நாட்டில் மீண்டும் களைகட்டும் தமிழ் இலக்கிய விழாக்கள் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் மீண்டும் களைகட்டும் தமிழ் இலக்கிய விழாக்கள்

கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக முடங்கிக் கிடந்த உலகம் இன்று மீண்டும் மெது மெதுவாக இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் நமது நாட்டில் முடங்கி கிடந்த சகல துறைகளும் இன்று மீண்டும் உத்வேகம் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.அதற்கு தமிழ் இலக்கிய விழாக்கள் விதிவிலக்கல்ல.

நாடு பல தடவைகள் முடக்கத்திற்குள்ளான போதும் காணொளிகளில் கலை விழாக்களையும் நூல் வெளியீடுகளையும் இலக்கிய உரையாடல்களையும் இடைவிடாது நடத்தி தமிழ் மொழிக்கும் தமிழ் கலைக்கும் எமது எழுத்தாளர்களும் கலைஞர்களும் உயிர் கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் இன்று மீண்டும் நாட்டில் தமிழ் இலக்கிய கலாசார விழாக்கள் நடைபெற ஆரம்பித்துள்ளமை மிக்க மகிழ்ச்சி தருகிறது. கொழும்பில் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் வாழும் சகல பிரதேசங்களிலும் இன்று கலை, இலக்கிய விழாக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

அதேபோல கொழும்பு தமிழ்ச்சங்கம் மீண்டும் தனது பணிகளை முன்னரை விடவும் உத்வேகத்துடன் புதிய இளம் தலைமைத்துவத்துடன் தொடங்கி செயற்படுத்தி வருகிறது.

கருத்தரங்குகளை சொல்லாடல்களை, நூல் வெளியீடுகளை ஆரம்பித்து தலைநகரில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் பணியாற்ற ஆரம்பித்துள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், வவுனியா தமிழ்ச் சங்கம், நுவரேலியா தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்த இரா உதயணன் தலைமையிலான லண்டன்- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகங்கள் நடத்துகின்ற  மாபெரும் விருது வழங்கும் விழா இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வழமைபோன்று இலக்கிய விழாக்களில் இதுவரை 1200க்கும் அதிகமான நூல்களின் முதல் பிரதிகளை பெரும் பணம் கொடுத்து வாங்கிவரும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் தலைமையில் பேராசிரியர் சபா ஜெயராசாவின் வழிநடத்தலில் இந்த விழா சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் மூத்த பத்திரிகையாளர் கே. பொன்னுத்துரையின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் வட்டத்தினால் அவரது 'எண்ணப் பகிர்வுகள்' எனும் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்படும். இவ்வாறு தலைநகரம் மீண்டும் தமிழ் விழாக்களால் களைகட்டத் தொடங்கியுள்ளது. இது வைரஸ் தாக்கத்தினால் வெளியே வர பயந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்களுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்ம் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இத்தகைய விழாக்களை மீண்டும் நடத்தி தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Comments