அமைதியின் முடிவு | தினகரன் வாரமஞ்சரி

அமைதியின் முடிவு

சுப்பன் ஒரு சிறந்த உழைப்பாளி. சுப்பையா என்ற அவனது பெயரை சிறுவயதில் சுப்பு, சுப்பு என்று அழைத்தார்கள். இளவயதில் சுப்பு சுப்பன் ஆனான். அவனது பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தனர். ஆனால் மனசாட்சியோடும் நேர்மையாகவும் சமூகத்தில் வாழ்ந்தார்கள். பெற்றோரது இரக்ககுணமும்,  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சுப்பனின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. சிறுவயதில் அவன் பாடசாலைக்குச் சென்றான். ஆனால் படிப்பு என்னவோ அவன் மண்டைக்குள் ஏறவில்லை. அதனால் ஆசிரியர்களின் ஏச்சுக்களுக்கும்,  பேச்சுக்களுக்கும் ஆளானான். சகமாணவர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானான். பாடசாலை செல்வதற்கே அஞ்சினான். அதனால் 5ம் வகுப்புடனேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தினான். ஆனால் பள்ளி செல்லும் காலத்தில் எழுதுவதற்கும் கணக்குப் பார்ப்பதற்கும் தெரிந்துகொண்டான். கல்வியறிவற்ற பெற்றோரும் அவன் பாடசாலை செல்லாததையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.

சுப்பன் திடகாத்திரம் கொண்டவனாகவும், சிவந்த நிறம் கொண்டவனாகவும், அழகாகவும் இருந்தான். சிறந்த நேர்மையான உழைப்பாளி என்பதால் அவனுக்கு ஒவ்வொருநாளும் கூலிவேலைகள் கிடைத்தன. வேலை முடிந்ததும் சம்பளம் கொடுத்தார்கள். சுப்பன் பணத்தை விரயம் செய்யும் புகைத்தல்,  மது, மாது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருந்தான். இதனால் அவன் தன் உழைப்பில் பெரும் பகுதியை தனது பெற்றோர்களுக்கு வழங்கினான். சுப்பனின் குடும்பம் தாய், தந்தை, சகோதரர்கள் சகோதரிகள் என பெரிய குடும்பமாக இருந்தது. பெற்றோரின் வருமானம் குடும்ப செலவுகளுக்கு போதவில்லை. அவனது தந்தையும் நோயாளியாக இருந்தார். இதனால் சுப்பன் கொடுக்கும் பணம் குடும்பத்திற்கு பெரும் நிம்மதியை தந்தது.

சுப்பனின் அழகில் மயங்கிய பல பெண்கள் அவனைச் சுற்றி சுற்றி வந்தனர். அவன் தனது குடும்ப நிலைக்காக எல்லாவற்றையும் தவிர்த்து வந்தான். ஆனாலும் சரண்யா என்ற பெண் ஏனோ அவன் மனதைக் கவர்ந்திருந்தாள். சரண்யாவும் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த சராசரி அழகு நிறைந்த பெண்ணாக இருந்தாள். ஆனால் அவள் மனதில் எப்படியாவது சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது. அவள் 10ம் வகுப்புவரை படித்திருந்தாள். சுப்பனும் சரண்யாவும் கோயில்களிலும் வீதிகளிலும் சந்தித்து கதைத்தார்கள். சரண்யா தன் ஏழ்மை நிலையால் சுப்பனை விரும்பினாள். ஆனால் அவளது ஆழ்மனது அவனிலும் மேலான வசதியுடையவனையே விரும்பியது. அப்பாவியான சுப்பன் சரண்யாவின் நடிப்பை உண்மையானது என நம்பினான்.

சரண்யாவின் பெற்றோர் தமது மகளை மைத்துனன் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்பினர். அவன் வேலை செய்வதில் சோம்பேறியாகவும், புகைத்தல் மதுப்பழக்கம் கொண்டவனாகவும் இருந்தான். இதனால் அவனை சரண்யா கணவனாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவளது பெற்றோர் சரண்யா சுப்பனுடன் காதல் கொண்டதை அறிந்து, மைத்துனன் உடனான திருமணத்தை உடனடியாக நடாத்த ஏற்பாடுகள் செய்தனர். இதனை சரண்யா அறிந்துகொண்டாள். சுப்பனை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொன்னாள்.

சுப்பனுக்கு மனதுக்குள் பெரும் போராட்டம் ஏற்பட்டது. ஏழைகளான தனது பெற்றோரை பார்ப்பதா அல்லது காதலுக்காக சரண்யாவை ஏற்றுக்கொள்வதா என்று திணறினான். இறுதியில் தனது உயிருக்குயிரான நண்பன் ராசனிடம் சென்றான். அவனது ஆலோசனையுடன் யாழ்ப்பாணத்தில் வசித்த சுப்பன் வன்னிக்கு சரண்யாவை அழைத்துச் செல்வதாகவும்,  அங்கு பதிவுத் திருமணம் செய்துகொள்வதாகவும் தீர்மானித்தான். மேலும் வன்னியிலிருந்து பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதாகவும் தீர்மானித்தான். அன்று இரவே நண்பனின் உதவியுடன் இரகசியமாக சரண்யாவை அழைத்துச் சென்றுவிட்டான்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் சரண்யாவின் வீட்டில் அவளை காணாத தாய் சத்தம் போட்டு அழுது குளறி ஆர்ப்பாட்டம் செய்தாள். இதனையறிந்த தந்தையும் சகோதரர்களும் சரண்யாவை உறவினர் வீடுகளிலும் அவளது நண்பிகள் வீடுகளிலும் தேடினர். பொலிசில் முறைப்பாடு செய்வதற்கும் பயந்தனர். உள்நாட்டு யுத்தகாலமாக இருந்ததால் இந்நிலமை ஏற்பட்டது. திடீர் பதற்றத்தால் சரண்யாவின் தாய் தந்தையருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடீரென்று சரண்யாவின் தாய்க்கு மின்னல் வெட்டியது போல சுப்பனுடனான தொடர்பு நினைவுக்கு வந்தது. உடனடியாக தாயும் தந்தையும் சயிக்கிளில் சுப்பனின் வீட்டுக்கு சென்றனர்.

சுப்பன் தனது தாய் தந்தையரிடம் தான் வேலை விடயமாக மன்னாருக்குச் செல்வதாக கூறியிருந்தான். வருவதற்கு பத்து நாட்கள் செல்லும் எனவும் கூறியிருந்தான். இதை நம்பாத சரண்யாவின் தந்தையும்தாயும் கூச்சலிட்டனர். சுப்பனின் பெற்றோரை ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். இருதய நோயினால் சுப்பனின் தந்தை பாதிக்கப்பட்டிருந்தார். இவர்களது ஆர்ப்பாட்டம் தாங்காது சுப்பனின் தந்தை மயக்க முற்றுக் கீழே விழுந்தார். இந்த நிலையில் மேலும் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த சரண்யாவின் பெற்றோர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

மயக்கமடைந்து கீழே விழுந்த சுப்பனின் தந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டொக்டர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார். பின்னர் சுப்பனின் தந்தையின் பூதவுடல் அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுப்பனுக்கு தந்தையின் மரணம் குறித்து அறிவிக்க முடியவில்லை. சுப்பனை அனுப்பிவைத்த நண்பனுக்கும் அவன் சென்ற இடம் பற்றி எதுவும் தெரியவில்லை. 

இது இவ்வாறு இருக்க வன்னிக்கு சென்ற சுப்பனுக்கும் சரண்யாவுக்கும் பெரியவர் ஒருவரின் உதவி கிடைத்தது.  சுப்பன் தன் கதையை அவருக்கு கூறினான். அவர் எல்லாமே இயற்கையே தீர்மானித்தது என்றும், இயற்கையின் சக்தியே உங்களை இணைத்து வைத்தது என்றும் கூறினார்.  அவரது ஆலோசனைப்பபடி இருவரும் அடுத்த நாள் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அப் பெரியவரே தனது தென்னந் தோட்டத்தில் சுப்பனுக்கும் சரண்யாவுக்கும் வேலை வழங்கினார். சுப்பனுக்கு தனது பெற்றோரை நினைத்து மனம் கலங்கியது. சரண்யாவும் தனது பெற்றோர்கள் சகோதர்களையிட்டு கவலை கொண்டாள். குறித்த பெரியவரின் ஆலோசனைகள் இருவருக்கும் ஆறுதல் தந்தது.

பிறந்த வீட்டுக் கவலைகளுக்கு மத்தியிலும் சுப்பனதும் சரண்யாவினதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நாலு ஆண்டுகளில் சரண்யா ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்திருந்தாள். சுப்பன் தனது வீட்டுக்கு மாதாமாதம் மணியோடர் மூலமாக பணம் அனுப்பிவந்தான். தனது முகவரியை அவன் தெரிவிக்கவில்லை.

இந்த நாலு ஆண்டுகளின் பின்னர் சுப்பன் தனது பிரதேசமான  முழங்காவலில் இருந்த சந்தைக்குப் போனபோது தன்னுடன் சிறுவயதில் படித்த நண்பன் ஒருவனைக் கண்டான். அவனிடம் ஊர் நிலமைகளைப் பற்றி விசாரித்தான். அப்போது அந்த நண்பன் அவனது தந்தை உயிரிழந்த செய்தியை தெரிவித்தான். சுப்பன் மன முடைந்து அவ்விடத்திலேயே அழத் தொடங்கினான். அப்பா நானே உங்களுக்கு எமனாகி விட்டேன் என கதறினான். வீட்டுக்கு வந்த சுப்பன் சரண்யாவிடம் தனது தந்தை இறந்த செய்தியை சொல்லவில்லை.  அவளும் மனவேதனைப்படுவாள் என்ற இரக்கத்தினால் அதனை வெளியிடவில்லை. ஆனாலும் பெரியவரிடம் தனது துன்பத்தை பகிர்ந்து கொண்டான். அவர் அவனுக்கு ஆறுதல் சொன்னார். உலகத்தில் பிறந்த எந்த உயிரும் ஒரு நாள் இறக்க வேண்டியதே எனவும், இயற்கையின் நியதியை யாராலும் வெல்ல முடியாது எனவும் கூறினார். பெரியவர் அவ்வப்போது கூறும் கருத்துக்களால் சுப்பன் ஆறுதலடைந்து வந்தான்.

சுப்பன் முழங்காவிலுக்கு வந்து ஆறாவது வருடத்தில் அவனும் மனைவியும் உழைத்ததன் மூலமாக ஓரளவு சேமிப்பை மேற்கொள்ள முடிந்தது. அதை வைத்து பெரியவரின் உதவியுடன் சொந்தமாக ஒரு தென்னந் தோப்பை வாங்கினர். அதன் மூலம் அவர்களுடைய வருமானம் மேலும் அதிகரித்தது. இதன் பின் சரண்யா சுப்பனுடன் வாதிட்டு பிள்ளைகளை ஆங்கில சர்வதேச பாடசாலையில் சேர்த்தாள். பிள்ளைகள் கல்வியில் பெருமளவு முன்னேறாத போதும் அவர்களது செலவுகள் அதிகரித்தன. இந்நிலையில் வங்கிக் கடன் பெற்று தங்களது தென்னந் தோப்பில் வீடு ஒன்றையும் கட்டினர்.

சுப்பன் தனது உழைப்பு முழுவதையும் சரண்யாவிடமே கொடுத்து வந்தான். அவளே வீட்டுச் செலவை முழுமையாக நிர்வகித்து வந்தாள். வங்கிக் கடனுக்கும் வட்டிக்குமாக பெருந்தொகையை செலவிட வேண்டி ஏற்பட்டது.  செலவுகளை சமாளிக்க முடியாத சரண்யா தனது பிழையான தீர்மானத்தினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்பதை மறைத்து சுப்பன் மீது குற்றம்சாட்டி நாளாந்தம் சண்டையிட்டாள். சுப்பன் ஏதுமறியாது அமைதிகாத்து வந்தான்.

இந்நிலையில் உள்நாட்டு யுத்தத்தினால் பலர் பாதிக்கப்பட்டு இருந்தனர். சுப்பன் தனது தோப்பிலுள்ள தேங்காய்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்று விட்டு திரும்பும் வேளையில் அவனுக்கு அருகில் செல்லொன்று விழுந்து வெடித்து சிதறியதால் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அவன் உயிர் தப்பியதே தவிர, ஒருகையையும் காலையும் இழந்தான். ஆஸ்பத்திரியால் மீண்டு வந்த சுப்பன் ஊன்று கோலின் துணையுடன் வீட்டில் நடமாடினான். வீட்டுச் செலவுக்கு சரண்யாபடும் துன்பங்களைக் கண்டு ஒருநாள் ஊன்று கோலுடன் சென்று சந்தைக்கு அண்மையில் இருந்தான். அவனது பரிதாப நிலையை கண்ட பலர் சில்லறைகளையும் தாள் காசுகளையும் போட்டு விட்டு சென்றனர். பிச்சை எடுப்பதை வெறுத்த சுப்பன் தனது இயலாமையை எண்ணி வருந்தினான்.

அடுத்த நாள் அவன் உடல் நிலை சரியில்லாததால் படுக்கையில் படுத்தபடியே இருந்தான். இதேவேளை நேற்று சுப்பன் கொண்டு வந்த காசை சரண்யாவிடம் கொடுத்திருந்தான். அதில் 1240  ரூபா இருந்தது.  பேராசை கொண்ட சரண்யா சுப்பனை வற்புறுத்தி ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்து வரசெய்தாள். பிச்சையெடுக்க செல்லாவிட்டால் சாப்பாடு தேநீர் எதுவும் சுப்பனுக்கு கிடைப்பதில்லை. இதனால் விரக்தியடைந்த சுப்பன் மதுவிற்கு அடிமையானான். குடும்பத்தில் எல்லா நாளும் ஒரே சண்டையாக இருந்தது. பிள்ளைகளும் விரக்தியடைந்திருந்தனர். சுப்பனும் இவற்றுக்கு முடிவு ஒன்று தேவையென்று எண்ணினான். அவனது எண்ணத்தை பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டது. அடுத்த நாள் மது போதையில் வீதியால் சென்ற சுப்பனை கனரக வாகனம் ஒன்று மோதியது. பிரபஞ்சத்தின் சக்தியுடன் அம்புலன்ஸ் வாகனம் ஒன்று அவனது உயிரற்ற உடலைச் சுமந்து சென்றது.             

குப்பிளான்
ஆ.மோகனசுந்தரம்

Comments