டியூட்டி மணியம் | தினகரன் வாரமஞ்சரி

டியூட்டி மணியம்

வெள்ளனக் காலத்தால வேலைக்கு போறவை மாதிரி அமளிப்பட்டு கிழக்கால எழும்பின சூரியன் அதே வேலைக்குப் போறவை பஸ்சுக்கு காத்துகொண்டு நிண்டு நிண்டு மணிக்கூட்டைப் பார்த்துச் சூடாகிற மாதிரியே மெல்ல மெல்ல சூடாகி மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான். அலுவலகத்துக்குப் போறதுக்கு தயாராகிக் கொண்டிருந்த பிஎச்ஐ மணியம் மேல எழும்பி வந்த சூரியனையும் பார்த்து தன்ரை மணிக்கூட்டையும் பார்த்து “தேவி கெதியா என்ரை பையை எடுத்துக் கொண்டு வா” எண்டு குசினியுக்கை கைவேலையாயிருந்த தன்ரை மனிசிக்கு குரல் கொடுத்தபடியே வந்து முற்றத்தில் நிண்ட தன்ரை மோட்டச் சயிக்கிளை ஸ்டார்ட் செய்தார்.

தேவியோ வாற சாடையைக் காணேல்லை அவள் வரும்வரையும் முகநூலிலை கண்டதையும் கவிதை எண்ட பெயரில போட்டுவிட்டு லைக்கிற்கு காத்துக் கொண்டிருக்கும் புதுக்கவிஞர் மாதிரி மணியம் காத்துக் கொண்டிருந்தார். மணியம் ஏறத்தாழ ஆறடி உயரமான கறுத்த மெல்லிய உடல்வாகு உடையவர். முன்னுக்கு சற்றே துருத்திக்கொண்டு நிற்கும் பற்கள் அவருக்கு கொஞ்சம் எடுப்பாகவே இருந்தாலும் அவர் சிரிக்கும் போது கருங்கல்லில காகம் எச்சம் போட்டது போல இருக்குது எண்டு அவற்றை பிள்ளையள் அவரைப் பகிடி பண்ணுவினம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மணியம் அக்சிலேடரை முறுக்கினபடி மூக்குக்கு மேல் வழுக்கி விழுந்த கண்ணாடியை இடது கையால் உயர்த்தி விட்டபடி “என்னப்பா இன்னும் காணேல்லை” எண்டு கொஞ்சம் குரலை உயர்த்திக் கத்தினார். அவர் அப்பிடி கொஞ்சம் கோபமாகக் கத்தேக்கை கண்கள் போட்டிருக்கிற சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள்ளாலை பிதுங்கி வெளியிலை விழுகிறமாதிரி இருக்கும். “என்னப்பா விடியக்காலமையே சுடுதண்ணி குடிச்ச என்னவோ மாதிரி இந்தக் கத்து கத்துறியள் அயலட்டையில உள்ள ஆக்கள் என்ன நினைப்பினம்” எண்டபடி மணியத்தின் பையைக் கொண்டு வந்து தேவி குடுத்தாள்.

தேவி பையைக் குடுத்தது தான் தாமதம் மோட்டர் சயிக்கிளை முறுக்கிக் கொண்டு வேகமா போற மணியத்தை பார்த்த தேவி “இந்த ஆள் போற வேகத்தை பார்த்தால் இன்னும் இரண்டொரு வருசத்திலை ரிற்றையர் பண்ணுற ஆள் மாதிரியாத் தெரியேல்லையே” எண்டு மனசுக்கை நினைச்சபடி திறந்து கிடந்த கேற்றை இழுத்து சாத்திவிட்டு வீட்டுக்குள்ள போனாள். வேகமாப்போன மணியம் நகரின்ரை நுழைவாயிலில் இருந்த இலங்கை வங்கியின் வெளிப்புறவாயிலை அண்டி இருந்த ஏரிஎம் மிசினுக்கு கிட்டவா காசு எடுக்கிறதுக்கெண்டு தன்ரை மோட்டச் சயிக்கிளை நிப்பாட்டினார் . காசை எடுத்து தலையைக் குனிஞ்சு எண்ணிக் கொண்டு வரேக்கை “சேர்” எண்ட குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் .

கொஞ்சம் வாட்டசாட்டமான சினிமாவில வாற நவீன வில்லன் மாதிரி பணக்காரத்தனமான தோற்றம் கொண்ட ஒரு இளந்தாரிப் பெடியன் தன்ரை மோட்டச்சயிக்கிளை ஸ்ரான்ட் போட்டு நிப்பாட்டிப் போட்டு அவருக்குக் கிட்டவா வந்தான். மணியம் கண்ணாடிக்குள்ளால உத்து உத்து பார்த்தும் அவனை அவரால அடையாளம் காண முடியவில்லை .

“என்ன சேர் என்னைத் தெரியேல்லையே ஞாபகம் இல்லையே” எண்டான் அவன். “இல்லைத் தம்பி விளங்கேல்லை நீர் ஆரெண்டு சொல்லும்” எண்டார் மணியம். “சேர் அஞ்சு வருசத்துக்கு முந்தி நான் உதில ரவுனுக்கை சந்தையில கீரை வித்துக் கொண்டிருந்தனான். அப்ப ஒருநாள் நீங்க வந்து நான் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் கீரை விக்கிறன் எண்டு என்ரை கீரைக்கட்டுகளை பறிச்சு குப்பைக் கிடங்குக்கை போட்டுப் போட்டு எனக்கு கோட்டில கேசும் போட்டனீங்கள் எல்லே ஞாபகம் இருக்கே” எண்டான் .

+ + + + + + + + + + +

அண்டைக்கு ஒருநாள் வேலை நிமித்தமாக தன்ரை சக அலுவலர்களுடன் நகரில இருந்த சந்தைக்குப் போன மணியம் வியாபாரிகள் எல்லாம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தங்கடை சாமான்களை விக்கினமோ எண்டு பரிசோதிச்சார். அப்படி சரியான வழிமுறைகளை பின்பற்றாம சாமான் வித்த வியாபாரிகளின்ரை சாமான்களைப் பிடுங்கி அழிச்ச மணியமும் அவற்றை சகாக்களும் அந்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யிறதுக்கான ஆயத்தங்களையும் செய்திச்சினம்.

அப்படி அவை பாத்துக்கொண்டு வரேக்கை சந்தையின்ரை கேற்றுக்கு கிட்டவாக ஊத்தையான அங்கங்கை குறுக்கும் மறுக்குமா தையல் போட்டிருந்த களிசான் சேட்டோடு எண்ணையைக் கண்டு கனநாட்கள் போன வாரப்படாத நல்லா வளர்ந்த பரட்டைத் தலையோட நிண்ட பெடியொண்டு ஏறத்தாழ பதினைஞ்சு வயதிருக்கும் ஒரு பசளைப் பையை நிலத்தில விரிச்சுப் போட்டு அதுக்கு மேல கீரைக் கட்டுக்களை அடுக்கி வைச்சு “கீரை கீரை” எண்டு கத்தி வித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன் பசி பட்டினி ஒண்டும் அவனுக்கு புதுசான விஷயம் இல்லை எண்டது அவன்ரை தோற்றத்தைப் பார்த்தாலே ஆருக்கும் வடிவா விளங்கும் .

சந்தைக்கு கீரை விற்க வந்த அவன்ரை தாய் அவன் கீரை வித்துக் கொண்டு வாற காசில உலை வைக்கக் காத்துக் கொண்டிருந்திருப்பாள். அவன்ரை தம்பி தங்கச்சிமார் அம்மா எப்ப உலை வைப்பா எண்டு காத்துக் கொண்டிருந் திருக்கக் கூடும். அதமாதிரி அவன்ரை வருத்தக்காரத் தேப்பன் மோன் கொண்டு வாற காசில கொஞ்சம் எடுத்து மருந்து வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும் .

அண்டைக்கு சந்தைக்கு அவன் விற்கக்கொண்டு வந்த கீரைக் கட்டுக்களில் ரெண்டு மூண்டு கட்டுகள் அளவிலேதான் விலைப்பட்டு இருந்தது. அவன் முகத்தில் லேசாக ஒரு சோகத்தை வருவிச்சிருந்தது.

சுப்பர் மார்கெட்டில் விலை கேக்காமல் பொருள் வாங்கும் மேட்டுத்தன ஆக்கள் எண்டு தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பும் அரைகுறைகள் இரண்டொருத்தர் “என்ன தம்பி கீரைக்கு உந்த விலை சொல்லுறாய் குறைக்க மாட்டியோ, சும்மா விளையிற கீரைதானே” எண்டு அடாவடி பண்ணிக் கொண்டிருந்தனர். “இல்லை அம்மா இது எங்கட வீட்டு தோட்டத்தில நாங்கள் பாத்தி போட்டு விளைஞ்ச கீரை. நானும் தம்பி தங்கச்சிமாரும் அம்மாவோடை சேர்ந்து கஷ்டப்பட்டு தண்ணி இறைச்சு காவல் காத்து வளர்த்தது.

நல்ல கீரை தயவு செய்து நம்பி வாங்குங்கோ அம்மா” எண்டு பசிக்களையுடன் கெஞ்சி கொண்டிருக்கும் போதுதான் மணியம் தன்ரை ஆக்களோடை அந்தப் பக்கம் வந்தார்.

வந்தவர் “அடே தம்பி உதென்ன ஊத்தை உடுப்போட நிண்டு ஊத்தை பையில கீரையை அடுக்கி வைச்சு வித்துக் கொண்டு இருக்கிறாய். இப்பிடி சுகாதாரம் இல்லாமல் வித்தால் வாங்கிச் சாப்பிடுகிற ஆக்களுக்கு கண்ட வருத்தம் எல்லே வரும். உன்னை ஆர் இப்பிடி விக்கச் சொன்னது நீ இப்பிடி எல்லாம் இஞ்சை கீரை விக்கேலாது எழும்பு’ எண்டதும் அவனிட்டை கீரை வாங்க விலை பேசிகொண்டிருந்த இரண்டொருத்தரும் அங்கையிருந்து மெல்ல நழுவிப் போட்டினம் .

அவை போனதும் அடுக்கி இருந்த கீரைக் கட்டுக்களை மணியமும் அவற்றை உதவியாளர்களும் அள்ளி எடுத்தினம். அப்படி அவை அள்ளி எடுக்கேக்கை அந்தப் பெடியன் “சேர் எடுக்காதையுங்கோ இதை வித்துக் கொண்டு போற காசை வைச்சுத்தான் நாங்கள் எல்லாரும் சாப்பிட வேணும் இல்லாட்டில் எல்லாரும் பட்டினி கிடக்க வேணும். எங்கட வருத்தக்கார அப்பாக்கு மருந்து வாங்க வேணும். சேர் உங்கட காலைப் பிடிச்சுக் கேக்கிறன் தயவு செய்து எடுக்காதையுங்கோ” எண்டு அவரின் காலைப் பிடிச்சவன் விக்கி விக்கி அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்த கொஞ்சம் இளகின மனம் உள்ள ஆக்கள் ரெண்டொருத்தார் “என்ன பி எச் ஐ ஐயா உங்க எத்தினையோ விதமான அநியாயம் செய்து உழைக்கிற கன பேரை கண்டும் காணாமலும் விட்டுப் போட்டு உந்த பஞ்சத்தில கஷ்டப்படுகிற பெடியன்ரை கீரையளைப் பிடுங்கிறியள். உங்களுக்கு மனசாட்சி எண்டதே கிடையாதே. உந்தக் கீரையை வித்து அவன் என்ன காணி பூமி வாங்கி வீடே கட்டப் போறான் . தானும் தன்ரை குடும்பமும் ஒரு வேளை சோறு தின்னத்தானே விக்க விடச் சொல்லிக் கேக்கிறான். அவனை விக்க விட்டுப் போட்டுப் போங்களேன்” எண்டினம்.

அதைக் கேட்டதும் மணியம் ”இஞ்சை பாருங்கோ நீங்கள் உங்கட வேலையைப் பாருங்கோ நாங்கள் எங்கட வேலையைப் பாக்கிறம். அப்படி இல்லாமல் கனக்க கதைச்சா எங்கட கடமையை செய்ய விடாமல் தடுக்கிறியள் எண்டு உங்களுக்கு மேல கேஸ் போட வேண்டி வரும் “ எண்டதும் “உவன் குறுக்கால போற பி எச் ஐ எப்பிடியும் நாசமாத்தான் போவான்” எண்டு திட்டியபடியே அவை அந்த இடத்த விட்டுப் போட்டினம் .

அவை போனதும் அள்ளிய கீரையைக் கொண்டு போய் குப்பைக் கிடங்கில போட்டவர்கள் அந்தப் பெடியனுக்கு எதிராக கேஸ் போடுவதற்கான ஆயத்தங்களை செய்யிறதுக்கெண்டு போச்சினம்.அழுது அழுது களைச்சுப்போன அந்தப் பெடியன் இண்டைக்கு வெட்டியால் உலை வைக்கிறதுக்கு என்ன வழி எண்டு கவலைப்பட்டபடி தன்ரை பழைய கறளேறின சயிக்கிளை மெல்ல மெல்ல உருட்டிகொண்டு சந்தையை விட்டு வெளியில போனான்.

+ + + + + + + + + + + + + +

மணியத்துக்கு அஞ்சு வருசத்துக்கு முதல் நடந்த சம்பவம் மெல்ல மெல்ல ஞாபகத்திற்கு வந்தது. இவன் முந்தி நடந்த சம்பவத்துக்கு இப்பதான் பழிவாங்க வந்திருக்கிறானோ வாளாலை கீளாலை வெட்டிகிட்டிப் போடுவானோ எண்டு கொஞ்சம் பயப்பிடத் தொடங்கினார்.

எண்டாலும் தன்ரை பயத்தை வெளியில காட்டாம “ஓமடா தம்பி இப்பதான் ஞாபகம் வருகுது .... இப்ப நீர் என்ன செய்யிறீர் “என்று கேட்டார். “நான் இப்ப நல்லா இருக்கிறன் சேர், நீங்க நான் கீரை விக்கிறதை நிப்பாட்டின பிறகு நாங்கள் ரெண்டு மூண்டு நாள் பட்டினி கிடந்தம்.

பேந்து அம்மா அப்பாவும் தம்பி தங்கச்சிகளும் பட்டினி கிடக்கிறதை என்னாலை பார்க்க ஏலாமல் போச்சுது. அதால எங்கட ஊரில கசிப்பு விக்கிற ஒருத்தருக்கு உதவியா போய்ச் சேர்ந்தன். அவர் சொல்லுற இடங்களுக்கு எல்லாம் ஆருக்கும் தெரியாமல் கசிப்பை கொண்டு போய் குடுத்து வந்தனான் அதால எனக்கு நல்ல காசு கிடைச்சுது. நாங்கள் நல்லா மூண்டு வேளையும் சாப்பிட்டம் நல்லா உடுத்தம். அப்பாவுக்கு தேவையான மருந்தெல்லாம் வாங்கிக் குடுத்தன்” எண்டவன் அவரைப் பாத்து கொஞ்சம் நக்கலாச் சிரிச்சான்.

சிரிச்சு முடிய “இப்ப நானே சொந்தமா தொழில் செய்யுறன் அஞ்சாறு பேர் என்னட்டை வேலை செய்யினம். எனக்கு எல்லா இடங்களிலும் நல்ல செல்வாக்கும் இருக்கு. இப்ப உங்களை மாதிரி உத்தியோகம் பாக்கிற ஆக்களாலை என்னை ஒண்டும் செய்ய ஏலாது சேர் என்றவன் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேணும் சேர் என்றான். அண்டைக்கு நீங்கள் என்னை கீரை விக்க விடாமல் துரத்தாமல் விட்டிருந்தால் நான் இன்னும் கீரைதான் வித்துக் கொண்டிருந்திருப்பன். நாங்கள் இன்னும் அரை வயிறும் கால் வயிறும் தான் சாப்பிட்டிருப்பம் இப்ப உங்கட புண்ணியத்திலை நாங்கள் நல்லா இருக்கிறம் சேர்” எண்டான் .

“சேர் உங்களுக்கு ஏதும் உதவி தேவை எண்டால் ஏதும் கந்தோர் வழிய ஏதும் அலுவல் நடக்க வேணும் எண்டால் ஒண்டுக்கும் யோசிக்காமல் என்ரை நம்பருக்கு போன் பண்ணுங்கோ, எனக்கு இப்ப நல்ல செல்வாக்கு இருக்குது. பொலிசிலை ஏதும் பிரச்சினை எண்டாலும் சொல்லுங்கோ. இப்ப அவை எல்லாரும் என்ரை கையுக்குள்ளைதான் இருக்கினம்“ எண்டு தன்ரை போன் நம்பரைக் கொடுத்தவன் வங்கிக்குள்ளை போனான் .

சமூக விசுவாசியாக இருந்த ஒருத்தனை சமூகத் துரோகியாக மாற்றிய தன்ரை அளவுக்கு மீறிய யதார்த்தம் இல்லாத கடமை உணர்ச்சியை வெறுத்த மணியம் குற்ற உணர்ச்சியுடன் தலையைக் கவிழ்ந்தபடி அதே சந்தைக்கு டியூட்டிக்குப் போறதுக்காகத் தன்ரை மோட்டச் சயிக்கிளை ஸ்டார்ட் பண்ணினார். (யாவும் கற்பனை)

காரைக்கவி கந்தையா பத்மானந்தன்

Comments