வெளிச்ச விடியல்... | தினகரன் வாரமஞ்சரி

வெளிச்ச விடியல்...

நோன்புப் பெருநாள் சிறுகதை

வலது கை ஆட்காட்டி விரலில் மீத மிருந்த சுண்ணாம்பை மின்கம்பத்தில் தேய்த்து விட்டுப் பெயர் தெரியாத அந்தப் பெரிய மரத்தின் வேராசனத்தில் அமர்ந்தார் வெத்தல குதம்பிச் சித்தர்.

சேற்றுக்கானில் வெற்றிலைச் சாற்றைத் துப்பினார். தோளில் கிடந்த துணிப்பைக்குள்ளிருந்த அப்துற்றஹீமின் 'எண்ணமே வாழ்வு' என்ற புத்தகத்தை வெளியே எடுத்தார்.

சந்தோஷ் தேநீரும் பணிஸும், வாழைப்பழமும் கொண்டு வந்து வைத்தான். முன்னால் இருந்த தெருவோரக் குழாயில் வாயைக் கொப்பளித்தார். தேநீரைக் குடிக்கத் தொடங்கினார். மின் கம்பக் 'கண்ணீர் அஞ்சலி' யில் தங்கராஜா சிரித்துக் கொண்டிருந்தார்.

"அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத் தெல்லை தொட்டு மெய்ஞ்ஞான வீடு பெற்று வெளிப்படுவ தெக்காலம்...?"

பத்ரகிரியார் பாடலை சத்தமாகப் பாடினார். தங்கமான ராஜாவாக இருந்தாலும் இங்கே யாருமே நிரந்தரமாகத் தங்க முடியாது ராஜா!

போக மாட்டேன் என்று அடம்பிடித்து இந்த பூமியில் தங்கியவர்யாருமே கிடையாது. இது சத்திரம் தங்குமடம். சிறு கொசுவின் இறக்கைக்கு ஒப்பானது. என்ற அநித்தியச் சிந்தனை அலைமோதியது.

"நிறந்தரும் நிலமிது!

நிரந்தர மிலையிது!

உதிர்ந்திடு மிலையிது!" தானெழுதிய பாட்டையும் ஒருமுறை பாடிப்பார்த்தார்.

"ஐயா....!'

குரல் கேட்டு நிமிர்ந்தார் வெத்தல குதப்பிச் சித்தர்.

காரிலிருந்து இறங்கி வந்த கொண்டிருந்தான் நாஸிக்!

'அடடா... நம்ம நவாஸ் தொர...!'

'வணக்கம் ஐயா'

'வணக்கம் வணக்கம்... வாராசா!'

'எப்படி ஐயா... சுகமா இருக்கிறீர்களா?' கேட்டான் நாஸிக்.

'நல்ல சுகம் ராசா... நீ என்ன கத?"

'தெரிந்ததைச் செய்னு சொல்லித் தந்தீங்க இப்ப

நீங்க எனக்குத் தந்த எங்கரேஜ்ல... என் கராஜில..

நாலு பேர் வேல செய்றாங்க ஐயா...'

'ரொம்ப சந்தோஷம்... ரொம்ப சந்தோஷம்...'

'இந்தாங்க ஐயா...!'

பார்சலை நீட்டினான்.

நோன்புக் பெருநாள் விருது. உங்களுக்கும் புது உடுப்பெடுத்தன் ஐயா... என்றவன் பணமும் தந்தான்.

'இதெல்லாம் எதுக்கு ராசா...' கண்கலங்கினார் சித்தர். லைப்ரரில ஒங்கட கதை சொல்லும் நேரத்துல வந்து சேரலைன்னா... நானும் போதை வஸ்துக் கூட்டாளி மாரோட கூடி இந்நேரம்... என் வாழ்க்கையே நாசமாகியிருக்கும் ஐயா... நீங்க குரு ஐயா...'

'இன்னொருவருக்கு ஒப்படைக்கிற விஷயங்களத்தான் இறைவன் ஒவ்வொருத்தருக்கும் ஒப்படைத்திருக்கிறான். பணம், பதவி, கல்வி.... இதையெல்லாம் நம்ம கூடவே வெச்சுக்கப் படாது... நம்ம கூடவே இருக்கிற நாலு மனுஷருக்கு அதால பலன் கிடைக்கணும்...' 'மனித நேயம் மட்டும்தானே ஐயா... ஒங்கட உயிர்மூச்சு' 'ராசா ஒங்க வாப்பா நவாஸ் இருக்கிறானே... அவனும் நானும் சேர்ந்து நெறய சமூக சேவ செஞ்சம்.. ஒங்க வாப்பா சொல்லுவான்... இரத்தமான சமூகத்த உருவாக்கப்படாது... இரக்கமான சமூகத்த உருவாக்கணும்னு. நான் கவிதைப் பைத்தியம்.

ஒரு நாள் ஒங்க ஊர் லைப்ரரிக்குக் கூட்டிட்டுப் போனார். இவர் பிள்ளைகளுக்கு நல்ல அறிவான கதைகள் சொல்லுவார். இவரப் பயன்படுத்துங்க. கதைசொல்லும் நேரம்னு ஒரு நிகழ்ச்சிய ஆரம்பிங்கன்னான். அந்த மெடமும் அத விரும்பினா. அப்ப தொடங்கின பயணம்...

'நான், ரவி, மகேஷ், தீபன், நுஸ்ரத், சலாம் எல்லாரும் அதுல வளர்ந்தவங்க தானே ஐயா..' என்றவன், 'நல்லம் ஐயா... பெருநாளைக்கு வீட்டுக்கு வாங்க ஐயா' என்றான்.

அவன் ஏறியதும் கார்க் கதவை மூடினார் வெத்தல குதப்பிச் சித்தர்.

சொற்ப கால வாழ்க்ைக நிறையத் தொலைத்து விட்டோம் நேரத்தை! இன்னும் கடக்கவில்லை தூரத்தை! இந்த மண்ணில் 'மனித நேயம்' மட்டும்தான் வெற்றி பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்ைக கொண்டவர் வெத்தல குதப்பிச் சித்தர்.

கிழக்கிலொரு சிறிய கிராமம் தான் இவரது பூர்வீகம். பள்ளிப் பிடிப்பு கம்மி. நிறையப் புத்தகங்கள் வாசித்தார். நூலகம் என்றால் அப்படியொரு அதீத ஆர்வம் 'வெறுங்கையோன்' என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதினார். ஏறக்குறைய துறவி. தலைநகரில் தற்போது அவர் தன் பேத்தியின் வீட்டில் வாழ்ந்தாலும்... இந்த நாமல் உயன களனியாற்றுக் கரையோர மரவேர் மகராசாவாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. நிறைய இடங்களில் தொழில் செய்தார். எதிலும் நிரந்தரம் கிடையாது. கடந்த காலக் கவலைகளுமில்லை. வருங்காலப் பயமுமில்லை. இன்றுதான். நிகழ்காலம் ஒன்றுதான் மகிழ்காலம் என வாழும் ஒரு ஜீவன்.

மறுநாள் மாலை.

மூன்று மணிக்கே வந்து விட்டார்.

சந்தோஷ், அப்துல் அஸீஸ், தருஸ, சஞ்ஜூ, பெக்கம், ரிஸ்கான், கவிஷ்கர், பிரவீன், எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

'உலக நீதி யாருக்குப் பாடம்?' கேட்டார் வெத்தல குதப்பிச் சித்தர்.

'எனக்குப் பாடம் ஐயா...' சந்தோஷமாகினான். 'பாடிக்காட்டு சந்தோஷ்...'

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். முழுதாகப் பாடி முடித்தான்.

'அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்' என்பதை மிக அழுத்திச் சொன்னார் சித்தர்.

ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார் என்று ஒருவர் பின் ஒருவராக சித்தரிடம் தாம் மனனித்த பாடங்களை ஒப்புவித்தார்கள்.

'சரி, நமது இம்மாத 'வெளிச்ச விடியல்' தலைவர் கவிஷ்கர்... வேல ஒழுங்கா நடக்குதா ராசா?' என்று கேட்டார் வெத்தல குதப்பிச் சித்தர்.

"ஓம்... ஐயா.. பாதி முடிஞ்சு பர்ஸானோட ஆச்சியும் வெளிநாட்டுல இருந்து காசு அனப்பினாங்களாம்..." என்றான் கவி.

"ஆமாம்... ஐயா' என்றான் பிரவீன்.

'எந்தக் குடும்பத்துக்கு...? தெரிவு செுஞ்சாச்சா?'

"ஓம்... ஐயா... ரிஸ்கான்ட சாச்சிட மக'

'பெருநாளைக்கு மொதக் கொண்டு போய்க் கொடுத்திடனும் சரிதானே...?'

'சரி... ஐயா...'

'அவர் ஒரு யோகியோ... அல்லது அந்த வேஷத்துல அலையுற சிறுவர் துஷ்பிரயோகியோ...?' இப்படியும் அவரது காதுபட வந்த சொல்லடிகளும் ஏராளம். சிலர் குடித்து விட்டு வந்தும் அவரைத் தாக்கினார்கள்.

ஆனாலும்... எந்த ஆனாலும் அவரை அந்த இடத்தை விட்டும் விரட்ட முடியாமல் போயிற்று.

அவர் ஒண்ணும் கஞ்சா - குடு - ஐஸ் விற்கவரவில்லை. அறநெறிப் போதகராக... ஒரு சற்குருவாக... நம்ம பிள்ளைகளை மனிதநேயம்... மிக்கவர்களாக... நற்பிரஜைகளாக செதுக்க வந்த சிற்பி... என்ற பேருண்மையைப் புரிந்து கொண்ட அக்கிராமப் பெரியவர்கள்... அக்கிராம அநியாயங்கள் அழிக்க வந்த ஞானியாக... அவரை ஏற்றுக்கொண்டனர். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. நாமல் உயன நாலின மக்களும்... நல்லிண மக்களாக ஒற்றுமையாக அவர்களை ஒற்றுமையாக்க வெத்தல குதப்பிச்சித்தர் ஓர் அரணாக முன் நின்றார். அன்பால் ஊர் மக்கள் உள்ளத்தை வென்றார்.

'வெளிச்ச விடியல்' சிறுவர் முன்னேற்றச் சங்கம்' என்ற இந்த அமைப்பின் மூலம்.... வெத்தல குதப்பிச் சித்தரின் வழிகாட்டுதலில் நாமல் உயனச் சிறுவர்கள் செய்த சமூகப் பணிகளின் விபரங்கள் பின்வருமாறு

I. உடைந்த சைக்களில் மீன் வியாபாரம் செய்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்திற்குப் புதுச் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர்.

II. கொரோனாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபீலாவின் வீட்டுக்கு... அவள் குணமாகி வீடு வந்து சேரும் வரை 'மூன்று வேளைச் சாப்பாடு' அனுப்பி வைத்தனர்.

III ஜினதாஸ வீட்டுக் கூரை காற்றில் பறந்த போது... தகரங்கள் வாங்கிக் கொடுத்தனர்.

ஊர் மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இப்படியும் நடக்குமா?

நடந்ததே. நடந்தால் நடக்குமே!

ஒத்துழைப்புக்கு வெற்றி கிடைக்கும்.

மூளைச் சலவை மூலம்... எதையும் சாதிக்க முடியும். முதலில் தலைமைத்துவம் நீதமானதாகவும்....

செயலில் தீர்மானமானமாகவும் இருக்க வேண்டும்.

ஒரு காலமிருந்தது.

அஞ்சோ பத்தோ பந்தோ பஸ்தோ சேர்க்காத ஊர்த் தலைவர்கள் வாழ்ந்த காலம்...!

தியாகிகள்!

ஆனால்... இன்று

கடுக்கண் வாங்கின சுருக்கும்... அதக் காதுல மாட்டுன சுருக்கும். அத ஆட்டிப் பார்த்த சுருக்கும்... அது அறுந்து விழுந்து சுருக்கும்.. என்றாகிப் போச்சு! ஆசை. பேராசை. நாமல்ல, தாமாகியதால் தாமாகவே வீணாகினரே பலரும்... ஆங்காங்கே... வெவ்வேறு ஊர்களிலும்!

வெத்தல குதப்பிச் சித்தர்... தூர நோக்கு மிக்கவர். ஆசைகள் துறந்த மனசுகளை ஆழமாக அவதானிப்பவர்.

உலோபத்தனம் இருக்கிற உள்ளத்தில் மனித நேயம்... இரக்கம் இருக்காது என்ற உண்மையையும் பணிவு இல்லாதவர்களும் துணிவு இல்லாதவர்களும் பயன் தரப் போவதில்லை என்பதையும் மிக ஆழமாகக் கண்டறிந்தார்.

அடிப்படையாக முதலில் அடுத்தவர் பசியை உணரும் படிசெய்தார். வறியோர் எனக் குதவுகிற இரக்க குணத்தை, ஈகையின் இன்பத்தை சிறுவர்கள் அனுபவத்தால் உணர வேண்டும் என்று விரும்பினார்.

அடுத்தவர்க்கு எந்நாளும் உதவ வேண்டும்.... நம்மால் பிறரும் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு என்ன வேண்டும்? மனித நேயம் வேண்டும். 'தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே! அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டும் என்ற பட்டுக் கோட்டை யாரின் சமூக அக்கறை இவருக்கும் சர்க்கரை இனிப்பாய்த் தொடர்ந்தது பொது நலப்பணி.

கீதை, பைபிள், குர்ஆன் எல்லாம் அன்பைத்தானே சொல்கிறது. தீதை நாடிப் பாதை மாறி மனிதம் எங்கே செல்கிறது...? இப்படி... நாளைய சந்ததிக்கு நல்ல தலைமைத்துவங்கள் அமைவதற்குப் பேராசையற்ற கஞ்சத்தனமற்ற... மனிதநேயம் மிக்க... ஒழுக்கமான தலைமுறை இன்றிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் மும்முர முனைப்புடன் செயற்பட்டார் வெத்தல குதப்பிச் சித்தர்.

சிறுவர்கள் கண்ணாடிப் பாத்திரங்கள். நாம் எதை வரைகின்றோமோ... அதைத்தான் அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும்.

அந்த ஒரு வினாடி வரைதானே இந்த வாழ்க்கை? ஒரு தரம்! ஒரேயொரு தரம்!

கண் மூடினால்..

மண் மூடுமே!

மனிதன், மண்ணுக்குள் அடங்கினாலும், மனிதர் தம் மனதுக்குள் அடங்க வேண்டும்.

இங்கே... இறைவன் தந்த அரியதொரு வாய்ப்பு இந்த வாழ்க்கை.

கோடி... லட்சம்... ஆயிரம்... தேவையில்லை. ஒரு ரூபாய் போதும்...!

சொர்க்கம் போகவும் கூடும்.

அந்த ஒரு ரூபாய்.. உள்ளம் உருகி இறைவனுக்காக என்ற உணர்வுடன் வழங்கப்பட வேண்டும்.

வாழ்ந்த பிறகும், வாழ்வோரை வாழ வைக்கும் பணிகளை, உதவிகளைச் செய்து மறைந்தாரை இவ் வையம் வாழ்நாளில் மறக்காது.

இவ்வாறு... பல எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்தவாறே தூக்கத்திலாழ்ந்தார் சித்தர்.

இன்னும் இரண்டு நாட்களில் நோன்புப் பெருநாள். மகிழ்ச்சியளிக்கும் வெளிச்ச விடியல்... நாமல் உயன ஆற்றோராம்.

மர வேர்.

வெத்தல குதப்பிச் சித்தர் அமர்ந்திருந்தார்.

'வெளிச்ச விடியல் தலைவர் கவிஷ்கர் பேச எழுந்தான். 'எல்லாருக்கும் வணக்கம்... ஐயா... இதுல எழுபதாயிரம் ரூபா இருக்கு நாங்க ஒவ்வொருத்தரும் ஆளுக்கு மூவாயிரம் சேர்த்தம் ஐயா. பர்ஸானாட ஆச்சி இருபதாயிரம்... தருஸட பெரியம்மா பத்தாயிரம்... நசீர் ஹாஜியார் தொர பத்தாயிரம்... சில்வா அங்கிள் ஐயாயிரம்... எல்லாமா எழுவதாயிரம் சேர்த்தம் ஐயா..,. இந்தாங்க...!'

வெத்தல குதப்பிச் சித்தர் அதை வாங்கிக் கொண்டார். அவரது அழைப்பையேற்று சிறப்பதிதியாக வருகை தந்திருந்தார். பொலிஸ் அதிகாரி. கவிஞர், பாலமுனை வாஹிட் .

அவர் உரை நிகழ்த்தினார்!

அவரது மிக நீண்ட உரையின் சாராம்சம் இதுதான்; நல்ல நீதி நூல்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்ட துர்ப்பாக்கியசாலிகளான சமுதாய வாலிபர்கள் துப்பாக்கியால் பலியாகிற குற்றவாளிகளாகிப் போவதற்கு இந்த வாழ்வியல் ஒழுக்க நெறிகளும்... இறையச்சமும்... சமூக அக்கறையும்... இரக்க குணமும் இல்லாமல் போனதுதான் பிரதான காரணம். சித்தர் மாதிரி... இப்படியான தனி மனிதவள சமூக அமைப்பாளர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை. அந்த வகையில் இந்தத் தொகையில் இம்முறை இந்த நோன்புப் பெருநாளை கஷ்டமான ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகக் கொண்டாட வெளிச்சவிடியல்' சிறப்பான பணியைச் செய்கிறது. எனது நல்லாசிகள்.

இப்தார் நோன்பு துறக்கும் நேரம்.

அனைவரும் அந்த ஏழையின் இல்லம்நோக்கி விரைந்தனர்.

நோன்புக் கஞ்சியிருந்து இப்தாருக்குத் தேவையான தின்பண்டங்களும், குளிர்பானங்களும் கொண்டு சென்றனர். இப்தார் இனிதே நிறைவுற்றது.

வெத்தல குதப்பிச் சித்தர் 'வெளிச்ச விடியல்' அமைப்பின் செயற்பாட்டு நோக்கத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

எழுபதாயிரம் ரூபாய்ப் பணத்தை அந்தத் தாயாரிடம் வழங்கினார்.

அவளது அழுகையில்...

எத்தனையோ தாய்மார்களின் பாவங்களும் கழுவப்பட்டிருக்கலாம்...

அகத்தழுக்குப் போவதற்கு

சவர்க்காரங்கள் தேவையில்லை!

கிண்ணியா அமீர்அலி ...?

 

Comments