முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய மூன்று சிக்கல்கள்! | தினகரன் வாரமஞ்சரி

முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய மூன்று சிக்கல்கள்!

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் ஒவ்வொன்றிடமும் தமிழ் பேசும் தரப்பினர் எதிர்பார்க்கின்ற பல்வேறு கோரிக்கைகளுக்கும் இதுகாலவரை தீர்வு கிடைக்கவில்லை. இதற்கான பிரதான காரணம் இரு தரப்பிலிருந்தும் எழுகின்ற அரசியல் பிடிவாதங்கள் மற்றும் விட்டுக்கொடுக்காத தன்மைகள் ஆகும். அதன் காரணமாக எதிர்பார்ப்புகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருப்பது பெரும் கவலை தரும் விடயமாகும்.

குறிப்பாக முப்பது வருட காலத்திற்கு மேற்பட்ட யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களைக் கடக்கின்ற இன்றைய நிலையிலும், தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்பது ஒரு மனக்குறை என்றே கூற வேண்டும். அதிலும் வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்ற முக்கியமான மூன்று விடயங்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த மூன்று பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வந்தால் அதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முட்டுக்கட்டை போடுவதும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தால் அரசாங்கம் கோரிக்கையைத் தட்டிக் கழிப்பதுமாக கடந்த 15 வருடங்களாக இழுபறியே தொடர்வதை நாம் காண்கின்றோம்.

எனவே இந்த மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கும் இருதரப்பும் கலந்துரையாடி ஒரு தீர்வினைக் காண்பது அவசியம். உண்மையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமைக்கு அல்லது தீர்வுகளில் ஏற்படுகின்ற இழுபறி நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகளையே முழுமையாக குறை கூற வேண்டியுள்ளது.

ஏனெனில் இதுவரை கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை தமிழ் அரசியல் தலைமைகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களை நாங்கள் கடந்த காலத்தில் கண்டுள்ளோம். இதன் காரணமாக தமிழ் அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை விரும்பவில்லையோ எனும் சந்தேகமும் ஏற்கனவே பல தரப்பினர் மத்தியிலும் உள்ளது.

குறிப்பாக முன்னைய ஐந்து வருட கால நல்லாட்சிக் காலத்தில் “அந்த அரசாங்கத்தை நாமே கொண்டு வந்தோம்” என்று வெளிப்படையாகவே கூறி வந்த தமிழ் அரசியல் தலைமைகள், அந்த ஐந்து வருட கால நல்லாட்சியில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை. அதுவே உண்மை. அந்த உண்மையை உரக்க கூறினாலும் அதனை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

ஐந்து வருட கால நல்லாட்சியின் போது அவர்களால் தீர்வு கண்டிருக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இப்போது அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும், கையெழுத்து பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இன்று அவர்கள் கோரி நிற்கும் அதே பிரச்சினைகள் அன்றைய ஐந்து வருட கால நல்லாட்சியிலும் இருந்து வந்தவையே. அவற்றை நல்லாட்சிக் காலத்தில் அவர்கள் இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்.

உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றப்படாத தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல விடயங்களை இன்றைய அரசாங்கம் செய்து வருகின்றது. நல்லாட்சிக் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்விதமான அக்கறையும் எடுக்காது இருந்த போதிலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இதுவரை அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் படையினரின் பயன்பாட்டுக்காகப் பெறப்பட்ட மக்களது காணிகள் இன்றைய ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் இவை எதனையும் கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள் இந்த அரசாங்கத்தை வசைபாடுவதில் மட்டுமே குறியாக இருந்து வருகின்றன. இதற்கு காரணம் இல்லாமலில்லை. தமிழ் மக்களது இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டால், தமது அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாறிவிடுமோ என்ற அச்சம் தமிழ்க் கட்சிகளிடம் உள்ளது.

தமது அரசியல் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களை அடகு வைத்தே அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக புரிகின்றது. அத்துடன் இவர்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்டு, தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் காரியத்திலேயே ஈடுபட்டு வருகிறார்கள்.

30 வருட கால யுத்தத்தில் ஆயுதங்கள் மூலமாக தீர்வு காணப்பட முடியாத தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, கடந்த 15 வருடங்களாக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இவர்களால் தீர்வு காண முடியவில்லை. அதற்குப் பிரதான காரணம் இவர்களிடையே விட்டுக்கொடுக்கும் தன்மையோ, பரஸ்பரம் கலந்துரையாடும் சுபாவமோ இல்லாமல் இருப்பதேயாகும்.

மார்ச் மாதத்தில் வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்காக அந்தக் காலப் பகுதிகளில் மட்டும் இவர்கள் நடத்தும் நாடகங்கள் இப்போது சகலருக்கும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது தெரியாமல் மக்கள் தங்களுடன் நிற்பதாக அவர்கள் நினைப்பது பரிகாசத்துக்குரிய விடயம்.

எனவே தமிழ்த் தலைமைகள் இந்த கபட நாடகங்களை நிறுத்தி விட்டு வெளிநாடுகளில் தீர்வைத் தேடாது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ்- சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் வாழக் கூடிய நிலைமை உருவாகும் என்பதே எமது கருத்தாகும்.

Comments