மீனவன் என்ஜினியராகிறான் | தினகரன் வாரமஞ்சரி

மீனவன் என்ஜினியராகிறான்

ஏறுவெய்யிலில் ஹாய் எளயம்பி கையில் எதையோ எடுத்துக் கொண்டு வருகிறான். ஹாய் எளயம்பிக்கு வயது அம்பதைத்தாண்டினாலும் அவன் என் குடும்ப நண்பன் காலையிலும் மலையிலும் என் வீட்டிற்கு வந்து, என்னோடும் என் மனைவி மக்களுடனும் தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்து விட்டு போவது அவன் பழக்கம் அவனை எல்லோரும் கொஞ்சம் பைத்தியம் என்று கூறுவார்கள். ஆனால் என் மனைவி மக்கள் அவனோடு அன்பும் பாசமும் நிறைந்த ஒரு மனிதனாக நினைத்து பழகுவார்கள். அவனும் அப்படித்தான் என் மனைவியோடும் மக்களோடும் பழகுவான்.

"என்ர வாப்பா கடலெல்லாம் மீன்ததுமிது கொள்ளுது... வடிவன் தோணிலுக்கும் வயிரன் தோணிகளுக்கும் கீரிப்பாடுகள் பட்டுக் கிடக்கு... எல்லாத் தோணிகளும் கடலுக்குள்ளதான்கிடக்கு. கடலும் கொழந்தப் புள்ள மாதிரி இரிக்கு... கடற்கரையெல்லாம் ஆட்களதான், அஞ்சிதிரியிறானுகள். எங்கிட வடிவன் தோணி தண்டயல், என்னப் பாததுப் போட்டு இந்த மீனத்தந்தாரு தாழை மரத்திக்கு கீழ் நிண்ட பொம்புளயளுக்கும் கூடயில கொண்டந்து, குத்துப் புடிச்சி நிறைய அள்ளிக்கு போட்டாரு... ஊரெல்லாம் கடக்கரையிலதான் கிடக்கு தோணிகள் கடலுக்குள்ளிருந்து கரையேறுவதும், கரையிலிருந்து கடலுக்கு போவதுமாக இருக்கின்றன... கடல் எல்லாம் கலியாண ஊடுமாதிரித்தான் கெடக்கு என்று கூறியபடி கொண்டு வந்த மீனை என் மனைவியுடன் கொடுத்து விட்டு சிரிக்கிறான்.

ஹாய் எளம்பிய சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லா ஒரு அநாதை. சொல்லப் போனால் நாங்கள்தான் அவனுக்கு எல்லாம். அவனொரு அரப்பைத்தியம் என்று ஊரில் பேரடுத்ததினால் யாரும் அவனை திருமணம் செய்யவிரும்பவில்லை. இப்பொழுது, என் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு என்னோடுதான் இருக்கிறான். என் குடும்பம் என்றால் அவனுக்கு உயிர் "கரவலைச் சூடல் கறிக்கு நல்லாரிக்கும். மாங்கா வெச்சி பாலாணம் காச்சினா, ஒரகப்ச் சோறு கூடத்திங்கலாம்... சும்மா இரிக்கிற நிங்க, கடக்கரைக்கு ஒழுப்புளம் போயிற்று வாங்கள். என்றதும் என் மனைவி, ஹாய்! கூட்டிக்கு போய் வா..." என்று சொல்லி விட்டு, குசினிக்குள் போகிறாள்.

என் பின்னால் படுத்துக்கிடந்த பூனை கத்திக்கொண்டு இருக்கிறது. "இஞ்ச, எழும்பிக்கந்து இந்த தண்ணிச் சோத்த திண்டு போட்டு போங்க... தேங்காப்பாலும், இலுமிச்சம் பழமும் வெச்சிரிக்கன் நல்லா நொறுங்க கரச்சிக் குடிங்க..." குசினிக்குள் போன ஹாய் கூட அவசரப்படுத்திறான் "ங்... கெதியா எழும்பிக்காங்க... எனக்கும் செரியா பசிக்கிது" என்று ஹாய் கூப்பிரறான். நான் குசினிக்குள் போகும் போது, என் வீட்டுப் புனையும் பின்னால் கத்திக் கொண்டு வருகிறது. இளஞ்சூரியன் சிரிக்கிறது. என் வீடும் கடற்கரையோரம்தான்; காலைச் சோற்றை சாப்பிட்டு, ஹாயோட” கடற்கரைக்குப் போகிஷேன்.

எங்கள் ஊர் வங்கக் கடல், குளம் போல்கிடக்கிறது. கடல் அலைச் சப்தம் ஓயாமல் கேட்கும் போது, கடற்காற்று, கடலோரத்தில் நிற்கும் இராவண மீசையைத் தடவிச் சிரிக்கிறது. கடற்கரை கலியாண வீடுபோல் இருக்கும் போது, என் பக்கத்து வீட்டு அத்துறசூல் மீன் கூடையைச் சுமந்து கொண்டு போகிறான்.

அத்துறசூலும், ஹாய் எளயம்பியும் நல்ல நண்பர்கள், எனக்கும் கூடத்தான்.

"ஹாய் எங்க போன? தம்பியையும் கூட்டிக்கு வந்து இந்த வலய இழு.... அண்ணா பாரு! தண்டயல் வலய இழுக்கச் செல்லி, சாலுவயக்காட்டி கத்திறான் என்று கரத்தண்டயல் மாயிறான். சட்டுப் பண்ணி வாங்க கொஞ்சம் உசாராப் புடிங்க" என்று கரத்தண்டயல் மம்மது கூறிக்ெகாண்டு வல இழுப்பவர்களை உசார்படுத்திக் கொண்டிருக்கிறார். மய்யத்தீன் அப்பா வலைக்காலைப் பிடித்து.

"ஏலேலோம்... ஓவோலேம்... ஏலடி ஏலம்.. ஏலச்சிலாமாய்..."

ராகமெடுத்து அம்பாச் சொல்லி மீனவர்களை உசார்படுத்திக் கொண்டிருக்கிறார். கரத்தண்டையல் மம்மது, தம்பேய்! கீரிக்கிள, கதிச்சமாதிரி கிடக்கு... எதுக்கும் வாடிக்குள்ள போய் நம்முட மடிதாங்கிய எடுத்துக்கு வாங்க" என்று சொல்லிக் கொண்டு வல இழுக்கும் மீனவர்களை உசார் படுத்திக் கொண்டிருக்கிறார். கரத்தண்டையல் மம்மதின் ஆணையை சிரமேற்று மடிதாங்கிய எடுத்து வர அகமது ஓடுகிறான். ஏறுவெய்யில் சினத்துக் கொண்டிருக்கிறது.

ஹாய் எளயம்பி மய்யதீன் அப்பாவோடு சேர்ந்து அம்பாச் சொல்லி வலையை இழுத்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் மய்யதீன் அப்பாவின் பேரனும் வலை இழுக்கிறான். மய்யதீன் அப்பாவின் மூத்த மகளின் மகன்தான், கஸ்ரத்தின் காரணமாக வலை இழுக்க வந்திருக்கிறான். மய்யதீன் அப்பாவின் மருமகன் சின்னவயதிலேயே மரணத்து விட்டதால், மகளையும் பேரப்பிள்ளைகளையும் இவர்தான் கவனித்துக் கொண்டு வருகிறார். மய்யதீன் அப்பாவின் பேரன் நல்ல கெட்டிக்காரன். இந்த வரிசம், இன்ஜினியர் படிக்க பாஸ் பண்ணி, கண்டி யூனிவசிற்றிக்கு போக இருக்கிறான். பெருமையே இல்லாத பொடியன். மய்யதீன் அப்பாதான் அவரின் பஞ்சானும் குஞ்சுகளையும் ஒரு தளப்மில்லாமல் பார்த்துக்கு வாறார். இந்த அநாதைகளுக்கு அல்லாஹ்தான் எல்லாத்துக்கும் போதுமானவன்.

கடற்கரையெல்லாம் ஒரே ஆரவாரமாக்கிடக்கிறது. வடிவன் தோணில், மீன் பாட்டோடு கரையேறுகிறது. மீன் மடியை கரையேற்றி விட்டு, மீனவர்கள் தேனீர் குடிக்க யாக்கூப்பின் தேனீர் கடைக்கு போகின்றனர். சில மீனவர்கள் மடியில் கிடக்கும் மீன்களைக் கூடைகளில் அள்ளி எடுத்து, கடற்கரைக்குருத்து மணலில் கும்பமாய் குவிக்கின்றனர். மய்யதீன் அப்பாவின் பேரன், வடிவன்தோணி வாடிக்குள் போய் இருக்கிறான். சூரியன் ஆவேசமுற்று கொதிக்கிறான். அப்பொழுது, வடிவன் தோணில் தண்டயல், பூரிப்போடு தோணிலிருந்து இறங்கி வந்து, மீன் கும்பங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு மீன் வியாபாரிகளை நோட்டமிடுகின்றார். வியாபாரிகள் மீன் கும்பங்களை நோட்டமிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சூரியன், உச்சியைத் தொட்டு விட்ட இறுமாப்பில் சிரிக்க ஹாய் எளயம்பியும் நானும், பகல் சாப்பாட்டுக்காக வீட்டிற்கு போகிறோம். எங்களைத் தொடர்ந்து மய்யதீன் அப்பாவும் அவர் பேரனும் வருகிறன்றார்.

மீனவர்கள் கடற்கரையிலிருந்து வெளியேறுவதைக் கண்ட கரத்தண்டயல் "நேரத்தோட எல்லாரும் வந்து காயிர வலயள ஏத்திப் போட்டு, தட்டிகள எடுத்து தோணில மூடிரிங்க" என்று கூறி, மீன் கும்பத்தடியில் போகிறார். கடலில் தோணிகளெல்லாம் கரையேறி விட்டன. கடல் காற்று அமைதியாக விசிக் கொண்டிருக்கிறது. அலைகள் எழும்பி, கரையில் அடித்து கடலின் ஆளுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

மாலைச்சூரியன் மஞ்சளாகிவிட்டான். மீனவர்கள் வந்து, தோணிகளில் வலைகளை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். மய்யத்தீன் அப்பாவும் ஹாய் எளம்பியும் வந்து, வலைகளை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். கடற்காற்று இதமாக பேசிக் கொண்டிருக்கின்றது. கடல் அமைதியாகக் கிடக்கிறது. மீனவர்கள் சுறுசுறுப்பாக வலைகளை தோணில்களில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். வடிவன் தோணி வாடியில் தொங்கும் கடல் லாம்புகள், கடற்காறோடு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

வலை ஏற்றிக் கொண்டிருக்கும் மய்யதீன் அப்பாவிடம் "அய்யாபேரன் வரவில்லியா?" என்று ஹாய் கேட்கிறான். "இல்ல, கொஞ்ச நேரத்தால வறதாக சொன்னான்.

இப்ப ரெண்டு புள்ளயளுக்கு படிப்பிக்கான்; வருவான்..." என்று கூறிவிட்டு நீண்டதொரு பெருமூச்சை மய்யதீன் அப்பா விடுகிறார். கவலையில் தவிக்கும் மய்யதீன் அப்பாவிடம் "பேரன் போறத்திக்குரிய வேலையெல்லாம் செஞ்சிரிங்களா?" எனறு நான் கேட்கிறேன். அவர் என் கேள்வியை எதிர்பார்த்திருந்தவர் போல் "தம்பி! அதுதான் பெரிய கவலயக்கிடக்கு, புள்ளைக்கு உடுப்பும் வாங்கணும் புத்தகமும் வேணுமெண்டு சொன்னான். கண்டிக்கு போகயிம்கையில ஒருதம்படியும் இல்ல... அந்த அநாதைக்கு அல்லாதான் ஒதவி செய்யணும்" என்று மய்யதீன் அப்பா பெருமூச்சு விடுகிறார். அப்பொழுது ஹாய் எளம்பி "அப்பா நம்முட தோணில் இருப்புக்காசில, கொஞ்சம் காசி தரச் செல்லி கேழுதா" என்று கூறுகிறான். அதற்கு நானும் ஆரவு கொடுக்கிறேன். வலைகள் எல்லாம் தோணிகளில் ஏற்றிவிட்டு, மீனவர்கள்வாடிக்கு போகின்றனர். கடல் லாம்புகள் காற்றோடு ஜீவமரணப் போராட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. மசண்டையாகி விட்டது.

வடிவன் தோணி மீனவர்களெல்லாம் குதுகலமாக பேசிக்ெகாண்டிருக்கின்றனர். மீனவர்களின் காசிக் கணக்குகளை தண்டயலும் கணக்கப்பிள்ளையும் ஒழுங்காகப் பார்த்து பிரித்துக் கொண்டிருக்கின்றனர். தேனீர் கடைக்காரன் யாக்கூப், வறுத்த கச்சான் கொட்டை சுறுள்களோடு வந்து, மீனவர்களுக்கு கொடுத்து விட்டு, மீனவர்களோடு குந்திக் கொண்டிருக்கின்றான்.

அப்பொழுது மய்யதீன் அப்பா, கணக்குப் பார்ததுக் கொண்டிருக்கும் தண்டையலிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டு அமைதியாக நிற்கிறார். மீனவர்கள் எலலோரும் அமைதியாக இருக்கின்றனர். மய்யதீன் அப்பா எங்கிட தோணில் வலையை இவ்வளவு சிறப்பாக வளர்த்து விட மிச்சம் கஷ்ரப்பட்ட மனிசன். அவர்ர பேரன்ட படிப்புக்காக எங்களிடம் கொஞ்சம் காசி கேட்டு, உதவி செய்யச் சொல்கிறார். என்னப் பொறுத்த வரயில் இது எங்கட கடமை. ஒரு மீனவன்ட புள்ள இன்ஜினியராகப் படிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பெருமை" என்று தண்டயல் சொல்லி முடிப்பதற் கிடையில் பங்கிக் காசிக்காகக் காத்துக் கொண்டிருந்த மீனவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் "மய்யதீன் அப்பாக்கு, எங்கிட தோணி இருப்புக்காசில இருந்து அம்பதாயிரம் ரூபாவ எடுத்துக் குடுங்க... எங்கிட மீனவன்ட மகனும் ஒரு இன்ஜினியராகப் படித்து வரட்டும்" என்று கூறுகின்றனர்.

மய்யதீன் அப்பா மகிழ்ச்சியில், தன்னையே மறந்து நிற்கிறார். கடல் காற்று, கடல்லாம்பு களோடு கேலி செய்து கொண்டிருக்கின்றது.

கணக்கப்பிள்ளை பங்கு காசிகளை ஒழுங்காக கொடுத்துவிட்டு பெருமூச்சு விடுகிறார். மனித நேயத்தின் பண்புகளையும் சிறப்பினையும் அலைகள், சத்தமிட்டு கரையில் சத்தியம் செய்யும் போது, கடல் காற்று அமைதியாக வீசிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது முத்தக்கீன் பள்ளிவாசல் மோதின் கித்திர்முகம்மட் மஃரிப்புக்குரிய அதானை விடுகின்றார். நன்றாக மசன்டையாகி விட, கடற்கரை வெறிச்சோடிக்கிடக்கிறது நானும், ஹாய் எளயம்பியும் மய்யதீன் அப்பாவுடன் கடற்கரையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம்.

முத்தக்கீன் பள்ளிவாசல் மய்யத்து புட்டிலுள்ள ஆலமரத்திருந்து, வக்குப்பணமொன்று கத்திக் கொண்டிருக்கின்றது.

எஸ். முத்துமீரான்

Comments