மேதினம் கண்ணீர் விட்டே வளர்த்தோம்... அர்த்தமற்று போய்விடக்கூடாது தொழிலாளர் உரிமைகள் | தினகரன் வாரமஞ்சரி

மேதினம் கண்ணீர் விட்டே வளர்த்தோம்... அர்த்தமற்று போய்விடக்கூடாது தொழிலாளர் உரிமைகள்

ன்று நாட்டில் நிலவும் பொருளாதார தளம்பல் அரசியல் ஸ்திரமின்மையின் பின்னணியில் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் இன்றைய மேதினம் அனுட்டிக்கப்படுவதால் மேதின மேடைகள் சூடுபிடிக்கவே செய்யும். ஆயினும் அத்தனையும் கடந்துபோன கசப்பான அனுபவங்களாக மட்டுமே அமைவது திண்ணம். மலையகத்திலும் இதே நிலைதான். உண்மையில் மேதினத்தின் மேன்மையைப் புரிந்து கொண்டால் மட்டுமே உரியபலன் கிட்டுமே தவிர எதிரணியைத் திட்டும் செயற்பாடுகளால் ஆகப்போவது எதுவுமே இல்லை.

மேதினியெங்கும் மேன்மையான தினமாக கொண்டாடப்படும் மேதினம். வர்க்க உணர்வுக்கான அடையாளம். தொழிலாளர் தோழர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் இது உன்னதமான நாள். அன்று சிக்காக்கோவில் சீறி வெடித்து சிதறிய உரிமை எழுச்சி முழு உலகையுமே மிரட்சிகொள்ள வைத்தது என்னவோ உண்மை. 8 மணி நேர வேலை என்ற தொனிப்பொருளை இலக்காக கொண்டு ஆரம்பமான தொழிலாளர் போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா என்று விரிவுபெற்றது.

18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர் விடுதலைக்கான உணர்வலைகள் பரவலாக சுழன்றடித்தன. ஏனெனில் துரித வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று கசக்கிப் பிழியப்பட்டனர்.

தொழிலாளர்களது சக்தி. உழைப்பின் களைப்பைப் போக்க ஓய்விற்கான நேரம் இல்லாமல் உழைக்கும் வர்க்கம் உருக்குலைந்து போனது. நாளொன்றுக்கு 8 - 18 மணி நேர கட்டாய வேலை நேர நடைமுறை தொழிலாளர்களைச் சினமடையச் செய்தது. எதிர்ப்புணர்வு மேலோங்கியது. இது பல்வேறு நாடுகளிலும் பரவியது. தொழிலாளர் சாசன இயக்கம் இதில் முக்கிய இடம் பிடித்ததுக் கொண்டது. 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கமாக இது பரிணாமம் பெற்றது. இவ்வியக்கத்தின் முக்கிய அம்சம் 10 மணி நேர வேலை வேண்டும் என்பதே.

1830களில் பிரான்சில் 15 மணிநேர வேலையை எதிர்த்து போராட்டம் ஆரம்பமானது. 1834 இல் ஆரம்பமான “ஜனநாயகம் அல்லது மரணம்” எனும் தொனிப்பொருளிலான போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. எனினும் இப் போராட்டம் தோல்வியைத் தழுவியது. இப்போராட்டங்களுக்கு எல்லாம் உச்சமாக திகழ்ந்தது தான் அமெரிக்காவின் சிக்காகோவில் ஆரம்பமான பேரெழுச்சி. 3000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் பங்கேற்றார்கள்.

“மெக்கர் மிக் ஹார் வாஸ்டிங்” என்ற மெசின் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. இது மிகவும் பிரசித்திபெற்ற நிறுவனமாகும். இதன் நுழைவாயிலில் கண்டனக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. போராட்டக்காரர்களை கலைந்து செல்ல பொலிஸார் கட்டளை பிறப்பித்தார்கள். எனினும் தொழிலாளர்கள் மசிந்தபாடில்லை. இதனால் பொலிஸார் கோபமுற்றார்கள். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதே போலவே “ஹேமார்க்கெட்” சதுக்கத்திலும் மே மாதம் 4 ஆம் திகதி கண்டனக் கூட்டம் நடந்தது. இங்கும் கலவரம் வெடித்தது. யாராலோயோ வெடிகுண்டு வீச்சு இடம் பெற்றது. இதில் ஒரு பொலிஸ்காரா் பலியானார். இதனால் பதற்றம் சூழ்ந்து கொண்டது. பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கைகலப்பு ஆரம்பமானது.

இதன் விளைவாக தொழிலாளர்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 21ஆம் திகதி ஜுன் மாதம் 1986 இல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீரப்்பளித்தது நீதி மன்றம். இதைனையே “ஹேர்மார்கெட் படுகொலை” என்று வரலாறு பதிவு செய்துள்ளது. இதைக்குறிக்கும் வண்ணம் இங்கு நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

இது பல்வேறு நாடுகளிலும் வேலை குறைப்புக்காக போராட்டங்களை நடத்தி வந்த தொழிலாளர்களுக்கிடையே ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தொழிலாளர் தலைவர்கள் 7 பேரும் தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடெல்ஃப்பிர், ஜோர்ஜ் ஏங்கல் போன்ற பிரபல்யங்களும் இருந்தார்கள். தூக்கிலிடப்பட்ட இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் வரை பங்கேற்றது முதலாளி வரக்கத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தவே செய்தது.

அமெரிக்கா முழுவதும் இத்தினம் கறுப்பு தினமாக அனுட்டிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டுத் தொழிலாளர்களின் 8 மணிநேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் மே தினம் உருவாக காரணமாக அமைந்நது.

இதற்கு அனுசரணையாக 1889 ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் திகதி பாரீசில் சோ‘லிஸ தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாரளுமன்றம் கூட்டப்பட்டது. 1890 மே மாதம் முதல் சர்வதேச ரீதியாக தொழிலாளர் இயக்கங்களை முன்னெடுப்பது என்ற முடிவு எட்டப்பட்டது. இதில் பிரெட்றிக் ஏங்கல்ஸ் கலந்துகொண்டு கருத்துக்களை முன் மொழிந்தது சிறப்பம்சமாக இருந்தது.

பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஷ்யா என்று ஆரம்பமாகி சிக்காக்கோவில் பேரெழுச்சியாக பரிணாமம் பெற்று பாரிசில் பாராளுமன்ற அமர்வாக நடந்து அறைகூவலாக அகிலம் எங்கும் ஓங்கியொலித்த கோரிக்கையின் வெளிப்பாட்டாக மேதினம் நிர்ணயமானது.

இதன் பின்னணியில் வேதனை, ஏமாற்றம், இழப்பு, சித்திரவதை என்று பல்வேறு துன்பியல் நிகழ்வுகள் இடம்பெறவே செய்தன. எனினும் இது உலகத்துக்கு புதிய செய்தியொன்றைச் சொல்லவே செய்ந்தது. அது ஒன்றுபட்டால் உண்டு பலன் என்ற செய்தியே. அதன் பின்னர் சர்வதேச ரீதியில் தொழிலாளர் நலன் கருதிய பல்வேறு சட்டத்திட்டங்கள் அங்கீகாரம் பெற்றன. இன்று ஐ.நா. முதற்கொண்டு பல்வேறு அமைப்புகளும் கூட தொழிலாளர் நல உரிமை பற்றி கரிசனைகாட்ட இப்போரட்ட விளைவுகளே அடிப்படையாக அமைந்துள்ளது.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இன்று மேதின நிகழ்வுகள் என்பது முதலாளித்துவம், அரசியல் சம்பந்தப்பட்டவையாக மாறிப் போயிருப்பதை காண முடிகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகள், அது தரணிக்கு தந்த படிப்பினைகள், அதன்மூலம் சரவதேச ரீதியில் உழைக்கும் வர்க்கம் பெற்று வரும் உரிமைகள், சலுகைகள் என்பனவெல்லாம் குறிப்பிடத்தக்க விடயங்களே தான். ஆனால் பெருந்தோட்ட மக்களின் தொழில்சார் உரிமைகளோடு ஒப்பிடும்போது மேதின பெறுபேறுகள் நியாயமான வகையில் கிடைக்கப் பெறுவதாய் இல்லை. சர்வதேச தொழிற் சட்டங்கள், தொழிற்சார் நல உரிமைகள், வரப்பிரசாதங்கள் மறுதலிக்கப் படும் ஓர் உழைப்பாளர் சமூகமாகவே பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மலையக தொழிலாளர் தங்கள் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள.் உயிர்த்தியாகங்களும் இடம் பெற்றுள்ளன. முதலாளி வர்க்கத்திற்கு எதிரான அனைத்துப் பிரயோகங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மாற்றத்துக்குத்தான் வழியில்லை.

இலங்கையில் முதன் முதலாக 1955 ஆம் ஆண்டு தான் மேதினம் ஒரு பொது விடுமுறை நாளாக பிகடனப்படுத்தப்பட்டது. மலையக மக்களை பொறுத்தவரை 1965 ஆம் ஆண்டுதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளிலும் மேதின ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தப் படுவது வழமையானது.

பெரும்பாலும் தொழிற்சங்க ரீதியாகவே மேதின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதே நேரம் பல தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளை சார்திருப்பது மே தினத்தின் புனித நோக்கம் மாசடைய காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த மேதினத்தின் நோக்கம் உரிய முறையில் உள்வாங்கப்படாமலே போகின்றன.

இலங்கையின் பெருந்தோட்ட மக்களுக்கான தொழிற்சங்க நடவடிக்கைகள் 1931 ஆம் ஆண்டு நடேசஅய்யரினால் தொழிலாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்டனை தலைமையகமாக கொண்ட இச்சங்கம் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இதே ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் திகதி அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் பதியப்பட்டுள்ளது. அதேபோல ஜுன் மாதம் 25 ஆம் திகதி இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் பதிவாகியுள்ளது.

இதுவே 1953 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் அடைந்தது. பின்னர் இதிலிருந்து பிரிந்து சென்ற ஏ. அஸீஸ் 1955 இல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.

இ.தொ.காவை பொறுத்தவரை தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிந்திய செய்தியாக அது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு ஆதரவாக செயற்பட தயாராகியுள்ளமை புதிய திருப்பமாக மாறியுள்ளது.

குறிப்பாக அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளத்தை உரிய முறையில் வழங்காது பெருந்தோட்டக் கம்பனிகள் செய்யும் அடாவடித்தனம் அக்கட்சிக்கு பாரிய அச்சுறுத்தல். அதுபற்றி பலமுறை கவனப்படுத்தியும் கண்டு கொள்ளாமலே இருக்கும் தொழில் திணைக்களத்தின் மீது கடுப்பு காட்டியுள்ளார் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான். இதற்காக தொழில் திணைக்களத்தின் பேரில் வழக்குத்தொடர ஆவணசெய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இ.தொ.காவிற்கு இது முக்கியமான மே தினமாகவே இருக்கப்போகின்றது.

பன். பாலா ...?

 

Comments