கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

“MILLION” (மில்லியன்) என்றொரு ஆங்கில வார்த்தை ஆனால் “புதியதொரு தமிழ் வார்த்தையோ” என்கிறபடி ஊடகத்துறையின் சகல பிரிவுகளிலும் உபயோகமாகிறது. உச்சரிக்கப்படுகிறது. இதன் அசல் தமிழை எவரும் சொல்ல ஆர்வப்படுவதில்லை. “பத்து லட்சம்” என்பது தான் வாழையடி வாழையாக வழக்கில் உள்ள பிரயோகம்.

இருந்தும் என்ன, “பத்து இலட்சம்” என்பது அப்படியே அகன்று போய் “மில்லியன்”, “மில்லியன்” என்பது தான் எழுத்திலும் பேச்சிலும்!

ஆக – தமிழ் அகராதி புதிய பதிப்பில் ‘மில்லியன்’ இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் எக்கச் சக்கம் என்பதைக் கசப்பு கசப்பாக நான் பதிவிட பச்சைக்கொடி கூட்டுவீர்களா?

ஒரு வேண்டுகோள்;

ஊடுருவல் பேர்வழி ஆங்கில மில்லியனே, இன்னும் சில ஆங்கில வார்த்தைகளுடன் சுந்தரத்தமிழில் இரண்டறக் கலக்குக! கலக்குக!

கசப்பு-2

‘ஏடி.எம்’ ATM இயந்திரத்தில்  களவுசெய்வது எப்படி? அதாகப்பட்டது, பணத்தை அந்த இயந்திரத்திலிருந்து,

அதற்கு எந்தப் பழுதும் ஏற்படாமல் கொள்ளை அடிப்பது எப்படி? எப்படி?

“கிராமம் ஒன்றில்” குலத்தொழில் போல வாலிபர்களுக்குப் பயிற்சி நடத்துகிறார்கள்!

அங்குள்ள மனிதர்கள் யாரும் தவறு என்று தடைசெய்வதில்லை!

வங்கி ஏ.டி.எம். மையங்களில் நூதன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றிச் சொல்லிக் கொடுக்க ‘ஒரு பயிற்சிக் கூட’மே இயங்குகிறது.

அந்தக் கூடத்தில் கொள்ளை அடிக்கும் கலையில் ‘கலாநிதிகளான’ நால்வர் தமிழகத்திற்கு வந்து கொள்ளையோ கொள்ளை! 30க்கும், மேற்பட்ட மையங்களில் கைவரிசை!

அவர்கள் போன்ற பெரிய கும்பலைப் பயிற்றுவிக்கும் ‘கலாசாலை’ இருப்பது, வட இந்தியா, அரியானா மாநிலத்தில் மேடாக மாவட்டம், வல்லப்கர் கிராமம்!ஒரு சுற்றுலாவில் அந்தக் கிராமத்தைச் சென்று பார்த்தால் என்ன? ஆனால் பயிற்சி எதுவும் எடுக்கக் கூடாது!

இனிப்பு

இன்றையப் பொழுதில், என் வயதில், என் பார்வைக்கு எட்டிய வரையில், ‘இலக்கியக் குடும்பம்’ எனத் தெரிவது வடதிசைப் புன்னாலைக் கட்டுவான் வழி வெள்ளவத்தையில் வதிகின்ற சாகித்ய விருதாளர் தி. ஞானசேகரன் குடிலே!

அங்கு அவருக்கு உற்ற துணைவியாக ‘ஞானம்’ எனும் பெயரை உடைய இலக்கிய சகோதரியும், அருமந்த புத்திராகப் புன்னகை மன்னன் பாலச் சந்திரனும்.

இந்த மும்மணிகளும் இருபத்தியிரண்டு ஆண்டுகள் அலுக்காமல் சளைக்காமல் இலக்கியப் பயிர் விதைத்து, ‘ஞானம்' என்னும் பெயர் சூட்டி, மாதத்தின் முதலாம் நாள் விளைச்சல் கண்டு அறுவடை செய்து வலைத்தளங்களில் வழங்க அலைகடலுக்கப்பாலும் பயணித்து விடும். அதன்பின் அஞ்சல் வழி இங்கும் கிடைக்கும்.

அதன் நிறுவனரும் பொறுப்பாசிரியரும் ஞானசேகரன் அய்யா என்றால், துணைவியார் இணை ஆசிரியர். மகன் நிர்வாக ஆசிரியர்.

இப்படிபொரு இலக்கியத் குடும்பப் பூங்காற்று இலங்கையில் இவர் குடிலில் மட்டுமே வீசுகிறது!

இப்பொழுது அவருக்கு அகவை எண்பது. இந்த வயதில் பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்களை மிஞ்சிக்கொண்டு காரியம் ஒன்று.

அது, பெருந்தொகை பணத்துடன் சம்பந்தப்பட்டது சுமார் மூன்றரை லட்சம்! இன்றையக் கிருமி காலத்தில் பறந்து பறந்து போய் இலக்கிய ஆளுமைகளுக்குப் போய்ச் சேர வழி அமைத்திருக்கிறார் அவர்தம் உற்ற துணைகள் இருவரினதும் அனுசரணையோடு!

உண்மையில் அது நிகழ்வுறுவது (எதிர்வரும் பெப். 12சனிக்கிழமை தமிழ் சங்கம்) அவரது எண்பதாம் அகவைப் பூர்த்தியைக் கொண்டாடி மகிழும் வகையில் ஏற்பாடு.

‘ஞானம்’ கடந்தாண்டுப் பிறபகுதி சஞ்சிகை ஒன்றின் முகப்பட்டையைப் பார்த்த மாத்திரத்தில் திருப்பி உள் அட்டையை கண்கள் மேயும் பொழுது ஒரு முழுப்பக்க வண்ண விளம்பரம். இங்கே இந்தப் பந்தியில் கால் பக்கத்தை மட்டுமே வழங்க இடம்.

இம், முயற்சியை, இலங்கை இலக்கிய வரலாற்றில் ‘ஒரு தனி மனித’ அல்லது ‘இலக்கியக் குடும்பம் ஒன்றின்’ அதிசயமான அபூர்வமான கைங்கரியம் என்றே வர்ணித்து இனிப்பு இனிப்பாக வழங்கி மகிழ்கின்றேன்.

அவர்கள் அறிவித்தது போல் இவ்வாண்டு ‘ஞானம்’ பெ. 260ஆம் இதழில் போட்டி முடிவுகள் வெளியாகி உள்ளன. முன் குறிப்பிட்டது போல் பரிசளிப்பு வைபவமும் நடக்க வேண்டிய இடத்தில் நடக்க உள்ளது. மகிமை மிகு தமிழ் சங்கம், 12பெப் சனிக்கிழமை.

திட்டமிட்டபடி, ஆறு பிரிவுகளுக்குப் பரிசுகள், பாராட்டுகள். அவற்றிலே என்னை மிகவும் கவர்ந்தது ஆறாம் பிரிவு ‘ஈழத்துச் சிற்றிதழ்கள்’. போட்டி ஏற்பாடே ஒரு சிற்றிதழ் குடும்பக்காரர்கள் தான்! அவர்களே ஏனைய சிற்றிதழ்காரர்களுக்கு பரிசளிப்பது என்றால்...?

போற்றுதும் போற்றுதும்

காதோடு காதாக ஒரு தகவல்:

என் மூத்த  பேனையும் இந்தப் போட்டிக்கு ‘முண்டாசுக்  கவிஞரின் முஸ்லிம் நேசம்’  அனுப்பி தோற்றுப் போனது! எவ்வாறாயினும் தோல்வி கசப்பில் துவண்டு விடாத பேனா  இனிப்பை அள்ளி வழங்கி இருக்கிறது. காரணம் ஒரு தனி மனிதரின், ஒரு  குடும்பத்தின், உன்னத இலக்கியப்பணியைத் தோற்ற பேனா மறைத்து இருட்டடிப்பு  செய்வது அதர்மம். அதனை  எண்பத்தைந்து அகவைப் பேனைக்கு புரியாது.

Comments