வரமாய் வந்த ரமழான் | தினகரன் வாரமஞ்சரி

வரமாய் வந்த ரமழான்

புது நிலவொன்று பூக்கும்
புதுமைகளை யது ஆக்கும்
மதியொளி வந்து பரவும்
மனித மனங்களை யது கவரும்
பிறை யொன்று தெரியும்
பாவக்கறை மண்ணில் மறையும்
பேரருள் மழை பொழியும்
பிழைக ளெல்லாம் அழியும்
பேரொளி வந்து பிறக்கும்
பெருமை மண்ணில் அழிக்கும்
அருள் மறை ஒலிக்கும்
அகில மதால் ஜொலிக்கும்
பசியின் கொடுமை யுணர்த்தும்
புசிப்பவர் மனதை உறுத்தும்
பாசமாய் கைகள் நீளும்
பால்நிலவே உல காளும்
கையின் சுடர் எரியும்
ஏழை வீடும் ஒளிரும்
பகையின் இடர் பறக்கும்
பரிவா லுலகம் சிறக்கும்
இரவும் பகலென மாறும்
இறையே பெரிதென ஆகும்
உறவும் உயிரென தோணும்
மானிய உலகிதை காணும்
ஆயிரம் மாதங்களை மிகைக்கும்
அரியதோர் இரவும் உதிக்கும்
பாவிகள் மனங்களை நசுக்கும்
பாவம் மண்ணில் பொசுக்கும்
ஏற்றம் எழுந்து துள்ளும்
ஏழ்மை வீழ்ந்து செல்லும்
மாற்றம் மனதை வெல்லும்
மனிதனாய் வாழச் சொல்லும்
தாழ்மை தாழ்ந்து போகும்
தரித்திரம் வீழ்ந்து சாகும்
வாழ்க்கை மலர்ந்து செல்லும்
வாய்மை வளர்ந்து வெல்லும்
இத்தனை இன்பங்கள் தரும்
இனிய ரமழானே வரம்
அத்தனையும் ஏற் றொழுகி
அமல்கள் செய்வோம் கல்புருகி
 
வரக்காமுறையூர் ராசிக்

Comments