பன்றிகள் பிணமாய் | தினகரன் வாரமஞ்சரி

பன்றிகள் பிணமாய்

அது ஒரு புதன்கிழமை.. வெள்ளி மற்றும் பௌர்ணமி தினங்களில் கூடும் மக்கள் அளவை போன்றில்லாமல் எங்கோ தூரத்தில் ஓரிரு நபர்கள்.. யாருமே இல்லாத தார் வீதியில் வேகமாய் சைக்கிள் முறுக்கும் வாலிபர்கள்.. ஒரு இருண்ட அமைதி.. இப்படி இருக்க தார் வீதியிலிருந்து புழுதி மண் மிதித்து மிக மெதுவாக  ஒரு டியோ பைக் பதுர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.. வீதி விளக்கும் தார் வீதி வரை தான்.. இருளுக்குள் மூழ்கிய அந்த சைக்கிளில் இருவர்,  இரு நண்பர்கள் போய்க்கொண்டிருந்தனர்.. கோணாவத்தையின் சில்லறை கடையில் வேண்டிய சிக்ரட் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் மாஜித்தின் சட்டைப்பையில் ஒளிந்து கொண்டிருந்தது.. வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி பையைத் தடவி சிக்ரட்டின் இருப்பினை உறுதி செய்து கொண்டு வந்தான்.. பின்னால் இருக்கும் மில்ஹான் அவன் ரவுசர் பையிலிருந்த நெருப்பெட்டியை வெளியே எடுத்து குலுக்கிக் கொண்டே வந்தான்.. எப்படியோ பதுர் மைதானம் வரை வந்தாகிட்டு இதற்கு மேலே எப்படியும் மணலிற்குள் சைக்கிளை விட்டாக வேண்டும்.. அப்போதுதான் சாம்பல் தீவின் பின்புறத்திற்கு இலகுவாக நுழைய முடியும்.. சாம்பல் தீவுதான் குடியிருப்புகள் வாழும் கடைசி எல்லை.  வறுமையின் முழுமை நிலையில் இருந்தவர்களுக்கு ஊரின் ஸகாத் நிதியத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் இருக்கும் இடம்.. மாஜித்தும் மில்ஹானும் அவர்களின் வீட்டு பிரதேசம் தாண்டி விளக்குகளே இல்லாத சாம்பல் தீவின் பின்புறமாய் கட்டிய குறையில் கிடக்கும் வீடொன்றிற்குள் வந்து அமர்ந்தார்கள்.

"அப்பையும் செல்றன் கோணாவத்தையிலேயே பத்திரிக்கலாம் சும்மா அந்த சுருப்புக்க ஏத்தி எறக்கினதுமில்லாம இப்ப இந்த மண்ணுக்குள்ள எறக்கிரிக்கி.. ஒரு சிக்ரட் பத்த இவளவு பயமென்டா என்ன மண்ணுக்கு அத அடிக்காய்"

 தன் வாகனத்தின் அவதிநிலை கண்டு மில்ஹான் தனது கோபத்தை மாஜித்திடம் வெளிப்படுத்தினான்.. இருவரும் ஆளுக்கொரு ப்ளொக் கல்லை தூக்கி ஒரு இடத்தில் வைத்து அமர்ந்து சிக்ரட்டை பற்ற வைத்தார்கள்...

"நீ செல்றதும் சரிதான்,  நான் இவளவு கனாட்டு படுவம் எண்டு நெனைக்கல்ல.. சரி சரி சைக்கில நான் கழுவித்தாறன் கதைய உடு.. அது இரிக்கட்டும்,  மிச்சத்துக்கு டொபி வேண்டினாய் தானே"

"ஓம் ஓம்"  என்று தனது வாகனத்தை சுத்தப்படுத்தி தருவதாக மாஜித் உரைத்தது அவன் மனதை திருப்திப்படுத்தி ஒரு மாதிரியாக இருவரும் புகைத்துக் கொண்டிருந்தார்கள்...  நாய் குரைத்தும்   கடற்கரை காற்று ஓலை வேலிகளுக்கிடையில் ஊடுருவியும் சில மௌனமான புகை ஊதுகைகளை குலைத்துக்கொண்டிருந்தது..

இவர்கள் இருவரும் உயர்தரம் எழுதி இரண்டு வருடங்கள் இருக்கும்.. சராசரியான வாலிபர்களின் எண்ணம் போல்  A/L ல் கணிதப்பிரிவை எடுத்தால் தான் மரியாதை என்று   தன்னால் இயலாதென்று தெரிந்தும் அதை எடுத்திருந்தனர்.. எவ்வித தூரநோக்கும் இல்லாமல் பாடசாலை, வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் ஏனோ தானோ என்று அந்த மூன்று வருடத்தையும் செலவு செய்து மூன்று பாடத்திலும் பெயில் ஆகி அதன் பின்னே என்ன செய்வதென்றறியாமல் காலங்களை கழித்தனர்... இப்படி நாள் மாதம் என்று இரண்டு வருடமாய் போனது.. வீட்டில் இருந்த மரியாதையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது..  இப்படி இருக்க மில்ஹான், மாஜித்தை நோக்கி

"நீ O/L  திரும்ப போடப்பறன் என்டாய் ஏன் எண்டும் செல்லலயே"

"அது ஒண்டுமில்ல  waterboard ல   வேலை செய்ற ஒராள்ட மச்சானுக்கு  maths  இல்லையாக்கும் அப்ப அதான்"

" என்ன குதிரையா?? "

" செ குதிரை எண்டில்ல.. ஒரு ஹெல்ப்.. இனி.. இப்டித்தானே.."

"அது இரிக்கட்டு அந்தாள எப்டித் தெரியும் ஒனக்கு"

"சும்மா தெரியும் எப்டி பழகின எண்டு தெரியா...இனி இத செஞ்சா தொழில் ஒண்டு எடுத்தாறன் எண்டு செல்லிரிக்கார்.. அப்ப அதான்.. நாம இரிக்கிர நெலமைக்கு வேற வழியில்ல"

" தொழிலா!! என்ன மாதிரி? "

" meter reader"

"meter reader" ஆ என்று ஏளனமாக பார்த்த மில்ஹானை நோக்கி

"meter reader ஆ   எண்டு மொகஞ்சுளிக்கேலே அதுற சம்பளம் தெரியுமா.. மாசம் கொறையாம எண்பது எடுக்கலாம்.."

"உண்மையாவா.. அப்ப என்ன பிரச்சின, ஆனா காசி வேண்டாம எப்டி எடுத்தாற எண்டு சென்னான்"

"காசி எண்டா இனி கனக்க இல்ல.. அது மட்டுமில்லாம அவரும் கனக்க ஆக்களோட இந்த  o/l  விசயத்துக்கு மெனெக்கட்டிரிக்கார் போல ஒத்தரும் அணையல.. இனி கடைசியாத்தான் நமக்கிட்ட வந்தார்.. எப்டியும் அடுத்த வரிசம் ஜனவரி மட்டுல  "க்காடர்"  கோல் பண்ணுவானுகளாம்...  தொழில் எடுத்தார  sure  எண்டு செல்லிரிக்கார்.. பாப்பமே"

" ஹ்ம் அப்ப சரி.."

மீண்டும் மௌனம் குடியேறியது....

மில்ஹானின் மனதில் தானும் ஏதாவது வழி பார்த்தே ஆக வேண்டும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி விடும் என்று  எண்ணி.. தனக்குத் தெரிந்த உயர் பதவியில் இருக்கும் நபர்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.

அச்சமயம் அடிக்கடி சல சலக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.. மில்ஹானும் மாஜித்தும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்த பின் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள் எதுவும் இல்லை.

திடீர் என்று நாலைந்து பெரிய உருவ நிழல்கள் தங்களை நோக்கி வேகமாக வருவது கண்டு எழுந்து திரும்புவதற்கிடையில் மாஜித்தின் கழுத்தை பிடித்து சுவரில் சாய்த்து விட்டு...

"இந்த இருட்டுக்குள்ள என்னடா பத்துறேல்.. கஞ்சா அடிக்க நல்ல எடம் கெடச்சிரிக்கி இவனுகளுக்கு... தேவன் , அவன  check  பண்ணுங்கோ"

என்ற பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருவரையும் சுற்றி வளைத்தனர்..

பதற்றத்தாலும் பயத்தாலும் மாஜித்தும் மில்ஹானும் நடுங்கிக் கொண்டிருந்தனர்.. இருவருக்கும் வியர்வை தாறுமாறாக வழிந்தோடியது...

ஒரு ெபாலிஸ் அதிகாரி மில்ஹானை சுவரில் சாய்த்து வைத்து அவனது பைகளை

"எங்கடா கஞ்சா"என்று கூறிக்கொண்டே   check   செய்தார்..

பதற்றமான குரலில் மாஜித், "சேர் சேர் கஞ்சா ஒண்டும் அடிக்கல சேர், சிக்ரட் தான் சேர் பத்தின.. அது அண்ணா கெடக்கு" என்று சிக்ரட் விழுந்த இடத்தை கண்களால் காட்டினான்..

இருவரையும்   check  செய்து எதுவும் இல்லை என்று தெரிந்த பின் அவர்களை பிடியிலிருந்து விட்டனர்.. அதன் பின் அந்த நான்கு போலீஸில் வந்த பெரிய அதிகாரி..

" இந்த டைம்ல ஒனக்கு இஞ்சால என்ன வேல.. எத்துன வயசிரா ஒங்களுக்கு.. நாக்குளுப்புழுக்கனக்கா சைஸ் ஆனா செய்ர வேல மட்டும்.." என்று கோபமாய் முறைத்தார்

"இனி இஞ்சால பக்கம் வாற வேல வைக்கப்போடா..     போங்கடா நாய்காள்"  என்று இருவருக்கும் தலையில் அறைந்து விரட்டி அடித்தனர்.. இரண்டு சிக்ரட்டின் முழுமைச் சாம்பலிற்குள் குடியிருந்த அமுக்க மௌனம், படார் படார் என்று இரண்டு நிமிடங்களிற்கு வெடித்தது.. இருவரும் பேய் அறைந்தாற் போல் நடுங்கி நடுங்கி ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டே சைக்கிளை முறுக்கினர்.  இந்த இருபத்தொரு வயது வரை காணாத அனுபவம் தூக்கத்தில் இருந்து விழித்தவுடன் அறை வாங்கிய அதிர்ச்சி போலிருந்தது ஒரு சில மணி நேரங்களுக்கு..

அந்த பதற்றத்தில் முறுக்கிய சைக்கிள் பீச் பள்ளி அடியேதான் வந்து நின்றது.. இருவரும் பள்ளி வளவிற்குள் சென்று முகம் கை கால்களை சுத்தப்படுத்தி பயத்தினால் உடல் முழுதும் பரவிய அனலினை பதப்படுத்தினர்.. இருவரும் முகத்தில் இருந்த ஈரத்தை தனது சேர்ட்டினால் துடைத்து அமைதியாக ஒரு சில நிமிடங்களுக்கு சைக்கிளின் மேல் இருந்தார்கள்... தண்ணீர் முகத்தில் படிந்ததும் பயம் பதற்றம் எல்லாம் படிப்படியே குறைந்தது.. மாஜித் தனது போனை எடுத்து நேரம் பார்த்தான் இரவு 8.30.. நடந்ததை அத்தனையும் மறந்து மில்ஹானை நோக்கி,

"வா பாலப்பம் சாப்டுவம் சாப்டுபொட்டு ஊட்ட போவம்"  என்று கூற அவனும் தலையசைத்து பள்ளி முன்பாய் இருந்த பாலப்ப வண்டிலில் ஆளுக்கு இரண்டு பாலப்பம் வேண்டினர்.. தன்னால் தான் இந்த நிலைமை என்று தெரிந்த மாஜித் அந்த அசௌகரிய நிலையினை குலைப்பதற்காக கதை தொடங்கினான்..

"யார்ரா அது"

" OIC  இல்ல கொஞ்ச நாளா ஊருக்க கடுமைய குடு புடி படுது அதுக்காக போட்ட டீம் எண்டு நெனைக்கன்.. ஆனா இவன் கொஞ்சம் பெரியவன் போலத்தான் வெளங்குது.."  என்று மிக மெதுவாக கோபத்தை அடக்கிக் கொண்டு பதிலளித்தான்...

"ஆஹா அப்டி என" என்று ஒரு வகையாக சமாளித்த மாஜித், நேரம் பார்த்தான் மணி ஒன்பதை தாண்டியிருந்தது.

" சரி வா வீட்ட போவம் டைம் பெய்த்து" என்று கூறி இருவரும் வாய்க்குள்ளே ஆளுக்கொரு ஹெக்ஸ் டொபியை உமிழ்ந்து கொண்டு வீடு சேர்ந்தார்கள்.

அடுத்த நாள் விடிந்தது. மில்ஹானின் உம்மா அவனது படுக்கை அறைக் கதவை தம்மட்டம் அடிப்பது போல் இடைவிடாது அடித்துக் கொண்டே கத்தத் தொடங்கினார்..

"நேரம் பத்து மணியாகுது சுபஹும் இல்ல அசரும் இல்ல.. சும்மா தூங்க மட்டுந் தெரியும்.. மில்ஹான்!!! மில்ஹான்!!! ஒழும்பு டக்கன.. முர்ஸலீன் மாமா ஒன்ன வயலுக்க போக வரச்சென்னலா.. ஒழும்பு"

அவசரப்பட்டு எழுந்து விட்டோமே என்று அலுத்துக்கொண்டான் மில்ஹான்.  தனது உம்மாவின் மேல் எரிச்சலை ஏற்படுத்தியவன்.. அடுத்து அசர் வரைக்கும் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தான். காலையில் சாப்பிட்ட இடியாப்பமும் நேற்றைய இறைச்சிக்கறியும் அவனை மப்பும் மந்தாரமுமாக்கியது. இறைச்சிக் கறியின் உறைப்பு நாக்கில் தொங்கிக்கொண்டே இருந்தது.

 அவனுக்கு ஆகப் பிடித்தமான கறி இறைச்சிதான் பொதுவாக இறைச்சிக் கறி சாப்பிட்ட பின் கை கழுவும் போது மிக லேசாகத்தான் அலசிக் கழுவுவான். காரணம் இறைச்சிக் கறியின் மணம் மிக நெடு நேரமாய் அந்தக் கையில் படிந்திருப்பதற்காகும்.  அதை அடிக்கடி முகர்ந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்.

இப்படி ஒரு மாதிரியாக நேரம் கடத்தியவன் அசர் நேரம் வந்ததும் மாமாவிற்கு அவனே அழைப்பை ஏற்படுத்தி அவரின் வரவுக்காகக்  காத்துக் கொண்டிருந்தான். ஒரு பத்து நிமிடம் கழித்து மில்ஹானின் மாமா வந்தார். 

மண்வெட்டி, பெரிய டோர்ச் லைட்,  இரண்டு போத்தலில் பெற்றோல், ஒரு அளவான கெரியரில் கறி என்று அவரது சைக்கிள் முழுதும் பொருட்களால் கட்டி  தொங்கவிடப்பட்டும் நிரம்பியிருந்தது. நேரம் ஒரு 4.30இருக்கும் வழமை போல் இல்லாமல் சூரியன் மிக வேகமாய் கடலிற்குள் மூழ்கிக்கொண்டிருந்தது.  மில்ஹானும் அவனது மாமாவும் சைக்கிளை முறுக்கினார்கள் பொத்தானைக்கு.

கை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பொத்தானை வீதிக்கு இறங்கி ஒரு பதினைந்து நிமிட ஓட்டத்தின் பின் முர்ஸலீன் மாமாவின் பூமிக்கு வந்து நின்றது அந்த சைக்கிள். இருவரும் சைக்கிளில் இறங்கி ஒவ்வொரு பொருட்களாக கட்டை அவிழ்த்தார்கள்.  அவர்கள் கட்டை அவிழ்த்துக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் அவர்கள் இருவரையும் நோக்கி டோர்ச் லைட் அடித்துக்கொண்டு அருகில் வந்தார், "என்ன முர்சலீன்.... தம்பி ஆரு? "

"நம்முட மருமகன் தான்... அது கெடெக்கெட்டும்..நீங்க   இண்டக்கி வாரல்ல எண்டு சென்னலா... கோவில்ல ஒரு விஷேசம் எண்டு சென்ன என... பொறகு இதுக்குள்ள என்ன டோர்ச்சும் கையுமா நிக்கிர"

"ஓவ் அத கேக்காத அய்யா , எல்லாத்தயும் ஆயத்தப்படுத்தி எடுக்க.. என்ற மருமவளுக்கு வயித்தப்புடிச்சி பொறகு எளுவட்டானைக்கு ஏத்தின,  பிறகு கோயிலும் அலஞ்சி பயணமும் குளஞ்சி.... அப்போ!!!! அது பெரிய கதயப்பா! "

எப்படியோ மூன்று பேரும் பொரைக்கு வந்தடைந்தார்கள். அந்தப் பொரை மில்ஹானின் மாமாவின் பத்து ஏக்கர் பூமிக்கு நடுவில் இருந்தது,  அந்த பொரைக்கு நிழல் தர ஒரு" மருத மரம்" அந்த மருத மரத்தை ஒட்டி ஒரு பெரிய  வாய்க்கால் ஓடிக்கொண்டே இருந்தது. 

இப்படி இருக்க சின்னத்தம்பி மாமா தனது சாறனை மடித்து முழங்கால் வரை ஏற்றிக்கட்டி அவர் உடுத்திருந்த  "சைக்கிள் ஜெக்கட்டை"  கழற்றி பழைய பெனியனை உடுத்தார்.  பொரைக்குள் சென்று மீன் வலை எடுத்து வெளியே வந்ததை பார்த்த   மில்ஹான்,

"என்ன மாமா மீன் புடிக்கயா? "

"ஓம்டா தம்பி, இரு பிடிச்சிட்டு வாறன்"

"சரி மாமா சரி"

" மாமா.. ஒங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் ஒத்தரும் இல்லையா.. "

இந்தக் கேள்வியின் உள் அர்த்தம் விளங்காத அவர் கொள்ளியை குவித்துக்கொண்டே ஒரு புரியாத பார்வையை அவன் மீது செலுத்தினார்.

"தெரிஞ்ச ஆக்கள் எண்டா என்னத்த கேக்கேல் மருமகன்.. தெளிவா சுத்தி வளைக்காம வளக்கத்த செல்லுங்கோ"

அவன் சிரித்துக்கொண்டே..

" இல்ல மாமா.. தொழில் ஒண்டில்லாம பெரிய பாடா இரிக்கி.. ஊட்டயும் மதிப்பில்ல..  என்ட கூட்டாளி தெரியும் தானே ஒங்களுக்கு? "

"ஆரு மருமகன்? .. நீங்க ஆரக் கண்டு காட்டினாலும் அவன் கூட்டாளி எண்டுதானே செல்றேல் "

" இல்ல மாமா.. எனக்கி கூட எப்பயும் உலாத்துவானே. மாஜித்.... சரிப்டீன்ட மகன்"

" ஓ ஓ"

" அவன் எப்டியோ தொழில் எடுத்துருவான் போலான் இரிக்கி.. ஆள் யாரயோ பாத்து புடிச்சிட்டான்.. நாமளும் இனி சும்மா இருந்தா நல்லதுக்கில்ல போலான் வெளங்குது..அதான் கேக்கன் ஒங்களுக்கு தெரிஞ்ச யாரும் இல்லையா எண்டு"

" ஆஹா.. அப்டியா மருமகன்.. மாமாக்கும் தெரிஞ்ச ஆக்கள் இரிக்கானுகள் தான்.. ஆனா எவனுக்கிட்டையும் காச உசுப்பாம காரியம் நடக்காதே மருமகன்.. அதுக்கு என்ன செய்ர"

" ஓம் மாமா அத நானும் யோசிச்ச... உம்மாட்ட கதைப்பம் எண்டிருக்கன் பாப்பம்.. வாப்பாவோட கதைக்கிறதும் இல்ல.. நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்

" மருமகன் ஹெல்ப் பண்ற பிரச்சினல்ல.. ஒங்களுக்கு பண்றதுலான் பிரச்சின.. பொறுப்புள்ள பிள்ள எண்டா எப்பயோ பண்ணிரிக்கலாம்.. நீங்க பாக்குற வேலைக்கி என்ன மருமகன் செய்ர.. "

மில்ஹான் அவமானத்தால் அசிங்கப்பட்டு தலை குனிந்தான்.. பேச்சை நிறுத்தியும் விட்டான்..

இந்த உரையாடலுக்கிடையில் மில்ஹானின் மாமா அடிக்கடி வயல் வேலியை பார்த்தார்.. அங்கே ஏதோ அடிக்கடி அசைவதை அவதானித்தார்.. அடுப்பு மூட்டுவதை நிறுத்தி விட்டு.. எழுந்தார்

" எங்க போறேல் மாமா.."

"வாங்கோ அவடத்த என்னமோ அசையிராப்போல இருக்கி அது என்ன எண்டு பாத்துப் பொட்டு வருவம்" என்று கூறி அவனையும் கூட்டிக்கொண்டு கையில் ஒரு தடியுடன் சென்றார்..

அந்த இருட்டில் பெரிய டோர்ச் வெளிச்சத்தை பரப்பி.. அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கி அடித்தார்..

நெற் கதிர்கள் அந்த இடத்திற்கு வெளிச்சத்தை பரப்பாமல் பிடித்து வைத்திருந்தது.. இப்படி மெல்ல மெல்ல அந்த இடத்தை வந்து அடைந்தார்கள்.. வயல் பூமிக்கு எல்லையில் வைத்த கம்பி வேலியில் கட்டப்பட்ட "மந்தில்"  சிக்குப்பட்ட இரண்டு பன்றிகள் வேலியை அங்குமிங்குமாக உசுப்பி அந்த சிக்கிலிருந்து விடுவிக்க முயன்று கொண்டிருந்தன.. அதைக் கண்ட மில்ஹானின் மாமா.. மில்ஹானைப் பார்த்து..

"டக்கன ஓடிப்போய் பொரைல என்ட போன எடுத்துக்கு வாங்கோ"  என்றார்.. மில்ஹான் அவசர அவசரமாக வரம்பின் வழியே பொரையை நோக்கி ஓடினான்.. அவன் பொரைக்கு வந்து போனை. எடுத்து வெளியில் வர. சின்னத்தம்பி மாமா மீன் பிடித்து விட்டு திரும்பியிருந்தார்..

"என்ன தம்பி இப்டி மூச்சிழுக்க ஓடியாறேல்"

" பண்டி ரெண்டு மாட்டிரிக்கி.. மாமாதான் போன எடுத்து வரட்டாமென்டார் அதான்.." என்று நடந்து கொண்டே விடையளித்தான்.

"பண்டியா!" என்று வியந்த அவர் வலையையும் மீனையும் வைத்து விட்டு மில்ஹானின் பின்னால் அவரும் ஓடினார்..

ஓடிவந்த மில்ஹான் மாமவின் கையில் போனை கொடுத்தான் அவசர அவசரமாய் போன் வேண்டிய அவர் சடபுடவென்று ஒரு அழைப்பை விடுத்து.. சிங்களத்தில் பேசினார்..

இதை அவதானித்த மில்ஹான் சின்னத்தம்பியை பார்த்து,

"ஆரோட இப்டி அவசரமா கதைக்கார்"

"நான் நெனைக்கன் பண்டாரயோட எண்டு.."

"பண்டாரயா? ஆரது"

"Forest officer"

" forest officer ஆ? ஏன் என்ன விஷயம்"

"அவன்தான் இந்த  ஏரியாக்கு  Forest officer.. அவன் ஒங்க  மாமாவோட நல்ல பழக்கம்,  அடிக்கடி அவன் வேட்டைக்கி போற.. இந்த  வேலில " மந்து" வச்சதும் அவன்தான்.. ஒரு நாளும் பண்டி மாட்டின பாடில்ல.. அவனுக்கு பண்டி எண்டா பேய் போல.. இவருக்கிட்டயும் அடிக்கடி செல்லிரிக்கார் இப்டி பண்டி அம்புட்டா செல்லச் செல்லி அதான் எண்டு நெனைக்கன்"

எப்படியோ அந்தப் பெரிய பன்றியை அறுத்து உரித்து முடிவதற்குள் இங்கே சின்னத்தம்பி மீனை அறுத்து சொதி காய்ச்சி சோற்றையும் இறக்கி வைத்து விட்டார்.. பன்றி அறுத்தவர்கள் இறைச்சி அனைத்தையும் சாக்கில் போட்டுவிட்டு.. கழிவுகளை புதைக்க பெரிய குழி தோண்டினார்கள்.. ஒரு மாதிரியாக நிலவு வெளிச்சத்திலும் குளிர்ந்த காற்றிலும் இரத்த வாடை வீச வீச எல்லா வேலைகளும் முடிந்தன.. பண்டாரயும் வண்டி ஏறினான்...

அடுத்த நாள் விடிந்தது... மில்ஹான் எழுந்து மாமாவை தேடி பொரையை விட்டு வெளியே வந்தான்.. மில்ஹானின் மாமா வயலை வளைத்து நடந்து கொண்டிருந்தார்.. மில்ஹானைக் கண்டதும் கை அசைவால் கூப்பிட்டார்.. முகம் கழுவி இலேசாய் வாய் கொப்பளித்து விட்டு.. மாமாவை. நோக்கி நடந்தான்...

"என்ன மாமா"

"எனக்கி தெரிஞ்ச ஒறாள் இரிக்கார் இப்டி விசயம் சென்னன் ஒங்களப்பத்தி.. பாப்பம் எண்டிரிக்கான்.

 இன்டக்கி வெள்ளிக்கெழமைதானே!  அவன் வாங்காமத்துல இரிக்கிர அவண்ட வளவுளான் இரிப்பான் போய் சந்திங்கோ" என்றார்.

ரிப்பிள் ஏ றியாஸின் கதையை கேட்ட பின் மில்ஹானும் முர்ஸலீன் மாமாவும் பொரைக்கு நடந்தார்கள்..  மீதமிருந்த மீன் சொதியையும் சோற்றையும் இருவரும் உண்டார்கள்.. இப்படி இருக்க சின்னத்தம்பியும் அவர்களோடு இணைந்தார்.. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே முர்ஸலீன் மில்ஹானை பார்த்து..

"போரத்துக்கு முந்தி ஸிஹாரத்துக்கு போவம்" என்று கூறினார்.. மில்ஹானும் அவரும் சாப்பிட்டு முடித்து பொரைக்குள் இருந்த பெரிய ரங்குப் பெட்டியை திறந்து சாம்புராணி எடுத்து இருவரும் வீடு செல்ல முந்தி "ஆராச்சிர புட்டி" யில் இருக்கும் ஸிஹாரத்துக்கு சென்றனர்.  அங்கு சென்று சாம்புராணி கொழுத்தி காணிக்கை செலுத்தி ஜும்ஆ தொடங்குவதற்கிடையில் வீடு வந்து சேர்ந்தார்கள்..

ஜும்ஆ       முடிந்து பகல் உணவும் கழுத்து வரை உண்டு நேற்றைய நுளம்புக் கடியில் தூங்காத தூக்கத்தையெல்லாம் சேர்த்து தூங்கினான் மில்ஹான்.. 4.00மணிக்கு அலாரம் வைத்தவன் அது அடித்து எழுந்து குளித்து மாஜித்திற்கு அழைப்பு விடுத்தான்  றியாஸை சந்திக்க செல்ல.  அழைப்பு விடுத்த அரை மணி நேரத்திற்குள் மாஜித் அவன் சைக்கிளில் வந்தான். மில்ஹானும் ஏறினான் சைக்கிள் வீதி மிதித்து உருண்டது. இப்படி இருக்க மாஜித் கேட்டான்

"எங்கடா போக?"

"ஒறாள சந்திக்கணும் அதான்"

"எங்க"

"வாங்காமத்துல"

"வாங்காமத்துலயா?  அங்க ஆர்ர சந்திக்க போறாய்.. என்ன?  ஆட்டு பிஸ்னஸ் ஏதாச்சுமா?"

"செஹ் இல்ல இல்ல.. பிஸினஸ் விஷயமாத்தான் பட் செல்ப் பிஸினஸ்"

"கொளப்பாம ஒழுங்கா செல்லு"

"நேத்து நீ தொழில் பத்தி கதச்சத்தில இருந்து நானும் ஒரு வழிய பாக்கனும் என்டு யோசிச்ச.. நேத்து முர்ஸலீன் மாமாட்ட அத பத்தி  கதச்ச அப்ப அவர்தான்.. யாரோ றிப்பிள் ஏ றியாஸாம் கடும் பவர் இரிக்கிர ஆளாம் போய் சந்திக்கட்டாம் எண்டார் அதான்."

" ஆஹா.. "

" எல்லாம் செரி  "ஜுஸ்லாக்கு"  கொஞ்சம் எடு மஸ்கத் வேண்டிக்கு போவம்.. அந்தாளுக்கு மஸ்கத் விருப்பமாம்"

" றைட் றைட்"

ஜுஸ்லாதான் அக்கரைப்பற்றில் மிகவும்  famous  ஆன பழக்கடை. அங்கே பெரும் பாலன இனிப்பு பண்டங்கள்,  பழ வகை,  ஜூஸ் என்று அனைத்தும் இருக்கும்.  மாஜித்தும் மில்ஹானும் கடைக்குள்ளே சென்று மஸ்கத்  1/2  கிலோ கேட்டுவிட்டு   அது வரும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்க மாஜித்,

"பொத்துவிலான் மஸ்கத்துக்கு என்ன செல்ற என்டு தெரியுமா?"

மில்ஹான் இல்லை என்று தலையாட்டினான்.

"புதுக் புதுக்"

"என்னடா? புதுக் புதுக்கா?" என்று கேட்டுவிட்டு இருவரும் சிரித்தார்கள்.

"ஆனா உண்மை என்ன எண்டா.. அவனுகள் அப்டி செல்றல்ல.. நம்ட ஊரான் அறப்படிச்சவன் தானே இவனுகள் சும்மா அந்த கதய கட்டுட்டானுகள்"..

இப்படி இருக்க கடைக்காரன் மஸ்கத்தை  கொண்டு வந்த தர இருவரும் வண்டி முறுக்கினார்கள் வாங்காமத்திற்கு!

"நேரம் 5.00மணி இருக்கும்.. எப்படியோ கடைசியாக றியாஸின் வளவிற்குள் வந்தடைந்தார்கள்.

அது ஒரு நீளமான வளவு.. வளவின் எல்லைப் புறங்களில் நீளும் மதில்கள்.. மாட்டுப்பண்ணை , புறாப் பண்ணை, கோழி,  முயல்கள், தென்னைமரம்,  மாமரம் என்று பல்வேறு வகையான மிருகங்கள் பறவைகள் மரங்கள் என்று அந்தப் பிரம்மாண்டமான வளவு நீண்டிருந்தது.  அந்த வளவின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய பழைய வீட்டின் விறாந்தாவில் றியாஸும் சில நபர்களும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.. மில்ஹானும் மாஜித்தும் அந்த சிறிய வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள்.  அந்த வீட்டிற்கு அருகே வர ஒருவர் வேகமாக ஓடி வந்து..

"எங்க தம்பி போறேல் நாய் உளுபட்டாப்போல.. நாங்க இவடத்த இரிக்கம்.. ஏதாச்சும் கேப்பம் என்டு வெளங்குறல்லயா?"

மில்ஹான் நினைத்து வைத்த கற்பனை உருவத்திற்கு நேர்மாறாக றியாஸ் இருந்தான். பெனியன், மெரினா பெல்ட், கிப்லா சாறன், மூன்று விரல்களில் மோதிரம் என்று ஒரு வகையாக இருந்தான்.. இப்படி இருக்க றியாஸ்,

"சொல்லுங்க தம்பி, முர்ஸலீன்ட மருமகன் தானே.. என்ன விஷயம்"

"இல்ல காக்கா, தொழில் ஒண்டு கடும் தேவை.. அதான் மாமாவோட கதச்சன்.. ஒங்கள சந்திக்க சென்னார்.."

"தொழில் ஆருக்குத்தான் தேவெல்ல தம்பி.. ஹம்ம்.. ஏ எல் இரிக்கா?"

"இல்ல காக்கா"

"ஏ எல் இல்ல..ஹ்ம்ம்ம்.. ஓ எல் இரிக்கா? "

" ஓம் காக்கா, 3A 2b மிச்சது C"

"சரி என்ன மாரி தொழில் வேனும்.. அதுக்கு ஏத்தாப்போலான் நாம பேசி கனக்க பாக்கனும்.."

"MC ல இல்லாட்டி water board, CEB  , RDA என்னத்துல எண்டாலும் பிரச்சினல்ல.. கொறஞ்சது மாசம் ஐம்பது வாறாப்போல இருந்தா நல்லம்.."

"ஏ எல் இல்ல.. ஆன அம்பது வாறாப்போல தொழில்மட்டும் வேணும் என.." என்று இன்பாஸை பார்த்து றியாஸ் சிரித்தான்.. அவனும் சிரித்தான்.. அவமானத்தால் உருகினான் மில்ஹான்..

" தொழில் சும்மா எடுக்க ஏலா தம்பி.. இப்டித்தான்.. மொதல்ல க்காடர் கோள் பன்னனும்.. அதுக்கு அப்ளை பண்ணனும் அத சோர்ட் லிஸ்ட் பண்ணி.. இன்டர்வியூ பண்ணி கடைசியாத்தான் தொழில் எடுக்கலாம்.. ஏ எல் இல்லாம ஒண்டும் செய்ய ஏலா.. ஓ எல் றிசல்ட்டுக்கு செக்குரிட்டி கார்டாகையும் போக ஏலா.. அப்ப ஒங்கள எல்லாத்துல இருந்தும் தப்பி மேல இழுத்து எடுக்கனும் எண்டா எல்லாருக்கும் காச. வைக்கனும்.. "

மில்ஹான் இழுத்து தயக்கத்துடன்..

" எவ்வளவு வரும் காக்கா" என்று கேட்க

" எவ்வளவு என... ஒரு பத்து பதினஞ்சி செலவழிச்சாகனும் தம்பி"

" பத்து பதினஞ்சா"

" இல்லாட்டி காரியம் நடக்காது.. இதான் விசயம் பெஸ்ட்டா.. காசி ஒரு அஞ்சி லெட்சத்த கொண்டு வாங்கோ.. பொறகு மத்தத கதைப்பம்" என்று கூறிவிட்டு றியாஸ் எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட்டான்.. மில்ஹானையும் மாஜித்தையும் இன்பாஸ் சைகை காட்டி போகச் சொன்னான்.. மில்ஹான் வாங்கி வந்த மஸ்கத்தை இன்பாஸிடம் கொடுக்க

" என்ன இது"

" மஸ்கத் காக்கா.. றியாஸ் காக்காக்கு விருப்பமாம் எண்டு கேள்விப்பட்டன் அதான்"

"இஞ்சப்பாரு... பெஸ்ட்டா இந்த றியாஸ் காக்கா எண்டு செல்றத நிப்பாட்டு.. கூப்புர்ர எண்டா றியாஸ் சேர் எண்டு கூப்புடனும் அப்டி இல்லையா இனி இஞ்சால வரப்போடா.. ரெண்டாவது, இந்த சாமான் அள்ளிக்கு வாற வேல வைக்கப்போடா.. ஒங்கூட்ட யாராச்சும் கொண்டு வந்தத்துர மிச்சத்த அள்ளிக்கி இஞ்ச வந்து அறப்படிச்ச வேல பாக்க வரப்போடா.. வெளங்குதா? "

" இல்ல காக்கா நான் இப்பான் வேண்டிக்கி வாறன்"

" இன்னா.. இவடத்தான் நமக்கு கோவம் வாற.. ஒன்னோட என்ன சென்ன இப்ப.. சரி கனக்க கதைக்காம.. ஆள் மாறு.. பெஸ்ட்டா காச எடுத்துக்கு வா.. பொறகு கதைப்பம்.. " என்று கத்தி ஏசி மில்ஹானையும் மாஜித்தையும் அனுப்பி விட்டான்.  அவமானத்தால் மில்ஹானின் முகம் இருண்டு போய் இருந்தது.. இருவரும் சைக்கிளில் ஏறி வீடு சென்றார்கள்..

வீட்டிற்கு வந்த மில்ஹான் நடந்த அவமானத்தையெல்லாம் மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டே காசை திரட்டுவதற்கான வழிகளை யோசித்தான்....

"சீட்டு கட்டுற எண்டா கைல காசிம் இல்ல அவசரத்துக்கும் எடுக்க ஒன்னா.. கடன் வேண்டுற என்டாலும் நம்மள நம்பி ஆரு தரப்போரா? உம்மாட்ட நகைய விக்க கேட்டா.. அந்தாள் உடுமா எண்டும் தெரியா... நேத்து முர்ஸலீன் மாமாட கதைலயும் நம்மள ஒரு மாதிரியாத்தான் நெனச்சி வச்சிரிக்கார் எண்டு வெளங்குது.. என்ன செய்ர"

என்று இப்படி பல கேள்வி அலைகள் அவன் மனதில் சுற்றிக் கொண்டே இருந்தது.. இப்படி யோசித்துக்கொண்டே தூங்கி விட்டான்..

அடுத்தநாள் மின்ஹான் மாமா வீடு சென்றான்

மில்ஹான் மெதுவாக " மாமா.. மாமா" என்று கூப்பிட.. அரைத்தூக்கத்தில் இருந்த அவர் முழித்து மில்ஹானைக் கண்டதும் சாய்ந்தவர் எழுந்து இருந்தார்.  மில்ஹான் அந்த சாய்மனைக்கு அருகில் கிடந்த கதிரை ஒன்றை இழுத்து இருந்து கதையை தொடங்கினான்.."நேத்து றியாஸ போய் சந்திச்ச மாமா..  அவர் சென்னார் தொழில் எப்டி எடுத்து கொடுக்குற.. க்காடர் வளக்கம் எல்லாம் சென்னார்.. பொறகு எவ்வளவு சம்பளம் எதிர்பாக்குர எண்டு கேட்டார்.. நான் ஒரு அம்பது வாராப்போல எண்டு சென்னன்.. எல்லாத்தையும் யோசிச்சிப்பொட்டு பத்து  செலவழிக்கனும் எண்டார்..பெஸ்ட்டா அஞ்சி லெட்சம் கொண்டுவரட்டாம் என்டார்.. அதான் மாமா யோசினையா இரிக்கி"

நித்திரை படிந்திருந்த கண்ணை கசக்கிக்கொண்டே.." அப்டித்தான் மருமகன் தொழில் எடுக்கனும் எண்டா காசக் காட்டனும்...சரி இப்ப என்ன முடிவெடுத்திரிக்கேல்"

" அதான் மாமா நானும் யோசிக்கன்.. எனக்கெண்டு  வாப்பா ஒண்டும் வைக்கயும் இல்ல.. அப்டி வெக்கிர அளவுக்கு நான் நடக்கல்ல அது வேற வழக்கம்... உம்மாட்டா  கதைப்பம் என்டிரிக்கன்.. நகையத்தான் விக்கனும். ஆனா அந்த காசிம் அஞ்சி லெட்சத்துக்கு காணா மாமா... "

" அப்ப மிச்சத்த்துக்கு என்ன செய்யப்போறேல் மருமகன்"

" அதான் மாமா யோசிக்கன்... ஒங்கள்ட்டான் கேக்கலாம் நான்.. எனக்கி வேற ஒத்தரும் இல்ல"

" சரி.. இனி. நானும் ஒங்களுக்கு மாமா எண்டு ஒண்டும் செய்யல்ல.. இத ஒரு உதவியாச் செய்ரன்.. என்னால மூணு லெட்சம் தான் தரலாம்.. ஆனா ஒண்டு.. பெஸ்ட்டா உம்மாட நகைய விக்கப்பொறேல் எண்டேல்.. நகைய வித்தோ எப்டியோ எனக்கிட்ட காச கண்ல காட்டுங்கோ.. றியாஸ சந்திச்சி குடுக்குற அண்டு காச தாறன்.. சரிதானே "

மில்ஹான் முர்ஸலீன் மாமா பணம் தர முன்வந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.. மாமா கூறிய கட்டளைக்கு ஒப்புக்கொண்டு வீடு திரும்பினான். இப்படி ஒரு வகையாக நாட்கள் மாதங்கள் என்று கடந்தன... மில்ஹான் ஒரு வகையாக உம்மாவுடன் பேசி சம்மதிக்க வைத்து வாப்பாவிற்கு தெரியாமல் உம்மாவின் நகைககளை விற்று.. அதே வடிவத்தை ஒத்த தங்க நிறம் கொண்ட போலி நகைகளை வாங்கி வாப்பாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க உம்மாவை அணியச் சொன்னான்..  நகை ஒரு  மூன்று இலட்சத்தை புறட்ட உதவியது.  அந்த மூன்று லெட்சம் பணம்,  நகையை விற்ற பில் அனைத்தையும் கொண்டு வந்து முர்ஸலீன் மாமாவிடம் மில்ஹான் கொடுக்க முர்ஸலீன் மாமாவும் ஒரு மூன்று லெட்சம் கொடுத்து... அவரும் மில்ஹானும் சேர்ந்தே றியாஸிடம் போய் பணத்தை கொடுக்க அவனின் பீச் வளவிற்கு புறப்பட்டார்கள். முர்ஸலீன் மாமா வெளியில் நிற்க மில்ஹான் இறங்கி வளவிற்குள் சென்று றியாஸிடம் பணம் நீட்டினான். அதை இன்பாஸ் வேண்டியெடுத்து எண்ணினான் ஆறு இலட்சம் இருந்தது. அதை அறிந்த றியாஸ்,

"இஞ்சப்பாருங்க தம்பி.. நான் அஞ்சி தான் கேட்ட நீங்க இன்னா ஆறு தந்திரிக்கேல்.. பிரச்சினல்ல நல்லம் தான்... ஆனா ஒண்டு. இந்த தந்த காச பொறகு மூட் மாறி தாங்கோ எண்டு கேட்டுக்கு நிக்கப்போடா..  வெளங்கிச்சியானே.

வதா வதன்

Comments