ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் நடத்த உகந்த காலம் இதுவல்ல | தினகரன் வாரமஞ்சரி

ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் நடத்த உகந்த காலம் இதுவல்ல

ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் நடத்துகின்ற காலகட்டம் இதுவல்ல என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்து சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். அவர் எதிர்க்கட்சியினரை மட்டும் கை நீட்டி குற்றம் சாட்டவில்லை, தான் சார்ந்திருக்கும் ஆளும் தரப்பினரையும் அந்த தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைமைகளையும் சேர்த்தே தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

நாடு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக முகங்கொடுத்து வருகின்றது.அதன் காரணமாக நாடு பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.

நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கே கஷ்டப்படுகிற ஒரு காலகட்டமே காணப்படுகிறது.அதுவே யதார்த்தமாகும்.இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

ஒரு இக்கட்டான நிலையில் நாடும், நாட்டு மக்களும் இருக்கையில் அரசியல்வாதிகள் சிலர் தமது சுயநலப்  அரசியல் செயற்பாடுகளை எவ்விதக் கூச்சமுமின்றி முன்னெடுத்து செல்வது மிகவும் கவலை தரும் விடயமாகும்.பொது மக்களின் வாழ்க்கை நிலையை இயன்றளவு வழமைக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

வெளிநாட்டுக் கடன்கள் நாட்டை அச்சுறுத்தும் சூழலில் தனது வெளிநாட்டு பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து அவற்றுக்கு உரிய தீர்வு கண்டு வருகின்ற வேளையில் உள்நாட்டில் அரசியல் செய்கின்ற சில அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமக்கு வாக்களித்த மக்களின் கஷ்டத்தை அறிந்தும் அறியாதவர்களாக சுயநல போக்கு அரசியல் செய்து வருகின்றமை கவலைக்கும் கண்டனத்துக்குமுரிய விடயமாகும்.

பிரதான எதிர்க்கட்சி ஆட்சியைப் கைப்பற்றுவதகாக நாட்டு நிலைமையை கருத்தில் கொள்ளாது ஆளும் தரப்பை குறைகூறும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக ஆர்ப்பாட்டங்களையும், தீப்பந்த போராட்டங்களையும் நடத்தி மக்களை குழப்பும் ஒரு கீழ்த்தரமான சந்தர்ப்பவாத அரசியலை பிரதான எதிர்க்கட்சி நடத்தி வருகின்றமை இதற்கு சாட்சிகளாக உள்ளன.

அதேபோன்று தமிழ் கட்சிகளும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வெளிநாடுகளுக்கு அரசாங்கத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை அருவருக்கத்தக்க செயலாக உள்ளது.

இதேபோன்று ஏனைய பல எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி அதில் குளிர் காய முயன்று வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் பலவற்றின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு இந்த ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் உதவி நல்க முன்வந்த போதும் அதன் தலைமைகளால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதேபோன்று ஆளும் தரப்பு கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரும் சில தூண்டுதல்கள் காரணமாக தாம் சார்ந்திருக்கும் அரசாங்கத்தையே விமர்சிக்கும் அளவிற்கு தம்மை மாற்றி அரசியல் செய்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் நடக்கின்ற விவாதங்களை பார்த்தால் இவர்களின் சிலர் மக்கள் பிரதிநிதிகளா என்ற சந்தேகம் எழுகிறது.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படுகின்ற இரங்கல் உரைகளில் கூட அவர்களை ஞாபகப்படுத்தி உரை நிகழ்த்தாது அரசாங்கத்தை வசை பாடுவதில் ஆர்வமாக உள்ளனர். இவ் விடயத்தில் எதிர்க் கட்சியில் உள்ள தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் சார்ந்த சமூகத்தை தலைகுனிய வைக்கிறது.

எனவே அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தது போன்று மக்கள் பிரதிநிதிகளான ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் தமக்கிடையே ஏட்டிக்குப் போட்டியான விவாதங்களை நடத்தாது, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருக்காது தமக்கு வாக்களித்த மக்களையும் நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை மீளவும் உறுதியான நிலைக்கு கொண்டுவர இன, மத, கட்சி, மொழி பேதம் பாராது செயற்பட முன்வரவேண்டும். அதுவே தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்கள் இயல்பு வாழ்க்கையில் திரும்புவதற்கும் திடமான செயற்பாடாக அமையும் என்பதே எமது கருத்தாகும்.

Comments