ஆயிரம் அலைகள் | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் அலைகள்

-ரதிதேவி, மானிப்பாய்

 

கண்ணீர்த்துளிகளின் ஈரம்

அவள் இமைகள் உணர்ந்து திறக்கும்

கால் பற்றி அழும் ஒரு தாயும்

ரீங்காரமிட்டுலவும் சேயும்

அறையின் ஒளியொடுருகி நிற்பர்

 

“அம்மா, என்னோட இரண்டு குழந்தைங்க

ஏழுவயசு வரும் போது செத்திடுச்சு

இவளுக்கு ஐஞ்சு வயசிப்ப,

பயமா இருக்கும்மா”

 

மௌனம் மரணம்

இரண்டும் அறிந்தவள்

அழுவதெதற்கு

அவள் அழுவதெதற்கு

வீசும் காற்றோடு

விளையாடும் முகம் பார்த்தாள்

மூன்று இதயத்துள்ளும்

நிறையும் மூச்சை இரைத்தாள்

 

விடை பெற்றுக்கொண்டாள் மாது

அணைத்து முத்தம் ஒன்றை

நெற்றிப் பொட்டின் நடு

விதை போல இட்டு

மூடி மறைத்து விட்டு

 

தீரும் எண்ணை

சுடர் நூரும் உண்மை

நிழல் சூழும் மண்ணை

கதிர் பாயும் விண்ணை

ஆயிரம் அலைகள்

மூழ்கி முடிந்த பின்

நாட்கள் ஓடிக்

களைத்து விழுந்த பின்

ஒரு நாள் வந்தாள்

உடல் தந்த தாய்

உயிரை மீண்டும்

எடுத்துச் செல்ல

Comments