தமிழ் - சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் புதுவருடம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் - சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் புதுவருடம்

இவ்வாரம் உதயமாகவிருக்கும் சித்திரைப் புதுவருடத்தை வரவேற்பதற்கு இலங்கைவாழ் தமிழ் - சிங்கள மக்கள் தயாராகி வருகிறார்கள். மக்கள் மனங்களில் சமுதாய உணர்வையும், ஆன்மீகப் பற்றையும் தூண்டும் வகையில் ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும் தொடர்புள்ள விழாக்கள், வைபவங்கள், பண்டிகைகள் என்பன ஒவ்வொரு மாதமும் வந்து போகின்றன. ஆனால், இரு இனத்தினருக்கும், வௌ;வேறு இரு மதத்தினருக்கும் உரித்தான ஒரு திருநாளாக முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்திருக்கிறது சித்திரைப் புதுவருடம்.

இலங்கையிலுள்ள பிரதான இரு இனத்தவர்களான தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உரிய பண்டிகையாதலால் இதனை தமிழ் - சிங்கள புதுவருடம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. எனினும் இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழ் மக்களும் பௌத்த சமயத்தைச் சேர்ந்த சிங்கள மக்களும் இந்த புதுவருடத் திருநாளை கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய கலாசார தொடர்புகளுக்கு சித்திரைப் புதுவருடம் சான்றாக அமைந்திருப்பதை குறிப்பிடலாம்.

சித்திரைப் புதுவருடமானது ஒரு மங்களகரமான திருநாளாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மரபிற்கமைய புதிய எதிர்பார்ப்புகளையும் பலவித நம்பிக்கைகளையும் வைத்து வரவேற்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கையை நல்வழியில் நெறிப்படுத்துவதுடன், இளைய தலைமுறையினர் தமது முன்னோர்களின் பாரம்பரியங்களை அறிந்துகொள்ளவும், இறைவழிபாடு, தானதருமம், ஆசிபெறுதல் என்பவைகளினால் மனநிறைவு கொள்ளவும் உதவும் வகையில் சித்திரைப் புதுவருடத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இம்முறை 'சுபகிருது' என்ற பெயரில் உதயமாகும் சித்திரைப் புதுவருடம், அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 36ஆவது வருடமாகும். இந்தப் புதுவருடம் பெயருக்கு ஏற்றவகையில் நன்மையானதாகவும், மங்களகரமானதாகவும் அமைவதுடன், இதுவரை காலமும் பலவித இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்த அனைத்து மக்களுக்கும் விமோசனம் தருவதாகவும் விளங்கவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7மணி 50நிமிடத்தில் பூர்வபட்ச திரயோதசி திதியில், பூரம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில், சிங்க இராசியில், மேட லக்னத்தில் புதுவருடம் பிறக்கிறது. 13ஆம் திகதி புதன்கிழமை பின்னிரவு மணி 3.50முதல் 14ஆம் திகதி பகல் மணி 11.50வரை விஷு புண்ணியகாலமாகும். இந்த புண்ணிய காலத்தில் சகலரும் தலையில் கடம்பம் இலையையும், காலில் கொன்றை இலையையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். இதன் பின்னர் சிவப்பு அல்லது மஞ்சள் நிற பட்டாடை, அல்லது சிவப்புக்கரை அமைந்த புதிய பட்டாடை தரித்து, பவளம், புஷ்பராகம் பதித்த ஆபரணத்தையும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8மணி 41நிமிடத்தில் பூர்வபட்ச திரயோதசி திதியில், பூரம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில், சிங்க இராசியில், இடப லக்னத்தில் புதுவருடம் பிறக்கிறது. 14ஆம் திகதி அதிகாலை மணி 4.41முதல் பகல் மணி 12.41வரை மேடசங்கிரமண அல்லது விஷு புண்ணியகாலமாகும். இந்த புண்ணிய காலத்தில் சகலரும் தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். இதன் பின்னர் மஞ்சள் நிறப்பட்டு அல்லது மஞ்சள் கரை அமைந்த வெள்ளை புதுவஸ்திரம் தரித்து, புஷ்பராகம் இழைத்த ஆபரணம் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என திருக்கணித பஞ்சாங்கம் சொல்கிறது.

மலரவிருக்கும் சித்திரைப் புதுவருடப்பிறப்பு பரணி, மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம், பூராடம், உத்தராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1ஆம் 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமாகும். எனவே, இவர்கள் அனைவரும் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்வது அவசியம் என பஞ்சாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவருடம் பிறந்தால் கைவிசேடம் பரிமாறிக்கொள்வது பாரம்பரிய வழக்கமாகும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், தொழிலகங்கள், விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் பணியாற்றுவோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் கைவிசேடம் பெற்றுக்கொள்வார்கள். இலங்கையிலுள்ள பல வர்த்தக வங்கிகள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுவருடநாளில் கைவிசேடம் வழங்குவது கடந்த பலவருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு சிறப்பான வைபவமாகும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை மணி 7.57முதல் 8.47வரையும், மறுநாள் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மணி 7.52முதல் 9.51வரையும், அதேதினம் இரவு மணி 6.12முதல் 8.12வரையும், 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.45முதல் 9.44வரையும், அதேதினம் இரவு மணி 6.05முதல் 8.05வரையும் கைவிசேடத்துக்குரிய சுபநேரங்களாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை மணி 8.50முதல் 9.42வரையும், மறுநாள் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மணி 8.35முதல் 9.50வரையும், 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.30முதல் 9.40வரையும் கைவிசேடத்துக்குரிய சுபநேரங்களாகும்.

உழைப்பையே தங்கள் வாழ்வின் ஜீவநாடியாகக் கொண்டிருப்பவர்கள் புதுவருடத்தின் பின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற் கருமங்களை ஆரம்பிப்பதும், மக்கள் ஒவ்வொருவரும் நல்லநாள் பார்த்து உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், குரு மற்றும் பெரியோர்களை தரிசனம் செய்து ஆசிபெற்றுக் கொள்வதும் பாரம்பரிய நடைமுறையாக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதற்குரிய சுபநேரங்களாக திருக்கணித பஞ்சாங்கத்தில் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மணி 8.35முதல் 9.50வரையும், 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.30முதல் 9.40வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவருடத்தில் வித்தியாரம்பம் மற்றும் கல்வி சார்ந்த புதுக்கருமங்களை தொடக்குவதற்கான சுபநேரமாக திருக்கணித பஞ்சாங்கத்தில் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மணி 8.35முதல் 9.50வரையாகும் என சொல்லப்பட்டுள்ளது.

உதயமாகும் இந்த சித்திரைப் புதுவருடத்தில் வரவு-செலவு விடயமாக மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு இலாபம் என்றும், மேடம், இடபம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு சமநிலை என்றும் சிங்கம், தனுசு, மீனம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு நஷ்டம் என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுபகிருது வருடத்தில் யாவற்றையும் சீர்தூக்கி கண்ட நற்பலன் இரண்டு பங்கும், தீயபலன் மூன்று பங்குமாம் என வாக்கிய பஞ்சாங்கக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பலவிதமான நோய்களின் தொற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலை மலரும் புதுவருடத்தில் முற்றாகவே நீங்கி, அனைவரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!

அ. கனகசூரியர்

 

Comments