அரசியல் தீர்வு காண முயற்சிப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் தீர்வு காண முயற்சிப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது!

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அளித்த பேட்டி

நாட்டில் காணப்படும் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நிதிநெருக்கடி என்பதால் நிதிமுகாமைத்துவத்தின் ஊடாகவே தீர்வைக் காண வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். எமக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட கால நெருக்கடியின் கடைசிக் கட்டமே இதுவாகும். எனவே, நிதிமுகாமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கவே நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இதனைச் செய்வதற்கே தற்பொழுது முயற்சிக்கிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள் எவரிடமும் தீர்வுகள் கிடையாது!

 

கே: ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருந்த போதும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: அடிப்படையில் இது அரசியல் நெருக்கடியல்ல, நிதி ரீதியான பிரச்சினையாகும். இதனால் விநியோகச் சங்கிலி, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்தப் போராட்டங்கள் யாவும் இவற்றுக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார முகாமைத்துவத் திட்டத்தின் ஊடாக இதனைக் கையாளுவதே சிறந்த வழியாகும். அரசியல் தீர்வு காண முயல்வதால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது.

பிரதமர் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் எனக் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியதால், முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. ஜனாதிபதியும் பிரதமரும் இராஜினாமா செய்தாலும் நாட்டை நடத்துவதற்கான பொறிமுறை என்ன? காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் நாட்டை நடத்த அனுமதிக்க முடியாது.

எவ்வித தீர்வையும் முன்வைக்காமல் போராட்டம் நடத்துகிறார்கள், அவர்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று அவர்களிடம் எந்த யோசனையும் இல்லை. அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்டதால் பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது. உண்மையில் என்ன நடந்தாலும் அதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் சிலவற்றாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது கடந்த இரண்டு வருடங்களில் என்ன நடந்தது என்பதன் அடிப்படையில் மட்டும் அல்ல.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே பூர்த்தியடைந்துள்ளன. இந்த நெருக்கடி அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாகவில்லை. நிதி தொடர்பான நிலைமையை எடுத்து நோக்கினால் இது நீண்ட கால நெருக்கடியின் கடைசிக் கட்டமாகும். எனவே, நீண்ட கால நிதிமுகாமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கவே நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இதனைச் செய்வதற்கே தற்பொழுது முயற்சிக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பாளர்கள் எவருக்கும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த பரிந்துரைகள் இல்லை. தற்போது புதிய நிதியமைச்சர் பதவியேற்றுள்ளார். மேலும், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது நிதியமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுடனும் நிதி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், இந்த நெருக்கடியை முன்னரே கண்டறிந்திருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கண்டுபிடித்திருந்தால், இந்த நிலைக்கு வருவதற்கு முன்பே தீர்த்திருக்கலாம். நெருக்கடியான சூழ்நிலையைத் தீர்ப்பதற்கு மிகவும் முன்கூட்டியே தீர்வுக்கு செல்லாதது அரசாங்கத்தின் தவறு என்று நான் கூறுவேன்.

கே: அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒட்டுமொத்த அரசாங்கமும் வெளியேறி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி, மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப உடனடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். இதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுடன் கைகோர்க்க வருமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்த போதும் எவரும் அதற்கு முன்வரவில்லை. அரசாங்கம் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது. நாங்கள் இரண்டு வாரங்களாக அரசாங்கம் இல்லாமல் இருந்தோம். அனைத்துக் கட்சிகளுடனும் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் எந்தக் கட்சியும் முன் வந்து பதவிகளை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கடப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. நிலைமை அப்படியானால், அடுத்த கட்டமாக சொந்தமாக ஆட்சியை அமைத்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

 

கே: ரம்புக்கணை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 27 பேர் காயமடைந்தனர்.இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசு மற்றும் எதிர்க்கட்சி கோருகிறது. இதனை விளக்க முடியுமா?

பதில்: தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களால் எப்போதோ ஒரு நாள் நடக்க வேண்டியதொரு சம்பவமே அங்கு நடந்துள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தை தாக்கச் சென்ற போது மிரிஹானவில் வன்முறையாக மாறியது. பின்னர் பொலிஸார் தடியடி நடத்தினர். அதேபோன்று, ரம்புக்கணையும் இன்னுமொரு சம்பவமாகும்.

போராட்டம் வன்முறையாக மாறியது. ரம்புக்கணை புகையிரத நிலையத்திற்கு சற்று அருகில் 650 பயணிகளுடன் புகையிரதமொன்று வழிமறிக்கப்பட்டது. 33000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொழுத்த முயற்சிக்கப்பட்டது. ஒருவேளை ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிபொருள் பவுசர் எரியூட்டப்பட்டிருந்தால் எதிர்ப்பாளர்களில் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதால் அவர்களைக் கலைக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் என நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டவசமாக, பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில போராட்டக்காரர்கள் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தை நீங்கள் கணக்கில் கொண்டால், எந்தவொரு அமைதியான போராட்டத்திலும் அரசு தலையிடவில்லை.

சில நேரங்களில் இது தவறான முடிவாக இருக்கலாம். உண்மையில், பொலிசாரை குறை கூற முடியாது. அவர்கள் செய்தது சரி என்று நான் சொல்ல முயற்சிக்கவில்லை. வன்முறைப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர பொலிஸார் முயற்சிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட போராட்டங்கள். பிரதான எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளும், அரசாங்கத்தை தரைமட்டமாக்குவதற்கு இதனை ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றன.

எனவே, அவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி போராட்டங்களை வளர்க்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அரசியல் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் வன்முறையானவை. ரம்புக்கண சம்பவமும் அவ்வாறான மற்றுமொரு துரதிஷ்டமான சம்பவமாகும். இளைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களை முன்னிறுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்கள் உள்ளன.

 

கே: ஆட்களை மாற்றுவதும் மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பதும் மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர். உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரேஷ்ட உறுப்பினர்களை விரும்பவில்லை, அமைச்சுப் பதவிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். நாட்டிலுள்ள இளைஞர்களின் நிலைப்பாடு அதுவாக இருந்தால், அவர்களின் முக்கிய பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு, வெளியில் இருக்கும் இளைஞர்களுடன் ஒத்திசைந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முயற்சிப்போம் என்று நமது மூத்தவர்கள் கடமைப்பட்டுச் சொன்னார்கள்.

அதைத்தான் நாம் இப்போது சரியாகச் செய்து வருகிறோம்.

நிதி நெருக்கடியாக இருக்கும் போது, தலைவர்களை மாற்றுவது பிரச்சினையைத் தீர்க்காது. இருப்பினும், முக்கிய பதவிகளை வகிக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மற்றும் இளைஞர்கள் பொறுப்பில் இருக்க விரும்பினால், அவர்கள் கோருவதில் ஒரு சதவீதம் மட்டுமே. எங்கள் மூத்த உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றால், அந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி செய்திருக்க முடியாது. அவர் யாரையும் விலக வற்புறுத்தவில்லை. மூத்த உறுப்பினர்கள் ஒதுங்கி நின்று புதிய அமைச்சரவையை நியமிக்க அனுமதித்தனர்.

Comments