இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுவோம் | தினகரன் வாரமஞ்சரி

இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுவோம்

இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பின் விளைவாக நாமும் உயிர்த்தெழுந்தவர்களாக இருக்கின்றோம் என்று தூய பவுல் அடியார் பறைசாற்றுகிறார். உயிர்ப்பு விழாவை மையமாக வைத்து மண்ணுலக உயிர்ப்பு மற்றும் விண்ணுலக உயிர்ப்பு பற்றி சிறிது நாம் சிந்திப்போம்.

மண்ணுலக உயிர்ப்பு

விண்ணுலக உயிர்ப்பு என்பது செத்துப்பிழைத்தல் என்று பொருள். அரசன் முதல் ஆண்டிவரை ஏழை முதல் பணக்காரன் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தகைய உயிர்ப்பை அனுபவிக்காமல் இந்த உலகிலிருந்து உயிர் துறக்க முடியாது. காரணம் மண்ணுலக உயிர்ப்பு என்பது வாழ்வின் ஓர் அங்கம்.

அடுத்த வேளை உண்ண  உணவு இல்லை என்ற போது  தன்னிடம் இருக்கும் விதைநெல்லை எடுத்து விதைத்து விட்டு அதன் விளைச்சலுக்காக பசியோடு காத்திருக்கும் விவசாயிகளின் அனுபவம் செத்துப் பிழைத்தவரின் அனுபவமே. .

தன் பிள்ளைக்காக பத்து மாதம் தவம் இருந்து பத்தியம் காத்து தன் உயிரையே பணயம் வைத்துப் பிள்ளையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்யும் தாய்மார்களின் பிரசவ வேதனை அவர்களுக்குச் செத்துப்பிழைத்த அனுபவமே.

.நாம் அனைவருமே பல நேரங்களில் பல இடங்களில்செத்துப்பிழைத்தல் அனுபவத்தை அனுபவித்திருப்போம். விவிலியத்தின் பல பக்கங்களில் பார்க்கிறோம். துன்பங்கள் துயரங்கள் எதிர்காலக் கனவுகள் வேதனைகள் சாவுகள் மத்தியில் இஸ்ரயேல் மக்கள் இத்தகைய செத்துப் பிழைத்தலை அனுபவித்துள்ளார்கள்.

கண்ணுக்குத் தெரியாத காணான் தேசத்தைக் காணப் போகின்றோம். என்ற எண்ணத்தோடும் ஆசையோடும் சென்ற மக்களுக்குப் பார்வோன் மன்னனின் படைகளும் செங்கடலும் இடையூறாக இருந்த போது பல துன்பங்களை அந்த மக்கள் அனுபவித்திருப்பார்கள். மண்ணுலக உயிர்ப்பு என்றால் என்னவென்று இரத்தம் மனித உரியின் அடையாளம் என்று கூறுகிறது.லேவியர்ஆகமம் (17;14)

தன்னுடைய உடலில் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக இரத்தத்தை இழந்து அதாவது, உயிரை அணுஅணுவாக இழந்துவந்த அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கும் மண்ணுலக உயிர்ப்பு என்றால் என்னவென்று. தன்பிள்ளையை இழந்துவிட்டு அழுகையோடும் அங்கலாய்ப்பொடும் இருந்த குடும்பத்தினரைப் பார்த்து ஏன் இந்த அமளி ஏன் இந்த அழுகை என்று கேட்டதோடு அல்லாமல் அந்த சிறுமியை “தலித்தாகூம்” என்று சொல்லி  உயிர்ப்பித்தார் இயேசு. அன்று அந்த வீட்டாருக்குத் தெரிந்திருக்கும் மண்ணுலக உயிர்ப்பின் அனுபவம். ஆனால் இத்தகைய உயிர்ப்பைவிட மேலான உயிர்ப்பு நம் ஆண்டவர் இயேசுவின் வி்ணணுலக உயிர்ப்பு.

விண்ணுலக உயிர்ப்பு

விண்ணுலக உயிர்ப்பு என்பது மண்ணுலக உயிர்ப்பைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் இத்தகைய விழாவை நாம் எல்லாவற்றிற்கும் முதன்மையான விழாவாகக் கொண்டாடாடுகிறோம். காரணம் முகம் தெரியாத கிராமத்தில் பாமரப் பெண்ணுக்கு (மரியாள்) மகனாகப் பிறந்து முப்பது ஆண்டுகள் தன் தந்தையோடு தச்சுவேலை செய்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி பணித்தளத்தில் பல சவால்களை சந்தித்து எருசலேம் ஆயத்தைப் பார்த்து இதை இடித்து தரை மட்டமாக்குங்கள். அதை நான் மூன்றே நாளில் கட்டயெழுப்புவேன் என்று தன் உடலையும் உயிர்ப்பையும் பற்றி சொன்னதோடு நில்லாமல் சாவே உன்வெற்றி எங்கே சாவே உன்கொடுக்கு எங்கே? என்றவராய் உயிர்த்தெழுந்தார் ஆண்டவர் இயேசு.

மூன்று ஆணிகளால் இயேசுவின் கதையை முடித்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தது கொள்ளையர் கூட்டம். ஆனால் இறப்பை இறுதிக் கட்டமாக கொள்ளாமல் உயிர்த் தெழுந்தார் இயேசு. எனவேதான் உயிர்ப்பு விழவை எல்லாவற்றிற்கும் முதன்மையான விழாவாக கொண்டாடுகிறோம்.

உயிர்ப்பு ஒரு அனுபவம் இந்த அனுபவத்தை சீடர்களும் புனித பவுலடியாரும் எம்மாவுஸ் மற்றும் தமஸ்கு நகருக்கு செல்லும் வழியில் அனுபவித்திருக்கிறார்கள்.

அதன் பயனாகத்தான் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எங்களால் எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியாது என்று புனித பேதுரு கூறுகிறார். இத்தகைய உயிர்ப்பின் சாட்சிகளாக செயற்பட திருச்சபை நம்மை அழைக்கின்றது.

கடவுளின் உயிர்ப்பு எம் கண்முன்னே படம்பிடித்துக்காட்டப்படவில்லை என்றாலும் நம்முடைய விவிலியமும் பாரம்பரியமும் இறைவனின் உயிர்ப்பை ஆணித்தரமாக சொல்லுகின்றன. இந்த உயிர்ப்பின் அனுபவத்தை நாம் மற்றவர்களுக்குப் பறைசாற்றவில்லை என்றால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீடர்கள் பறைசாற்றிய நற்செய்தியும் பொருளற்றதாக மாறிவிடும். (1கொரி. 15:14)

இயேசுவின் உயிர்ப்பை நாம் மற்றவர்களுக்குப் பறைசாற்றவும் வாழுகின்ற வாழ்க்கையைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்க்கையின் வழியாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் வார்த்தைகளின் வாயிலாகவும் அறிவிக்க வேண்டும். எனவே நாம் அன்பு,சமாதானம், ஒற்றுமை, நேர்மை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்போம். இடம் பெயர்ந்து வரும் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்போம். மனிதாபிமானத்தை நமது ஆடையாக அணிந்துகொள்வோம். பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்து இரக்கத்திற்கு இடம்கொடுப்போம்.

அன்னை தெரசாவை நம் வாழ்வின் அடிப்படையாகவும் முன்மாதிரியாகவும் கொண்டு ஏழைகள், சிறுவர்கள், சாலையோரப் பணியாளர்கள் போன்றவர்களை நம் குடும்ப வட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். அப்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்பின் பங்காளர்களாக  பறைசாற்ற முடியும். சாவுக்குப்பின் மறுவாழ்வு உண்டு என்பதை நம்புவோம்.

இயேசுவின் உயிர்ப்பை எம்வாழ்வின் மூலம் பறைசாற்றுவோம்.

அம்புறோஸ் பீற்றர்

Comments