ஈழத்து இலக்கியம் என்ற உணர்வுக்கு உரமூட்டிய முன்னோடி சிற்பி! - சிவசரவணபவன் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இலக்கியம் என்ற உணர்வுக்கு உரமூட்டிய முன்னோடி சிற்பி! - சிவசரவணபவன்

தமிழக மக்களால் ஈழத்து நவீன இலக்கியங்களும் அறியப்படவேண்டும், போற்றப்படவேண்டும் என்ற தேசியப்பற்றுக் காரணமாக சிற்பி 'ஈழத்துச் சிறுகதைகள்| என்ற ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுதியை 1958இல் வெளிக்கொணர்ந்தார். 'இந்தத் தொகுப்பு வெளிவந்தபோது ஈழத்து இலக்கிய உலகம் பெருமை கொண்டது, தன்னை ஒருக்கால் சிலிர்த்துக்கொண்டது. இலக்கிய உலகில் ஓர் அற்புதம் நிகழ்ந்து விட்டதைப்போல வியப்படைந்தது' எனக் குறிப்பிட்டுள்ளார் செங்கை ஆழியான்.

இந்தச் சிறுகதைத் தொகுதியை வெளிக் கொணர்ந்ததற்கான காரணத்தை சிற்பியவர்கள் ஞானத்திற்கு அளித்த நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: '1956 அளவில் டெல்கியிலுள்ள சாகித்திய அக்கடமி சிறுகதை மஞ்சரி| என்ற தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. தமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை கல்கி ஆசிரியராக இருந்த மீ.ப. சோமு தொகுத்திருந்தார். ஆனந்த விகடன், கலைமகள், கிராமஊழியன் போன்ற தமிழக இதழ்களில் எழுதிப் பிரபலமான இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் போன்றவர்கள் இலங்கையில் இருந்தனர். சிறுகதை மஞ்சரியில் இலங்கையைச் சேர்ந்த எந்த ஒருவரின் கதையுமே இடம்பெறவில்லை. இது ஒரு பெரிய குறையாக – புறக்கணிப்பாக எனக்குப்பட்டது. இங்கிருந்தே தரமான ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. சென்னையில் நண்பர்கள் அழ. சிதம்பரம், அன்புப் பழம் நீ ஆகியோருக்கு எழுதினேன். சென்னை பாரி நிலையத்தின் உதவியைப் பெற்றுத்தருவதாகச் சொன்னார்கள். இலங்கையர்கோன், சம்பந்தன், வைத்திலிங்கம், வ.அ.இராசரத்தினம், கனக செந்திநாதன், வரதர், இராஜ அரியரத்தினம், சகிதேவி தியாகராஜா, சு.இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம், கே.டானியல், செ.கணேசலிங்கன் ஆகியோரது சிறுகதைகள் இந்த ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளுடனும், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளையின் அணிந்துரையுடனும் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதி வெளிவந்தது. ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களின் ஆக்கத் திறனை முதன் முதலில் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டிய தொகுதி இதுதான்'

சிற்பி எழுதிய முதற்சிறுகதை மலர்ந்தகாதல்| 1952இல் சுதந்திரனில் வெளிவந்தது. 1955இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது மறுமணம்| என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. இருந்தபோதிலும் தான் வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுப்பில் அவர் தனது சிறுகதை எதனையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது சிற்பியின் இலக்கியப் பண்புக்குச் சிகரமிடுவதாய் அமைந்தது.

சிற்பியை ஆசிரியராகக் கொண்டு 1958 ஆடி முதல் 1966 ஆவணி வரை எட்டு வருடகாலம் இலக்கிய உலகில் கலைச்செல்வி சஞ்சிகை பவனி வந்தது. கலைச்செல்வியின் முதலாவது இதழில் அதன்நோக்கம் பற்றி ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்துத் தமிழ் அன்பர்களிடம் நல்ல கதைகள் கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இருக்கின்றது. ஆனால் நமது தனித்தன்மையை நிலைநாட்டி நம் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் உலகோர்க்கு எடுத்துக்காட்டி எல்லோர்க்கும் மகிழ்வூட்டக்கூடியதாக கலைத்தூதன் இங்கு இல்லை... மற்றவர்கள் செய்ய மறுத்ததை மனத்துணிவுடன் செய்யத் தொடங்குகிறோம் நாம். நம் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவேண்டும். தமிழனின் மொழி, கல்வி, கலை கலாசாரம் ஆகியவற்றிற்கு அவற்றின் தொன்மை மணம் குன்றாது புதுமை மேருகேற்ற வேண்டும் இவைதான் கலைச்செல்வியின் நோக்கங்கள்|

ஈழத்தின் தனித்துவம் மிளிரும் இலக்கியமலராக கலைச் செல்வியை வெளிவரச் செய்வதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்தேன், எனக்குறிப்பிட்டுள்ளார் சிற்பி.

கலைச்செல்வி வெளிவந்த காலகட்டம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மிகமுக்கியமானதோர் காலகட்டமாகும்.

மரபு, பண்டிதப்போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண்வாசனை முதலியவை பற்றிப் பகிரங்கமாக விவாதிக்கப்பட்ட காலம். இவை சம்பந்தமான தம் சிந்தனையின் அடிப்படையில் எழுத்தாளர்களில் பலர் இருவேறு அணிகளாகப் பிரிந்து செயற்பட்ட காலம். அணிசேரா எழுத்தாளர்களாகவும் சிலர் இயங்கிய காலம்.

'தமிழ் இலக்கிய மரபு என ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு' என்பது கலைச்செல்வியின் நிலைப்பாடாக இருந்தது.

'தரம் வாய்ந்த பிரபல்யம் மிக்க ஆக்கங்களால் ஈழத்து தமிழ் இலக்கியத் துறையைச் செழுமைப் படுத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்கை, சா.வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே.குமாரசாமி, மயிலன், பொ.சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி. ஞானசேகரன், மு. கனகராஜன், பா. சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமா ராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்தியலிங்கம், வி.க. ரட்ணசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க. பரராசசிங்கம், மணியம், முகிலன், பொ. சண்முகநாதன் என்பவர்கள் கலைச்செல்வியின் பண்ணையில் வளர்ந்தவர்களே' என்ற சிற்பியின் கூற்றினை எண்ணிப் பார்க்கும்போது ஈழத்தில் இத்தகைய பிரபல்யம் வாய்ந்த ஓர் எழுத்தாளர் பட்டாளத்தை வளர்த்தெடுத்த பெருமையை வேறு எந்த இதழாசிரியர்களும் பெறவில்லை என்ற நிதர்சனம் வெளிப்படுகிறது.

ஈழத்துச் சிறு சஞ்சிகையாளர்களில் அதிகூடிய துறைகளில் தமது படைப்புக்களைத் தந்தவர் சிற்பி அவர்களே. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகம், வானொலி நாடகம் ஆகிய துறைகளில் எழுதியவர். இத்தனை துறைகளில் இதுவரை ஈழத்தில் எந்தவொரு இதழாசிரியரும் தமது படைப்புக்களைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1933இல் காரைநகரில் சிவஸ்ரீ சு.சிவசுப்பிரமணிய ஐயர், ஸ்ரீமதி சௌந்தரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சிற்பியின் இயற்பெயர் சிவசரவணபவன். இவர் தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பெற்றவர். இலண்டன் இன்ரர் பரீட்சையில் சித்திபெற்றவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கலைமாணி பட்டம்பெற்றவர். பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் முதுமாணி பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமையுள்ளவர். ஈழத்துச் சஞ்சிகையாளர் வரிசையில் இவரே அதிகூடிய கல்வித்தகைமை கொண்டவர்.

சிறுவயது முதலே சிற்பி அவர்களிடம் இலக்கியப்பற்று வேரூன்றியிருந்தது. தனது பத்தாவது வயதிலேயே ஆயிரம் பக்கம் வரையான இராமயண வசனத்தை வாசித்து முடித்தவர். அத்துடன் தம் இலக்கியப் பசிக்கு கலைமகள், கல்கி, ஈழகேசரி முதலியவற்றை தொடர்ந்து வாசித்தார். இவரிடத்து பரம்பரைத் தாக்கமும் இருந்தது. இவரது தந்தை, தாய்மாமன் ஆகியோர் பண்டித ஆசிரியர்களாவர். சிற்பி, மாணவராக இருக்கும்போதே ஆக்கங்கள் எழுதும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். 1948ஆம் ஆண்டு ஷபழம்பண்பைப் பற்றி பகர்வதிற் பயனில்லை| என்ற தலைப்பில் சுதந்திரனில் எழுதிய கட்டுரையே இவரது கன்னி முயற்சியாகும்.

இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வி கற்றபோது ராஜா சேதுபதி தங்கப்பதக்கம்|, ஒளவை தமிழ்ச்சங்கக் கட்டுரைப் போட்டி|யில் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர். அக்கல்லூரியில் வெளியிடப்பட்ட இளந்தமிழன்| என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஈழத்தில் உள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களைப்பற்றி தமிழகத்தில் உள்ளவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சஞ்சிகையில் ஷஇலங்கைக் கடிதம்| என்ற தொடரை யாழ்வாசி என்ற புனைபெயரில் எழுதியதன் மூலம் இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் இங்கு இடம்பெற்ற கலை இலக்கிய சமய கலாசார நிகழ்ச்சிகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வழிசமைத்தவர்.

திருநெல்வேலி செங்குந்தா கல்லூரியில் ஆசிரியராகவும் உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ்.வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றியவர் சிற்பி.

இவரது சிறுகதைத் தொகுதிகளாக ஷநிலவும் நினைவும்|, ஷசத்திய தரிசனம்|, ஷநினைவுகள் மடிவதில்லை| ஆகியவை வெளிவந்துள்ளன. ஷஉனக்காகக் கண்ணே| இவர் எழுதிய நாவலாகும்.

2015இல் தனது 82ஆவது வயதில் 09-11-2015 அன்று சிற்பி அமரரானார். ஞானம் சஞ்சிகையில் அவர் தொடராக எழுதிய கலைச்செல்விக் காலம்| பின்னர் நூலாக வெளிவந்து அரச தேசிய சாகித்திய விருதினை 2017இல் பெற்றுக்கொண்டது. அவர் அமரராகிய நிலையில் அவ்விருதை அவரது மனைவி சரஸ்வதி அம்மா பெற்றுக்கொண்டார்.

Comments