கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு 1

இன்னும் இன்னும் மூன்றே மூன்று ஆண்டுகள் தானாம்!

"தாய்வான்" என்ற நாட்டை சீன தேசம்! ஆக்கிரமித்து விடக்கூடுமாம்!

ஓர் அதிர்ச்சியான தகவலை, ஒருவர், 'சைனா டைம்ஸ்' என்ற நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிப்பு?

அவர், சிங்குவோ செங் அச்சோம் தாய்வான் - பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகள்!

2025ஆம் ஆண்டுக்குள் தாய்வான் முழுமையாக ஆக்கிரமிக்கும் வல்லமையை சீனா பெற்றுவிடும். சீனாவுக்கு தாய்வானைக் கைப்பற்றும் வலிமை இப்போதே இருக்கிறது. ஆனால், அந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய இழப்புகளையும் எதிர்ப்புகளையும் 2025ஆம் ஆண்டுக்குள் சீனா குறைந்தபட்ச அளவுக்குக் குறைந்துவிடும்.

சமீபத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து தாய்வானின் வான் எல்லைக்குள் சுமார் 150 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அந்தத் தீவு நாட்டு எல்லைக்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சீனப் போர் விமானங்கள் ஊடுருவியது இதுவே முதல் முறையாகும்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த தாய்வான் ஜனாதிபதி சாய் இங்- வென் 'சீனாவுக்கு எதிராக தாங்கள் அசட்டுத் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம். ஆனால் எங்களது எல்லைகளைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்' என்றார்.

பாதுகாப்புத் துறைக்கு 24,000 கோடி தாய்வான் டொலர் விசேட நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து தாய்வான் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தத் தகவலை வைத்துக் கொண்டு எந்தக் கருத்தையும் பேனாப் பதியாது. என் மூத்த பேனா பதியாது இருப்பது இலங்கைக் குட்டித்தீவில்! கடல் சூழ் பிரதேசத்தில் இங்கேயும் பலருக்கு அந்தப் பயம்!

இனிப்பு 1

நமது முன்னோர்கள் அனுபவித்திராத, அறிந்திராத அருமையான சில நிகழ்வுகள் நாம் வாழும் காலத்தில் நமக்கு!

அதிலும் கலை - இலக்கிய - ஊடகத் துறையினருக்கு அதிவிசேடம்.

சென்றமாதத்தில் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார் அல்லாமா ம.மு. உவைஸ் நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடி மகிழ அரசு​ வெளியிட்ட அஞ்சல் நினைவு முத்திரையைத் தொடர்ந்து இம்மாதத்திலும் அப்படியொரு நிகழ்வு! (16.02.2022)

அச்சு ஊடகத்துறை ஜாம்பவான்' என ஏகமனதாக அனைவராலும் 'முத்திரை குத்தப்பட்டு' விட்ட ஆளுமை மிகு பேனா மன்னர் கிழக்குச் சீமை (எஸ்.டி) சிவநாயகம் அய்யா அதே பெருமையை, பெரும் கௌரவத்தைப் அரசிடமிருந்து பெற்று விட்டார்!

அதிலும் ஓர் அதிசயம், ஊடகத்துறையின் உச்சியில் அமர்ந்து கொண்டவாறே ஆன்மிக சீலராக • சத்திய சாயி பாபா பக்தராக நடைபயின்ற அறிவு ஜீவி, அந்த மகானுக்காக அமைந்த ஆலய மண்டபத்திலேயே தன் நூற்றாண்டு நினைவஞ்சல் முத்திரை வெளியிடப் பெறும் பாக்கியம் பெற்றது!

கிழக்கின் திருகோணமலையில், 1921 ஜூலை 02ல் பூமித்தாயின் வெளிச்சம் கண்ட எஸ்.டி. எஸ். அய்யா, வெகு இளமையிலேயே கூட்டுறவுச் சங்கப் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர்.

கல்வி கற்ற காலத்தில் நடத்திய கையெழுத்து இதழும் 'கல்கி' சஞ்சிகையும் அதன் ஆசிரியர் ரா. கிருஷ்ண மூர்த்தியாரும் வேறொரு இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்க தேனக மட்டக்களப்பில் குடியேறியவர், தன் 25, 26ஆம் அகவையில் ஐக்கிய தீபம் (1946) உதயம் (1947) என இதழ்கள் வெளியிட்டு, 1948ல் நமது மூத்த 'தினகரன்' துணை ஆசிரியராகவும் பளிச்சிட்டார்.

சுதந்திரன் (1950)
தமிழின்பம் (1962)
வீரகேசரி (1964)
தினபதி, சிந்தாமணி (1966)
மாணிக்கம் (1976)
சூடாமணி (1997)

என இலங்கை தமிழ் இதழ்களின் ஜாம்பவான் ஒருவர் பரிணமித்தார்!

அவர் ஏற்றிவைத்த 'ஏணி' யில் கால் பதித்த எம் போன்றோர் 'எஸ்.டி. எஸ். அய்யா' என்ற வார்த்தையைத் தவிர வேறொன்றும் உச்சரியோம்!

1950ல் நான் வாழ்ந்த கோட்டடிக்குப் (ஹல்ஸ்டோர்ஃப் வீதி) பக்கத்துத் தெருவில் (பண்டாரநாயக்க மாவத்தை) "சுதந்திரன்" செயல்பட்ட பொழுதே அய்யாவை அறிய வந்தேன்.

அதுவும் எப்படி? அந்த இதழின் 'மாணவர் மன்றம்' பக்கத்திற்குக் பாகிஸ்தான் லியாக்கத் அலிகான் பற்றிய கட்டுரை ஒன்றை, எதிர்வீட்டு எம்.எச்.எம். இபுராஹிம் (சுதந்திரன்) துணை ஆசிரியர் வழி வழங்க, "தம்பி, உன் எழுத்து ரொம்ப வித்தியாசம்! தொடர்ந்து எழுதணும்!" என்று முத்திரை குத்த, அது பிற்காலத்தில் "தினபதி" முதலாம் இதழில் முதல் தலைப்புச் செய்தி வரை இந்தப் பேனையை இழுத்துச் சென்றதை இன்று நினைக்கையில், இன்பக் கனவாக இதயகீதமாக ஒலிக்கிறது.

எவர் எவர் எப்படி எப்படி நினைத்தாலும் சரி தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து கணிசமானவர்களை இலக்கியம், இதழியல் இரண்டிலும் ஊடாடச் செய்த மாமனிதர் நூற்றாண்டுகாணும் இந்த நினைவு முத்திரையாரே! இவரைத் தொடர்ந்தவர்களாகவே, கே. கைலாசபதியும் ஆர். சிவகுருநாதனும் நடை போடுகிறார்கள்.

தெளிவாகவே சில பதிவுகளை இட்டு விடட்டுமா?

இலக்கியத் தாகம் மேலிட்டவர்களாகத் தவியாய்த் தவித்த கிழக்கிலங்கை மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய கவிஞர் அப்துல் காதிர் லெப்பை, பித்தன் கே.எம். ஷா, புரட்சிக் கமால், அ.ஸ. அப்துஸ்ஸமது, ஈழ மேகம் எம்.ஐ.எல் பக்கீர் சாலி தம்பி, யூ.எல். தாவூது, யுவன் எம்.ஏ. கபூர், அண்ணல் மருதூர்க் கொத்தன் ஆகியோரை கதை, கவிதை, கட்டுரைகளில் பிரபல்யமடைய வைத்து பிற்காலத்தில் எழுத்துலக ஜாம்பவான்களாக்கினார். இதில் பதுளையைச் சேர்ந்த சாரணா கையூமும் சேர்வார்.

"கிழக்கிலங்கையின் இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து அத்துறையில் மட்டக்களப்பு பின் தங்கிவிடாது பார்த்துக் கொண்ட பெருமை இவரையே சாரும்" எனப் பிரபல யாழ். திறனாய்வாளர் இரசிகமணி கனக செந்திநாதன் தன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலின் (1964) 194ஆம் பக்கத்தில் பதிந்துள்ளது கல்லின் மேல் எழுத்து!

அன்றைய 'தினபதி'யில் நாள் தோறும் வந்த 'கவிதா மண்டலம்' மரபுக்கவிஞர்களுக்கு மகுடம் சூட்டியது. அவர்களுள் தலையாய கவிமணியாகச் சுடர்விட்டவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன்!

அவருடன் சட்டென்று என் நினைவலைகளில் எம்.எச்.எம். அஷ்ரப் (மர்ஹூம்), பாவேந்தல் பாலமுனை பாறூக், சோலைக்கிளி அதீக், ஆசுகவி அன்புடீன், திக்குவல்லை கமால், மன்சூர் ஏ. காதர் போன்றோர் வலம் வருகின்றனர்.

எவ்வாறாயினும், மன்னார் கலைவாதி கலீல், சம்மாந்துறை அஸீஸ், மருதூர் அலிகான், பதியத்தலாவை ஃபாறூக், மாத்தளை கமால், கவிவாணன் அஸீஸ், கொழும்பு கலைக்கமல் (பாடகர்) மற்றும் பெண் மணிகள் றிஸ்வியா நஃபீல், சித்தி பரீதா, மும்தாஜ் போன்றவர்களையும் தேடலிட்டுப் பட்டியலிடவே வேண்டும். அப்படியும் யாரும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

இதேபோல், பல முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.

நவமணியின் முதல் ஆசிரியரான எம்.பி.எம். அஸ்ஹர். தினகரன் எஃப் எம். பைறூஸ் (மர்ஹூம்கள்) முதற்கொண்டு. இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் லத்திப் பாறூக், எம்.எல்.எம். அய்யூப், கலைவாதி கலீல், நௌஷாத் முஹிதீன் பீ.எம். முர்ஷிதீன் நூறூல் அய்ன் நஜ்முல் ஹூசைன் ஆகியோருடன் சமீபத்தில் இறை அழைப்பை ஏற்ற முஃபீதா உஸ்மான திருவாட்டியாரையும் இணைக்க வேண்டும்,

இன்றையப் பொழுதில் இலங்கை இதழியல், ஊடக வரலாற்றில் தேசிய நாளேட்டாளர் ஒருவர், முதன் முதல் அஞ்சல் முத்திரையில் அலங்கரிக்கப்படுகிறவர். எங்கள் ஊடக ஜாம்பவான் 'எஸ்.டி.எஸ்' அய்யா அவர்களே!

ஆனந்தம், அளப்பரிய ஆனந்தம்!

Comments