இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர | தினகரன் வாரமஞ்சரி

இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர

எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடுகளில் நம் நாடு இலங்கையும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம், இங்கு நிலவும் இலவசக் கல்வி முறையாகும்.  நாட்டில் அனைத்து மாணவர்களும் சமமான கல்வியை கற்க வேண்டும் எனும் நோக்குடன் 1931ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரையிலான சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சரான  கலாநிதி கிரிஸ்தோபர் வில்லியம் விஜேகோன் கன்னங்கரவினால் இலவசக் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.  சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கர 1884.10.13ஆம் திகதி காலி மாவட்ட அம்பலங்கொட, ரந்தொம்ப கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை ரந்தொம்ப வெஸ்லி உயர்தர பாடசாலையிலும், பின்னர் காலி ரிச்மன்ட் கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்தார்.  காலி ரிச்மன்ட் கல்லூரியில் பணக்கார பிள்ளைகள் கற்கும் பாடசாலையாக காணப்பட்டதால் பல சவாலுக்கு மத்தியில் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் பொறுமையாக நாட்களை நகர்த்தி 1902ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்கு தோற்றிய, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளிலே அதிக புள்ளிகளைப் பெற்று   முதல்  மாணவனாக தெரிவானார். இதனால் காலி ரிச்மன்ட் கல்லூரியின் பெருமை உலகளாவிய ரீதியில் பரவியது. 

காலி ரிச்மன்ட் கல்லூரியில் படிப்பை வெற்றிகரமாக பூர்த்திசெய்த கன்னங்கர, ஆசிரியராக இருந்துகொண்டே   பல்கலைக்கழக கல்வியையும், சட்டக்கல்வியையும் பயின்று சிறப்பாக தேர்வடைந்து 1910ஆம் ஆண்டு வழக்கறிஞராக தொழில் புரிந்தார். 

1923ஆம் ஆண்டு  நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் மூலம் காலி தொகுதியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது அவரின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.  

இவரின் கல்விக் கொள்கைகளான, முதலாம் தரம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வியை வழங்குதல், தாய் மொழியை கல்வி ஊடக மொழியாக்குதல், பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றல்,  மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பித்தல், ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பெற்றோரில் சமயத்தை கற்பித்தல், குறைந்த வருமானமுடைய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், பொதுவான பாடத்திட்டத்தை தயாரித்தல், பாடவேளைகளை ஒழுங்குபடுத்தல், பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்து கொடுத்தல், இசை, நடனம், மெய்வல்லுநர் விளையாட்டுகளை கற்க வாய்ப்பளித்தல், இரண்டாம் தரம் முதல் ஆங்கிலப்பாடம் கற்பதை கட்டாயமாக்கல் போன்ற நல்ல கொள்கைகளை அமுல்படுத்தினார். 

இந்த கல்வித்திட்டத்தால் எத்தனையோ ஏழை மாணவர்கள் வைத்தியராகவும், பொறியியலாளராகவும், அறிஞராகவும், கணித மேதையாகவும், ஆசிரியராகவும், கலைஞர்களாகவும் இன்னும் எத்தனையோ துறைகளில் கடமை புரியும் அனைத்து இன அதிகாரிகளும் இவரின் இலவசக்கல்வித் திட்டத்தால் வந்தவர்களே!  ஆசிரியராக, வழக்கறிஞராக, கல்வி அமைச்சராக, உள்ளூராட்சி அமைச்சராக மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இலவசக்கல்வியின் தந்தை, இறுதிகாலப்பகுதியில் ஏழ்மை நிலைக்குள்ளானார். 1965ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசு. இவரின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியம் வழங்கியது.  

இலவசக்கல்வியின் தந்தை என்று இலங்கையர் எல்லோராலும் போற்றப்படும் C.W.W கன்னங்கர அவர்கள் 1969ஆம் மாதம் 23ம் திகதி காலமானார். 

ஏ.எம். ஏ. றசூல், 
தி/ கிண்ணியா அஸ்- ஸம்ஸ் வித்தியாலம், 
முள்ளிப்பொத்தானை.  

Comments