அதே கண்கள் | தினகரன் வாரமஞ்சரி

அதே கண்கள்

மாலை ஐந்து மணியிருக்கும் – புதிதாக கட்டப்பட்ட அந்த மலையக வீட்டு திட்டத்தில் இருந்த கடைசி வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது... அந்த வீட்டுத் திட்டத்திலிருந்த தொழிலாளர்கள் அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்த நிலையில் வெகுதூரத்தில் பொலிஸ் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. சுமார் பத்து நிமிடத்தில் அந்த இடத்தை வந்தடைந்த வாகனத்திலிருந்து நன்கைந்து பொலிஸ்காரர்கள் இறங்கினார்கள். அவர்களில்... இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியன் மிகவேகமாக குறிப்பிட்ட வீட்டை நோக்கி நடக்க சக பொலிஸ்கார்கள் அவரை பின் தொடர்ந்தார்கள்.

அந்த வீட்டையடைந்தப் போது ஒரே அழுகை சத்தமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் – வீட்டினுள்ளே நுழைந்தார். பாதி திறந்திருந்த அந்த அறைக்கதவை திறக்கச் செய்தார். உள்ளே –ஒரு பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். பொலிஸ்காரர்கள் அறையை நோட்டமிட்டார்கள். பின்பு அழகு பாண்டியனின் உத்தரவுக்கமைய உடலை கீழே இறக்க யாரோ அலறினார்கள். இதற்குள் – அம்புலன்ஸ் வாகனம் வந்து சேர சம்பவம் நடந்த அறையில் செய்ய வேண்டியதை செய்து பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு போகப்பட்டது. அழகு பாண்டியன் அந்த அறையிலிருந்த கைபேசி ஒன்றை எடுத்தார். பின்பு விசாரணை செய்ததில் பின்வரும் விடயங்களை பதிவு செய்தார்.

பெண்ணின் பெயர் அழகுநிலா. வயது 26ஆடைத்தொழிற்சாலையில் விற்பனைப் பிரிவில் பணிபுரிகிறாள். கைநிறைய சம்பளம். ஸ்கூட்டி வைத்திருக்கிறாள். பல்கலைக்கழகம் போகும் வாய்ப்பு கிடைத்த போதும் அதை விரும்பாமல் உடனடியாக வேலைக்கு போய்விட்டாள். அவளுக்கு அப்பா இல்லை அம்மாலட்சுமி தோட்டத்தில் வேலை. லட்சுமியின் தூரத்து சொந்தமான அண்ணன் பழினிசாமியின் மகள் மதிமாறன் பத்து வயதிலிருந்து லட்சுமியுடன் இங்கேயே இருக்கிறான். அவனுக்கு டவுனில் ஒரு கடை இருக்கிறது. அழகு நிலாவை தோளில் தூக்கி வளர்த்த அவனை மாமா மாமா என்று உயிரையே வைத்திருந்தாள். அழக நிலா சம்பவம் நடப்பதற்கு நாலைந்து நாளுக்கு முன்னிருந்தே அழகு நிலா முகவாட்டத்துடனிருந்தாள். யாருடனும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தாள். வேலைக்கும் போகவில்லை. லட்சுமி எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்லவில்லை.

அழகு பாண்டியன் பொலிஸ் காரியாலயத்துக்கு வந்தார். பிரேதபரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல் அழகுநிலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்ட கைபேசியை ஆராயத் தொடங்கினார். அது அவளின் கைபேசிதான்.

அழகு நிலா – இறப்பதற்கு முன்னால் – அந்த கைபேசிக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்திருக்கின்றன. அதே இலக்கத்துடன் அழகு நிலா வெகு காலம் தொடர்பில் இருந்திருக்கிறாள். அவர் அந்த எண்ணை குறித்துக் கொண்டு அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்தார். சில மணித்துளிகளின் பின் மறுபுறம் ஒரு ஆணின் குரல் கேட்டது.

“ஹலோ .. நான் காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியன் பேசுகிறேன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு... உங்க பெயர் என்ன?

“என்னோடபேரு கலைமணி... நான் காப்புறுதி நிறுவனம் ஒண்ணுல உதவி முகாமையாளனா இருக்கேன்... இப்பகண்டியிலயிருந்து வந்துக்கிட்டிருக்கேன்... ஏன் என்ன விஷயம்?

“உங்களுக்கு அழகு நிலாவை தெரியுமா?

“தெ.... தெரியும்...”

“என்ன விதத்துல தெரியும்?”

“அழகு நிலா பத்துலட்சத்துக்கு ஆயுள் காப்புறுதி செஞ்சிக்கிட்டாங்க... அவங்க மூலமா நிறைய பேருக்கு காப்புறுதி செய்யிற சந்தர்ப்பம் கிடைச்சது... ரொம்ப உதவி செஞ்சாங்க...”

“வேற எந்த தொடர்பும் இல்லையா...?

“வந்து நான் அழகுநிலாவை நேசிச்சேன். அவங்களும் தான். திருமணம் செய்யவும் முடிவு செஞ்சோம். ஆனா கடந்த சில வாரங்களா அவங்கு என் கிட்டசரியா பேசலை. எதையோ பறி குடுத்த மாதிரி இருந்தாங்க. எனக்கு எதுவும் புரியலை...”

இன்னைக்கும் பலமுறை கைபேசிக்கு ‘கோல்’ எடுத்தேன்.

ஆனா எந்த பயனும் இல்லை...”

“மிஸ்டர் கலைமணி... நீங்க கண்டியில இருந்து வந்ததும் காவல் நிலையம் வந்திடுங்க...”

“சேர்... என்ன விஷயம்...?

“அதை நேர்ல வந்து தெரிஞ்சிக்கங்க....”

அழகு பாண்டியன் தொடர்பை துண்டித்து விட்டு மறுபடியும் கைபேசியில் தகவல்கள் பகுதியை சோதனை செய்தார். அதில் ஒரு செய்தி அவர் கண்ணில்பட்டது”. கலை அவசரதேவைக்காக என் கிட்ட ஐந்து லட்சம் வாங்கினீங்க. அதை என் நண்பி ஒருத்திக்கிட்டயிருந்து வாங்கினேன். அவளோட கல்யாணத்துக்காக நதை வாங்க வச்சிருந்தா அதை உடனடியாக குடுக்கணும்..”

அவர் மேலும் ஆராய்ந்தார்.

“கலை... எப்போ கேட்டாலும் சாக்குப் போக்கு சொல்லுறீங்க பணம் கட்டாயம் தேவை. அதோட நானொரு பிரச்சினையில மாட்டிக்கிட்டேன். இப்போதைக்கு கல்யாணமெல்லாம் சாத்தியமேயில்லை. நான் ரொம்ப குழப்பிப் போயிருக்கேன்...”

“என்ன கலை கடைசியில இப்படி சொல்லுறீங்க... நான் உங்களுக்காகத்தான் பணம் வாங்கி கொடுத்தேன்... ஆனா இப்ப அதை உங்க நண்பனுக்காக வாங்கியதாகவும் அவர் சாக்குப் போக்கு சொல்லுறதாகவும் சொல்லுறீங்க. எனக்கு தலை சுத்துது. நண்பி என்னை வாட்டியெடுக்கிறதா. வீட்டில தெரிஞ்சா வறுத்து எடுத்துடுவாங்கலாம்.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இதுவேற... நிம்மியில்லாத இருக்கேன். பேசாம செத்துடலாமான்னு இருக்கு... நீங்களுமா என்னை ஏமாத்துறீங்க...?

அழகுபாண்டியன் மேலும் ஆராய்ந்தார். ஆனால் வேறு விஷேடமான விஷயங்கள் எதுவும் காணப்படவில்லை. அவர் அப்படியே சோர்வுடன் இருக்கையில் சாயந்தார். அப்போது அலுவலக தொலைபேசி அலறியது. மறுபுறம் அழகுநிலாவை பிரேத பரிசோதனை செய்த வைத்தியர் பேசினார்.

“இன்ஸ்பெக்டர்.... இது தற்கொலையில்லை. ஏற்கனவே கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செஞ்சி தூக்குல தொங்கவிடப்பட்டிருக்கு அதோட இவங்க கொலை செய்யப்படுறதுக்கு முன்னால பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்காங்க.. இதுல துரதிஸ்டமான விஷயம் என்னன்னா குற்றம் செஞ்ச வங்களோட கைவிரல் அடையாளம் எங்கேயும் இல்லை...”

அழகுபாண்டியன் – இதை எதிர்பார்க்கவில்லை. அழகுநிலாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? அவருக்கு குழப்பமாக இருந்தது. கலை மணிதான் மிக நுணுக்கமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியிருப்பானோ... முதலில் அவனைத்தான் கடுமையாக விசாரிக்க வேண்டும். அவர் சிந்தனை வயப்பட்டவராக சற்று நேரம் அமைதியாக இருந்தவர் சட்டென இருக்கையை விட்டு எழுந்தார். ‘அழகுநிலாவின் அறையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் அந்த அறையின் மூலையிலிருந்த சிறிய மேசையில் ஒரு பயிற்சிகொப்பியிருந்ததை அவதானித்தார். எதற்கும் இருக்கட்டும் என்று அதை எடுத்து வைத்திருந்தார். இப்போது – அதை எடுத்தார். அது கோடுகளில்லாத படங்கள் வரையக்கூடிய கொப்பி. அதில் நிறையபடங்கள் வரையப்பட்டிருந்தன. எல்லாமே அழகு நிலாவின் கை வண்ணம். சில படங்கள் இயற்கையாக தத்ரூபமாக இருந்தன. அவர் ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டே வந்தார். கடைசியாக ஒரு படம் தீட்டியிருந்தாள். அது அவரின் மனதை கவர்ந்துவிட்டது. இரண்டு கரும் விழிகள். நேரில் பார்ப்பதைப்போல அவ்வளவு சிறப்பாக இருந்தது உற்றுப் பார்த்தவருக்கு சட்டென பொறி தட்டியது. அழகுநிலா இறப்பதற்கு முன் தீட்டிய படமாக இருக்கவேண்டும். அதில் அவள் எதையோ சொல்ல நினைத்திருக்கிறாள். இந்த இரண்டு கண்களும் ஏன் கொலைக்காரர்களுடையதாக இருக்கக்கூடாது அவர் ஒரு முடிவுக்கு வந்தார். முதலில் கலைமணியை விசாரிக்கவேண்டும். இந்த கண்களுக்குறியவன் அவன் தானா என்று ஆராய வேண்டும்.

ஒருவாரம் ஓடியது. அழகுபாண்டியன் மிக கவனமாக நேர்த்தியாக வேலை பார்த்ததில் எந்தப் பயனும் இல்லை. சம்பவம் நடந்த அன்று கலைமணி கண்டியில் இருந்திருக்கின்றான். அழகு நிலாவிடம் பணம் வாங்கி அதை பார்த்திபனுக்கு கொடுத்தது உண்மைதான். பார்த்திபனையும் விசாரித்து விட்டார். இருவரும் நான்கைந்து வருடங்களாகத்தான் நண்பர்களாக இருக்கிறார்கள். அழகுநிலாவின் தாய் லட்சுமியை விசாரித்த வகையில் அழகு நிலாவை பற்றி பெரிதாக எந்தகுறையும் சொல்லவில்லை. ஆனால் அன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்காக அந்தப் பகுதி தொழிலாளர்கள் அனைவரும் காலையிலேயே போய் விட்டதாகவும் அழகு நிலா மட்டும்தான் வீட்டில் இருந்ததாகவும் சொன்னமையானது அவருக்கு நெருடலாக இருந்தது. சம்பந்தப்பட்ட குற்றவாளி கையருகேதான் இருக்கின்றான். ஆனால் அவனை அடையாளம் காண்பதில்தான் கஷ்டமாக இருக்கின்றது. அவர் மறுபடியும் அந்த கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென அவருக்கு மறுபடியும் பொறி தட்டியது. இந்த கண்களுக்குரியவனை எங்கேயோ மிக சமீபத்தில் பார்த்திருக்கிறார். வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவருக்கு இப்போது பளீச்சென்று ஞாபகம் வந்தது. அவர் கணக்கு சரியாக இருந்தால் அவன்தான் குற்றவாளி. அவர் தூண்டியைப் போடதயாரானார். மீன் நிச்சயமாக மாட்டும் என்று நம்பினார்.

அந்த ஹோட்டல் ஒதுக்குப் புறமாக இருந்தது. அதில் ஒரு அறையில் அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக வட்டமேசையொன்றினருகே அமர்ந்திருந்தார்கள். மேசையில் வெளிநாட்டு மதுவும் டெவல் செய்யப்பட்டமீனும் இருந்தது. அதிலொருவன் கண்ணாடி கிளாஸிலிருந்த மதுவை வாயில் கவிழ்த்து விட்டு எதிரே இருந்தவனை பார்த்தான். ‘வெள்ளம் தலைக்கு மேலே போக ஆரம்பிச்சிடுச்சி. அவன் பாண்டியன் கேஸில் பாதிவரை வந்துட்டான். நம்ம போட்ட திட்டம் புஸ் வானமாகிக்கிட்டுவருது. இப்ப என்ன செய்யிறது.

“எல்லாம் உன்னால் வந்தது. அப்பவே சொன்னேன் சந்தேகத்துக்கிடமான பொருள் ஏதுமிருந்தா எடுத்துட சொல்லி நீபதற்றத்துல சரியா பார்க்காம ஒண்ணுமில்லை என்று சொல்லிட்டே... இப்ப அவங்க கையில என்னமோ மாட்டியிருக்குன்னு நான் நினைக்கிறேன்... கொஞ்சம் கவனமா இருக்கணும்...”

“நீங்கதான் அழகுநிலா வோட கைபேசியையும் எடுக்க வேணாம்னு சொல்லிட்டிங்க...”

“இல்ல... அதுல பெரிசா எதுவும் இல்லை. நமக்கு பாதகமானதைவிட சாதகனமானது தான் இருக்கு...”

“சரி... எனக்கு தர வேண்டியதை எப்போ செட்டில் பண்ண போறீங்க... என்னால ரொம்ப நான்காத்திருக்கமுடியாது. இதுல ஏதாவது வில்லங்கம் வந்தா அவ்வளவுதான்... “எப்படியும் இன்னும் ஒரு மாதம் சரி நீ காத்திருக்கணும் அவசரப்பட்டா ஆபத்துல மாட்டிக்கணும்...”

 அவர்கள் – மெதுவாக பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று அவர் வந்து நின்றார். அவர் அழகுபாண்டியன் – அவருடன் நான்கைந்து பொலிஸ்காரர்களும் நின்றிருந்தனர்.

மறுநாள் காலை மணி ஒன்பது. அந்த காவல் நிலையத்தில் – இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியன் இருக்கையில் அமர்ந்திருக்க எதிரே மேசைக்கு பக்கத்தில் அவர்கள் கைகளில் விலங்குகளுடன் தலை குனிந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் கோபத்துடன் அவர்களின் ஒருவனை பார்த்தார்.

“நீ அழகுநிலாவை பலவந்தப் படுத்த பலமுறை முயற்சித்ததாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீதான் காரணமாக இருப்பாய் என்று அழகுநிலா தன்கைப்பட கடிதம் எழுதி இந்த கொப்பியில் வைத்திருக்கிறாள் இது தான் உன்னை காட்டிக் கொடுத்தது. இப்போ சொல்லு... எதுக்காக அவளை நாசப்படுத்தி கொலை செஞ்சே... இவன் எப்போது உன்னோட கூட்டுச் சேர்ந்தான்...?

தலை குனிந்திருந்த மதிமாறன் சோர்வுடன் அவரைப் பார்த்தான்.

“அழகு நிலாவை சின்னவயசுல இருந்து நான்தான் தூக்கி வளர்த்தேன். அவமேல ஆரம்பத்துல அன்பு, பாசம் மட்டும் தான் இருந்தது. ஆனா அவ பருவமங்கையா பூத்து குலுங்கியப்போது எனக்கு அவமேலே காதல் ஏற்பட்டுச்சி. சாதாரணமான காதல் இல்லை. வெறிப்பிடிச்ச காதல். அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செஞ்சேன். “மாமா.... மாமா... ன்னு என்னையே சுற்றி சுற்றி வந்தவ திடீர்ன்னு ஒருநாள் தான் கலைமணியை காதலிப்பதாகவும் கல்யாணம்னு நடந்தா அது அவனோடத்தான்னு சொன்னப் போது நான் ஆடிப் போயிட்டேன். கலைமணியை எனக்கு நல்லா தெரியும். அழகு நிலாவுக்கு ஆயுள் காப்புறுதி பத்துலட்சத்துக்கு போட்டதோட நொமினியாக என் பெயரை அவன்தான் போட்டான். அழகு நிலா எந்த விதத்திலாவது அகால மரணம் அடைஞ்சா நொமினிக்கு மூன்று மடங்கு பணம் கிடைக்கும். அவளே எனக்கு கிடைக்கமாட்டாள்ன்னுறப்ப அந்தப் பணமாவது எனக்கு கிடைக்கட்டும்னு நான் நினைச்சேன் அவன் கலைமணியின் நண்பன் பார்த்திபனை பிடித்தேன். கலை மணிகிட்ட ஐந்துலட்சம் கேட்கசொன்னேடன். அவன் கிட்ட அவ்வளவு பணம் இருக்காது. அதுனால நிச்சயமா அழகு நிலாக்கிட்ட வாங்கித் தருவான்னு கணக்குப் போட்டேன். திட்டம் வெற்றியளிச்சதும் பணத்தை பங்குப்போட்டுக்கிட்டோம். அடுத்தது அவளோட முப்பது லட்சம் ஆயுள் காப்புறுதிப் பணம். அதுக்கு ஒரு திட்டம் தீட்டினேன். அழகு நிலாவை நாசம் பண்ணி தூக்கில் போடுறது. கொலை – அகால மரணம் – காரணம் கற்பழிப்பு மூச்சுத்திணறல் என்று பிரேத பரிசோதனை வரவேண்டும். அப்போதுதான் அந்தப்பணம் கைக்கு கிடைக்கும். அவளுக்கு பலவந்தமாக போதையேற்றி நானும் பார்த்திபனும் அடுத்தடுத்து அனுபவித்தோம். பார்த்தியின் தான் கழுத்தை நெறித்தான். அடையாளங்கள் இல்லாத படி பார்த்துக் கொண்டோம். சாட்சிகளும் இல்லை. பழி கலைமணியின் தலையில் விழும் என்றுதான் திட்டம்போட்டோம். ஆனால் அவன் கண்டிக்கு காலையிலயே போன விஷயம் தெரியாது. அதோடு அவள் இப்படி ஒரு கடிதத்தை எழுதி வைத்திருப்பானென்றுநான் எதிர்பார்க்கவும் இல்லை. ஏற்கனவே போதை பொருளுக்கு அடிமையான எனக்கு அழகு நிலா கிடைக்க மாட்டாளென்று உறுதியானதுமே அவளை கொல்வதுடன் அவளிடமுள்ள பணத்தையும் கையகப்படுத்துவதற்காகத்தான் இப்படி செஞ்சேன். ஆனா... ஆனா விதி வேறுமாதிரி கணக்கு போட்டிருச்சி...”

அழகு பாண்டியன் – கேலியுடன் அவனைப் பார்த்தார். “முட்டாள்... நீ சொன்ன வாக்கு மூலம் மிக சிறப்பாக பதிவாயிடுச்சி.... ஆனா – அழகு நிலா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவள் வரைந்த ஓவியம்தான் உன்னை சிக்கக வச்சது. அழகுநிலா... கலைமணியை மணம் முடிக்க போறதா எப்போது சொன்னாளோ அன்றிலிரிந்து நீ அவளுக்கு நெருக்குதல் குடுத்திருக்கே... பார்த்திபன் மூலமா பணம் வாங்க வச்சி அழகு நிலாவுக்கும் கலைமணிக்கும் பகையை ஏற்படுத்த முயற்சி செஞ்சே.

எனக்கும் ஆரம்பத்துல கலைமணி மேலே சந்தேகம் இருந்திச்சி. அவன் கண்டிக்கு போனதா சொன்னப்போ ஆள் வச்சி செஞ்சிருக்கலாமோன்னுற கோணத்துலயும் விசாரிச்சிப் பார்த்தேன். ஆனா அழக நிலாக்கிட்ட வாங்கின பணத்தை எப்படியாவது செட்டில் பண்ணுறதுக்காக கண்டிக்கு போய் கையோட பணம் கொண்டு வந்ததை என்கிட்ட காட்டினப் போதும் ஏற்கனவே அழகுநிலா தீட்டிய அந்த கண்கள் கலைமணிக்கு பொருந்துதான்னு நோட்ட மிட்டேன். இல்லை பொருந்தலை.

ஆனா நான் விசாரணைக்காக உன்னோட வீட்டுக்கு வந்தப்ப அந்த கண்களை பார்த்திருக்கேன். நல்லா யோசிச்சிப் பார்த்தப்ப உன்னோட ஞாபகம் வந்தது. தூண்டில் போட்டு பிடிச்சிட்டேன்....”

இன்ஸ்பெக்டர் அழகுபாண்டியன் வெற்றிப் புன்னகையுடன் அவனைப் பார்க்க அந்த கண்கள் பயபீதியுடன் மூடிக்கொண்டன. வெளியே தூறலாக பெய்துக் கொண்டிருந்த மழை திடீரென்று கொட்டத் தொடங்கியது. (யாவும் கற்பனை)

பாலா சங்குப்பிள்ளை

Comments