15வது ஐ. பி. எல். தொடர்: இலங்கை வீரர்களின் அசத்தலான ஆரம்பம்! | தினகரன் வாரமஞ்சரி

15வது ஐ. பி. எல். தொடர்: இலங்கை வீரர்களின் அசத்தலான ஆரம்பம்!

கடந்த வாரம் ஆரம்பமான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கையிலிருந்து 5வீரர்கள் இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரி/20போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் இலங்கை அணி இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளதால் சிறந்த பயிற்சிக்களமாகக் கருதி இலங்கை வீரர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக இத்தொடரைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இத்தொடரில் அதிக கவனத்தை ஈர்த்த இலங்கை வீரராக வனிந்து ஹசரங்க உள்ளார். பெங்களூர் அணி அவரது பந்துவீச்சை பெரிதும் நம்பியுள்ளது. மேலும் அவ்வணியில் வெளிநாட்டு வீரரொருவர் தலைவராக இருப்பதால் ஹசரங்கவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கலாம். பெங்களூர் நிர்வாகம் ஹசரங்கவை தொடர் முழுவதும் எல்லாப் போட்டிகளிலும் விளையாடும் வகையில் பதினொருவர் அணியில் சேர்த்துக்கொள்ள திட்மிட்டுள்ளது. இவரது துடுப்பாட்டத் திறமையும் அவ்வணிக்கு மேலதிக அனுகூலமாகும். கடந்த முறையும் இவர் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஓரிரு போட்டிகளிலேயே விளையாடும் வாயப்புக் கிடைத்ததால் தனது திறமையை முழுமையாக நிரூபிக்கும் சந்தர்ப்பம் அத்தொடரில் கிடைக்கவில்லை.

இம்முறை தொடர் முழுவதும் பிரதான சுழற்பந்து வீச்சாளராக அவரை பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது. இதுவரை பெங்களூரின் நிரந்தர சுழற்பந்துவீச்சாளராக விளையாடிய யுஹேந்திரர் சஹால் இம்முறை அவ்வணியில் இடம்பெறாததும் ஹசரங்கவுக்கு நல்ல சந்தர்ப்பமாகும். இதை அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெங்களூர் அணி நிர்வாகம் தன்னை கூடிய விலைக்கு வாங்கியதன் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து அதை மெய்ப்பிப்பது வனிந்து ஹசரங்கவின் பொறுப்பாகும். இதற்கு முன் லசித் மலிங்க இவ்வாறான அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தார். அது நியாயமான விலை என்பதை அவர் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் நிரூபித்திருந்தமையினால் அவரை மும்மை இந்தியன்ஸ் அணி இறுதிவரை விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உடற் தகுதியைக் காரணம் காட்டி நிராகரித்திருந்த அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ இம்முறை ஐ. பி. எல். தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தில் தேர்வு செய்யாமைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. அவ்வேளையில் இந்தியச் சுற்றுப்பயணத்துக்காக உடல் தகுதித் தேர்வில் இரண்டு கிலோ மீட்டர் ஓட்டத்தில் தேர்ச்சிபெற்றாலும் உடலில் படிந்துள்ள கொழுப்பின் அளவை அளவிடும் தேர்வில் அவர் தோல்வியடைந்திருந்ததனாலேயே பானுக்க ராஜபக்ஷ அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் அவிஷ்க குணதிலக்க, தீக்ஷன போன்றோரும் இதற்கு முன்னர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர். பின்னர் அவற்றைச் சரி செய்து கொண்டனர். பானுகவும் தனது உடற்தகுதியை சரி செய்யவேண்டும். கிரிக்கெட் சட்டதிட்டங்களை மீறியோ, ஆர்ப்பாட்டங்களை நடத்தி கோஷமிடுவதாலோ அணியில் ஒரு வீரரை இணைத்துக்கொள்ள முடியுமா?

பானுக்க ராஜபக்ஷ ஒரு திறமையான அதிரடித் துடுப்பாட்ட வீரர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் அவர் திடீரென தனது ஓய்வை அறிவித்ததும் விளையாட்டுத்துறை அமைச்சரே அவரை அழைத்து தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கூறியிருந்தார்.

அதன்பின் அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடற்தகுதியை மேம்படுத்தி சிறந்த முறையில் வைத்துக்கொள்ள முடிந்தமையினால்தான் இம்முறை ஐ. பி. எல். தொடரில் அவர் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் சில போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோனி பெயார்ஸ்டோ பங்கு கொள்ளமாட்டார் என அறிவித்துள்ளதால் அநேகமாக இலங்கை வீரர் பானுக்க ராஜபக்ஷ விளையாடலாம். இது அவருக்குக் கிடைக்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். தொடர்ந்து இத்தொடரில் அவர் திறமையாக விளையாடினால் அவர் மீதான இலங்கை தேர்வுக்குழுவின் பார்வை திரும்பலாம். அவர் தற்போது சிறந்த உடற்தகுதியுடன் இருப்பதாகவும், இலங்கை அணியுடன் இணையும் தகுதி மட்டத்தை நெருக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது பானுக்கவைப் பொறுத்தவரையில் பாரிய வெற்றியாகும். பானுக்க மீண்டும் இலங்கை அணியுடன் இணைவதற்கு ஐ. பி. எல்லில் மறக்க முடியாத பல துடுப்பாட்ட இன்னிங்ஸ்களில் விளையாடுவதுடன் உடல் தகுதியையும் தேவையான அளவு மட்டத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தவிர அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்காகவோ வலைதளங்களில் உலாவரும் கதைகளுக்காகவோ அணியில் இணைய முடியாது என்பதை முதலில் பானுக ராஜபக்ஷ உணர்ந்து தனக்குக் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி இலங்கை அணியுடன் இணைய முயலவேண்டும்.

இலங்கை அணியின் யோக்கர் மன்னர் லசித் மலிங்கவின் ஓய்வுககுப் பின் இலங்கை வேகப்பந்து வீச்சுக்கு உயிர்கொடுத்து வரும் துஷ்மந்த சமீரவும் இம்முறை லக்னோ சுப்பர் ஜெயன்ட் அணிக்குத் தேர்வாகியுள்ளார். புதிய அணி என்பதால் அவ்வணியில் சமீரவுக்கு இத்தொடர் முழுவதும் விளையாடும் சந்தரப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் அவ்வணியில் தேர்வுசெய்யப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் திடீரென விலகியுள்ளதால் அவ்வணியின் முதல் தேர்வாக ஷமீரவே உள்ளார். புதுமுக வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் ஆர்வம் காட்டிவரும் அவ்வணியின் பயிற்சியாளர் அண்ரூ பிளவர் அவ்வணியின் ஆரம்பப் பந்து வீச்சாளராக அவேஷ் கானுடன் சமீர களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். இத்தொடரில் ஓரிரு போட்டிகளின் முடிவுகளின் மாற்றத்தைக் கொண்டுவர சமீரவினால் முடியுமானால் அது அவ்வணியில் தொடர்ந்து நீடிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பமாய் அமையும். அது இலங்கை அணிக்கும் சாதகமாய் அமையும்.

மேலும் கடந்த சீசன்களில் விளையாடிய சர்வதேச வீரர்கள் கடைசி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதால் எமது வீரர்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். இதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சென்னை அணிக்கு 70இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷன அவ்வணியின் முக்கிய வீரராகத் திகழ்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். ஆனாலும் இவரை ஏலத்தில் எடுத்ததிலிருந்து சென்னை ரசிகர்கள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுவதால் இவருக்கு எதிரான சென்னை ரசிகர்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை அணியின் திட்டங்கள் முன்கூடியே அறியமுடியாததால் இவர் எல்லாப் போட்டிகளிலும் விளையாடுவாரா என்பதை இப்போதே கூற முடியவில்லை. ஆனால் இம்முறை போட்டிகள் சென்னையில் நடைபெறாததால் சென்னை ரசிகர்களிடமிருந்து மகீஷுக்கு தொந்தரவு இருக்காது. அதனால் அவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன முதன் முதலாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார். என்றாலும் இவர் இம்முறை ஓரிரு போட்டிகளிலாவது இணைத்துக் கொள்ளப்படுவாரா என்பது சந்தேகமே?

எதிர்பாத்தபடி ஐ. பி. எல். தொடரில் துஷ்மந்த சமீர, ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் இதுவரை விளையாடிய போட்டிகளிலே முத்திரை பதித்துள்ளனர். பானுக முதல் போட்டியில் 22பந்துகளில் 43ஓட்டங்கள் விளாசி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளதுடன், சமீர விளையாடிய முதல் போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்தாலும், எதிரணியின் ஆரம்ப இரு விக்கெட்டுகளையும் விரைவாக வீழத்தி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுள்ளார். வனிந்து ஹசரங்கவும் கொல்கொத்தாவுடனான தனது 2வது போட்டியில் 20ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூர் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் 15வது ஐ. பி. எல். அத்தியாயத்தில் எமது வீரர்கள் அசத்தலான ஆரம்பத்தைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறாக இலங்கை வீரர்கள் ஐ. பி. எல். தொடர்களில் தமது பங்களிப்பை அளிப்பதோடு, முன்னாள் வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், லசித் மலிங்க ஆகியோரும் ஐ. பி. எல். தொடரில் இணைந்துள்ளனர். இவர்கள் பங்களிப்புச் செய்யும் ராஜஸ்தான் ரோயல், மும்பாய் இந்தியன்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளை விட எமது வீரர்கள் பங்குகொள்ளும் போட்டிகளே எமது கவனத்தை ஈர்த்துள்ளது.

இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ரி/20உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சிக்களமாக எமது வீரர்கள் இத்தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது ரசிர்களின் எதிர்பார்ப்பாகும்.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments