கம்பளை அட்டபாகை தோட்டத்தில் திட்டமிட்டு பறிக்கப்படும் நீர்வளம் | Page 4 | தினகரன் வாரமஞ்சரி

கம்பளை அட்டபாகை தோட்டத்தில் திட்டமிட்டு பறிக்கப்படும் நீர்வளம்

கண்டி மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களுக்கான குடிநீர் விநியோக கட்டமைப்புகள் முறையானதாக இல்லை. 

ஆங்கிலேயர் காலத்தில் சிறப்பான நீர் விநியோக கட்டமைப்புகள் பேணப்பட்டன.  

பத்து அறைகளைக் கொண்ட ஒரு தொடர் குடியிருப்புக்கு மூன்று குடிநீர்க் குழாய்கள் (பீலிகள்) வீதம் பொருத்தப்பட்டிருந்தன. போதியளவு நீர் வீட்டு வாசலடிக்கே வந்தது. 

கடும் கோடையிலும் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. பீலிக்கரை எப்போதும் களைகட்டி இருக்கும். இதற்கு சான்றுதான் எமது முன்னோர் பாடிய மலையக நாட்டார் பாடல் 

'பாட்டுக்கு பனிய இலயம் பந்தடிக்க மேட்டு இலயம் பேச்சிக்கு பீலிக்கரை வாச்சிதடா எந்தனுக்கு' எனும் நாட்டார் பாடல் வரிகள் எந்த அளவில் பீலிக்கரை களைகட்டியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.  

இன்றய நிலைமையோ வேறு. நீருக்காக இன்று சண்டை போடும் இடமாக பீலிக்கரை மாறியுள்ளது. சுமார் 20வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆய்வு ஒன்றில் கீழ்வருமாறு கூறப்பட்டிருந்தது.  

'இன்னும் 50வருடங்களில் மனிதன் உணவிற்காக அன்றி நீருக்காக சண்டை போட்டு மடிவான்'என்று.  

இன்று தினம் மலையக பெருந்தோட்ட மக்கள் நீருக்காக தமது சகாக்களுடனும் வெளி நபர்களுடனும் சண்டை போட்டு வருகின்றனர். 

கண்டி மாவட்டத்தில் காணப்படும் பெருந்தோட்டங்களில் அதிகமானவை அரசு நிர்வகிக்கும் தோட்டங்களாகும். இவற்றில் அநேகமானவை முழு அளவிலோ அல்லது பகுதியளவிலோ மூடுவிழா கண்டவையாகும்.  

இத்தோட்டக் காணிகள் ஒன்றில் தனிநபர்களுக்கு விற்கப்பட்டோ அல்லது குத்தகைக்கு கொடுக்கப்பட்டோ உள்ளன. தொழிலாளர்களது காணிகள் சூறையாடப்படுகின்றன. உள்ளன. 

இவ்வாறு சூறையாடப்பட்ட காணிகள், சுற்றுலா ஹோட்டல்கள், விடுதிகள், மாட்டுப் பண்ணைகள், மரக்கறி தோட்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட நிரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகள் என இன்னோரன்ன வேலைத்திட்டங்ளுக்கு ஒதுக்கப்படுகின்றன. வாழையடி வாழையாக தோட்ட சமூகத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்த நீரேந்தும் பிரதேசங்களில் இருந்தே நீரை இந்நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. 

கண்டி ஹந்தான, கலஹா குறூப், லூல்கந்துர, தெல்தோட்டை, கிறேட் வெளி,புப்புரஸ்ஸ, லெவலன் போன்ற தோட்டங்களில் இந்நிலையைக் காணமுடிகிறது.  

இவற்றைவிட நீண்டநாட்களாக இடம் பெற்றுவரும் ஒரு திட்டமிட்ட செயல்தான் ​வெளியார் குடியேற்றம். தோட்டக் காணிகளில் வெளி ஆட்களை குடியேற்றுகிறார்கள். இவ்வாறான நிலைமையில் 100, 200குடும்பங்கள் புதிதாக குடியேற்றம் செய்யும் போது நீர் பகிரப்படுகின்றது . குடியேற்றங்களுக்கு அரசு சிறந்த குடிநீர் விநியோக கட்டமைப்புகளை அமைத்து கொடுக்கின்றது. 

ஆனால் தோட்ட மக்களுக்கு அதே பழைய நிலைமை தான். குடியேற்றங்களுக்காகவே அரசுக்கு சொந்தமான தோட்ட காணிகள் திட்டமிட்டு காடாக்கப்பட்டு தரிசு நிலமாக்கப்படுகின்றன.  

இந்த காணிகளை அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த எமது சகோதர இனத்தவர்கள். பலாத்காரமாக கைப்பற்றி பிறகு இதில் குடியேறுகின்றனர்.  

இவர்கள் தமக்கு தேவையான நீரை பெற்றுகொள்ளும் சந்தர்ப்பங்களில். தொழிலாளர்களுக்கு 200வருடங்களுக்கு மேலாக நீரை வழங்கிய வளங்கள் அற்று போகின்றன.  

இவர்களுடன் போட்டி போடவோ சண்டைபோடவோ விரும்பாத எம்மவர்கள் மாற்று வழியை தேடுகின்றனர். இப்படி நீர் வளம் இருந்து இல்லாமல் போன ஒரு தோட்டத்தின் அவல கதைதான் இது.  

1995வரையில் கம்பளை அட்டபாக தோட்டத்தைச் சேர்ந்த 300குடும்பங்களுக்கு குழாய் மூலமாக நீர் விநியோகிக்கப்பட்ட விநியோகம் கிடைத்து வந்தது.

இது ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர் கட்டமைப்புகள். அட்டபாக தோட்டத்தில் நோனா மலையில் இருந்து நீர் வியோகிக்கப்பட்டது. 

இப்பகுதியை அண்டிய காணிகளை கைப்பற்றி பிறகு வெளியாருக்கு அரசு அந்த காணிகளை பகிர்ந்து கொடுத்தது. இவ்விடத்தில் குடியேற்றங்கள் வர இவர்கள் தாம் விரும்பியவாறு நோனாமலையில் இருந்து நீரை பெற தொழிலாளர்களுக்கு நீர் இல்லாது போனது.  இதனால் இவர்கள் தூர இடங்களில் உள்ள ஊற்றுகள், கிணறுகளை நீருக்கான நாடினர். 

தமது குடியிருப்புகளில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் பள்ளதாக்குகளில் இருந்து கரடு முரடான பாதுகாப்பு அற்ற இடங்களில் இருந்து நீரை சுமந்து வருகின்றனர். 

குடிப்பதற்கு மட்டும் அல்ல ஏனைய தேவைகளுக்கும் இவ்வாறே இவ்விடத்தில் இருந்து நீரை சுமந்து வருகின்றனர். 

பாடசாலைக்கு பலநாட்கள் மாணவர்கள் நீர் இன்மையால் போவதில்லை தொழிலுக்கும் செல்ல முடியாது போய்விடும். 

இந்த படிக்கட்டுகளில் நீரை சுமந்து வரும்போது வழுக்கி விழுந்து கைகால் முறித்துக் கொண்டவர்களும் உள்ளனர்.  

சிறிதாக கட்டப்பட்ட ஒரு ஊற்றில் வரும் சிறிய அளவிலான நீரை சேகரிக்க வரிசைகட்டி நிற்க வேண்டும்  

பெண்களோ சிறியவர்களோ தனியாக இவ்விடத்திற்கு செல்லமாட்டார்கள். இந்த இடம் பேய்களின் வாழிடம் போல் பயங்கரமாக காட்சியளிக்கின்றது.  

காட்டுப்பன்றிகள், குரங்கு, குளவி, அட்டை என பல்வேறு ஆபத்துகள் நிறைந்த இடம் இதை சொல்லும் போது கற்பணை போல் தெரியும். சென்று பார்த்தால் உடல் புல்லரிக்கும். காற்று மழையிலும் இங்கு தான் நீருக்கு செல்ல வேண்டும். 

ஒருமுறை நீர் சுமந்து வந்த ஒருவர் மேல் மரக்கிளை உடைந்து வீழ்ந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.  

மலசலகூட பாவனைக்கும் இங்கிருந்தே நீரை சுமந்து செல்ல வேண்டும். ஒரு நாளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை நீரை சேகரிக்கவே செலவிட வேண்டியிருக்கிறது.  

தோட்டத்தில் தொழில் வாய்ப்பு குறைவு அநேகமானவர்கள் கம்பளை கண்டி போன்ற இடங்களுக்கு தொழிலுக்காக தினம் சென்று வரவேண்டியுள்ளது. இவர்கள் கட்டாயமாக குளித்துவிட்டு செல்லவேண்டியுள்ளது.

வீடு திரும்பும் போது இரவு 8.மணி ஆகிவிடும். ஆண்கள் இங்குவந்து குளித்துவிட்டு போவார்கள்.

இரவில் குப்பி விளக்கு வைத்து குளிப்பது பெண்களுக்கு சாத்தியம் அல்ல. நீர்வளமிக்க இந்த மலைநாட்டில் எம்மவர் நிலை இப்படித்தான் இருக்கிறது! 

ஆர். நவராஜா
தெல்தோட்டை தினகரன் நிருபர்

Comments