முடிவுற்ற துளிகள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

முடிவுற்ற துளிகள்

பாரதி தன் வீட்டு விறாந்தையிலிருந்து “சோ” வென பெய்துகொண்டிருந்த மிகக் கடுமையான மழையை பார்த்துக்கொண்டு இருந்தாள். கொட்டும் மழையில் விழுந்த பெரிய பெரிய மழைத் துளிகள் போன்று அவளது இதயத்தில் இருந்து இரத்தமும் கொட்டுவதுபோல உணர்ந்தாள். ஒரு மணித்தியாலமாக மழையையே பார்த்துக்கொண்டு நின்றவள்,  மழை குறைவடைந்து  நிற்கப் போகும் காட்சியைக் கண்டாள். ஆனால் அவளுக்கு அவள் உடலில் இருந்து இரத்தம் கொட்டுவது போன்ற உணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த நேரத்தில் அவளது தாய் பாரதி என கூப்பிட்ட சத்தத்தினால் அவளது நினைவுகள் மாற்றமடைந்தது. அவளது பழைய நினைவுகளை ஒருகணம் மறந்து நின்றாள்.

பாரதி மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். அவளது தாய் தந்தையர்கள் கூலித் தொழிலாளர்கள்.ஆனால் அவர்கள் சிறு வயதில் கல்வி கற்பதில் சிறப்பான ஆற்றலைப் பெற்றிருந்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களால் கல்வியை தொடர முடியவில்லை. இதன் பயனாக அவர்களது ஐந்து பிள்ளைகளும் கல்வி கற்பதில் சிறந்த மாணவர்களாக இருந்தனர். பாரதி அவர்களின் மூத்த மகளாவாள். பாரதியின் பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தபோதும் அரசாங்கத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் மூலமாக பிள்ளைகளை உயர்தர வகுப்புவரை கற்பித்தார்கள்.

பாரதி எல்லோரையும் விட பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுவந்தாள். இதனால் அவள் உயர்தர பரீட்சையின் பின்னர் ஒரே முறையில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டாள். பாரதி கல்வி  கற்கும் காலத்திலேயே  ரியூசன் வகுப்பு மூலமாக ஓரளவு வருமானம் பெற்றாள். அவள் பெற்றோர்களது  கஷ்டத்தினைக்  குறைப்பதற்காகவும்,  தனக்குக் கீழிருந்த 2சகோதரிகள், 2சகோதரர்களின் முன்னேற்றத்திற்காகவும்  தனது வருமானத்தைப் பயன்படுத்தினாள்.

பாரதி மருத்துவ பீடத்தில்  கற்றபோது  சக மாணவிகளுடன்  கும்மாளம்  அடிக்காது  தனிமையாகவும் அமைதியாகவுமே இருந்தாள். அவள் 2ம் வருடத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ளத்தினால் அவளது சிறிய வீட்டிலிருந்த மருத்துவ கல்வி பாடக் குறிப்புக்கள் அனைத்தும் அழிந்து போயின. பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்ததால் சக மாணவிகளிடமிருந்து பாடக்  குறிப்புக்களை பெற முடியவில்லை. அக்காலத்தில் போட்டோ கொப்பி, கணனி வசதிகள் மிகக்  குறைவாகவே இருந்தது. இந்நிலையில் அவள் மிக கவலையடைந்திருந்தாள்.ஒரு நாள் பல்கலைக்கழகத்தின் பூங்காவில் அவள் மிக கவலையுடன்  அமர்ந்திருந்தாள். அப்போது  அங்கு வந்த சக மாணவனான ரகு தன்னிடமிருந்த  2ம் வருடத்திற்கான பாடக்குறிப்புக்களை  பாரதியிடம் கொடுத்தான். பாரதியால் இதை நம்ப முடியவில்லை. ரகுவைப்  பற்றி பாரதி  சிறிது அறிந்திருந்தாள். கல்வியில் சிறப்பாக செயற்படுபவன் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் இதுவரை அவள் ரகுவுடன் பேசியிருக்கவில்லை. ஆனால் ரகு  பாரதியின் நண்பிகள் மூலமாக பாரதியின் பாடக் குறிப்புக்கள் வெள்ளத்தால் அழிவடைந்ததையும்,  பரீட்சை நெருங்கும் நேரத்தில் அவள் மிகவும் சோகமாக இருப்பதையும் அறிந்து கொண்டான். ரகு எப்போதும் பாடக் குறிப்புக்களை  இருமுறை எழுதுவது வழக்கம்.  இதனால் அவனிடம் மேலதிகமாக ஒரு பிரதி இருந்தது. அவனுடைய நல்ல மனம் பாரதியின் மீது இரக்கமுற்றதால்  தனது மேலதிக பிரதியை பாரதிக்கு  கொடுத்தான்.

பாரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரீட்சைக்கு தயாராக முடியாது. எனவே தயங்கியபடி ரகுவிடம் அதனை வாங்கிக்கொண்டாள். பதிலுக்கு ரகுவிற்கு நன்றி தெரிவித்தாள். அதன்பின் அவ்விருவரும் எதுவும் பேசவில்லை.  ரகு தனது இருப்பிடத்திற்கு சென்றுவிட்டான்.

இதன் பின்னர் பாரதி ரகுவைக் காணும் சந்தர்ப்பத்தில் புன்னகை செய்வாள். ரகுவும் பதிலுக்கு புன்னகை செய்வான்.  சிறிது காலத்தின் பின் அத்தியாவசிமான சந்தர்ப்பத்தில் இருவரும் சிறுசிறு உரையாடல்களில் ஈடுபட்டனர். இது காலப்போக்கில் பாடவிடயங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதாக மாறியது. 3ம் வருட இறுதியில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட புரிந்துணர்வுடன் காதலர்களாக மாறினர். பாரதிக்கு  ரகுவை பிரிந்து இருக்கும்  நேரங்கள் மிகக் கொடுமையானதாக இருந்தது. ஆனால் பாரதி தனது குடும்ப நிலையினையும் குறிக்கோளையும் மறக்கவில்லை.  ரகுவும் இவ்வாறே பாரதியை காணாத சந்தர்ப்பங்களில் தவித்தான். இருவரும் எனக்கு நீ உனக்கு நான் என முடிவுசெய்து மிகவும் மகிழ்ச்சியாக தமது மருத்துவ கல்வியை தொடர்ந்துகொண்டிருந்தனர்.

ரகுவின்  பல்கலைக்கழக  இறுதிப் பரீட்சையில் இறுதிநாள்  பரீட்சை முடிந்து வீடு சென்றபோது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ரகு தனது தாயுடனும், தங்கை சுசீலாவுடனுமே  வாழ்ந்து வந்தான்.  தாய் பார்வதி ஒரு ரீச்சராக வேலை செய்து வந்தார்.  தங்கை உயர்தர பிரிவில்  கல்வி கற்றபின்  வீட்டில் இருந்தாள்.  ரகுவின் தந்தை,  சுசீலா பிறந்து 2வருடங்களின் பின் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். தாய் பார்வதியின் வருமானத்திலேயே இருவரும் வளர்ந்து வந்தனர்.  ரகு தனது தாயின் மீதும் தங்கை மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தான். தாய் பார்வதியின் சொல்மீது மிகவும் மதிப்புவைத்து செயலாற்றினான்.

தாய் பார்வதி ரகுவினதும் சுசீலாவினதும் திருமணத்தை ஒரே நேரத்தில் நடாத்த விரும்பினார். இதனால் பலருடன் தொடர்புகொண்டு திருமண பேச்சை  மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவர்களுடைய பொருளாதார நிலைக்கேற்ப ஒரு மாற்று திருமண சம்மந்தம் கிடைத்திருந்தது. இதற்கமைய பார்வதியின் தூரத்து உறவினரான அண்ணன் ஒருவரின் மகன் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு மருத்துவராக இருந்தான். அவருக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவள் மிக கவர்ச்சியாகவும்,  அழகாகவும் இருந்தாள். பார்வதியின் அண்ணன் பார்வதியின் பிள்ளைகளுக்கும், தமது பிள்ளைகளுக்கும் மாற்றுத் திருமண சம்மந்தம் செய்வதற்கு சம்மதித்திருந்தார்.

இதனால் மகிழ்வுற்றிருந்த பார்வதி இச் செய்தியை சொல்வதற்காக ரகுவின் மருத்துவ கல்வி பரீட்சை முடியும்வரை காத்திருந்தார். அதேநேரம் ரகுவும் மருத்துவ கல்வி இறுதியாண்டு இறுதி நாள் பரீட்சை முடிந்த பின் பாரதியுடன் உற்சாகமாக சுற்றித் திரிந்த பின்னர்  மிகவும் மகிழ்ச்சியுடன் தாயிடம் தனது காதல் திருமணத்தைப் பற்றி சொல்வதற்காக ஆர்வத்துடன் வீட்டிற்கு வந்தான். 

பார்வதி ரகுவிற்கு விருப்பமான உணவு வகைகளை தயார்செய்து வீட்டிலே ஆர்வத்துடன் காத்திருந்தார். வீட்டுக்கு வந்த ரகுவை உபசரித்த பார்வதி ரகு உணவு உண்டபின் மகிழ்ச்சியாக தான் பேசி முடித்த. மாற்றுத்  திருமண சம்மந்தம் பற்றி ரகுவிடம் கூறினார். ரகு  திடீரென அதிர்ச்சி அடைந்தான்.

ரகுவிற்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.  ரகு தலை வலிக்குது என தாயிடம் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான். ரகுவிற்கு பாரதியுடனான எத்தனையோ ஆசைகள்,  கற்பனைகள் நொடிப்பொழுதிலேயே தவிடுபொடியாவதை உணர்ந்தான். ஒரு பக்கம் தன்மீது உயிரையே வைத்திருக்கும் பாரதி, மறுபக்கம் தன்னை ஊட்டி வளர்த்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து இன்றுவரைக்கும் ஆளாக்கிய தாய். இருவரையும் நினைக்கும்போது தலை சுற்றியது. அப்படியே மயக்கமுற்று நித்திரையாகிவிட்டான்.

பார்வதி தன் மகன் தனது சொல்லை மீறமாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தமையால் மகன் ரகுவில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்கவில்லை. அவன் சாப்பிட்ட களைப்பில் தூங்கிவிட்டான் என்ற நினைப்பில் இருந்தார். இரவு  8மணியளவில் தூக்கம் கலைந்து எழுந்த ரகு தலை வலிப்பதாக உணர்ந்தான். தான் கெட்ட கனவு ஒன்று கண்டுவிட்டதாக எண்ணினான். ஆனால் மறுகணமே அது உண்மையென அறிந்தவுடன் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. நீண்ட சிந்தனைக்குப் பின்பு ரகு தான் பாரதியை காதலிப்பதையும்,  அவளையே திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து விட்டதையும் தாயிடம் சொல்வதென தீர்மானித்தான்.

இதனால் படுக்கையிலிருந்தது வெளியே வந்து முகம் கழுவுவதற்காக பாத்ரூம் சென்றான். பாத்ரூம் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான். அவனது முகம் அங்கே பேயறைந்தது போல இருந்தது. எனினும் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு தாயிடம் பேசுவதற்கு சென்றான். தாய் பார்வதி ரகுவின் முகம் பேயறைந்தது போல இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ரகு தாயிடம் தனது எண்ணத்தை சொல்லுவதற்கு முனைந்தான். ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. தொண்டை கரகரத்து அழுகை வந்தது. தாய் பார்வதி “மகன் ரகு என்ன நடந்தது?” என வினவினார். ரகுவால் பேச முடியவில்லை.  எனினும் விக்கி விக்கி தான் சொல்ல வந்ததை தாயிடம் சொன்னான். ரகு பாரதியை நீண்ட நாட்களாக காதலிப்பதையும், அவளைத் தான் திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்ததையும் கேட்டவுதனது மகனுக்காக தான் செய்த தியாகங்களை சிந்தித்துப் பார்த்தாள். தனது மகளின் வாழ்க்கையையும்  ஒருகணம் யோசித்தாள். பார்வதி பிரமை பிடித்தவள் போல் ஆனார்.  திடீரென்று பார்வதி பேய் பிடித்தவள் போன்று அலறினார். “ மகனே ரகு உன்னை முழுமையாக நம்பியே இந்த ஏற்பாடுகளை நான் செய்தேன்.  எனது உயிரும் உனது தங்கையின் உயிரும் உனது கைகளிலேயே உள்ளது. நீ இதற்கு சம்மதிக்காவிட்டால் எங்கள் இறந்த உடல்களையே பார்ப்பாய்.” என்று கதறினாள். அதன் பின் துக்கம் தாங்கமுடியாது பார்வதி தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

ரகுவிற்கு எல்லாமே இடி விழுந்தது போன்று இருந்தது. ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.  தான் தற்கொலை செய்வோமா என்றும் ஒருகணம் யோசித்தான். இதன் பின் இரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் தூக்கம் அவனை அணைத்தது. இதனால் அவனை அறியாமலே அவன் 2மணித்தியாலம் தூங்கி விட்டான். திடீரென்று விழித்து கொண்டவனுக்கு மின்னல் வெட்டியது போன்று ஒரு யோசனை வந்தது. எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பும் பாரதியுடன் இதுபற்றி கதைப்போம் என்று தீர்மானித்தான்.

எனவே மிக மிக அவசரமாக புறப்பட்டு  பல்கலைக்கழகம் சென்றான்.  ஏற்கனவே பாரதியும் ரகுவும் பரீட்சை முடிவு வரும்வரை பல்கலைக்கழகத்து பூங்காவிற்கு வந்து  இருவரும் சந்திப்பதாக முடிவு செய்திருந்தார்கள். இதன்படி ரகு பல்கலைக்கழகத்து பூங்காவிற்கு சென்றபோது பாரதி  அங்கே காத்திருந்தாள். அவள் மிக்க மகிழ்ச்சியுடன் ரகுவிற்கு விருப்பமான சில சிற்றுண்டிகளையும் செய்து கொண்டு வந்திருந்தாள். ரகுவின் முகத்தைப் பார்த்தபோது பாரதி வித்தியாசதத்தை உணர்ந்து கொண்டாள். ரகு துக்கம்  தாளாதவனாக. பாரதியை கண்டவுடன் தேம்பி தேம்பி அழுதான். பாரதி என்ன நடந்தது என்று அவனைக் கேட்டாள். ரகு நேற்று வீட்டில் நடந்த சம்பவங்களை  ஒன்றும் விடாமல் பாரதியிடம் ஒப்புவித்தான்.

ரகு சொல்லும்போதே பாரதியின் உள்ளம் துடித்தது.  தனது இதயம் சுக்குநூறாக வெடித்து இரத்தம் கொட்டுவதாக உணர்ந்தாள்.ஆனாலும் தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவளாக,  ரகுவை தனக்காக தாயாரின் வேண்டுதலை ஏற்குமாறு கூறினாள்.ரகு தன்னால் அவ்வாறு வாழமுடியாது எனவும்,  தான் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறினான். பாரதி அப்படியானால் தானும் தற்கொலை செய்வதாகக் கூறினாள்.ஒன்றுமே செய்யமுடியாத ரகு பாரதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டான். பின்னர் இருவரும் மீளமுடியாத சோகத்துடன் வீடு திரும்பினர்

பாரதி வீடு வந்து சேர்ந்த போதே அந்தப் பாரிய மழை கொட்டியது.

அதன் பின் பாரதியும் ரகுவும் தொடர்புகொள்ளவில்லை. ஆனால் இருவரின் மனமும் ஆழ்ந்த சோகத்தினால் துடித்துக்கொண்டிருந்தது.பாரதி ஏற்கனவே நோர்வேயின் புலமைப்பரிசில் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தாள். ரகுவும் பாரதியும் பிரிந்து 3மாதங்களின் பின் பாரதிக்கு நோர்வே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தனது துன்பங்களை காலமும் சூழ்நிலையும் ஆற்றும் என்ற நம்பிக்கையில் பாரதி நோர்வே சென்றாள்.

மறுமுனையில் வீடு சென்ற ரகு தாயின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான். பார்வதி ரகுவின் சம்மதத்தால் மிகவும்  மகிழ்ச்சி  அடைந்தார்.  ரகுவிற்கும்  சுசீலாவிற்கும் ஒரே  தினத்திலேயே திருமணத்தை நடாத்தி முடித்தார். தனது பிள்ளைகள் தான் விரும்பியவாறு திருமணம் செய்ததால் பார்வதி மிகவும்  திருப்தியுற்று தனது கடமைகள் யாவும் நிறைவுபெற்று விட்டதாக மகிழ்ந்திருந்தார். ஆனால் இறைவனின் ஏற்பாடு என்ன என்பதை அவரால் உணர முடியவில்லை.  ரகு தாயினதும் தங்கையினதும் சந்தோசத்திற்காகவும், பாரதியின் வற்புறுத்தலுக்காகவும் திருமணம் செய்து கொண்டானே தவிர அவனால் மனைவியுடன் முழுமனதுடன் வாழ முடியவில்லை.  மனைவியைக்  காணும்பொழுது பாரதியின் நினைவுகள் அவனை துயரத்தில் ஆழ்த்தின. இதனால் ரகு தனது கூடுதலான நேரத்தை தனது வைத்திய. தொழிலிலேயே  செலவிட்டான். இது அவனுக்கு சிறிது ஆறுதலைத் தந்தது.          

ரகுவின் மனைவி அவனது போக்கை விரும்பவில்லை. அவள் கூடுதலான நேரத்தை ரகு தன்னுடனே செலவிட வேண்டுமென விரும்பினாள். சுமார் ஒருவருட காலம் ரகுவின்  வாழ்க்கை அமைதியாக ஓடியது. பின்னர் ரகுவின் மனைவி தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ரகுவை நிர்ப்பந்திக்கத்  தொடங்கினாள். அவர்களுக்கு விரைவாக குழந்தைப் பாக்கியமும் கிடைக்கவில்லை. இந்நிலையில்  அவள் அடிக்கடி ரகுவுடன் வாய்ச்சண்டையில் ஈடுபட்டாள். ரகுவால் இதனை சமாளிக்க. முடியவில்லை.   ரகுவின் நண்பர்கள்  சிலர் மதுவிற்கு  அடிமையாகி இருந்தனர். அவர்கள் ரகுவின் நிம்மதியின்மையைப் பயன்படுத்தி ரகுவையும் தங்களுடன்  இணைத்துக் கொண்டனர்.  இதன் பின் மதுபோதையில்  வீட்டுக்கு வரும்  ரகு மனைவியுடன் பேசாது  தனது அறைக்குச் சென்று தூங்கிவிடுவான்.  இது தொடர்ந்தபோது ரகுவின் மனைவி மிகவும்  வெறுப்படைந்தாள். காலையில் ரகு எழும்போது ஒவ்வொரு நாளும் வாய்ச்சண்டையில்  ஈடுபட்டாள்.  ரகுவிற்கு இது மேலும் மன உளைச்சலைக் கொடுத்தது. இதனால் அதிகம் குடிக்கத் தொடங்கினான்.

ஒருநாள்  அதிக மதுபோதையுன் காரைச் செலுத்திக்கொண்டு வீடுவரும்போது டிப்பர் வாகனமொன்றுடன் அவனது கார் மோதியது. ரகுவின் தலையில் மிகப்பெரிய அடிபட்டதால் அவ்விடத்திலேயே மயங்கி விட்டான். பின்னர் அவ்விடத்தை அடைந்த பொலிசாரின் உதவியுடன் அவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். ஐந்து மாதங்களின் பின் ரகு ஓரளவு குணமடைந்த போதிலும் , அவனுக்கு பழைய நினைவுகள் மறந்து போய் விட்டது. இதனால் தொழில் செய்ய முடியவில்லை. வீட்டில் மனைவியுடனேயே இருக்க வேண்டி இருந்தது.  மனைவிக்கு குழந்தை போன்று  அவனைக் கண்காணிக்க வேண்டி இருந்தது.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட ரகுவின் மனைவி ரகுவுடன்  வாழமுடியாது என நீதிமன்ற உதவியுடன் விவாகரத்து பெற்றுக்கொண்டார். இதனைத்  தொடர்ந்து  ரகுவைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு அவனது தாயின்மீது விழுந்தது.  தாய் பார்வதி எவ்வளவோ இடங்களில் சிகிச்சைக்காக ரகுவை கொண்டுசென்றும் குணப்படுத்த முடியவில்லை.  இவ்வாறு சில வருடங்கள் ஓடின.

வெளிநாடு சென்ற பாரதி சிறப்புப் பயிற்சி பெற்றவராக ஐந்து ஆண்டுகளின் பின் நாடு திரும்பினாள். சொந்தமாக வைத்தியசாலை ஒன்றை உருவாக்கினார். பாரதியின் சிறப்பான வைத்தியத்தை கேள்வியுற்ற ரகுவின் தாய்  ரகுவை  அங்கு அழைத்துச் சென்றார்.

ரகுவைக்  கண்ட. பாரதி அவனது நிலமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் ரகுவிற்கு பாரதியை யார் என்று நினைவுபடுத்த முடியவில்லை.  பாரதி மிகுந்த கவனத்துடன் ரகுவிற்கு சிகிச்சை அளித்தாள். ரகுவின் தாய்க்கு பாரதியின் துடிப்பினைக்  கண்டு அதன்  காரணத்தை  விளங்கிக்கொள்ள முடியவில்லை.   சுமார் ஒன்பது மாதங்களின் பின் ரகு படிப்படியாக குணமடைந்து வந்தான்.ஒருநாள் பாரதி  சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோது ரகுவிற்கு பழைய நினைவுகள் திரும்பி வந்தது. ஆனால் ரகுவிற்கு தனக்கு சிகிச்சை அளிக்கும் டொக்டர் யார் என்று உணரமுடியவில்லை.

ஆனால் பாரதி ரகு குணமடைந்ததைக் கண்டு அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தாள். பாரதி சென்ற பின்னர் ரகு தாயிடம் டொக்டரைப்  பற்றி விசாரித்தான். தாய் டொக்டர் அவன்மீது அதிக அக்கறை கொண்டு சிகிச்சை அளித்து வருவதாகவும்,  அவருடைய பெயர் பாரதி எனவும் கூறினார். ரகுவிற்கு  புதுவாழ்வு கிடைத்தது போன்று குதூகலத்துடன் துள்ளி எழும்பினான். இதைக் கண்ட பார்வதிக்கு மகன் மீண்டுவிடுவான்  என்ற நம்பிக்கை ஏற்பட்டது.  பார்வதி ரகுவிடம் டொக்டரை உனக்கு தெரியுமா என்று கேட்டார். ரகு பாரதியுடனான தனது முழுக்கதையையும் தாயிடம் சொன்னான்.பாரதியின் வற்புறுத்தலுகக்காகவே தான் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினான். இதனைக் கேட்ட தாய் பார்வதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தான் இந்த நல் உள்ளங்களை,  சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழவிடாது பிரித்து விட்டேன் என்று வருந்தினார்.

இதன் பின்  பாரதி நோயாளியான ரகுவைப் பார்க்க வந்தபோது பார்வதி பாரதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ரகுவிற்கு வாழ்வுகொடுக்க வேண்டுமென்று  மன்றாடினாள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாரதி ரகுவைப் பார்த்தாள். ரகுவின் மனம் ஏதேதோ பேச எண்ணியபோதும்,  அவன் தன்  கண்களாலேயே மன்னிப்புக் கோரினான்.

பாரதி தனது இதயத்திலிருந்து இரத்தம் கொட்டுவதான உணர்வு முடிவுறுவதை உணர்ந்தாள். ரகுவைப் பார்த்து அவள்  வழங்கிய புன்னகை அவளது முழுமையான சம்மதத்தை தெரிவித்தது.(யாவும் கற்பனையே)

குப்பிளான் ஆ.மோகனசுந்தரம்

Comments