பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும் | தினகரன் வாரமஞ்சரி

பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்

எடிசன் மின்சார மின்குமிழை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த மின்குமிழை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எடிசன் தனது உதவியாளரை அழைத்து மின்சார மின்குமிழை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொன்னார். அந்த உதவியாளர் மின்குமிழை கொண்டு வருகையில் அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளரும் பதற்றம் அடைந்து விட்டார் ஆனால் எடிசனும் எந்த பதற்றமும் அடையவில்லை.

ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார மின்குமிழை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார மின்குமிழை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு மின்குமிழை உருவாக்கினார். அதை மீண்டும் அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வரச்செய்தார்.

மின்குமிழை கீழே போட்டு உடைத்த அவரிடமே அதை மீண்டும் கொடுக்கிறீர்களே என்று சிலர்  ஆச்சரியப்பட்டு எடிசனிடம்  கேட்டார்கள்.

அந்த மின்குமிழை மீண்டும் உடைந்தாலும் என்னால் இன்னொரு மின்குமிழை உருவாக்க முடியும். ஆனால் என்னுடைய உதவியாளரின் மனதை உடைத்து விட்டால் அதை என்னால் சரிசெய்ய முடியாது. அதனால்தான் மீண்டும் அவரிடம் அதே பணியை கொடுத்தேன். அவர் அவரது பணியையும்,  அவரது பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் நன்றாக உணர்ந்து மீண்டும் வேலை செய்வார். என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார் எடிசன்.

அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையுடன் கூடிய விடாமுயற்சியின் முக்கியத்துவத்தையும் அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.

எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார மின்குமிழை கண்டுபிடித்தார். அந்த மின்குமிழை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை. நொந்து போகவில்லை. அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.

சோ.வினோஜ்குமார்,
யாழ் பல்கலைக்கழகம்.

Comments