பாரம்பரிய தமிழ் கட்சியின் இன்றைய பரிதாப நிலை | தினகரன் வாரமஞ்சரி

பாரம்பரிய தமிழ் கட்சியின் இன்றைய பரிதாப நிலை

முன்னொரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றால் தென்பகுதி அரசியல் வட்டாரத்துக்கு ஒரு சிம்மசொப்பனமாக இருந்த கட்சியாகும். பாராளுமன்றத்திலே எதிரணியில் இருந்து அக்கட்சி அங்கத்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலரும் இவர்களுடன் சமரசமாக பேசி சாமர்த்தியமாக செயல்பட்ட சம்பவங்கள் ஒருகாலத்தில் பதிவுகளாக இருந்தன.

சட்டவல்லுனர்கள் பலரையும் கொண்டிருந்த அந்தப் பாரம்பரிய கட்சியின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

முப்பது வருடகால கொடிய யுத்தம் தமிழ் மக்களது பொருளாதாரம் மற்றும் அவர்களது வரலாற்றை மட்டுமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாரம்பரிய கட்சிகளின் செல்வாக்கையும், தனித்துவத்தையும் கேள்விக்குறியாக்கி  விட்டே நந்திக்கடலில் மூழ்கிப் போனது.

விடுதலைப்புலிகளால் ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டணியாக  உருவெடுத்த தமிழ் கூட்டமைப்பில் ஒன்றாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் தனித்துவத் தன்மையால் அந்தக் கூட்டமைப்பில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாமல் தனித்துச் செல்ல நேரிட்டது.

விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் செய்துவந்த சில மக்கள் விரோத செயற்பாடுகளை விமர்சித்த காரணத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. அன்று தனிமைப்படுத்தப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று வரை தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஒரு கட்சியாக மக்கள் மனதில் பதிவு செய்யப்பட்டது.

உண்மைகளை எடுத்துரைப்போருக்கு சமூகத்தில் இடமில்லை என்பது போல தனித்து விடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் தலைமையை கைப்பற்ற துடிக்கும் பலரது சுழி ஓட்டங்களிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு இரு தசாப்தங்களை தொட்டு நிற்கும் நிலையில் மீண்டும் அதே முயற்சியில் தலைமையுடன் கூட இருக்கும் சிலரது சுழி ஓட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றது.

இந்த நிலையில் அன்று நட்டாற்றில் தனித்து விடப்பட்ட கட்சியை இன்று வரை கட்டிக் காப்பாற்றிவரும் மூத்த அரசியல்வாதி, கிளிநொச்சியை தனி மாவட்டமாக உருவாக மூல காரணமாக இருந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களை  பாராட்ட வேண்டும்.

தள்ளாத வயதிலும் துடிப்பான அரசியல் தூரநோக்கு கொண்ட அவரை விலக்கிவிட்டு கட்சியை கைபற்ற சிலர் முயற்சிப்பது வேதனைக்குரிய விடயம். தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது தமிழ் மக்களது பாரம்பரிய மூத்த ஒரு அரசியல் கட்சி. அதனை ஆனந்தசங்கரி போன்ற சாணக்கிய மூத்த அரசியல் தலைவர் ஒருவரது தலைமையில் முன்னெடுத்துச் செல்வதே ஆரோக்கியமாக இருக்கும்.

அவருக்கு வயதாகிவிட்டது, அவர் கட்சியின் சொத்துக்களை அனுபவிக்கிறார் என்கின்ற பொய்யான கூச்சல்களைத் தவிர்த்து அந்தக் கட்சியை முன்னேற்ற விரும்புவோர் அவருடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அதை தவிர்த்து அவரை ஒதுக்கி விட்டு கட்சியை கைப்பற்றலாம் என ஒருபோதும் நினைக்க கூடாது.

அவ்வாறு அரசியல் செய்ய விரும்புவோர் தாம் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அதன்மூலம் மக்கள் சேவையை தாராளமாக செய்யலாம், தமிழருக்கான தமக்குத் தெரிந்த அரசியலை முன்னெடுக்கலாம். அதை விடுத்து ஒருவர் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பி வளர்த்த ஒரு கட்சியை  பத்து பதினைந்து பேருடன் சென்று கூச்சல் போட்டு கைப்பற்ற நினைப்பது மடமையான செயல்.

அவ்வாறே இதுவரை காலமும் கட்சியைக் கட்டிக் காத்து வந்த ஆனந்தசங்கரி அவர்கள் புதியதொரு இளம் சமுதாயத்தை தேடி தெரிவு செய்து அவர்களுடன் இணைந்து தனது பயணத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் கட்சி, கட்சியின் செயற்பாடுகளை நம்பிக்கையுடன், அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் முன்னெடுக்கக்கூடிய ஒரு உண்மையான அங்கத்தவர்களை தேர்ந்தெடுத்து பாரம்பரிய கட்சியை மீண்டும் அதே மிடுக்குடன் கட்டியெழுப்ப ஆனந்தசங்கரி அவர்கள் முன்வர வேண்டும்.

இதுவே தமிழ் மக்கள் அனைவரதும்  எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையேல் சந்திக்குச் சந்தி தொலைபேசிகளுடன்  நிற்கும் சமூக ஊடக வலை ஊடகவியலாளர் அமைப்புகளால் கட்சி மேலும் சிதைவுக்குள்ளாகும் என்பதே உண்மையான யதார்த்தம்.

Comments