கட்சி, இன பேதங்களுக்கு அப்பாலான அரசியல் கலாசாரமே இன்றைய தேவை | தினகரன் வாரமஞ்சரி

கட்சி, இன பேதங்களுக்கு அப்பாலான அரசியல் கலாசாரமே இன்றைய தேவை

“போரிலும் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றவர்கள் ஆட்சியில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருப்பது ஏன்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். இந்தக் கேள்விதான் இன்று பலரிடத்திலும் எழுந்திருக்கிறது. இதற்கான பதிலைக் காண்பதாக இருந்தால், “எங்கே தவறு நடந்திருக்கிறது? என்னென்ன தவறுகள் நடந்துள்ளன” என்று பார்க்க வேண்டும்.

நடந்த, நடந்து கொண்டிருக்கும் தவறுகளைப் பற்றியும் அவற்றுக்குக் காரணமான, பொறுப்பானவர்களைப் பற்றியும் பலரும் பல்வேறு விதமான வியாக்கியானங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் சரியும் உண்டு. தவறும் உண்டு. இது ஒரு பக்கம் என்றால் அடுத்த பக்கம், இந்தத் தவறுகளைத் திருத்த முடியாதா? இவற்றுக்குப் பரிகாரம் காண முடியாதா? ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வென்ன? அதை எப்படிக் காண்பது? எப்போது காண்பது? என்ற விடயங்கள்.

இந்த இரண்டாவது பக்கத்தையே இன்று பலரும் எதிர்நோக்குகின்றனர்.

ஏனென்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது நேரடியாகவே வாழ்க்கையைப் பாதிக்கிறது. அது வயிற்றுப் பிரச்சினையாயிருக்கிறது. எதிர்காலத்தைக் குறித்த பிரச்சினையாக உள்ளது.

பொருளாதாரம் சரிந்து விட்டால், முழு அடியாதாரமும் சரிந்து விடும். என்பதால்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமான பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். தனி மனிதரில் இருந்து நாடுகள் வரையில் முதற் கவனம் கொள்வது பொருளாதாரத்திலலேயே. பொருளாதாரத்தில் கவனக் குறைவாக இருக்கும் நபர்களிலிருந்து நாடுகள் வரையில் மிகப் பெரிய நெருக்கடியை – துயரத்தை – அவலத்தையே சந்திக்க வேண்டும். இன்று இலங்கையில் ஏற்பட்டிருப்பது அப்படியான ஒரு கவனப் பிழையான சங்கதியே. இந்தக் கவனப் பிழை என்பது சாதாரணமானதல்ல. மிகப் பாரதூரமானது. அதுவே நாட்டை மோசமாகப் பாதித்திருக்கிறது.

இப்போதுள்ள நெருக்கடியை விட மிகக் கடினமான – அதிகமான நெருக்கடி எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ளது.

ஆகவே தவறுகள் எந்தளவுக்குப் பாரதூரமானதாக இருக்கிறதோ அதற்குப் பரிகாரம் காண்பதாக இருந்தாலும் அந்தளவுக்கு ஆழமானதாக, உச்சநிலை முயற்சி எடுத்தே பரிகாரம் காண வேண்டும். இதில் காய்தல் உவத்தல் இருக்க முடியாது. யாருடைய முகத்தையும் பார்க்காமல் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

மக்களின் மனதில் கொந்தளிப்பும் என் நடக்கப் போகிறது என்ற புதிரும் எழுந்துள்ளது. இதுவும் வரவரக் கூடும். இந்தக் கொதிப்பை பிற சக்திகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தவும் விளையும். அப்படியென்றால் நாடு இன்னும் மோசமான கட்டத்துக்குத் தள்ளப்படும்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைப் பலரும் பட்டியலிட்டுள்ளனர். அதைப்போல இதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள், உபாயங்களையும் பலரும் பட்டியற்படுத்தியிருக்கிறார்கள்.

அப்படியென்றால் அதைச் செய்வதற்குத் தாமதமென்ன? எதையாவது செய்து நெருக்கடியைத் தணிக்க வேண்டியதுதானே என்ற கேள்வி எழுகிறது.

இங்கேதான் பிரச்சினை.

எதையும் நடைமுறைப்படுத்துவதற்குச் சரியான, பலமான ஒரு கட்டமைப்பு வேண்டும். அந்தக் கட்டமைப்பானது பொருத்தமான வழிமுறைகளைக் கண்டறிந்து, உரிய பொறிமுறைகளை வகுத்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்தி, அந்த நடைமுறையிலுள்ள வெற்றி தோல்விகள், தாமதங்கள் போன்றவற்றைக் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும். இதற்கு சரியான – வலுவான அரசாங்கம் தேவை.

அந்த அரசாங்கம் நிலைமையின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு அதற்குரிய வகையில் மிகத்தீவிரமாக வேலை செய்ய வேண்டும். இன்றைய இலங்கைச் சூழல் அல்லது இலங்கையின் நிலைமை என்பது நாளாந்தம் மோசமடைந்து கொண்டிருக்கும் ஒரு நோயாளியின் உடல் நிலையைப் போன்றிருக்கிறது. ஏறக்குறைய பரலைஸ் (முடக்க) நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதிலிருந்து எப்படி மீள்வது என்பதே இன்றைய பெரும் சவால். இது யுத்தத்தை வெற்றி கொள்வதையும் விடக் கடினமானது.

ஆகவே இந்தக் கடினமான நிலையைக் கடக்க வேண்டும் என்றால், இதை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், அதற்குக் கடினமாக வேலை செய்ய வேண்டும். முழுமையாக வேலை செய்ய வேண்டும். இந்த வேலை என்பது நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும் (மக்களும்தான்) இணைந்த வேலையாக இருக்க வேண்டும்.

அதாவது இது ஒரு தேசிய இடர் என்ற அடிப்படையில், அந்த உணர்வுடன் இதைப் புரிந்து கொண்டு வேலை செய்ய வேணும். அதற்கு தேசிய ஒருமைப்பாட்டுணர்வை உருவாக்கக் கூடிய ஏதுநிலைகளை அரசாங்கம் உருவாக்குவது அவசியம். கட்சிகளாக, இனங்களாக, சமூகங்களாக, பிரதேசங்களாக பிரிந்து நின்று, கூறுபட்டு நின்று தேசிய இடரைக் கடக்க முடியாது. ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடியாது.

ஆகவே இந்த இடர்கால நெருக்கடியை தனியே பொருளாதார நெருக்கடி என மட்டுறுத்திக் கொள்ளாமல் இது உருவாகக் காரணமான இனவாதத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இனவாதத்தினால் உருவான அரசியல் நெருக்கடியே பொருளாதாரத்தைத் தின்றது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். அப்படிச் செய்தாலும் அதற்குப் பின் அல்லது அதைத் தொடர்ந்து சில வேலைகளைச்செய்ய வேண்டும்.

ஒன்று, இங்கே நாட்டிலுள்ள மனித வளம், இயற்கை வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அவற்றின் மூலம் குறுகிய காலத்தில் பயன் பெறுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, வெளிநாட்டுக் கடன் மற்றும் முதலீடுகளின் வழியாக நிலையான வருவாயைப் பெறத்தக்க உபாயங்கள், செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மூன்றாவது, மக்கள் அனைவரும் இடர்கால நிலையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலுக்குள்ளாக்கப்பட வேண்டும். கூடவே இந்த நெருக்கடியை ஒரு இடர்காலமாகக் கருதி, இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவரவர் தத்தம் தரப்பில், துறைகளில் இந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டும். இதற்கான உளத்தூண்டலையும் சமூகச் சூழல், நிர்வாகச் சூழலையும் உருவாக்க வேண்டும். துறைசார் நிபுணர்கள், வல்லுநர்கள், செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து பொருத்தமான திட்டங்களையும் பொறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

இதற்கெல்லாம் முதல் நிலைப் பாத்திரத்தை வகிக்க வேண்டியது அரசாங்கமாகும்.

ஆனால் அரசாங்கத்தில் - நாட்டில் இப்பொழுது குழப்ப நிலையே உருவாகியுள்ளது.

இந்தக் குழப்பநிலையில் எதைத்தான் செய்ய முடியும்?

அரசாங்கம் மட்டுமல்ல, நாடே குழம்பியுள்ளது.

மக்களிடமும் தெரிவுகளில்லை. தெரிவுகளில்லை என்று சொல்வதை விட என்ன வகையான தெரிவுகளை மேற்கொள்ள முடியும் என்று வழிகாட்டத்தக்க தரப்புகள் எதுவுமில்லை. இதுதான் மிகப் பெரிய துயர நிலை.

எல்லோரும் எங்காவது கடன் பட்டு நிலைமையைச் சமாளித்துக் கொள்வோம் என்றே சிந்திக்கிறார்கள். இதில் மக்களும் அரசும் ஒன்றாகவே உள்ளமை வேதனைக்குரியது. முடிவற்ற தொடர் கடனால் ஏற்பட்ட இந்த நிலையையும் இது மேலும் உண்டாக்கக் கூடிய பாதகமான சூழலையும் பற்றி யாரும் கணக்கிற் கொள்ளவில்லை. அதாவது, இந்தக் கடன் படுதலுக்கு எல்லை என்ன என்று யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மட்டுமல்ல, கடன் படுதலின் மூலம் நிலைமையைச் சீராக்கி, நாட்டை மீட்கலாமா என்பதிலும் இவர்களுக்குத் தெளிவில்லை.

அப்படியென்றால் என்ன செய்வது?

இப்போதுள்ள நிலையில் துணிகரமான – திறனுடைய ஒரு அணி மீட்புப் படையாகச் செயற்பட வேண்டும். அது காட்டும் வழியில், அதன் செயலாக்கத் திட்டத்தில்தான் நாடு நெருக்கடியிலிருந்து விடுபடும்.

இந்த அணி இன்னும் உருவாகவும் இல்லை. உருவாக்கப்படவும் இல்லை. சிவில் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுவோரும் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது குழப்ப நிலையில் உள்ளனர்.

பெரும்பாலானோருடைய கவனமும் அரசாங்கத்தை மாற்றுவது அல்லது அதிலுள்ள தலைகளை மாற்றுவது என்றவாறாகவே உள்ளது. மக்கள் எழுச்சி என நடக்கின்ற போராட்டங்களிலும் இதுவே தொனிப்பொருள். ஆனால், தலைகளை மாற்றுவதுடன் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இதுதான் பிரச்சினையே.

எதிரணிகளில் யார் அடுத்த கட்டத் தலைமைக்குப் பொருத்தனமாவர் என்றால் அதுவும் கேள்வியே. அப்படித்தான் ஒரு தலைமையைக் காட்டினாலும் அதன் வழிமுறைகள் என்ன? திட்டங்கள் என்ன? செயற்பாடுகள் என்ன? உபாயங்கள் என்ன என்று யாருமே சொல்லக் காணோம்.

உண்மையில் இன்றைய சூழலில் எதிர்த்தரப்புகள் நாட்டுக்கு வழி காட்ட வேண்டும். அந்தப் பொறுப்பு அவர்களுக்கும் உண்டு. எரிகின்ற வீட்டை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடியாது. அதற்குள் சிக்குண்ட மக்களையும் அவர்களுடைய உடமைகளையும் காப்பாற்ற வேண்டும் தீயை அணைக்கவும் வேண்டும். அத்தகைய ஒரு நிலையே இலங்கை என்ற இந்தத் தீவைக் காப்பாற்றும்.

இதற்கு ஒரு புதிய அரசியற் கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். கட்சி பேதங்கள், இனபேதங்களுக்கு அப்பால் தேசிய உணர்வுடன் அது உருவாக்கப்பட வேண்டும்.இதையெல்லாம் செய்வது யார்? அது எப்போது? அது எப்படி நிகழும்?

 

கருணாகரன் ...?

 

Comments