வெற்றி மனதில் இருக்கிறது ! | தினகரன் வாரமஞ்சரி

வெற்றி மனதில் இருக்கிறது !

அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஒரு நாள், நீரோடை அருகே நடந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்கள் சிலர், துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அதற்காக, முட்டை ஓடுகளை நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தனர். நூலின் ஒரு முனை, கரையிலிருந்த கல்லில் கட்டப்பட்டிருந்தது.

நீரோட்டத்துக்கு ஏற்ப, முட்டையோடுகள் அசைந்து கொண்டிருந்தன. பாலத்தில் நின்றபடி, முட்டை ஓடுகளை சுட முயற்சித்தனர் இளைஞர்கள். குறி தவறிக்கொண்டிருந்தது. ஒன்றைக்கூட சுட முடியவில்லை.

இச்செயலை புன்னகையுடன் பார்த்தபடி நின்றார் விவேகானந்தர். இதை கவனித்த இளைஞர்கள், "முட்டை ஓடுகளை சுடுவது சுலபமான செயல் போல் தெரியும். ஆனால் எளிதானதல்ல, முயற்சி செய்து பாருங்கள் அப்போது தெரியும் சிரமம்..." என்றனர்.

துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார் விவேகானந்தர். வைத்த குறி ஒன்றுகூட தவறாமல் அத்தனை முட்டை ஓடுகளும் சிதறின! வியப்புடன், "துப்பாக்கி சுடுவதில் ஏற்கெனவே நீங்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அதனால் தான், தவறாமல் சுட்டீர்கள்...' என்றனர்.

புன்னகையுடன், "வாழ்நாளில் இன்றுதான் முதன் முறையாக துப்பாக்கியை தொட்டிருக்கிறேன்.." என்றார் விவேகானந்தர். இளைஞர்கள் நம்ப முடியாமல், "அப்படியானால், குறி தவறாமல் எப்படி சுட முடிந்தது..." என்றனர்.

"வெற்றியின் ரகசியம், மனதை ஒருமுகப் படுத்துவதில் தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும், தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இருவருக்கும் உள்ள வேறுபாடு மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கும். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரும்போது கூர்மையான அறிவை பெறலாம்..."

"செருப்புக்கு மெருகு ஏற்றுபவர் மனதை ஒருமுகப்படுத்தினால் சிறப்பாக செயல்பட முடியும். மனதை ஒருமுகப்படுத்தினால் தான் சிறந்த முறையில் சமைக்க முடியும். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ. எந்த ஒன்றையும், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்ப்பதன் மூலம் சிறப்பாக செய்து முடிக்கலாம்" என்று போதித்தார் விவேகானந்தர்.

Comments