை பொருத்தமற்றது. ஆகையினால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி, ஜனநாயக அழுத்தத்தை கொடுக்கலாம் என உத்தேசித்துள்ளோம்.

 

கேள்வி: தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு சார்பாக, வேறு ஏதாவது முயற்சிகள் உங்களால் முன்னெடுக்கப்படுகின்றதா?

எமது இளைஞர்கள், தென்னிலங்கையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்கள். வயது மட்டத்தில் அரசியல் அறிவுடைய இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றோம். அவர்களுடன் உறவாடச் சொல்லி, அரசியல்வாதிகள் அங்கு வரக்கூடாது எனறு அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கின்றது. அதனால் நாங்கள் அங்கு செல்லவில்லை. இந்தப் போராட்டத்தை முழுமையான போராட்டமாக, பொருளாதார சிக்கலினால் எழுந்த போராட்டமாக இருந்தாலும், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் இப்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலுக்கு எதிரான போராட்டமாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் கொலைக்கான நீதியைக் கோரியுள்ளதுடன், அஞ்சலியும் செலுத்தியுள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் அடைந்து வருகின்றது.

நாங்கள் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டு அவர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கக் கூடாது.

அவர்களுடன் சேர்ந்து பயணித்து, தமிழ் தேசிய பிரச்சினை என்கின்ற விடயத்தை, அவர்களுடன் சுமூகமாக சம்பாசித்து, முன்னெடுப்பதற்கான நடவடிக்கையில் தான் ஈடுபட்டிருக்கின்றோமே தவிர, தேவையற்றவற்றைப் பேசி, அவர்களை எங்களுடைய விரோதிகளாக ஆக்குகின்ற முட்டாள் தனமான செயலில் நாங்கள் ஈடுபடப்போவதில்லை.

Comments