மாணிக்காச்சி ! | தினகரன் வாரமஞ்சரி

மாணிக்காச்சி !

என்னடி இந்தக் குறனாவோ கிறனாவோ எண்டு ஒரு நிலுவைச் சனியன்  வந்தபிறகு மனுசருக்கு ஒரே ஆக்கினையும் வேதனையுமாக் கிடக்கு. மனுசர் ஒரு இடமும் போகேலாம வரேலாமக்கிடக்கடி. இன,சனம் வீடுகளுக்கு கூட ஒரு நன்மை தீமை எண்டும் போகவரப் பயமாவெல்லே கிடக்கு” எண்டு ஒழுங்கையால அலம்பினபடி மாணிக்காச்சி சின்னையா வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு வந்தா. மாணிக்காச்சி கதைக்க வெளிக்கிட்டா அறளை பெயர்ந்த அரசியல்வாதி மாதிரி சொன்ன விசயத்தையே திருப்பித் திருப்பி சம்பந்தா சம்பந்தம் இல்லாம சொல்லிக்கொண்டு இருப்பா.சில நேரங்களிலை பேதி குடிச்ச ஆக்களுக்கு வயித்தால போற மாதிரி நிப்பாட்டாமலே கதைச்சுக்கொண்டு போவா.

ஒவ்வொருநாளும் பின்னேரம் நாலைஞ்சு மணி எண்டால் சின்னையா வீட்டுப் படலையடிப் புழுதியிலை  அயலுக்கிள் பெண்டுகள் எல்லாம் கூடி வட்டமா  இருந்து ஊர்ப்புதினம் வம்பு தும்பு நாலு பன்னண்டு கதையெண்டு பலதும் பத்தும் கதைப்பினம். உந்த வட்ட இருப்பு  மகாநாடு இல்லாட்டில் படலையடிக் கூட்டம்  மம்மல் பொழுதாகி விளக்கு கொழுத்தும் வரையும் நடக்கும். ஆம்பிளையள் கள்ளுக்கொட்டில், கோயில்வீதியள், மடங்கள், மதகுகள், வயல் சாடுவாயள், வாசிகசாலை, மைதானங்கள்  எண்டு கூடி இருந்து கதைப்பினம் . ஆனாப் பெண்டுகள் உப்பிடி ஆம்பிளையள் மாதிரி அங்கை இஞ்சை எண்டு போகாம படலை வழியை கூடி இருந்து கதைப்பினம். என்ன ஒரு வித்தியாசம் எண்டால் ஆம்பிளையள் அரசியல் ,விளையாட்டு, உத்தியோகம்,  படிப்பு, எண்டு கதைப்பினம் . ஆனால் பெண்டுகள் சீலை,  துணி, நகைநட்டு, ஆற்றையும் வீட்டு விடுப்புகள் விண்ணாயங்கள் எண்டு கதைப்பினம். ஆனால் உதில ஒரு விஷயம் என்னண்டால் உப்பிடி கூடி இருக்கிற பெண்டுகள் தங்கட வீட்டு விண்ணாயங்களை விட்டுப்போட்டு அடுத்தவன் வீட்டு விசயங்களைத்தான் விலாவாரியா அலசி  தோச்சுப் பிழிஞ்சு காயப்போடுவினம்.  ஆம்பிளையள் கூடி இருந்து கதைக்கிற இடத்தில  சிரிப்பும் சீண்டலும் பகிடியும் கும்மாளமும் தாராளாம  இருக்கும் ஆனால் பெண்டுகள் கதைக்கிற இடத்தில குசுகுசுப்பு , சிணுங்கல், மூக்கைச் சிந்துறது கொஞ்சம் தூக்கலா இருக்கும்.

உப்பிடி கூடி இருந்து கதைக்கிறது எண்டது உண்ணாண மனுசருக்கு பெரிய ஆறுதல். அவரவர் தன்ரை கவலையளை துக்கங்களை ஏன் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளிற  ஒரு இடமா உந்த பின்னேர ஒன்று கூடல்  இருக்கும். அவையுக்குள்ள ஒரு அன்னியோன்னியம் ஆத்மார்த்தமான நட்பு ஆளாளுக்கு நன்மை தீமையில உதவிறது எண்டு  இப்பத்தே மனுசர் கனபேரிட்டை  இல்லாத ஒரு மனுசஈர்ப்பு இல்லாட்டில் மனுசக்குணம் நிறையவே இருக்கும் . உப்பிடியான உந்த பின்னேர ஒன்று கூடல் இப்பத்தே வாழ்க்கை முறையால இல்லாமப் போனதால தான் இப்பத்தே மனுசர் மற்ற மனுசரோட தொடுசல் இல்லாமல் மனுசத்தன்மை இல்லாமல் தனித்தனியா சீவிக்கினம் போல.

அண்டைக்கும் வழக்கம்போல பொழுதுபட சின்னையா  வீட்டுப் படலையடியில சுந்தரி, வள்ளி , சிவக்கொழுந்து, பராசத்தி, அன்னம்மா  எண்டு அயலட்டைப் பெண்டுகள் எல்லாம் கூடி இருக்க படலையைத் திறந்து கொண்டு வந்த மாணிக்காச்சி ”இதென்ன வெச்சி சீணாப்பிட்டி அழவம்கொம்பரை எண்டு எல்லாக் காணியும் சிறுதானியம் போட்டுக்கிடக்கு இக்கணம் கண்டவன் நிண்டவன்ரை மாடுகள் ஒருபக்கம் கிளியள் ஒரு பக்கம் எண்டு எல்லாத்தையும் கொண்டு போகப்போகுதுகள்“ எண்டு  நிலத்திலை குந்தியிருந்தவ கையால மண்ணை விளக்குமாத்தால கூட்டுறமாதிரி மாதிரி இடம் வலமா அளைஞ்சபடி   அரைஞ்சு அரைஞ்சு அரைவட்டம் அடிச்சபடி கதைச்சுக் கொண்டிருந்தா. உப்பிடி  கதைச்சுக்கொண்டு இருக்கேக்கை புழுதி அளையிறதில இருக்கிற சந்தோசம் ஒரு வித்தியாசமான சந்தோசம். இப்ப கனபேருக்கு உந்தக் குடுப்பினை இல்லை.

மாணிக்காச்சி உப்பிடி  சிறுதானியம் போட்ட வயல்பக்கம் காவலுக்கு போகேலாத கிளிகலைக்கப் போகேலாத தன்ரை ஆதங்கத்தை கதைக்கத் தொடங்க கதைப்பெண்டுகளுக்கு வேர்க்கொம்பு போட்ட கோப்பி ஊத்தி மூக்குப்பேணியளிலை கொண்டுவந்த சின்னையரின்ரை மனிசி சின்னப்பிள்ளை “ஓமடி பிள்ளை மாணிக்கம் முந்தினமாதிரி  நினைச்ச நினைச்ச  மாதிரி வயல் பக்கம் போகேலாமல் கிடக்கு உவங்கள் எங்கட பெடியள் உந்த  ஊரடங்கு நேரத்தில வயல் சாடுவாயில கூடியிருந்து காட்ஸ் கரம்போர்ட்டெண்டு விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆடு மாடுகள் போகமா கிளி கொத்தாம பாத்தாங்கள். இப்ப அவங்கள் உந்த நிவாரணம் குடுக்கிறமெண்டு ஒரு வேலையில்லை வெளிக்கிட்ட பிறகு அவங்களுக்கு சாடுவாய்ப் பக்கம் போக நேரம் கிடைக்கிறேல்லை” எண்டா.

சின்னப்பிள்ளை உப்பிடி பெடியள் நிவாரணம் குடுக்கப் போன கதையைச் சொல்லவும் “அது சரி உவங்கள் என்ன ஆருக்கும் உருகியே செய்யிறாங்கள். அவங்களுக்கு ஏதும் வரும்படி இருக்கும். அதை இதையெண்டு தங்கட வீடுகளுக்கும் கொண்டு போகாமல் இருக்கிறாங்களே”  எண்டு வள்ளி சொல்ல கோபப்பட்ட சுந்தரி  “எணை வள்ளியக்கை சும்மா பெடியளைப்ப்றி விசர்க்கதை கதையாதணை. அவங்களை வம்புப்பிள்ளையள் சும்மா ஊர்மேயுதுகள்.வீட்டில ஆத்தைமார் அவிச்சுக் ககொட்டத்திண்டு போட்டு நாலு றோட்டும் ஒரு றோட்டா சயிக்கிள் தடியைக் கவட்டுக்கை வைச்சுக் கொண்டு திரியிறாங்கள் .குடிச்சு வெறிச்சு பீடி சிகரட்டு பத்திக்கொண்டு  திரியுறாங்கள் உருப்படுவாங்களோ பெண்புரசு ஒழுங்கை வழிய போகேலாது வரேலாதெண்டு எல்லாம் உங்களைப் போல ஆக்கள் எத்தினை கதையைக் கதைப்பியள் “ எண்டு கோவமாச் சொன்ன சுந்தரி சின்னப்பிள்ளை கொண்டுவந்த கோப்பியை மூக்குப்பேணியின்ரை மூக்கு வாயிலை படாதபடி அண்ணாந்து குடிச்சா . முந்தி எங்கட சனம் உப்பிடி அண்ணாந்துதான் என்னவும் குடிக்குங்கள். இப்ப உள்ள ஆக்கள் மாதிரி பேணியில இல்லாட்டில் கிளாசிலை வாய்  வைச்சு சூப்பிறேல்லை . அண்ணாந்து குடிக்கிறது எண்டது ஒரு நல்ல சுகாதாரப் பழக்கம் .

ஒரு மிடறு கோப்பியை விட்டுத் தொண்டையை நனைச்ச சுந்தரி ஒருக்காச் செருமிக் கொண்டு “பெடியள் விளையாடிக்கொண்டு  முசுப்பாத்தி பண்ணிக்கொண்டு திரிஞ்சாலும் ஊரில ஒரு  நல்லது கெட்டது எண்டு வந்தால் அவங்கள்தானே உடன முன்னுக்கு வாறாங்கள் . உப்பவும் உந்தக் கொறோனா கோதாரி வந்தபிறகு அவங்கள் அங்கயும் இஞ்சையும் ஓடி ஆடித் திரிஞ்சு அவையை இவையைப் பிடிச்சி சனத்துக்கு சாமான்கள் குடுக்கிறாங்கள் எல்லே . உங்க கடை கண்ணி எல்லாம் மூடி இருக்கேக்கை வேலை வெட்டிக்கு போகவர ஏலாமல் கனபேர் தின்னக் குடிக்க வழி இல்லாமல் இருகேக்கை உவங்கள் செய்யிறது பெரிய உதவி எல்லே என்னணை மாணிக்காச்சி நான் சொல்லுறது சரிதானே “  எண்டா.

சுந்தரி சொன்னதைக் கேட்ட சிவக்கொழுந்து “ஓமடி வள்ளி சுந்தரி சொல்லுறதும் ஞாயம்தானே. நாங்கள் ஒரு நாளும் ஆதாரம் இல்லாமல் ஒரு கதையளையும் கதைக்கப்படாது . ஒருத்தரைப்பற்றி புறஞ் சொல்லுறது வீண் கதையள் கதைக்கிறதை நிப்பாட்டவேணும். உப்பிடி கதைச்ச வீண்  கதையளால உங்க எத்தினை குடும்பங்கள் சீரளிஞ்சு  போச்சுதுகள் எண்டு எங்களுக்கு நல்ல வடிவாத் தெரியுமெல்லே “ எண்டா.

உவை பெண்டுகள் உப்பிடி கதைச்சு பிடுங்குப்பட்டுக் கொண்டது  அப்பதான் சுருட்டுக் கொட்டிலாலை  படலையைத் திறந்துகொண்டு வந்த சின்னையரின்ரை  காதில விழுந்தது . அந்தக் கதையகளை காதில வாங்கின சின்னையர் “என்ன இருந்தாலும் எங்கட பெடியள் வலு கெட்டிக்காறர் கண்டியளோ “ எண்டார் .”நாங்கள் முந்தி வரிவளவுப் பிள்ளையார் கோவில் தேர்முட்டியில இருந்து எத்தினை குழப்படியளைச் செய்திருப்பம். பின்னேரங்களிலை கோவளம் மெலிஞ்சியோடைக்கு விளையாடப் போகேக்கை வரேக்கை மம்மல் பொழுதுக்கை எத்தினை சேட்டையளை விட்டிருப்பம். இப்ப நாங்கள் என்ன கெட்டே போனம்.”அந்தந்த வயதில செய்யிற குழப்படியள் விளையாட்டுகளைசெய்ய வேணும். அப்பதான் அந்த வயதில இருக்கிறதில ஒரு அர்த்தம் இருக்கும்.

“இப்ப எங்கட பெடியள் என்ன விளையாட்டு விளையாடினாலும் என்ன குழப்படி செய்தாலும் இண்டைக்கு எங்கட சனத்துக்கு ஒரு பிரச்சனை எண்டதும் எப்பிடி வேலை செய்யுறாங்கள் பாத்தியளே” எண்ட சின்னையர்  “அவங்களுக்கு நாங்கள் சப்போர்ட் பண்ணாட்டாலும் குறை சொல்லாம இருக்கப் பழகவேணும் அப்பதான் அவங்கள் வாழ்க்கையில முன்னுக்கு வருவாங்கள்  கண்டியளோ “ எண்டபடி தோளிலை கிடந்த துவாயை உதறிக்கொண்டு  தலைவாசல் பக்கம் போக சின்னப்பிள்ளை மெல்ல அவருக்குப் பின்னால போனா . சின்னையர் உப்பிடிச் சொல்லவும் மூஞ்சையை நீட்டின  வள்ளி ம்க்கும்..  எண்டு முணுமுணுமுத்தபடி  தன்ரை மோவாய்க்கட்டையைத்  தோளில தேச்சு தலையைச் சிலுப்பியபடி மெதுவா குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு வெளிக்கிடவும் எல்லாப்பெண்டுகளும்  ஒவ்வொருத்தரா அண்டைய கூட்டத்தை முடிச்சுக் கொண்டு வெளிக்கிட்டினம்.               (யாவும் கற்பனை)

காரைக்கவி
கந்தையா பத்மானந்தன்

Comments