கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவத்தின் உயிர்நாடி | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவத்தின் உயிர்நாடி

புதிதாக ஓர் ஆலயம் கட்டப்பட்ட பிற்பாடு அதனை பார்வையிட வந்திருந்த ஒருவர் ஆலயத்தை முழுமையாக பார்வையிட்ட பிற்பாடு எழுப்பிய முதல் வினா ‘எல்லா ஆலயங்களிலும் சாதாரணமாக இயேசுகிறிஸ்து சிலுவையுடன் அறையப்பட்டவராகவே காணப்படுகின்றார். ஏன் இங்கு மட்டும் சற்று வழக்கத்திற்கு மாறாகவும் வித்தியாசமாகவும் சிலுவையைவிட்டு விலகியவராகவும்  வேறொரு வடிவம் கொண்டவராகவும் காணப்படுகின்றார்’ அவரிடம் ‘இயேசுகிறிஸ்து சிலுவைச்சாவினை ஏற்றுக்கொண்டார், மரணித்தார் ஆனால் இன்று அவர் உயிர்த்துவிட்டார். அவரது உயிர்ப்பின் பிரசன்னமே இன்று திருச்சபையிலுள்ள பிரசன்னமாகும்.

அதன் பிரதிபலிப்பின் அடையாளம்தான் இந்தச் சிலுவையும் உயிர்த்த இயேசுகிறிஸ்துவின் திருவுருவமுமாகும்’ என்று பதிலிறுத்தேன்.

கிறிஸ்தவர்களின் அதியுன்னத நம்பிக்கை இயேசுகிறிஸ்து சாவைவென்று வெற்றி வீரராக உயிர்த்தெழுந்தார் என்பதாகும். இறைமகன் இயேசுகிறிஸ்து தாம் முன்னுரைத்தபடியே இறந்த மூன்றாம் நாளில் உடலுடன் உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் அசைவுறாத நம்பிக்கையாகும். இயேசுகிறிஸ்து தாம் சொன்னபடியே இறந்து மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்தார் என்பதற்கு நற்செய்திகள் சாட்சியம் பகர்கின்றன. நற்செய்தி நூல்களைப் புரட்டிப் பார்க்கின்றபோது இரண்டு வகையான சாட்சியங்கள் அவரது உயிர்ப்பிற்கு கட்டியம் கூறிநிற்கின்றன என்பது கண்கூடு. அவையாவன,

 இயேசுவை அடக்கம் பண்ணியிருந்த வெற்றுக்கல்லறை

 இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பின் பின்னரான விண்ணேற்றம் வரையிலான காட்சிகள்

வெறுமையான கல்லறையும் உயிர்ப்பும்

வாரத்தின் முதல்நாளில் அவரது கல்லறையை தரிசிக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியும், பேரிடியும் காத்திருந்தன. கல்லறையின் கல் புரட்டப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது இயேசுவின் அடக்கம் பண்ணப்பட்ட உடலைக் காணவில்லை. நான்கு நற்செய்தியாளர்களும் இதனை குறிப்பிடுகின்றார்கள். மத்தேயு நற்செய்தி 28:6ம் வசனத்தில் வானதூதர் ‘அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பட்டார்’ என சாட்சியம் பகர்கின்றார். மாற்கு நற்செய்தி 16:6ம் வசனத்தில் இளைஞர் ஒருவர் ‘அவர் உயிருடன் எழுப்பப்பட்டார், அவர் இங்கே இல்லை’ என்று சாட்சியம் கொடுக்கின்றார். லூக்கா நற்செய்தி 24:6ம் வசனத்தில் இருவர் ‘அவர் இங்கே இல்லை உயிருடன் எழுப்பட்டார்’ என சாட்சியம் கூறுகின்றார்கள். யோவான் நற்செய்தி 20:1-10வரையிலான பகுதியில் வெறுமையான கல்லறையை தரிசித்த திருத்தூதர்கள் கண்டு நம்பினார்கள் என்று பறைசாற்றப்படுகின்றது. இவற்றினூடாக இயேசுவை அடக்கம்பண்ணப் பயன்பட்ட வெறுமையான கல்லறை அவரது உயிர்ப்பிற்கு சாட்சியம் பகர்கின்றது.

உயிர்ப்பினைத் தொடர்ந்த காட்சிகள்:

அவரது உயிர்ப்பினைத்தொடர்ந்து விண்ணேற்றம் வரையிலான நாற்பது நாட்களின் காலப்பகுதியில் பல்வேறு விதமான காட்சிகளின் மூலம் தாம் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களையும், ஏனையவர்களையும் சந்தித்து திடப்படுத்தினாரென்று நற்செய்திகளிலும், திருத்தூதர்பணி நூலிலும் பல்வேறுபட்ட குறிப்புக்கள் காணப்படுகின்றன.

திருத்தூதர்களின் திருத்தூதுரை:

இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பினால் திருத்தூதர்கள் அதிக ஆற்றலும், வல்லமையும் பெற்றுக் கொண்டார்கள். இயேசுவின் பாடுகள், மரணத்தின் பிற்பாடு கோழைகளாக பயந்து ஒதுங்கிய திருத்தூதர்கள் உயிர்ப்பின் பின்னரான அவரது காட்சிகளால் புதுத்தெம்பும் சக்தியும் பெற்றுக்கொண்டார்கள்.

அவ்வாறு திடமாக்கப்பட்ட திருத்தூதர்கள் தாங்கள் சென்றவிடமெல்லாம் இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்புக்கு சாட்சியம் பகர்ந்தார்கள். பெந்தகோஸ்து அபிசேகத்தைத் தொடர்ந்து திருத்தூதர்களின் திருத்தூதுரை உலகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதன் தொடக்கமாக திருத்தூதர்பணி 2:31-32பகுதிகளில் திருத்தூதர் பேதுரு தனது கன்னி மறையுரையில் ‘வாழ்வுக்குரியவரை நீங்கள் கொன்றீர்கள் ஆனால் கடவுள் அவரை மாட்சியுடன் உயிர்தெழச்செய்தார், இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என்று பொருள்பட ஐயந்திரிபுற கற்பித்தார். இதுவே அனைத்து திருத்தூதர்களின் போதனையின் சாரம்சமாகியது.

திருத்தூது மடல்களும் உயிர்ப்பும்:

திருத்தூதர்களின் போதனையைத்தொடர்ந்து முதலில் எழுத்துருப் பெறத்தொடங்கிய திருமுகங்களும் இயேசுகிறிஸ்து உடலுடன் உயிர்த்தெழப்பெற்றார் என்கின்ற உறுதியான நம்பிக்கையுடன் எழுதப்பெற்றன. இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் திருத்தூதர் பவுல் 1கொரி 15:14பகுதியில் ‘கிறிஸ்து உயிருடன் எழுப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளாற்றதாயிருக்கும்’ என்று கற்பிப்பதைக் காண்கின்றோம்.

இதனடிப்படையில் நோக்கும்போது தொடக்கத்திருச்சபையில் திருத்தூதர்களின் தூதுரையின் மையமாக விளங்கியது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பே என்றால் அது மிகையாகாது. அவ்வுயிர்ப்புச் செய்தியினை அறிவித்தமைக்காக அவர்கள் சொல்லொண்ணா துன்பங்களையும் வேதனைகளையும் சந்தித்தார்கள் என்பது திருச்சபை வரலாற்றின் உண்மைக் குறிப்புகளாகும்.

தொடக்கத் திருச்சபை வாழ்வில் உயிர்ப்பு:

இவ்வாறு திருத்தூதர்களின் போதனையால் கட்டிக்காக்கப்பட்டு, தொடக்கத்திருச்சபையாரின் நம்பிக்கையால் வளர்த்தெடுக்கப்பட்டுவந்த இயேசுகிறிஸ்து எனும் நம்பிக்கை பல்வேறு காரணிகளால் வரலாற்றில் சிதைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருபுறம் மறைக் கலாபனைகளால் கிறிஸ்தவ விசுவாசம் சுக்குநூறாக்கப்பட மறுபுறம் தப்பறையான போதனைகளால் (போதகங்கள்) அலைக்கழிக்கப்பட்டன. ஆயினும் அவற்றிக்கெல்லாம் திருச்சபை புறமுதுகிட்டு ஒடிவிடவில்லை. மாறாக இறையாவியானவரால் வழிநடத்தப்பட்ட திருச்சபை அவற்றை துணிவுடன் எதிர்கொண்டன. அவ்வாறு திருச்சபை செயல்பட்டமைக்கான ஒரே காரணம் உயிர்த்த ஆண்டவர்மீது கொண்டிருந்த அசைவுறாத நம்பிக்கையாகும்.

அத்தகைய நம்பிக்கையில் தோன்றியதுதான் நிசேயா பொதுச்சங்கம் (கிபி 325) வழங்கிய விசுவாசப் பிரமாணமாகும். அவ்விசுவாசப் பிரமாணத்தின் இயேசுகிறிஸ்து குறித்த கூற்றுக்களிலொன்று ‘…அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்’ என்பதாகும். இங்கே திருத்தூதர்களின் நம்பிக்கை முழுத்திருச்சபையின் நம்பிக்கையாக மாறிவிட்டது. இதுவே இன்று அனைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக மாறவேண்டும்.

அத்தகைய திருச்சபையின் விசுவாசத்தின் தொடர்ச்சிதான் உலகெலாம் பரந்துவாழ்கின்ற கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற ஞாயிறு உயிர்ப்புக் கொண்டாட்டமாகும். ஒரு கிறிஸ்தவனுக்கு கிறிஸ்துவின் உயிர்ப்பு இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இருக்கமுடியாது. எனவேதான் ஒவ்வொரு ஞாயிறு கொண்டாட்டமும் உயிர்ப்பின் ஞாயிறாகும்.

இதனை‘கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளிலிருந்தே உருவான திருத்தூதர்களின் மரபுப்படி திருச்சபை பாஸ்கா மறைநிகழ்ச்சியை ஒவ்வோர் எட்டாம் நாளாகிய ஞாயிறன்று கொண்டாடுகின்றது. எனவே இந்நாள் ஆண்டவருக்குரிய நாள் அல்லது ஆண்டவரின் நாள் என அழைக்கப்படுவது முறையே’ என்று இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருவழிபாடு கொள்கைத் திரட்டின் 106ம் இலக்கம் சுட்டிக்காட்டுகின்றது. இதனூடாக திருச்சபையின் ஞாயிறு வழிபாடு ஓர் உயிர்ப்பு விழாக் கொண்டாட்டம் என்பது புலனாகின்றது.

இன்றைய பார்வையில் உயிர்ப்பு:

அடுத்து எழுகின்ற கேள்வி யாதெனில் இத்தகைய திருச்சபை மரபிலும், வாழ்விலும் கடந்த 2000ஆண்டுகளுக்கு மேலாக கட்டியெழுப்பப் பட்டு வந்துள்ள இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பு விசுவாசமானது இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு உள்ளதென்பதாகும்.

அனேகமான இடங்களில் அவதானிக்கப்படுகின்ற விடயம் யாதெனில் தவக்காலம் (விபூதிப்புதன்) தொடங்கிய காலம்முதல் உயிர்ப்பு ஞாயிறு வரையிலான காலப்பகுதியில் அனேக கிறிஸ்தவர்களின் வெளியரங்க வாழ்வில் பல்வேறுபட்ட மாறுதல்கள் உற்று நோக்கப்படுகின்றன. உதாரணமாக மாமிச உணவுத்தவிர்ப்பு, நாற்பது நாட்கள் உபவாசம் மேற்கொள்ளல், புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல், நாளாந்த திருப்பலி, சிலுவைப்பாதை மேற்கொள்ளல், கல்வாரித் திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்ளல், இல்லங்களில் அமைதியையும், நல்லுறவையும் பேணுதல், பிறரோடு நல்லுறவினை வளர்த்துக்கொள்தல் இவைபோன்ற இன்னும்பல மெச்சத்தக்க செயல்கள் நடந்தேறுகின்றன.

ஆனால் இவையாவும் வெறும் நாற்பது நாட்கள் காட்சிகளே. ஒருவிதத்தில் இவை யாவும் இயேசுகிறிஸ்துவை சிலுவையிலறைய மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாக மாறிவிடுகின்றன. மறுபுறத்தில் அவரது உயிர்ப்பின் பிற்பாடு அதாவது உயிர்த்த ஞாயிறின் பிற்பாடு வாழ்வுநிலை  தலைகீழாக மாறிவிடுகின்றது. ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்கின்ற நிலைக்குத்திரும்பி விடுகின்றது.

இங்கே இயேசு இறக்க இவர்கள் உயிர்க்கின்றார்கள். மறுபக்கத்தில் கிறிஸ்து உயிர்பெற்றெழ அவர்கள் இறந்து விடுகின்றாhகள். இவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழ இன்னுமொரு தவக்காலம் (நாற்பது நாட்கள்) தேவைப்படுகின்றது. இங்கு இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பு வாழ்க்கையாக மாறுவதைவிடுத்து வாடிக்கையாகிப் போய்விட்டது. அதன்விளைவு ஈஸ்டர் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வந்துபோகின்ற நாட்காட்டி (கலண்டர்) திகதியாகி விட்டது. அது வாழ்வோடு சங்கமிக்கவுமில்லை. வாழ்வினைத் தொடவுமில்லை.

முன்னாள் திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் நம்பிக்கை ஆண்டினை ஏற்படுத்தியபோது அதற்கான நோக்கத்தினை பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.‘நம்பிக்கைத் தளர்ச்சியினைப் போக்கவும் நம்பிக்கை வாழ்வினை அறிந்து, வாழ்ந்து, வழங்கவுமேயாகும்.’ அந்தவகையில் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையம் இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பேயாகும்.கிறிஸ்தவத்திலிருந்து ‘உயிர்ப்பு’ என்று ஒரு பகுதியாக பிரித்தெடுத்துவிட்டு கிறிஸ்தவ நம்பிக்கையினை அடையாளம் காண முடியாது. கிறிஸ்தவத்திலிருந்து உயிர்ப்பினை அகற்றுவதுஅதன் முழு உருவத்தையே அழித்து விடுவதாகிவிடும். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின்மீதான வெற்றியின்றி, உயிர்ப்பின்றி அவரது போதனை, சாதனை, ஏன் புதிய ஏற்பாட்டிலிருந்தும் எதனையும் கண்டுபிடிக்க முடியாது. தொடக்கத் திருச்சபையில் உயிர்த்த ஆண்டவரைக்குறித்த மறையுரையைவிட வேறு எதுவுமே அங்கு இருக்கவில்லை.

அத்தகைய மகோன்னதமான உயிர்ப்பும் சாட்சியமும் இன்று கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் தேவைப்படுகிறது. இயேசுகிறிஸ்து மாட்சியுடன் உயிர்த்தெழுந்தார். அவர் வல்லமையுடன் இன்று சமூகங்களில் வாழ்கின்றார். அவரது உயிர்ப்பின் பிரசன்னத்தால் திருச்சபையின் வாழ்வுக்கு வளம்சேர்க்க முனைதல் பொருத்தமானதாகும்.

ஒன்றித்த திருச்சபையாய் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியாகிய கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு சாட்சியம் பகருங்கள்.

அருட்தந்தை 
யு. யு.நவரெட்ணம் (நவாஜி)
(முதுநிலை விரிவுரையாளர்,
கிழக்குப் பல்கலைக்கழகம்)

Comments