ஜெனீவா பேரவை தொடர்பில் ஆக்கபூர்வமான சிந்தனை அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

ஜெனீவா பேரவை தொடர்பில் ஆக்கபூர்வமான சிந்தனை அவசியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் ஜெனீவா சென்றிருக்கும் இலங்கை தூதுக்குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இலங்கை அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகிறது. இவ்வகையில் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி லிண்டா தோமஸ் கிறீன்பீள்டை சந்தித்து உரையாடியது முக்கியத்துவம் வாய்ந்தது. 

இலங்கை இறைமையும் சுயாதீனமும் கொண்ட ஒரு சுதந்திர நாடு. எனவே வெளியில் இருந்து திணிக்கப்படும் ஒரு பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரிக்க இலங்கை தயாராகவே உள்ளது. அதே சமயம் பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்பக் கிளறுவதன் மூலம் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. மேலும் நடைமுறையில் பார்த்தோமானால் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் மிகவும் சமாதானமாகவும் இந் நாட்டில் நட்புறவுடனும் வாழ்ந்து வருகின்றன. வெளியக பொறிமுறை போன்ற கட்டமைப்புகள் இங்கு செயல்படுத்தப்படும்போது இந்த நெருக்கமான சமூக உறவில் பிரிவுகளும் சந்தேகங்களும் ஏற்படும். எனவே நாம் புதிதாக இன முறுகல்களை உருவாக்க வேண்டியதில்லை. இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அச் செயற்பாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவை உதவும் கரமாகத் திகழ்வதையே எதிர்பார்க்கிறோம். 

ஜெனீவா சென்றுள்ள எமது தூதுக்குழு லிண்டா தோமசிடமும் தாம் சந்தித்துவரும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இவ்வாறு சாரப்படும் வகையிலேயே உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது.

இதற்கு முன்னரும் இதே கருத்துக்களைத் தான் அரசு சார்ப்பாக ஜெனீவா பயணித்த தூதுக்குழுக்களும் தெரிவித்து வந்துள்ளன. இதே சமயம் இந்தியாவும் 13ம் திருத்தச் சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறது. 

ஜெனீவா செல்லும் அரசுகளின் தூதுக்குழுக்கள் சிங்கள சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக பாடுபடுகின்றன என்றும் தமிழ் சமூகத்தின் உளக்கிடக்கையை புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றன என்றும் பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் கருதுகின்றனர். உள்ளகப் பொறிமுறையானாலும் சரி அதை நடைமுறைக்கு கொண்டுவாருங்கள்,வந்தால் தானே எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம் என்பது பல தமிழ் மூளைசாலிகளின் கருத்தாக உள்ளது. 

ஏனெனில் 2010ம் ஆண்டு முதல் இந்த ஜெனீவா விவகாரம் நீண்டு கொண்டே போகிறது, எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமல். இது ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இவ் விவகாரம் நீடிக்கும்வரை இனங்களுக்கு இடையில் முற்று முழுதாக சமாதானம் நிலவப் போவதில்லை. எனவே இப் பேரவையில் எந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் சரி இலங்கை அரசு ஒரு தனித்தீர்மானத்துக்கு வந்தாக வேண்டும். ஏனெனில் இப்போது ஜெனீவா பேரவை என்பது இனவாதத்தை தழுவிய சகல கட்சிகளுக்கும் தீனியாக அமைந்துவிட்டது. இது தொடரக் கூடாது. அடுத்த ஆண்டு பேரவை கூடும் போது நாம் இவற்றை எல்லாம் சாதித்திருக்கிறோம் என்பதை சொல்லக் கூடியதாக செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். நாம் ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டிய காலம் இது. 

Comments