'இறை சோதனை நன்மைக்கே' | தினகரன் வாரமஞ்சரி

'இறை சோதனை நன்மைக்கே'

'கூய் காய்.... ம் ம் ஆ ஆ!' இப்படியாக கூக்குரலில் அவலச் சத்தம் கேட்டு அடிவளவில் புல்லு பிடுங்கிக் கொண்டிருந்த சகாதேவன் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். தன் மகன் திரவியம் தான் கூப்பாடு போடுகிறான் என்று உடனடியாகவே முன்னறையைத் திறந்து பார்த்தான். மகன் திரவியம் நாய்க்குக் கட்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அதை இழுத்து அறுக்கும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது புரிந்தது. அவன் குரலையும் எழுப்பி அபிநயம் பிடித்து அவலப்பட்டு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான் அந்த வாய் பேச முடியாத ஊமை! சிறுபராயத்தில் இருந்தே வளர்த்துவிட்ட அந்தத் தகப்பனுக்கு மகனின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரியும். மலம் சலம் வெளியேற்ற இயற்கைத் தேவையை நிறைவேற்ற அவதிப்படுகிறான், என்பதை உடனடியாகவே புரிந்து கொண்டு சங்கிலி கட்டை அவிழ்த்து விட்டு தொங்கலை தான் பிடித்துக் கொண்டார். திரவியம் கூய் கூய் என்று கூப்பாடு சத்தம் போட்டபடி முன்னே பாய்ந்து பாய்ந்து நடந்து கொண்டிருந்தான். தகப்பன் சகாதேவன் சங்கிலியை பிடித்தபடி அவனோடு இழுபட்டுக் கொண்டு போனார்.

திரவியம் மலசல கூடத்துள் உள்ளிட்டான். இவர் வெளியே சங்கிலியோடு காவலிருந்தார். அவன் மலம் கழிக்கும் போதும் கூப்பாடும் கூக்குரலும் ஓய்ந்தபாடில்லை. வெளியே விடுமாறு சங்கிலியை இழுத்து சைகை காட்டினார். அவன் வெளியே வந்து அடைப்புக்குள் போனான். இவர் கழுவி விட்டு சுத்தப்படுத்தி விட்டார். பிறகு கால் சங்கிலியோடு இழுபட்டு கிணற்றடிப்பக்கம் போயினர் இருவரும். அங்கே தந்தை மகற்காற்றும் உதவியென்று.... பல்லுத்தீட்டி முகம் கழுவி தண்ணி இறைத்து குளிப்பாட்டி மாற்றுடை உடுத்தி இழுத்துக்கொண்டு வந்து அதே அறையில் கட்டிப் போட்டார்..... அதன் பிறகு அவனுக்காக தான் தயாரித்து வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டை நீட்டுவார். அவன் ஏதோவெல்லாம் அபிநயம் பிடிப்பான். இவையெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணமானவைதான். பழக்கப்பட்டுப் போனவை தான்...... அவர் சாப்பாட்டை தன் கையால் கிள்ளிக் கிள்ளி ஊட்டிக்கொண்டே இருப்பார். அவன் திருப்தி தெரிவித்ததும்  அவன் முகம் தடவி தோள் தடவி படுக்கையில் கிடத்தி விட்டு சங்கிலியால் பழையபடி பிணைத்து விட்டு அறைக் கதவையும் சாத்தி விட்டு வெளியேறினார், தன் மற்றக் கருமங்களை கவனிப்பதற்கு.

சகாதேவன் கதையே பரிதாபமானதுதான். எந்தத் தந்தையும் அனுபவித்திருப்பாரோ என்பது கேள்விக்குறிதான்?..... இரண்டு ஆண்பிள்ளைகளை ஈன்றுவிட்டு தாயார் பரகதி அடைந்துவிட்டார். அப்போது மூத்தவனுக்கு ஏழுவயதிருக்கும். இளையவனுக்கு மூன்று வயதுதானிருக்கும். பிறவியிலேயே வாய் பேச முடியாத ஊமைப்பிள்ளை அவன். பிள்ளையின் மழலை மொழியைக் கூட கேட்க முடியாத பாவியாக போய்ச் சேர்ந்துவிட்டாள், அந்தத் துர்ப்பாக்கியம் பிடித்த தாய்!

சகாதேவன் நகர்ப்பகுதியில் ஒரு மூலையில் சிகையலங்கரிப்பு நிலையம் வைத்து தொழில் புரிந்து வந்தவர். மூலையில் சின்னதாக அந்த நிலையம் (சலூன்) அமைந்திருந்தாலும் நல்லாக தொழில் நடந்து வந்தது. அழகுபடுத்தும் அந்த கலையில் மிக திறமைசாலி அவர். வருபவரை எல்லாம் முகமலர்ச்சியோடு வரவேற்று இனிமையாக கதை பேசி நேரம் போவதே தெரியாமல் இருக்க வைத்து விடுவார். அவர் தொழில் திறமை பலரை காக்க வைத்துவிடும். போனாலும் மீண்டும் தேடி வரவைக்கும்!....... எப்படியோ தனிய நின்று உழைத்து குடும்பத்தையும் நல்லபடியாக பார்த்து, சொந்தமாக காணியும் வேண்டி ஓரளவு வசதியாக வீடு வாசலையும் கட்டி ஒரு குறையும் இல்லாமல் நான்கு சீவன்களும் ஓரளவு மகிழ்வுடனே வாழ்ந்தன. இளையவன் திரவியம் வாய் பேசமுடியாது என்பதைத் தவிர எந்தக் குறையும் இல்லாமலேயே வாழ்ந்தனர்.

அப்படி இருக்கும் போதுதான் இல்லத்தரசி திடீரென மாரடைப்பால் மாண்டு போனாள். இவரே தாயும் தந்தையும் ஆக வேண்டியவரானார். இதனால் கடை திறந்து தொழில் நடத்துவது என்பது சிரம சாத்தியமான ஒன்றாகிவிட்டது. ஆகையால் வீட்டுவளவின் முன்னால் தெருவைப் பார்த்தவாறு ஒரு கொட்டிலைப் போட்டு தன் தொழிலை நடத்தி வந்தார். அப்பகுதியில் குடிசன நெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். சின்னஞ்சிறுகள் வயோதிபர் வருத்தக்காரர் என்று பிரதான வீதிக்கோ நகர்ப்புறத்துக்கு கொண்டு போவதில் மிகவும் சிரமும் செலவும் உண்டு. இவர் அயலிலே இக்கைங்கரியத்தைச் செய்வது கன பேருக்கு வசதியாக போய்விட்டது...... ஆகையால் முன்னர் போல் இல்லாவிட்டாலும் வருமானம் குடும்ப சீவியத்துக்கு போதுமென்று ஆகிவிட்டது.     அதிகாலையில் துயில் எழுவார். முதல் வேலையாக பக்கத்தில் இருக்கும் மாதா கோவிலுக்குப் போய் சரியான நேரம் பார்த்து மணி அடித்து சுற்றுவட்டாரத்தையே துயில் எழுப்பி விடுவார். இல்லை இறை சிந்தனையை ஏற்படுத்தி விடுவார். பிறகு கோவில் சுற்று வட்டத்தை எல்லாம் சுத்தப்படுத்தி துப்பரவுப் பணி செய்வதில் ஈடுபடுவார். ... அதன் பிறகு வீடு வந்தால் பிள்ளைகள் இருவரும் இன்னும் கண் மலராமலே ஆழ்துயிலில் கிடப்பர். இவர் காலைச் சாப்பாட்டுக்கான ஆயத்தங்களைச் செய்வார். புட்டோ இடியப்பமோ அவிப்பார். சம்பலோ சொதியோ பருப்புக்கறியோ ஆக்கிப் படைத்து பிள்ளைகள் இருவரையும் மனம் குளிர சாப்பிடச் செய்தார். மூத்தவன் தன் பாட்டுக்கு எல்லாம் செய்வான், ஏன் தகப்பனுக்கு ஒத்திசைவாகவும் அதையிதை செய்து கொடுப்பான். தன் காரியங்களையும் தானே பார்த்துக் கொள்வான். அவனால் பிரச்சினை ஒன்றுமில்லை.

இளையவன் திரவியம் சிறுப்பத்தில் வாய் பேச முடியாத ஒரு இக்கட்டே தவிர, அவனும் வீட்டிலுள்ளோர்க்கு ஒரு பிரச்சினையே இல்லை. அவன் அபிநயப் பா​ைஷயை சர்வ சாதரணமாக எல்லோரும் புரிந்து அவனுக்கேற்ற மாதிரி நடந்தே கொள்வர். குழந்தையாய் இருக்கும் போது கொஞ்சம் சிரமப்பட்டார் தான் என்றாலும் வளர வளர தன் காரியங்களை தானே நிறைவேற்றிவராலானான். பக்கத்தில் ஊனமுற்றோர் (காதுகேளாதோர்) பாடசாலை அமைந்திருப்பது இவர்களுக்கு பேரதிர்ஷ்டமாகிவிட்டது. சகாதேவன் தன் வாய் பேச முடியாத மகனை அங்கே சேர்த்தான். அப்போதெல்லாம் தன் தேவைகளை எல்லாம் தானே நிறைவேற்றிக் கொள்ளும் சுயபுத்தி உள்ளவனாகத்தான் இருந்தான். எப்படியோ அங்கு போனதால் தமிழில் எழுத வாசித்து புரிந்து கொள்ளும் படியும் ஆகிவிட்டான்.

அதுமட்டுமா, தகப்பனின் அலங்கரிப்பு கொட்டகையில் கூடமாட ஒத்தாசையாக நின்று சிகை அலங்கரிப்புக் கலையை கற்று தேர்ந்து விட்டான். என்ன வருகிறவர்கள் என்ன சொல்கிறார்கள், எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதை தகப்பன் மொழிபெயர்ப்பாளராய் இருந்து விளக்க வேண்டும். அவ்வளவு தான். மற்றப்படி நல்ல கைத்திறமை சுறுசுறுப்பு. தகப்பனை விட கைதேர்ந்த தொழிலாளி.

பக்கத்தில் இருக்கும் ஒரு பெரியவர் இவர்களின் கடைக்கும் வீட்டுக்குமாக வந்து இங்கிதமாக பழகுவார். அவர் ஒரு நாள் சகாதேவனிடம் சொன்னார். 'எனக்கும் வாய் பேச ஏலாத ஊமை பிறவிகளில் எத்தனையோ பேரைத் தெரியும். ஆனா உம்மிட மகன் நல்ல புத்தி சித்தமாக பழகுறான். ஆக்களுக்கேற்ற மாதிரி மரியாத வைச்சி நடக்கிறான், எப்போதும் சிரித்த முகம், அவன்பால் எம்மை ஈர்க்கச் செய்கிறது. என்ன அவன் என்ன சொல்கிறான் என்பதை எம்மால் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாததே பெரும் குறை'

மூத்தவன் நல்ல புத்திசித்தமாகவே வளர்ந்து வந்தான்.நல்லாக படித்தும் வந்தான். நல்லொழுக்கமாக இருந்து தகப்பனுக்கும் தம்பிக்கும் உதவியாகவே இருந்தும் வந்தான். அப்பாவுக்கு பாரமாக சிரமமாக இருக்கக் கூடாது என்று நினைத்தானோ என்னவோ, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மேசன்மாரோடு கூலிக்காரனாக இணைந்து கட்டிடக் கலையில் நிபுணனாகிவிட்டான். 'கொன்றாக்ற்' எடுத்து வேலை செய்து நல்ல முன்னேற்றமடைந்தும் வந்தான். இதனால், நல்ல இடத்தில் இருந்து கலியாணம் கேட்டு வந்தார்கள். திருமணமும் இனிதே நிறைவேறி விட்டது. இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையாகிவிட்டான். வீட்டையும் கொஞ்சம் வசதியாக கட்டி முடித்திருந்தான். அப்பா தம்பி மனைவி மக்கள் என்று நல்லபடியாக வாழவே வழியும் செய்திருந்தான். ஏன் திரவியத்தின் ஊமை அபிநயப் பாiஷயை புரிந்து நடக்க சின்னப் பிள்ளைகளும் கற்றுக் கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லை இவரின் அபிநயம் குழந்தைகளுக்கு சுவாரஸ்ஸியம் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக ஊனமுற்றவனோடு எல்லோரும் ஐக்கியமாக நிம்மதியாக வாழ்ந்தே வந்தனர்.

இப்படியாக வாழ்ந்து வரும் போதில்த்தான் அன்று அந்த அவலச்சம்பவம்  நடந்தது. சகாதேவனுக்;கு இடைக்கிடை தொலைபேசி அழைப்பு வரும் முடி திருத்த வருமாறு ஈருருளியை உழக்கி அங்கு போய் தன் பணியை முடித்துக் கொண்டு படலையைத் திறந்தவர், அதிர்ந்துவிட்டார். மகன் திரவியம் தடியொன்றை ஏந்திக் கொண்டு மருமகளையும் பிள்ளைகளையும் படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தான். அவர்கள் கத்திக் குளறிக் கொண்டு பாதுகாப்புத் தேடி வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர். இவன் பாவி கத்திக் குளறி கூக்குரலிட்டு அவர்களை கிலி கொள்ளச் செய்து கொண்டிருந்தான்..... இந்த எதிர்பாராத கோரவத்தாண்டத்தை அவர் வாழ்நாளில் கண்டதே இல்லை. ஆனால் இப்போது அதுதான் வீட்டுக்குள்ளேயே நடந்தேறுகிறது. எப்படியிருக்கும் அவருக்கு!

மிதிவண்டி எங்கு போனதோ தெரியாது. தள்ளி விழுத்திவிட்டு தன் மகனை இறுக்கிப்பிடித்துக் கொண்டார். அபினய பா​ைஷயால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டார் அவன் அதற்குப் பதில் சொல்லும் நிலையில் அப்போது இல்லை. ஒரு தள்ளு தள்ளிவிட்டான். இவர் அலங்கமலங்க விழுந்து போனார்.

நல்லவேளை, என்றுமில்லாதவாறு இப்படியான அவலச்சத்தம் கூக்குரல் கேட்கிறதே என்று அயற் சனங்கள் அங்கு சூழ்ந்து கொண்டன. நிலைமையை சுலபமாகவே புரிந்து கொண்டுவிட்டனர். எல்லோரும் சேர்ந்து கட்டிப் பிடித்து மடக்கிப் போட்டனர். கயிறால் கட்டி விட்டனர். அவனை செயலிழந்தவனாக்கினர்.... பலரும் பலவிதமாக கதை பேசினர். 'வாய் பேச ஏலாது எண்டாலும் நல்ல திறமான பொடியானாத்தானே இருந்தவன்! இப்ப ஏன் இப்பிடி ஆச்சுது?''பொடியனுக்கு பேய் புடிச்சிருக்கு! அடிவளவுக்க பெரிய புளிய மரமிருக்கு அதத் தறிக்காம வைச்சிருந்தவங்கள். இவன் பொடியன் அதுக்கீழ நெடுகப் போய் நிக்கிறவன்!

அதுதான்  பொல்லாத பேய் தொத்தியிருக்கு' இப்படியாக பல கதைகள்...... சிலர் சகாதேவனுக்கு தங்களுக்குத் தெரிந்த நல்லாலோசனைகளையும் வழங்கினர். 'முத்துக்குமாரசாமி கோவிலுக்குப் பின்னால ஒரு ஐயர் இருக்கிறார். அவர் திறமா சாத்திரம் குறிப்பு பார்ப்பார். அவரிட்ட பிறந்த நாள் நட்சத்திரத்தைச் சொன்னா, நல்ல குறிப்புக்கள் சொல்வார். 'இங்கால மேற்கால ஏத்தம் ஏறி போனீங்க எண்டா பத்தக்காட்டுக்க சாமி ஆடி குறி சொல்லுறவன் இருக்கிறான். அவன் கலையாடி ஏன் இப்பிடி வந்தது எண்டு சரியாகச் சொல்லிப் போடுவான். 'ஏனப்பா அங்க இங்க அலையுறாய்? நம்ம தெருவுக்கு அடுத்த தெருவில் மை போட்டு பார்க்கிறவன் இருக்கிறான் சரியான மூலாதாரத்தச் சொல்லிப் போடுவான்.' இவ்வாறாக பல ஆலோசனைகள்.

சகாதேவன் ஒரு கிறிஸ்தவன் பக்கத்திலேயே தேவாலயம். அங்கு திருப்பணியும் செய்து போதகரின் வாழ்த்தைப் பெற்று வருபவர். தேவாலய  பூசை புனக்காரம் ஒன்றும் தவறாது. பூசை முடிந்து சனம் வெளியேறினாலும் இவர் போகார். எல்லா திருச்சொருவங்களையும் கரங்களால் தழுவி மன்றாடிவிட்டுத்தான் வருவார். அப்படிப்பட்டவர் மகன் எப்படியும் சுகம் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தில் குறி சொல்வார். பேயோட்டுவார் மை பார்ப்பார் என்று மகனையும் கூட்டிக் கொண்டு தான் சென்றார்.... எல்லாம் அந்தா வருகிறது, இந்தா காட்டுகிறது என்று ஆவலைத் தூண்டி அலைக்கழிய வைத்தனரே அல்லால், காசை செலவாக்கினரே அல்லால் கண்ட சுகம் ஒன்றும் இல்லை. நம்பிக்கையைப் பொறுத்தோ என்னவோ சிலருக்கு பலன் கிடைத்துத்தான் இருக்கிறது.

மூத்தவன் தகப்பனைப் பார்த்து பேசினான். 'ஏனப்பா அங்கேயும் இங்கேயுமாக வீணாக அலைந்து காசையும் செலவழிச்சுக் கொண்டிருக்கீங்க! திரவியத்தையும் கூட்டிக் கொண்டு வாங்கப்பா ஆசுப்பத்திரிக்கு போவம்' என்று கண்டிப்புடன் கூறினான். அவனே தம்பியையும் தகப்பனையும் அரசாங்க பொது வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றான்... வைத்தியர்கள் கவனமாக பரிசோதித்தனர் அவனை. அவர்கள் சொன்ன முடிவு எதிர்பாராததொன்று. 'இவருக்கு உடலில் எந்தக் குறையும் இல்லை, நோயும் இல்லை, இவருக்கு இருப்பது மனநோய்' என்று சொன்னவர்கள் திரவியத்தை மனநோய் மனையில் சேர்த்துவிட்டனர்.

வாய் பேச இயலாத பிறவிக்கு பைத்தியமும் பிடித்து விட்டதா! சகாதேவனுக்கும் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வது எல்லாம் இறைவன் சோதனை தான் என்று ஆக வேண்டியதை கவனிக்கலானார். தன் வீட்டு தொழில் கருமங்களை அரைகுறையாக முடித்துக் கொண்டு அவசர அவசரமாக மகனைத் தேடி போவார். மனநோயாளர் பிரிவை கொஞ்சம் தள்ளித் தனித்தேதான் அமைத்துள்ளார்கள். அதன் காரணம் எல்லோருக்கும் புரியும். இவர் அவ்விடத்தை அணுகுமுன்னமே மனக்கிலேசமாகவே இருக்கும்.! கத்தல், குளறல் ஆர்ப்பரிப்பு, அடித்தல், விரட்டல் கட்டல் புலம்பல் என்று எத்தனையோ அவலக்காட்சிகளை கண்டு கொண்டே செல்வார்.

ஆரம்பத்தில் மகனின் கத்தல், கதறல் சகிக்கவொண்ணாததாகவே இருந்தது. நாலு நாளில் அடங்கி அமைதியாகிவிட்டான். அனேகமாக நித்திரையாகியே கிடப்பான். இந்நோயாளிகளுக்கு தூக்க மாத்திரை கொடுப்பதாக கேள்வி. ஒரு மாதமாக மனநோய் பிரிவில் வைத்து சுகமென்று அனுப்பி விட்டனர்.

மாதமொருமுறை காட்டி மருந்தெடுக்க வேண்டும். அதுவும் ஒழுங்காக நடந்தேறியே வந்தது. முன்னர் இருந்த உற்சாகம் சுறுசுறுப்பு சிரித்த முகம் எல்லாம் காணாமல் போய்விட்டது. தகப்பனுக்கு உதவியாக கடையிலே வேலை செய்தவன், இப்போ முன்னர் போல் செயல்படுகிறானில்லை. சோர்ந்து போய் இருப்பான். எங்கேயோ வெறித்தபடி பார்ப்பான். அபிநயம் பிடித்து முணுமுணுப்பான். கீசல் சத்தம் கேட்கும்.

இப்படியே நெடுகிலும் இருந்தால் பரவாயில்லையே இடைக்கிடை அட்டகாசக்காரனாய் ஆகிவிடுகிறானே! தடியெடுத்து கூக்குரலிட்டு மருமகள் பிள்ளைகளை கலைத்துக் கலைத்து விரட்டுகிறானே! அவர்கள் பாவம் பயந்தொடுங்கி அறைக்குள் கிடப்பர்... மூத்தவனுக்கு கொஞ்சம் மடக்கம். ஆவன தைரியசாலியும் கூட.

அவனை மடக்கி கட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விடுவான். ஆனால் அவன் வீட்டில் இல்லாத நேரம்?

மருமகள் பிரச்சினை எடுத்தாள். இவனை வெளியேற்ற வேண்டும், இல்லாவிட்டால் நான் வெளியேறுகிறேன் என்று, நியாயமானதும் தான். 'ஒரு பைத்தியகாரனை நடு வீட்டுக்குள் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் கூட நிம்மதியாய் சீவிக்க முடியாமல் போயிற்றே. என்பது அவள் ஆதங்கம். மூத்தவனுக்கு தன் மனையாளின் நிலைப்பாடு சரியென்றே பட்ட அவனுக்கு மேசன் தச்சு எல்லா வேலைகளும் தெரியும். அடி வளவில் ஒரு அறை, திண்ணை தாவரக் கொட்டிலில் சமையல் என்று கட்டிக் கொடுத்து அவர்களை புறம்பாக்கி விட்டான். அவன் நிலையில் யாரிருந்தாலும் அப்படியே செய்திருப்பர். தகப்பனுக்கும் இது சரியென்று பட்டாலும் மனதை நெருடிக் கொண்ேட இருந்தது.

இப்போது தேவசகாயத்துக்கு வேலையும் தொல்லையும் இரட்டிப்பாகியது. சமையல் செய்ய வேண்டும். இடைக்கிடை மகன் திரவியனை கண்காணித்தபடி இருக்க வேண்டும். அவனுக்கு சேவகம் புரிய வேண்டும். கடை திறந்து தொழில் புரிந்து வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும்.... இப்படியாக பல துன்பம் தொல்லைகள். மகன் குழப்படி பண்ணத் துவங்கினான். அவனை சங்கிலியால் காலிலே கட்டி முனையை வேறிடத்தில் பிணைத்து விடவேண்டும். இயற்கைத் தேவைகளை நிறைவேற்ற பிணைப்பை அவிழ்த்தெடுத்து இழுத்துக் கொண்டு போய் கடமைகளை செய்திட வேண்டும். குறிப்புணர்ந்தோ கூப்பாடு கேட்டோ தண்ணி வென்னி சாப்பாடு உவந்தூட்ட வேண்டும்.... பக்கத்தில் கோவில் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்..... இப்படியாக எத்தனை எத்தனையோ திருப்பாடுகள். இயேசு ஐந்து ஆணிகளில் அறையப்பட்டார். சகாதேவன் எத்தணை ஆணிகளில் அறையப்பட்டிருக்கிறான், இறiவா உன் பக்தனை ஏன் இன்னும் சோதிக்கிறாய்?

இப்படியிருக்கையில் வெளியில் அழைப்பு. வேலையை முடித்துக் கொண்டு வீடேகியதும் அதிர்ச்சி காத்திருந்தது. திரவியத்தை காணவில்லை. சில நாட்களாக கோளாறில்லாமல் அமைதியாக இருக்கிறான் என்று சங்கிலியால் பிணைக்கவில்லை, சுற்றுப்புறம் தேடியும் பயனில்லை. இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.... மூத்தவன் தகப்பனை பின்னால் ஏற்றிக் கொண்டு உந்துருளியில் ஓடி தேடுதல் வேட்டை நடத்தினான். நகர்ப்பகுதி அயல் கிராமம் என்று மூன்று நாளாக தேடி விசாரித்து அலைந்தது தான் மிச்சம். கண்ட பலன் ஒன்றுமில்லை. தகப்பனுக்கு தீராத கவலை. அன்னந் தண்ணியின்றி ஆண்டவனிடம் பிரலாபிப்பதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

நாலாம் நாள் இரவு நேரமிருக்கும் முச்சக்கர வண்டியொன்று வெளிப்புறமாக வந்து நின்று குரல் கொடுத்தது. அப்போதுதான் படுக்கையில் சோகத்தோடு சரிய இருந்த சகாதேவன் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ஏன்ன ஆச்சரியம்! திரவியம் முன்னால் நின்று கொண்டிருந்தான். பின்னால் ஆட்டோக்காரன் நின்றிருந்தான். திரவியம் தகப்பனை இனம் கண்டாலும் அவன் முகம் இருண்டே கிடந்தது. தகப்பன் பரவசத்தோடு அவனை ஆரத்தழுவிக் கொண்டார்..... முச்சக்கரவண்டிக்காரன் ஏற்கனவே இவர்களுக்குத் தெரிந்தவன் தான். இந்தப் பிரச்சினையையும் அறிந்தவன். அயல் கிராமமொன்றுக்கு சவாரி ஓடிப் போகும் போது, இடையில் ஒரு சிங்கள பிரதேசத்தில் திரவியத்தைக் கண்டான். அது வேற்றிடம் என்றாலும் ஒரு பேமன்ற் கடையில் ஒரு நோனா இவனுக்கு உணவு உவந்தளித்துக் கொண்டிருந்தாள். முச்சக்கரவண்டிக்காரன் அவளிடம் திரவியனை வீட்டுக்காரர் தேடித் திரிவதாக விபரங்களை விபரித்தான். அவளும் தனக்குத் தெரிந்ததை சொன்னாள். இவர் இரண்டு நாட்களாக தங்கள் கடைத்தெருவெல்லாம் திரிவதாகவும், பசியில் கடையில் கை நீட்டுவதாகவும், ஏதோ தானும் வேறு ஒன்றிரண்டு பேரும் உணவு கொடுத்து உதவுவதாகவும் கூறியிருக்கிறாள். இவர் அவளுக்கு 'போமஸ்துதி' சொல்லி திரவியத்தை ஏற்றிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.... அந்த ஆட்டோக்காரனுக்கு சொல்ல வேண்டிய நன்றி சொற்களை எல்லாம் சொல்லி, அவன் வேண்டாம் வேண்டாம் என்றாலும் விடாமல் கொஞ்சம் வெகுமதிகளையும் கொடுத்து அனுப்பினார்.

இதன் பிறகு மிகக் கவனமாகவே பராமரித்து வந்தார் தேவசகாயம். இப்போதெல்லாம் சங்கிலிப் பிணைப்பை அகற்றுவதில்லை. சுங்கிலிக் கட்டோடுதான் தன் பைங்கிளிக்கு சகல தேவைகளையும் நிறைவேற்றி வந்தார் சகாதேவன்!

ஆனால் இந்தச் சின்ன நிம்மதியும் அதிக நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் தேவசகாயம் உடல் அலுப்பு, சோர்வு காரணமாக கொஞ்சம் தாமதித்தே கண் விழித்தார். வுழமை போல் முதல் வேலையாக திரவியத்தையே எட்டிப் பார்த்தார். ஆனால், ஐயோ ஆளைக் காணவில்லை. அவர் போட்ட கூப்பாட்டில் அலறலில் மகன் குடும்பம் மட்டுமல்ல அயல் சனங்களும் கூடிவிட்டனர்.

பலரும் பல ஆலோசனைகளை சொல்லிப் போந்தனர். எல்லா வழிகளாலும் தேடுதல் வேட்டைகள் நடந்தேறிக் கொண்டே இருந்தது. குறி பார்த்தல், மை பார்த்தல் என்று அந்தக் காரியங்களும் நடைபெற்றுத்தான் வந்தன. சகாதேவன் தன் இஷ்ட தெய்வத்தை சதா நினைத்து மண்டியிட்டு வணங்கியபடி!..... என்ன முயற்சி எடுக்க வேண்டுமோ அவையெல்லாம் எடுத்துக் கொண்டே வந்தனர். பத்திரிகை அறிவித்தல் முகநூல்  என்று எல்லா அறிவிப்புகளையும் செய்தாயிற்று. அயல் கிராம பட்டின நகரத்தில் இருக்கும் நண்பர்கள் உறவினருக்கும் அறிவித்தாயிற்று..... நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்ததே அல்லாமல் ஆறுதல் கண்டதில்லை. சகாதேவன் ஆண்டவனிடம் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருந்ததை தவிர பலனேதும் கண்டதில்லை. அட ஒரு அறிகுறி (சிக்னல்) தானும் தோன்றவில்லையே! இனி அவனைக் காண்பது முயல் கொம்பே!

சகாதேவனைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது. ஆறுதல் சொல்வார் இருந்தாலும், ஆறுதலளிப்பார் யார்?.... ஒரு நாள் சகாதேவனைத் தேடி ஒருவர் வந்தார். அவர் அடுத்த தெருவில் இருப்பவர். அவர் ஒரு தமிழாசிரியர். இப்போது உபகார சம்பளம் பெற்று வருகிறார். அவர் பத்திரிகைகளுக்கு கதைகள் கட்டுரைகள் எழுதி வருவதாகவும் கேள்வி. சிகை அலங்கரிப்புக்காக இவரை தேடி வரும் வாடிக்கையாளனும் ஆவார் அவர். வாடிக்கையாளரின் வகைக்கேற்ற விதமாக கதைத்து புழங்குவது இவர்களின் தொழிலின் ஒரு பகுதி..... ஆனாலும் அந்த ஆசிரியரிடம் இவருக்கு ஒரு ஈர்ப்பு, பெருவிருப்பு. பொதுவான கதைகளை கதைப்பதோடு தன் சொந்த பிரச்சினைகளையும் சொல்லி அவர் ஆலோசனைகளையும் போதனைகளையும் கேட்டு வருவது அனுபவமாய் நிகழும் ஒன்று.

திரவியனைப் பற்றிய முழு விபரங்களையும் அவர் அறிவார். இன்றும் சகாதேவன் தன் சகபாடிக்கு கண்ணீர் மல்க கவலைகளை கூறிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கேட்ட ஆசிரியர் இளநகையோடு பேசத் துவங்கினார்... 'இங்க பாரும் சகாதேவன், கஷ்ட துன்பங்கள் வாறது ஏதோவொரு நன்மைக்காகத்தான். கடவுளின் சோதனைதான் இவையெல்லாம். எல்லாம் நன்மைக்கே என்று நாம் அதை ஏற்க வேண்டும்.

நீர் காலம் முழுக்க பட்ட சித்திரவதை அவஸ்தைக்கு ஆறுதல் அளிக்கவே இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.!..... நீயே உன் வாயால் என்னிடம் சொல்லி கதறியிருக்கிறாய். 'இவனோட காலம் முழுக்க உத்தரிப்பாக் கிடக்கு! செத்துத் தெரலைஞ்சு போனா நிம்மதியாயிருக்கும்.'என்றும் சொல்லியிருக்கிறாய்... இதைச் சொன்னதும் சகாதேவன் கூனிக்குறுகினார்.

ஆசிரியர் தொடர்ந்து சொன்னார்.:இனி நீங்கள் நிம்மதியாக சீவிக்கலாம். பெற்ற மகனையே சங்கிலியால் கட்டி அவருக்கேற்றதையெல்லாம் செய்து, அவருடைய அட்டகாசங்களை எல்லாம் சகிக்கவியலாமல் தொல்லைப்பட்டு நரக வேதனையை ஆயள் பூராவும் அனுபவிப்பது இன்னும் தேவையா? உனக்கோ வயதாகிவிட்டது. இன்னும் கொஞ்சக் காலமாவது நீ நிம்மதியாய் இருக்க வேண்டாமா?..... உன் மருமகள் பேரப் பிள்ளைகள் இனியென்றாலும் பயமின்றி நிம்மதி காண வேண்டாமா?..... இப்படியாக எல்லாவற்றிலுமிருந்து விடுதலையை ஆறுதலை அளிக்கவே தன் பக்தனுக்கு உதவியிருக்கிறார் இறைவனார்!'

சகாதேவன் இதை ஏற்றுக் கொண்டாலும், ஏற்று ஆறுதலடைய கொஞ்சக் காலம் எடுக்கும்.

சூசை எட்வேர்ட்

Comments