கச்சதீவு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

கச்சதீவு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும்

இலங்கையும் இந்தியாவும் நெருங்கிய நாடுகளாக இருக்கின்ற போதிலும் இருநாடுகளுக்கும் இடையே ஓயாத பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன. முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தமிழ் வர்த்தகர்கள் தற்காலிக வதிவிட விசா பெற்று வருவது நாட்டைச் சுரண்டுவதற்காகவே என்பது இலங்கை அரசியலில் ஒரு இனவாத பார்வையாகவே இருந்தது. இருந்ததோடு எழுபதுகளில் பதவிக்கு வந்த மாவோ அம்மையார் தற்காலிக வதிவிட விசாவை இரத்து செய்து அந்த வார்த்தகர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலும் பல பிரச்சினைகள் தோன்றி மறைந்திருந்தாலும் இரு தரப்பு நல்லுறவுக்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் பங்கம் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விரு நாடுகளும் இரண்டு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. முதலாவது இராஜதந்திர ரீதியான அரசியல் தீர்வு தொடர்பானது. இரண்டாவது, இரு தரப்பு மக்கள் தொடர்பானது, அதாவது இலங்கை -- இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினை.

கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தபோது தமிழக மீனவர்கள் கச்சதீவையும் தாண்டி வந்து மீன் பிடித்தனர்.  ஒரு அரசியல் தந்திரோபாய நகர்வாகக் கருதி அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கச்சதீவை அன்பளிப்பாக வழங்கினார். இதனால்தான் கச்சதீவை தமது பாரம்பரிய மீன்பிடிக்கும் பகுதி எனவும் அந்த மட்டத்தில் எமக்கு இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய மீனவர்கள் தம்பக்க நியாயத்தை முன்வைக்கின்றனர். இந்த பாரம்பரிய உரிமை வாதத்தை ஏற்க மறுக்கும் இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் தமது மடிவலை மீன் பிடித்தலைக் கைவிட்டு நாட்டுப்படகு மீன் பிடித்தலுக்கு மாற வேண்டும் என்கின்றனர்.

இரு தரப்பினரும் இந்த இருவேறு நிலைப்பாடுகளில் இருந்து அசைந்து கொடுக்க மறுப்பதே பிரச்சினை நீடிப்பதற்கான மையப் புள்ளி. இதை வெளியில் இருந்து பார்ப்பதற்கு எளிய பிரச்சினை போலத் தோன்றினாலும் இது புரையோடிப்போன ஒன்று என்பதை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் புரிந்து வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை கச்சதீவு சென்றிருந்த அமைச்சர் இரு தரப்பு மீனவ பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடிய பின்னர் தமது நிலைப்பாடுகளில் இருந்து அசைந்து கொடுக்க மறுக்கும் மீனவர்களின் வாதங்களை உன்னிப்பாக அவதானித்த பின்னர் தான் நடுநிலை வகிப்பதாகவும், மீனவர் மத்தியில் உள்ள பிரச்சினையை இராஜாங்க மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் உள்ள ஆழ அகலங்களை அமைச்சர் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இழுவைப்படகு முறைக்கு பழகிப் போயிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பெரும் பணக்காரர்களும் மீன் ஏற்றுமதியாளர்களும் உள்ளனர். அரசியல்வாதிகளும் தான். எனவே இப்பிரச்சினைக்கு ஒரு இராஜதந்திர ரீதியான முடிவை எட்ட வேண்டும். இந்தப் பிரச்சினை தமிழக அரசியல் மட்டத்திலும் டில்லி மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். இது உடனடியாகவும் நடைபெற்றாக வேண்டியது அவசியம். ஏனெனில் மோதிக்கொள்வது இரு தரப்பு தமிழ் மீனவர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலும் நல்லுறவு நிலவுவது போலவே இரு தரப்பு தமிழ் சமூகங்களுக்கு மத்தியிலும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இந்த உறவுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. உடனடியாக குறுகிய கால தீர்வும் நீண்ட கால தீர்வும் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

Comments