21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அரசியல் கட்சிகள் பெரிதும் ஆர்வம் | தினகரன் வாரமஞ்சரி

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அரசியல் கட்சிகள் பெரிதும் ஆர்வம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளிலி ருந்தும், அரசியல் ரீதியான ஸ்திரமற்ற தன்மையிலிரு ந்தும் மீள்வதற்கு பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கில் நிதி அமைச்சர் அலி சப்ரிதலைமையிலான குழுவினர் அமெரிக்கா சென்று சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையைஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இளையோரைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்த அன்றைய தினமே நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் விடயங்களில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய சந்திப்பின் போது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடலின் போதே பிரதமரின் அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு ஒருங்கே அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், ஜனநாயக ரீதியில் அதற்கான ஏற்பாடுகள் இல்லையென்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு விதிமுறைகளைப் புரிந்து கொண்டவர்களின் கருத்தாக இருக்கின்றது.

எவ்வாறானதொரு மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தாலும் மக்களால் தெரிவு செய்து அனுப்பப்பட்ட 225பிரதிநிதிகளின் ஊடாகவே அதனை மேற்கொள்ள முடியும். இந்த விடயம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட அரசியல் சார்ந்த அதிகாரிகளால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் காண்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் நீண்ட காலத் தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும், குறுகியகாலத் தீர்வாக 21வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படும் சில ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்காய்வாளர் நாயகத்தின் மேற்பார்வைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைத் திருத்தல், கணக்காய்வாளர் நாயகம் அரசியல் கட்சிகளைக் கணக்காய்வுக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் இன்றி பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதைத் தடுத்தல் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களில் ஒழுங்குமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கான திருத்தம், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களினால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த வெளிநாட்டு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டிருப்பதாக வெளியாகும் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு ஏதுவான வகையில் சட்டங்களைத் திருத்தல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு மற்றும் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்படுவதைத் தடுக்கும் திருத்தம் போன்ற பல்வேறு முன்மொழிவுகளைக் கொண்டு வருவதற்கு இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இவை தொடர்பான மேலதிக யோசனைகளை முன்வைக்குமாறு சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் வகையில் 21ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை தனிநபர் சட்டமூலமாகக் கையளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தனிநபர் சட்டமூலத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் கையளித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த விசேட கூட்டம் மீண்டும் நடைபெற்றதுடன், ஏனைய கட்சிகளிடம் யோசனைகள் இருந்தால் அவற்றையும் சமர்ப்பித்து அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்கு இணைந்து செயற்படுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் பலப்படுத்தினார்.

இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தாடல்கள் வலுவடைந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியில் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கான மற்றுமொரு வாய்ப்பு அரசியல்வாதிகளுக்குக் கிடைத்துள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றுக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்பொழுது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை இல்லாமல் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இது இவ்விதமிருக்க, தனது இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் குறித்து ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தமை மற்றும் இரசாயன உர இறக்குமதிக் கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தமையை தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் 113பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினரிடம் அரசாங்கத்தைக் கையளிக்கத் தயார் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருந்தபோதும், எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு தரப்பினரும் 113பெரும்பான்மையைக் காண்பித்து ஆட்சியைப் பொறுப்பேற்பதற்குத் தயாராக இல்லை. மாறாக அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டே இருக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தைக் கொண்டு செல்லும் பிரேரணைக்கு ஏகமனதாகத் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். ஜனாதிபதியின் மீதும், பிரதமர் மீதும் அவர்களின் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் விமல் வீரவன்ச உள்ளிட்ட சுயாதீனக் குழுவினர் என்று கூறிக் கொள்பவர்கள் இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற கருத்தையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதும் அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது. அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொருட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளமையும் வரவேற்கத்தக்கதாகவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான முஷரப் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஹாபீஸ் நசீர் ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று அரசைப் பலப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் இராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்திலேயே களத்தில் இறங்கியுள்ளதைக் காண முடிகின்றது.

அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் எதிரணிகள் களத்தில் இறங்கியுள்ளமை தெளிவாகவே தெரிகின்றது.

அரசுடன் பேரம் பேசுவதற்கான தருணம் இதுவென சிறுபான்மையின கட்சிகள் கருதுகின்றன. ஆனால் மக்களின் இன்றைய துன்பங்களை அக்கட்சிகள் கவனத்தில் கொள்ளவில்லையென்பது நன்றாகவே  தெரிகின்றது.

சம்யுக்தன்

Comments