தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆவணம்: தேவை பொருத்தமான அரசியல் காய்நகர்த்தல்கள் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆவணம்: தேவை பொருத்தமான அரசியல் காய்நகர்த்தல்கள்

இதுவரை ஆட்சிக்கு வந்த ஒட்டு மொத்த கட்சிகளும் பகுதி பகுதியாக செய்து வருகின்றன. இற்றைவரை ஆயிரக்கணக்கான ஹெக்டயர் காணிகள் பெரும்பான்மையினத்தவரை இலக்காக கொண்ட அபிவிருத்திப் பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்காணிகளை வளப்படுத்துவதற்காக நாலைந்துதலைமுறைகளைத் தியாகம் செய்துள்ள மலையக மக்களுக்கு இம்மியளவு காணிதானும் சொந்தமாக்கப்படவில்லை

இந்திய வம்சாவளி மலையக மக்களது தார்மீக ரீதியிலான வாழ்வியல் உரிமைகள் சம்பந்தமான ஆவணம் ஒன்று இலங்கை, இந்தியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி கூறியுள்ளது. அந்நிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதால் ஆகப்போவது ஏதுமில்லை. இந்தியா கூட இந்த ஆவணம் குறித்து எதனையும் செய்யுமென்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. இந்தியா தமது பிராந்திய நலன் சார்ந்த செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்தும். 

ஆனால் இவற்றுள் அடங்கியுள்ள அம்சங்கள் முக்கியமானவை. குறிப்பாக தோட்டக் குடியிருப்புப் பிரதேசங்களை அரசு பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து தோட்ட நிர்வாகங்களின் பிடியிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட வேண்டியது அவசியமானதே. இதன் மூலம் அரசு நிறுவனங்களின் நிர்வாக மற்றும் நிலவுரிமை சேவைகளைப் பெற வழிபிறக்கும் இதேநேரம் இதற்கான முன்னகர்வுகளுக்கு முட்டுக் கட்டைப் போடும் இனவாத போக்கு பற்றி இங்கு பேசாமல் இருக்க முடியாது. 

சிங்களப் பேரினவாதம் என்பது அரசியல் சார்ந்த அடைவுகளின் இலக்கினை மட்டும் உள்வாங்கிக் கொண்டதல்ல. அடிப்படையிலேயே அதற்கான முன்னூட்டல்கள் நுழைக்கப்பட்டு விடுகின்றன. குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைபெற்றிருந்த தமிழர்களுக்கான தாயக உரிமைப் பதிவுகள் திட்டமிடப்பட்டே பாடசாலை வரலாற்று புத்தகங்களில் மறைக்கப்பட்டு புனைவுகள் புகுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே உண்மை விடயங்களை சரித்திர சான்றுகளாக முன்வைத்துள்ள மகாவம்சத்தினைக் கூட பிழையான தகவல்களை தருவதாக விமர்சிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.  

ஆனால் ஒட்டுமொத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த கருதுகோளாக இந்த இனவாதம் இருக்கவில்லை. ஒருசில வங்குரோத்து அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத குரலாகவே இனவாதம் ஒலிக்கின்றது. ஆயினும் பெரும்பான்மையின மக்களிடையே சில தவறான உள்வாங்கல்கள் இல்லாமல் இல்லை. அதைக் களையவேண்டிய தமிழ் அரசியல் தரப்பு தமது பொறுப்பை சரியாக ஆற்றுவதாக இல்லை.  

இன்று மலையகத்தில் வாழ்வுரிமையை வரித்துக் கொண்டுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களை ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகளாக உருவகிக்கும் ஒரு மனோபாவம் பெரும்பான்மையின மக்களிடம் நிலைபெற்றிருப்பது இதன் பின்னணியில் தான். இந்தியாவை அண்டை நாடு என்ற அந்நியோன்யத்துடன் அணுகாது இலங்கையின் வளங்களை கபளீகரம் செய்ய வரும் ஊடுருவல் காரர்களைப் போல பார்ப்பதன் பின்புலத்தில் மறைந்திருப்பது என்னவோ வக்கிரம்தான். இந்தியாவிலிருந்து வந்தேறு குடிகள் என்ற கணிப்பில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வாழ்விட வசதிக்கும் வழிவகுக்கும் முன் மொழிவுகளை தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைக்கும் பிற்போக்குவாதிகளின் முனைப்புகளை அலட்சியமாக ஒதுக்கிவிடமுடியாது. 

அரசப் பெருந்தோட்டக் காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் பயனில்லை. தோட்டங்களை சூழவுள்ள பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அல்லது தனியார் கம்பனிகளுக்கு வழங்கினால் பெருந்தோட்டத்துறையை பாதுகாக்க முடியும். தோட்டத் தொழிலாளர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. அவை கட்டாயம் தீர்க்கப்பட வேண்டும். முக்கியமாக அவர்களின் லயன் தொகுதிகள் மாற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக பெருந்தோட்டக் காணிகளை துண்டாடி அவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதால் நிலைமை மேலும் மோசமாகலாம்.  

இன்னொரு மலையக ஈழத்துக்கு அதுவழி கோலும். கடந்தகால கசப்பனுவங்கள் போன்று புதிய பரிமாணங்கள் உருவாகலாம். தனியாருக்கு தோட்டங்களை வழங்குவதை விட துண்டாடுவது பயங்கரமானது. மலைநாட்டிலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் காணிகளை இழந்தமை மறந்திருக்கும். இப்படியான நிலைமைகளில் உடரட்ட கெரல்ல எனப்படும் மலைநாட்டுப் புரட்சி ஒரு காலத்தில் வெடித்தது. 200வருடங்களுக்கு முன் தென் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களாக இங்கு வந்தவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்தனர். 

எனினும் இவர்களுக்கு தோட்டக் காணிகளைப் பிரித்து வழங்கினால் சரித்திரத்தில் மற்றொரு பயங்கரம் எழுதப்படும் நிலை உருவாகும் என சில இனவாதிகள் கடந்த காலங்களில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள்  தனியார் என்று குறிப்பிடுவது பெரும்பான்மையின  கிராமத்தவர்களையே என்பதில் ஐயமில்லை. இதைத்தான் இதுவரை ஆட்சிக்கு வந்த ஒட்டு மொத்த கட்சிகளும் பகுதி பகுதியாக செய்து வருகின்றன. இற்றைவரை ஆயிரக் கணக்கான ஹெக்டயர் காணிகள் பெரும்பான்மையினத்தவரை இலக்காக கொண்ட அபிவிருத்திப் பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்காணிகளை வளப்படுத்துவதற்காக நாலைந்து தலைமுறைகளைத் தியாகம் செய்துள்ள மலையக மக்களுக்கு இம்மியளவு காணி தானும் சொந்தமாக்கப்படவில்லை.  

இதுவரை காலமும் மலையகத்தில் இடம்பெற்ற போராட்டங்கள் எல்லாமே வாழ்வாதாரத்தை மையமாக கொண்டவையே! அதுவும் அவ்வாறான போராட்டங்கள் யாவும் அரச எதிர்ப்புப் போராட்டங்களாக இருக்கவில்லை. அநேகமானவை பெருந்தோட்டங்களை அந்தந்தக் காலகட்டங்களில் நிர்வாகம் செய்த முகாமைத்துவங்களுக்கு எதிரான போராட்டங்களாகவே இருந்தன.  

தோட்டக் காணிகள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மலையக மக்கள் நடத்திய போராட்டங்களின் தொனி சிங்கள மக்களுக்கு எதிரானதாக எப்பொழுதுமே இருந்ததில்லை. அது வாழ்வாதாரம் பறிபோகும் என்ற அச்சத்தினால் நடத்தப்பட்டவை. இன்று வாழ்க்கையை நடத்திச்செல்ல சம்பளம் போதாத காரணத்தினால் அல்லலுறும் அவர்கள் சம்பளத்துக்காக போராட்டங்கள் நடாத்தி களைத்துப் போய் நிற்கின்றார்கள்.  

எந்தவொரு காலக்கட்டத்திலும் மலைநாட்டுக் கிராமத்தவர்களின் நிலங்களைப் பறிக்க மலையக மக்கள் காரணமாக இருந்ததில்லை. ஏனெனில் நிலங்களின் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. தவிர இம்மக்களின் செறிவுக்காக எந்தவொரு நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. மாறாக வருமான மீட்டலை அதிகரிக்க ஆங்கிலேய ஆட்சி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தியது.

இதனால் ஏற்பட்ட ஆளணித் தேவையை ஈடுசெய்யவே இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தது. ஒப்பந்த அடிப்படையில் இங்கு வந்த இந்திய வம்சாவளியினர் ஒப்பந்தக்காலம் முடிந்தும் இந்நாட்டை நேசித்ததன் காரணமாக தமது தாய்நாடு திரும்பாது இங்கேயே தரித்ததுதான் இச்சமூகம் செய்த பெரிய தவறு.  

மலைநாட்டு புரட்சியின் இலக்கு அந்நியர் ஆட்சிக்கு எதிரான அணுகு முறையே அன்றி இந்தியா வம்சாவளி மக்கள் எதிர்ப்பு அல்ல. ஆனால் தமது நிலங்கள் பறிபோக இந்திய வம்சாவளி மக்களே காரணமென பரப்புரை செய்யப்பட்டதை அப்பாவி கிராம மக்கள் அப்படியே நம்பினர.் ஆனால் அவ்வாறான முறுகல் நிலைமைக்கான ஏதுக்கள் சிங்கள கிராமத்தவர் மத்தியில் காணப்படவில்லை என்பதே யதார்த்தம். இன்று ஸ்திரத் தன்மையற்றதும் சொத்துரிமையற்றதுமான வாழ்வியல் சுழற்சிக்கு ஆட்பட்டிருக்கின்றது மலையக சமூகம். அத்துடன் சமூக அந்தஸ்துக்கான கோரல் வாழ்வாதார வீழ்ச்சி என்பன மீண்டுமொரு புலம் பெயர்தலுக்கான தூண்டுகையை உற்பத்தி செய்யும் நிலை உருவாக்கம் பெற்று வருகின்றது. இந்நாட்டின் அரசாலும் தேசிய இனங்களாலும் மலையக மக்கள் அந்நியராகவே கணிக்கப்பட்டு வருவது அபத்தம்.  

பொருளாதார தேவைக்காக பெருந்தோட்ட மக்களின் இடப் பெயர்வு உருவாக்கும் வெற்றிடம் அவர்களின் இருப்பு குறித்ததான அச்சுறுத்தலை ஏற்படுத்தவே செய்யும். எதிர்கால இருப்பு இப்படி கேள்விக்குறியாகும் பட்சத்தில் வாழ்வியல் ரீதியிலான வரப்பிரசாதங்களுக்கு அரசியல் ரீதியிலான தீர்வு பலவீனமடைந்து போகவே செய்யும்.

ஏனெனில் 200வருடங்களாக இருட்டடிப்புச் செய்யப்பட்டுவரும் மலையக மக்களின் அபிலாஷைகள் சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட ரீதியாக உள்வாங்கப்படாமலேயே விடப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டு வரும் புறக்கணிப்பு.

வெளிநாடுகளின் தலையீடு கோரிக்கைகளாக மட்டுமே அமையும். அதனால் ஆகப்போவது ஏதுமில்லை. இந்தியா அதன் தார்மீக பொறுப்பை இதுவரை சரியாக ஆற்றவில்லை. மலையக மக்களுக்கான இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் சில மனிதாபிமானம் அற்றவை. த.மு கூட்டணியின் நிலவரம்பற்ற சமூக சபை யோசனை வரவேற்கக்கூடியது. தமது ஆவணத்தில் அடங்கியுள்ள அம்சங்களுக்கு இங்கேயே தீா்வுகாணக்கூடிய வகையில் அரசியல் காய் நகர்த்தலை தமிழ் முற்போககுக்் கூட்டணி மேற்கொள்வதே உருப்படியான காரியமாக இருக்க முடியும்..  

பன். பாலா

Comments