நல் வாழ்வுக்காக குடிநீர்! | தினகரன் வாரமஞ்சரி

நல் வாழ்வுக்காக குடிநீர்!

நாம் உயிர் வாழ்வதற்கு தூய குடிநீர் அவசியமாகும். குடிக்கக்கூடிய அனைத்து திரவ பானங்களிலும் தூய நீரே சிறந்ததாகும். நீர் ஏன் நமக்கு அத்தியாவசியமானது? எமது உடலில் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதி நீராகும். நீரின்றி மனிதனால் 3 தொடக்கம் 5 நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. அதற்குக் காரணம் நீர் உடலில் பல தொழிற்பாடுகளை ஆற்றுகின்றது.

நீர் குருதியின் பிரதான கூறாக அமைந்துள்ளது. அது குருதியில் ஒக்ஸிசனை காவிச் செல்கின்றது. ஊட்டச் சத்துகளையும் எடுத்துச் செல்கின்றது. நாம் உண்ணும் உணவைச் சமிபாடடையச் செய்கின்றது. எமது உடலின் வெப்ப நிலையைச் சீராகப் பேண உதவுகின்றது. எமது உடலைக் காயங்களிலிருந்து பாதுகாக்கின்றது. வாய், கண்கள், மூக்கு என்பவற்றின் மேற்பரப்பை ஈரலிப்பாக வைத்திருக்கின்றது.

நமது உடலில் உண்டாகும் கழிவுகளை வியர்வை, சிறுநீர், கண்ணீர், சளி மூலம் வௌியேற்றுகின்றது. நமது மூளையின் சிறப்பான செயற்பாட்டிற்கு உதவுகின்றது. மலச்சிக்கல் ஏற்படாதிருக்க உதவுகின்றது. நாம் தேவையான அளவு நீரை அருந்தாவிடில் வேண்டத் தகாத விளைவுகளை எதிர்நோக்கலாம். தோல் உலர்ந்து சுருக்கமடையும். கோபமான மனநிலை ஏற்படும். எந்நேரமும் தூக்கத்தன்மை, உறுதியற்ற தன்மை, உடல் அசதி ஏற்படும். வாய், கண் என்பன உலர்ந்துபோய் கிருமிகள் பெருக்கமடையும். எந்நேரமும் தாகம் உணரப்படும். மாணவர்களாயின் கல்வியில் கவனக்குறைவு ஏற்படும். கல்விக்கு மேலதிக செயற்பாடுகளின்போது திறம்பட செயற்பட முடியாமல் போகும். எனவே நாம் போதியளவு தூய நீரை அருந்த வேண்டும்.

ஏ.எச். அப்துல் அலீம்,
தரம் 08 சி, அலிகார் தேசிய கல்லூரி,
ஏறாவூர்.

Comments