உனக்கென்ன மேலே நின்றாய்! | தினகரன் வாரமஞ்சரி

உனக்கென்ன மேலே நின்றாய்!

மரரிடர்தீர  வமரம் புரிந்த  குமரனடி நெஞ்சே  குறி...". 'சன்  டிவி'யில் கந்தப் பெருமானுக்கு காலைநேரப்  பாலாபிஷேகம். நீராடித் தெறித்தோடிய பாலாயினும் கொஞ்சம் போராடித் தெற்கால திருப்பி  விடுங்களேன்  என்றது கெட்ட மனசு. இல்லை. ஒரு இலங்கைப் பிரஜையாய்  பாவப்பட்ட மனசு!

"ராம்! இன்று  குழலிக்கு கன்சல்ட்டிங்". மெல்லிய, மென்மையான, படித்த, ஜீன்ஸ், டொப் அணிந்தாலும் பரம்பரைப்பண்புகள் குறையாத இரண்டாயிரத்து இருபதுகளின்  இளம் மனைவி  சுகந்தி.

"தெரியும் சுகந்தி.. மறப்பேனா?  மூன்று வருட வேதனை! இன்று தான், ஒரு வருடமாய்  நாம் கலண்டரில்  எண்ணி எண்ணி  காத்திருந்த அந்த நாள்.. Pediatric Orthopedic Surgeon Joe E.Gordon என்ற  கடவுளைக் காணும் வரம்!"

"ஆமாம்.. வைக்காத நேர்த்தி இல்லை ராம்.. இன்றோடு  இவளுக்கு  ஒரு விடிவு வந்திடுமென்று  கடவுள் மீது  அதி அபார நம்பிக்கை".

"உனக்கு மட்டுமாம்மா..? உயிரைக்கையில்  பிடித்து  ஓட்டிக்கொண்டிருந்தோம் surgeon Gordon ஐக் காண.. இன்று அந்த பொன்னாள்..!  Dr.அஜய்யின் எக்ஸ்ப்லனேஷன் படி இவளுக்கு  இன்றோடு  நல்ல நாள்  பிறக்கும் சுகந்தி..".

"நிச்சயமா ராம்.. மாரியம்மா  காட்டிவிட்டாள்  என் கனவில் வந்து.. அவள் ஓடி விளையாடும் காட்சி. இரண்டு மாதங்களில் முழுமையாய் அவளால் ஓடக்கூட முடியும் என்று அஜய் வேறு, கன்போம்  பண்ணிட்டார்..  சரியாகிடும்.. அடுத்த மாதம் மாரியம்மனுக்கு மண்டபம்  ஒன்று கட்டிக்கொடுக்கணும் பெரிய பட்ஜெட்டில்.. எவ்வளவு செலவானாலும் சரி"

"நிச்சயமா  சுகந்தி".

ப்ளேய் ஸ்கூலில்  ஏனைய  குழந்தைகளால்  வேற்றுக்கிரக  ஜந்து போலவே நடத்தப்பட்ட  குழலியை  ஆசிரியைகள்  மட்டுமே அதீத  சிரத்தையெடுத்து அரவணைத்து  அவள்  மனதையும்  உணர்வுகளையும்  முடிந்தளவு  பாதுகாத்து வந்தார்கள்.

பிறந்தது  முதலே  அவளது வலது கால் சரியாக இயங்காது  அவளுக்கு. அவளது இரு கால்களின் தசை  நாண்கள் (tendons)  சம நீளத்திலில்லை. அப்பம்மா, அம்மம்மா முதல்,  குடும்பத்தில் எல்லோருக்குமே குழலியின்  ஆரோக்கியம் பற்றிய  ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் தான்  அவ்வப்போது பிரதான இடத்தை பிடித்து வருகின்றன  அவளது பரிதாப  அவதாரம் முதல்.

ஊராரின்  அனுதாபப் பார்வை வேறு. "கதிர்காமத்துக்கும்   ஒரு நேர்த்தி வையுங்கோவேன்"  "நயினைக்கு ஒரு தங்கக் கால் செய்து குடுங்கோவன்.. பிள்ளையின் கால் முக்கியமா?  காசு முக்கியமா?" என்றெல்லாம்.. சம்பிராதாய அக்கறை  இன்றேல்  சமூகம் இல்லை என்பதை அவ்வப்போது ஞாபகமூட்டும் அளவீட்டு  அன்புகள் ஒருபுறம்.

அவளுக்காகவே  மோட்டார்  சைக்கிளில் வசதியான  ஒரு இருக்கை நிரந்தரமாக பொருத்தியிருந்தார்  குழலியின்  தந்தை, சாப்ட் வேர்  என்ஜினியர் ராம். குடும்பத்துக்கெனவே வரம் பெற்று வந்த குலமகன். ராம், சுகந்தியின் இதயத்துடிப்பு  குழலி. அவ்வாறு தான்  கவனித்து  வளர்க்கிறார்கள் அவளை அவர்கள்.

அவளுக்கான  இருக்கையில்  பக்குவமாய் இருந்தப்பட்டாள் குழலி அவள்         தாயால். ராம் பைக்கில் அமர்ந்து  கொண்டார். குழலியின்  மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்  அடங்கிய  பைலை ராமிடம் கொடுத்தாள் சுகந்தி. இந்த ரிப்போர்ட்ஸ் எல்லாமே  ஈ-மெயில் செய்து, சர்ஜன் கொர்டோன் ஸ்ட்டடி பண்ணி,  நிச்சயமாக சரியாக்க முடியும் என்று கூறிவிட்டார்.  கடந்த வருடமே. கோவிட் அனர்த்தம் கொர்டோனின்  இலங்கை   விஜயத்தை தள்ளிபோட்டது. அஜய் கூறிய அந்த நாள், கடவுளிடமிருந்து  அதிஷ்டமான  வட்ஸப் கோல் கிடைத்த நாள் இவர்களுக்கு.

"சுகந்தி, I'm really sorry ம்மா.. இன்று    உனக்கு நீண்ட மாதங்களாய் எதிர்பார்த்திருந்த ப்ரோமஷனிற்கான  நேர்முகப்பரீட்சை.. வழமையாய்  நான் தான்  உன்னை அழைத்துச் சென்று உனக்கு உற்சாகம் தந்து ஆதரிப்பேன்.. இன்று என்னால் அந்தக் கடமையை  செய்ய முடியவில்லை..".

"ஐயோ என்ன ராம் இது.. இப்டி எல்லாம் பேசி.. மனசுக்கு கஷ்டமா இருக்கு.. உங்களை  தெரியாதா எனக்கு?  இன்று குழலி தானே நமக்கு முதல்..".

"ம்ம்.. நான் கூடவே  வந்ததாய்  நினைத்து  தைரியமா பண்ணிக்கோம்மா.. கடவுள் நம்மோடு  இருப்பார்.. ஆ, இன்னிக்கு எங்கம்மாக்கு வேறு  செஸ்ட் க்ளினிக் செக்கப் டேட் இல்ல..  காலைலயே கோல் பண்ணி சொன்னேன்.. இன்றைக்கு த்ரீ வீலர் ஒன்று எடுத்துக்கொண்டு போயிடுங்க  டைம்க்கு என்று.. என்ன பண்றாங்களோ தெரியல.. எல்லாப் பிழைகளுக்கும்  கடவுள் என்னை மன்னிக்கணும்  இன்று..".

"சும்மா  மனச குழப்பிக்காம இவளை  நேரத்துக்கு கூட்டிப்போங்க.. உங்கம்மாவும் இவளின்  கன்சல்ட்டிங்  பற்றித்தான்  நேற்று முழுக்க சொல்லிக்கொண்டே இருந்தார். நான் பார்த்து அனுப்பி வைக்கிறேன் அவரை.."

"ம்ம்.. ok ம்மா"

"குழலி  அம்மாக்கு  Bye  சொல்லும்மா".  "Bye ம்மா.." குழலியின்  பிஞ்சுமுகம் பார்ப்போருக்கெல்லாம்  ஆற்றலுடன்  அப்பாவித்தனத்துக்கும்,  பரிதாபத்துக்கும் வரைவிலக்கணம்  வகுத்துக் கொடுப்பது.

"போய்ட்டு வா கண்ணா.. இன்றோடு  உன் வாழ்வில் விடியல்தான்..". கருப்பையின்  கருவாக, உள்ளங்கையில் உயிராக வாரி முத்தமிட்டாள் சுகந்தி குழந்தையை.

"ராம்! அஜய்  சொன்னது  ஞாபகமிருக்கு தானே.. எக்கச்சக்கமான  பிசி  அந்த சர்ஜன். பேஷன்ட்ஸ்  இல்லாட்டி  கிளம்பிடுவார் எண்டவர்.  திரும்பி யு. எஸ் கிளம்பினா இனி எந்த  நூற்றாண்டோ  தெரியாது..".

"தெரியும் சுகந்தி.. இதை விட  என்ன முக்கியம்  எனக்கு.. நான் பார்க்கிறேன்மா..  இதையே  போட்டு குடைஞ்சுக்காம  இன்டவியூ ல கவனத்தை செலுத்துங்க.. புரியுதா? ".

"ம்ம்.. ok".

வழமையான  காலை நேர  நகர போக்குவரத்துக்  கொடுமைகள்  தெருக்களில் குறைவின்றி  அன்றும்.  ஆனாலும்  அவற்றிலும்  ஒரு தெய்வீக  வாடையைக் கொடுத்து  ஐ.சி.யுவில் இருக்கும் ஆத்மாவுக்கு  வென்ட்டிலேட்டர் போல் ஆங்காங்கே  கோயில்களில் காலை நேர  தெய்வீகங்களால்  நகரத்துக் கடவுளர்கள்  காக்கவும் தான் செய்தார்கள்.

"பிள்ளையார் சுழி போட்டு... நீ நல்லதைத் தொடங்கி விடு.."

ஒரு நாள் தவறாமல்  பிள்ளையார்  கோவில் சீடி தொடக்கி  விடும் அலுக்காத முதல் பாடலானாலும், ராமிற்கு என்னவோ  அன்று அது முதல் முதல் கேட்கும் வினை தீர்க்கும்  விநாயகரின் வேத வாக்கானது!

குழந்தைக்கேற்ப  அளவான  வேகத்தில்  பைக் ஓடியது."அப்பா!"

"கண்ணா"

"டொக்டர் மாமாட்ட  போனப்றகு  நான்  நடப்பன் தானேப்பா..?"

"நடப்பியா.. துள்ளி  விளையாடுவே  கண்ணா..".

"அப்ப  எனக்கு  'மற்ஸ் குயிஸ்' ல  ப்ரைஸ் கிடைச்ச  எண்ட சைக்கில் இனி நான் ஓடலாமாப்பா?".

"நிச்சயமா  கண்ணா.. நீயும் நானும் சைக்கில்  ஓடி அப்பம்மா  வீட்டுக்கு போவோமே.." "மாரியம்மனிடம்  பொடிநடையாய்ப்  போய்டுவோம்".

ரோஜா  பூத்தது.. "ஹை.... Thank god".

என்னது  இவ்வளவு  நெருக்கடி முன்னால்.. ஓட்டோ  ஒன்று  நடுத்தெருவில் நாணமற்ற  பெண் போல்.. ஓட்டோக்காரர்  கீழே  இறங்கி  நின்று பூமி தன்னைத்தானே  சுற்றுவது போல் சுழல்கிறான்.  ஓட்டோவின்  பின்சீட்டில் நகர பாடசாலையொன்றின்  மேல்பள்ளி மாணவனும், மாணவியும் தெருவை வேடிக்கை பார்த்த  வண்ணம்.. அவரது  பிள்ளைகள்  என்று தெளிவாகப் புரிந்தது.

ஏற்கனவே  இருந்த போக்குவரத்துக்கு நெரிசலை இந்த ஓட்டோ  பன்மடங்காக்கிய  சலிப்பு  தாங்க முடியாத பயணிகள் ஆளாளுக்கு ஓட்டோக்காரருக்கு  சாபங்ககளை  லொறி லொறியாய்க்  கொட்டிக்கொண்டு தாண்டிச் சென்று  கொண்டிருந்தார்கள்.

அவரோ  தன் மானத்தை விற்ற  தமிழனாய்  தொடர்ந்து  திணறிக்கொண்டே இப்போ  சூரியனையும்  சேர்த்து  சுற்றுகிறார்.

"ஓட்டோவைச் சுற்றி வந்து  என்ன புண்ணியம் அண்ணை..  நாப்பது மீ ட்டர் தூரத்தில தானே ஷெட் இருக்கு.. விறுவிறெண்டு  நடந்து போய்  பெற்றோலை வாங்கிக்கொண்டு  வாங்கோ.. ".

"இதெல்லாம்  இரவு பாத்து  வைக்கிறேல்ல.. காலங்காத்தால  மனுசற்ற உயிரெடுத்துக்கொண்டு.. சே, கொஞ்சமும்  விவஸ்தையில்லாததுகள்..".

காட்சியில்  குரல் கொடுத்தவர்களின்  சம்பாஷணைகள்.

ஓ, இதுதான்  பிரச்சனையா?  மெதுவாய்  பைக்கை  நிறுத்தி  குழப்பத்துடன் நின்றிருந்த  ராம் விஷயமறிந்து  தெளிந்தார்.

ஆனால்  ஓட்டோக்காரர்  அவர்களின்  எந்த வார்த்தைகளுக்கும் எந்த வெளிப்பாடுகளுமற்றவராய்  ஒரு  அதீத சுயநிர்ணய பாவத்துடன், ஜனாதிபதி வருகையின் போது  தீவிர கண்காணிப்பு  கடமையிலுள்ள  ராணுவ வீரர் போல் தொடர்ந்து  ஓட்டோவை  விலகாதவராய்  அதே நடமாட்டத்தில். எப்படியாவது யாரிடமும்  கொஞ்சம் பெட்ரோல் பெற்றுவிடும் அடங்காத லட்சியமாக இருக்கலாம்.

அந்த அவரது அழுத்தமான லட்சியத்தின் அருவருப்பு புரியத் தெரியாத குழந்தை குழலி, "அப்பா அந்த மாமாக்கு கொஞ்சம் பெட்ரோல் குடுப்பமே.. பாவம்.. எல்லாரும் திட்றாங்க.. அந்த அக்காக்கும் அண்ணாக்கும் ஸ்கூல் லேட் ஆகுது..".

"அது வந்து..குழலி, இன்று  நாம் இதை கவனிக்க முடியாதும்மா.. டொக்டரை டைம்க்கு  பார்க்கணுமா  இல்லையா.. ம்ம்.. நாங்க போய்டலாம்".

"அப்பா அப்பா.. பாவமா இருக்கேப்பா.. இன்னும் எத்தின பேர்ட்ட  திட்டு வாங்கப் போறாரோ..".

"இப்ப என்ன.. பெட்ரோல் குடுக்கணும்.. அவ்ளோ தானே.."

"ம்ம்.."

"நீ அப்டியே  கவனமா  பைக்க பிடிச்சுக்கோம்மா.. டேங்க்ல இருந்து தான் எடுத்துக் கொடுக்கணும்.."

"ம்ம்.. Ok ப்பா".

பக்கத்து  கடைக்காரரிடம் வெற்றுப்  போத்தலொன்று  கேட்டு, கடைக்காரர்  தேடி ஒருவாறு  எடுத்துக் கொடுத்த போத்தலில், ராம் தன் பைக் டேங்க்கிலிருந்து   எடுத்துக்கொடுத்த  பெற்றோலை மிக உரிமையான  தோரணையோடு வாங்கி போத்தலோடு  மளமளவென்று  ஓட்டோ பெட்ரோல் டேங்க்கில் ஊற்றினார் ஓட்டோக்காரர்.

"அப்பா.......!!!"

"ஸ்டாண்ட்டில்  சரிந்து நின்ற பைக்கில் தொடர்ந்து இருந்த குழலி, கால் முடியாமல்  வழுகி விழ.. ராம் பதறி ஓடிப்போய் ஒருவாறு குழந்தையைத் தாங்கி ஏந்தினார். ஆனாலும் லேசாக கால் மடங்கியது குழந்தைக்கு.

"Sorry ப்பா.. கொஞ்சம் கஷ்டமா போச்சு.. Sorry".

"எதுக்குடா Sorry..? கால் வலிக்குதா?"

"பெரிசா இல்லப்பா..".

அவதானித்த கடைக்காரர்  கதிரையொன்றைக் கொண்டு  வந்தார். ராம் மகளை அதில் இருத்தினார்  மெதுவாக.

"தம்பி, கொஞ்சம் நீவி  விடுங்க பிள்ளைக்கு"

"தாங்க்ஸ்  அண்ணை.."

கடைக்காரருக்கு  குழலியின்  பிரச்சனை  தெரியாதே.

ராம் மெதுவாய்  நீவி விட்டார். அவள்  கஷ்டப்படுவது  புரிந்தது. தாங்க முடியாமல் மனம் பதைத்தது  ராமிற்கு.

எப்படியாவது  போய் சேர்ந்து விடவேண்டும்  டொக்டரிடம். ராம் பைக்கை ஸ்டார்ட் செய்தார். ஸ்டார்ட்.. ஸ்டார்ட்.. ஸ்டார்ட்.. ஆனால் ஓரிரு  'டுர்...' தான்..  "டுர்.." தொடரவில்லை.

"என்னாச்சு தம்பி?"

"My god... பெட்ரோல்  போதாது..".

"ஈஸ்வரா...! என்ன  தம்பி? பதற்றத்தில்  பார்க்காமல் நிறைய குடுத்திட்டீங்களோ..? தனக்குப்பின் தான் தானம் தம்பி..".

ராம் தன் தம்பிக்கு போன் பண்ணினார்.  "அண்ணா, உனக்குத் தான் எடுக்க வந்தேன்.. நீயே எடுக்கிறாய்.. அண்ணி  அம்மாவை க்ளினிக் ஏற்றிப்போக முடியுமா என்றார்கள். ஏற்றிப்போனேன். என்னவோ  தெரியவில்லை.. இன்று கொஞ்சம் ப்ரெஷர் அதிகமாம். குழலி  பற்றி டென்ஷனா  இருக்கலாம்.  அட்மிட் பண்ண சொன்னார்கள். நான் நிக்கிறன் பக்கத்தில்..நீ யோசிக்காதே..  குழந்தையைப்பார்".

"கடவுளே...!!!" ராமின்  கண்களில் அடிக்கடி வரும்  நீர்த்துத்துளி தான்.. இன்று கொஞ்சம் அழுத்தம்  அதிகம். என்ன செய்வது.. சரி, ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.. நடந்து  போய் பெட்ரோல் வாங்கலாமா.. இல்லை, குழலியை விட்டுப்போகவே  முடியாது.

நண்பனொருவனுக்கு போன் செய்தான். "நீங்கள் அழைத்த இலக்கம்  பிறிதொரு அழைப்பிலுள்ளது".

அலுவலக ' பொஸ்'க்கு போன்  செய்தான். அவர் நிச்சயம் உதவுவார்.

"The number you have dialed is switched off".

"சேர் மீட்டிங்ல..  தெய்வமே..!".

வழமையாய்  ராம் ஒன்று கேட்டால்  பத்து செய்யக்  காத்திருக்கின்ற  மேலும் பல தொடர்புகளின்  முயற்சிகளுமே இன்று விதியின் வக்கிர பிடியில்.

"மகள்  வலியில்  கொஞ்சம் அசௌகரியப்படுவது  தெரிந்தது. அவளின்  காலை மீண்டும்  நீவினான்.

ஓட்டோக்காரர்  அந்தக் கடைக்காரரிடம், "அண்ணை, ரெண்டு ரொட்டி எடுத்தனான், இந்தாங்கோ" என்று  காசைக்கொடுத்து, ஓட்டோவில்  தன் பிள்ளைகளிடம் ரொட்டிகளைக்  கொடுத்தார்.

"இந்த  சிக்கல்ல  உங்களுக்கு மீண்டும்  பசியெடுத்திருக்கும். சாப்பிடுங்கோ ரெண்டு பேரும்..".

ஓட்டோக்காரரின்  ஓட்டோ, அவரோடும், பிள்ளைகளோடும்  பறந்து சென்றது. கடைக்காரர்  அந்த ஓட்டோவையே வெறித்துப் பார்த்தார்.  அவரின் உள்ளம் குமுறியதை  முகம் முழுதாகக் காட்டியது.

ராமின்  அலைபேசி கிணுகிணுத்தது.

"என்ன மிஸ்டர் ராம்?!  இப்டி செய்திட்டீங்களே??  ஆ.. கொஞ்சமாவது ஒரு பொறுப்பு..  உங்க டோட்டர்  மேல ஒரு அக்கறை  இருக்கா?? ஆ..?? இப்படியா கேர்லஸ்ஸா  நடந்துக்கிறது??  சே, எவ்வளவு  இரக்கமும்  மதிப்பு  மரியாதையும் வைத்திருந்தேன்  உங்க மேலயும் உங்க  குழந்தைக்காகவும்.. நான் எதிர்பார்க்கவே இல்லை.. இங்க வே ற பேஷண்ட் யாரும் இல்லாத போதும் உங்க டோட்டார்க்காக கால்ல விழாத குறையா  கொழும்பிலிருந்து கூப்பிட்டெடுத்தன்  சர்ஜன் கொர்டோனை.. அந்தாளைப்பற்றி  ஏற்கனவே  சொல்லியும்  இருந்தன்.. Fourty five minutes wait பண்ணிட்டு, அவசரமா கோல் ஒன்று வர 'Sorry Ajai.. I'm so sorry.. I travelled from colombo particularly for you.. for your sincere request for that child.. Anyway, may god save her.. Contact me at any time over the phone.. Lemme try on my next visit to sri lanka.. But god only knows about it..' என்று.. வெளிக்கிட்டார். எத்தனை தரம் உங்களுக்கு dial பண்றது.. போன் வேறு என்கேஜ்.. Actually I'm so so confused about you Mr.Ram.. You've known well ram, he's from St.Louis, Missouri, US. நான்  எதிர்பார்க்கவே இல்ல  உங்களை இப்படி.. Extremely sorry.. ".துண்டிப்பு.

ராமிற்கு லேசாய் தலை  சுற்றி மயக்கம் போல்.. ஒரு கை தலையைத் தாங்க.. மறுகை குழலியின்  காலைத்தாங்க.. நெஞ்சாங்கூடு வெறித்து வெற்றிடமாகி.. அப்படியே தெருவோரமாய் அவனை  இருத்தியது உணர்வுகள் ஒன்றாய் சிதைந்துபோன ராமின் வெற்றுயிர்!!

பெற்றோலை  ஓட்டோ டேங்க்கில் ஊற்றிய பின் ஓட்டோக்காரர்  வீசி எறிந்துவிட்ட  வெற்றுப்போத்தல், அருகில் உருண்டு காற்றில் ஆடி ஆடி அவமானப்படுத்தியது  ஒரு பிரபல சாப்ட் வேர் எஞ்சினியரையும், ஒரு முடமான மூன்று வயது அப்பாவிப்  பெண்குழந்தையையும்!!

அவள் வாழ்க்கை மீண்டும் விடையறியாத  கேள்விக்குறியாகியதை, பாவம் இன்னும்  அறியாத புதுரோஜா.

"அப்பா!  நாங்க குடுத்த பெட்ரோல், ஓட்டோல ரெண்டு பேரை  ஏத்துறதுக்குத் தான் காணும்போல.. இல்லாட்டி அந்த மாமா  எங்களையும்  ஏத்திக்கொண்டு போயிருப்பாரென்ன?".

"உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ நந்தலாலா..!!" கடையிலிருந்த வானொலியின் பெருமூச்சு.

பானு சுதாகரன்

Comments