சாரணியர் இயக்கம் | தினகரன் வாரமஞ்சரி

சாரணியர் இயக்கம்

உலகத்தில் எத்தனையோ விதமான சங்கங்களும், இயக்கங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஆறு வயது குழந்தைப் பருவத்தி லுள்ள மாணவ மாணவியருக்குக் கூட ஒழுக்கத்துடன் விளையாட்டு முறையில் கீழ்படிதல், பெற்றோரை மதித்தல், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்புண்புகளை வளர்க்கும் ஒரே இயக்கம் 'சாரண இயக்கம்' என்றால் மிகையாகாது.

சாரணியம் முதன் முதலில் 1907 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவர் தோற்றுவித்தார்.

இவ்வியக்கம் தோன்றிய சில ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பரவியது. இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம் பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குதலாகும். மேலும், இது உற்று நோக்குதல், வேட்டையாடுதல் அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற திறமைகளையும் வளர்க்கிறது.

சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற சாரண சாரணியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மாறாப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிற வர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும் எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவர்.

சாரணியம் மூன்று பிரிவுகளை உடையது. குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை மாணவர்களுக்கும் நீலப்பறவை, சாரணியர், திரி சாரணியர் என்ற மூன்று பிரிவுகள் மாணவியருக்கும் பொருத்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

சாரண இயக்கத்தின் குறிக்கோள்!

சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர்கள் எனவும், சாரணியர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் 'பெண் சாரணிய தலைவிகள்' எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சாரண இயக்கத்தில் மாணவர்களைப் பள்ளி சூழலில் இருந்து விடுவித்து இயற்கைச் சூழலுக்கு அழைத்துச் சென்று அங்கு பயற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் பலவகையான முடிச்சுகளிடுதல் அவற்றின் பயன்கள், எளிய உடற்பயிற்சிகள், சமிக்ஞைகள் மேப் மற்றும் முதலுதவி போன்ற பல்வேறு செயல்முறைத் திட்டங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.

சாரண மாணவர்கள் மற்ற மாணவர்களில் இருந்து வேறுபட்டு தனித்துக் காணப்படுவர். அவர்களுடைய சாரண வணக்கமும், சாரண கைக்குலுக்கலும், கைதட்டுதலும் சிறப்பான முறையில் பிறரைக்கவரும் வண்ணம் இருக்கும்.

 

ஆர். ராஹினி,

வெளிமடை.

 

Comments