வேப்பிலைத் தோரணம் | தினகரன் வாரமஞ்சரி

வேப்பிலைத் தோரணம்

எழில் கொஞ்சும் மலையகத்தின் எழிலுக்கு இலக்கணமாக அந்த தோட்டம் இயற்கை அழகில் செழிப்பாக காட்சியளித்தது. நான்கு புறங்களிலும் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென தேயிலைச் செடிகள். இடையிடையே சவுக்கு மரங்கள். அம்மரங்கள் செழித்து வளர்ந்து படர்ந்து பூத்துக் குலுங்கி அழகாகக் காட்சியளித்தது. மதிய நேரக் கடும் வெயில் தகதகவென ஜொலித்தாலும் செடிகளிலும் இலைகளிலும் தண்டுகளிலும் மலர்களிலும் பட்டுத்தெறிக்கும் வெயில் பெரிதாக வெப்பத்தைக் காட்டவில்லை.  

மதிய நேர சாப்பாட்டு வேளைக்காக வீட்டுக்குத் திரும்பிய சிவகாமி முன் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். ஒரு சந்தேகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு கணவன் பொன்னையா கண்மண் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். கவ்வாத்து மலைக்கு காலையில் வேலைக்குப் போன கணவன் உடல் அலுப்பால் தூங்குவதைக் கண்டு சிவகாமிக்கு வருத்தமாக இருந்தது.  

"பாவம் ..... அசந்து தூங்குகிறாரு... தூங்கட்டும்.... சரக்குப்பொடி போட்டு ரசம் வச்சுக் கொடுக்கணும்... இல்லாட்டி அலுப்புக் காய்ச்சல் வந்திடும்" என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்தாள். அடுப்பை மூட்டி விட்டு பாத்திரங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பீலியடிக்குச் சென்றாள். பகல் நேரத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்ளாவிட்டால் அந்திவரை காத்திருக்க வேணும். பீலிக்கரையில் ஒரே கூட்டமாய் பெண்கள் குழுமி நின்றார்கள். எல்லோருக்கும் இதுதானே தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் நேரம், சிவகாமியும் ஒருவாறு தனது பாத்திரங்களையும் கழுவிக் கொண்டு குடத்திலும் நிரம்பிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அடுப்பில் வைத்திருந்த தண்ணீர்க் கேத்தல் கொதித்து கொட்டிவிட அடுப்பு முழுமையாக நனைந்து கிடந்தது.  

ஒருவாறு அடுப்பையும் சரிசெய்து விட்டு தானும் தேநீர் ஊற்றிக் குடித்துவிட்டு சமைக்கத் தொடங்கினாள். அத்தோடு கணவனுக்கு ரசமும் வைத்தாயிற்று. "என்னங்க... என்னங்க எழுந்திருங்க.... இந்தாங்க இந்த ரசத்தைக் குடிச்சிட்டு காலு மேள அலம்பிக்கிட்டு டவுனுக்கு ஒருக்கா போயிட்டு வாங்க... நாளைக்கு பொங்கல் வருதில்ல... பொங்க வைக்கணுமில்ல..." என்றவாறு கணவனிடம் ரசக் கோப்பையை நீட்டினாள்.  

சோம்பல் முறித்தவாறு எழும்பிய பொன்னையா... சரியான கஸ்டமா இருக்குபுள்ள சின்னதொரையும் பெரிய தொரையும் பின்னுக்கே நின்னாங்க. புதுமல கவ்வாத்து புள்ள... உனக்குத்தான் தெரியுமே. இடுப்பு ஒடஞ்சிப் போச்சு." ..  

"சரி சரி ரசத்தைக் குடிங்க. அலுப்பு மருந்து போட்டிருக்கேன்.. எல்லாம் சரியாப் போயிடும்". 

சிவகாமி இப்படிச் சொல்ல, "அது சரி புள்ள பொங்கல் எட்வான்சு பத்தாதே... மத்த மத்த சாமான்கள எப்படி வாங்குறதாம்?". பொன்னையா புருவத்தை உயர்த்த "உங்க அம்மாவூட்டு கடுக்கனையும்.. என்னோட தோடையும் மூக்குத்தியையும் கழட்டி சுத்தி வச்சிருக்கேன்.. அதுகள ஈடு வச்சிட்டு மத்த சாமான்களை வாங்கிட்டு வாங்க.. என்ன எந்த நாளுமா பொங்கல கொண்டாடப் போறோம்.... நாளைக்கு மட்டுந்தானே.. அதுதான் அடுத்தடுத்த மாசத்துல போனஸ்சு காசும் வருமே, அப்போ எல்லாத்தையும் திருப்பிக்குவோம்" சிவகாமி சொன்னது அவனுக்கும் சரியாகத்தான் பட்டது.  

இந்த மலையகத்தைப் பொருத்தவரை என்னதான் கஸ்டங்கள் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களை இவர்கள் கைவிடுவதே இல்லை. இங்கு இது ஒரு சிறப்பு, தோட்டத்தில் இதற்காக முற்பணம் கூட வழங்கப்படுகிறது. இருந்தாலும் இன்றைய விலைவாசியைப் பொருத்தவரை இந்தச் சொச்சம் அவர்களுக்குப் போதாது. ஆகையால் நகை நட்டுகளை ஈடுவைத்தாவது அல்லது வட்டிக்கு பணம் வாங்கியாவது, அல்லது ஏதாவது ஒரு வகையால் கடன்பட்டாவது இந்தக் கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ்வார்கள். 

தோட்டத் தொழிற்சாலையிலிருந்து ஒரு மணிக்கு சங்கு ஊதப்பட்டது. சங்கு நாதத்தின் மூலம் தான் தொழிலாளர்களுக்கு வேலை நேரம் அறிவிக்கப்படுவது வழக்கம். சிவகாமி கணவனுக்கும் தேவையான அலுவல்களை தயார் செய்து விட்டு மீண்டும் கொழுந்துக் கூடையோடு வெளியேறி விட்டாள். பொன்னையா பகல் உணவை உண்டுவிட்டு கடைக்குப் போக ஆயத்தமான போது பிள்ளைகள் மூவரும் பாடசாலை விட்டு வீடு திரும்பினார்கள்.  

 “அப்பா... அப்பா.. கடைக்காப்பா போகப் போறீங்க.. நானும் வாரேன் அப்பா..." சின்னவன் ரமேஸ் சொல்ல "நானும் வாரேம்பா..." உங்களுக்கு மட்டும் சாமான்கள தூக்கிட்டு வர கஸ்டமா இருக்குமில்ல..." பெரியவன் சுரேஷும் சொன்னான். "சரி சரி சாப்பிட்டுவிட்டு பயணமாகுங்க என்றவன் மகளைப் பார்த்து ஏம்மா நீ பேசாம இருக்க. நீ வரல்ல?". என்றான்.  

"முடியாதப்பா... எனக்கு ஸ்கூல் வேலை நிறைய கெடக்கு. தம்பிகளை கூட்டிக்கிட்டுப் போங்க" என்றாள் மகள் பிரியா. 

பொன்னையா இதே தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். இவன் மட்டுமல்ல; இவன் அப்பா, தாத்தா என்று இவர்கள் பரம்பரைக்கே இங்குதான் பிறப்பிடம். குடும்பத்தில் பொன்னையா மட்டுந்தான் ஆண்பிள்ளை. அவனோடு கூடப் பிறந்த சகோதரிகள் மூவர். அவர்கள் மூவரும் வேறு வேறு இடங்களுக்கு திருமணம் முடித்து போய் விட்டார்கள். இவனுக்கு பதினெட்டு வரும்போதே தோட்டத்தில் பேர் பதிந்து விட்டார். அவன் தந்தை வீராசாமி. தோட்டத் தொழிலுக்கு அனுப்புவதை 'பேர் பதிதல்' என்றுதான் கூறுவது வழக்கம். ஒரு வருடம் தான் வேலை செய்திருப்பான். மறுவருடமே அவனுக்கு கலியாணமும் நிச்சயிக்கப்பட்டது. அவன் அப்பா வீராசாமியின் உறவுப் பெண்ணான சிவகாமியை நிச்சயித்தார்கள்.  

ஆரம்பத்தில் அவன் அதை விரும்பவில்லை. அதே தோட்டத்தில் சின்ன காலத்திலிருந்து வாழ்ந்து வந்த அடுத்த வீட்டு சுகுமாரியைத்தான் அவன் விரும்பினான். அவளையே காதலித்தான். சுகுமாரி கறுப்பு என்றாலும் எழிலானவள், எடுப்பானவள். ஆனால் அவளை அவன் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்களை எதிர்த்து நிற்க முடியாமல் வேறு வழியின்றி சிவகாமியை மனைவியாக ஏற்றுக்கொண்டான். கால ஓட்டத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானான் பொன்னையா. மூத்தவள் ப்ரியா. ரமேஷும் சுரேஷும் இளையவர்கள். மூவரையும் தோட்டப் பாடசாலைக்கே படிக்க அனுப்பினான். இப்போதெல்லாம் பிள்ளைகளின் சந்தோசமே தம் சந்தோசம் என இருவரும் நினைத்தார்கள். பிள்ளைகளை நல்ல இடத்துக்கு கொண்டு வரவேண்டுமென்று கடுமையாக பாடுபட்டு உழைத்தார்கள். தோட்ட வேலைகளோடு மாடு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என்று எதையுமே விட்டு வைக்கவில்லை. பன்னிரண்டு காம்பறா லயம் என்றாலும் தன் வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தான் பொன்னையா.. அதே போல் மனைவிக்கும் மகளுக்கும் நகை நட்டுகளையும் செய்து வைத்திருந்தான். அவனது உழைப்பையும் முன்னேற்றத்தையும் கண்டு ஏனையோர் பொறாமைப்பட்டார்கள்.  

மாலைப் பொழுது மங்கி இரவு நேரத்தை கவ்விக் கொண்டிருந்தது. வேலை முடித்து வீடு திரும்பிய சிவகாமிக்கு பெருமையாக இருந்தது. அவள் வருவதற்கிடையில் பாதி வேலைகளை மகள் முடித்து வைத்திருந்தாள்.  

"எங்கம்மா தம்பி ரெண்டு பேரும்?" ..  

"அப்பாவோட கடைக்கு போயிட்டாங்க"..  

அப்போ உங்கப்பாவுக்கு திண்டாட்டம் தான்... சரி நீ போயி ஸ்கூல் வேலைகளைப் பாரு...” என்று மகளை அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள்.விடிந்தால் தைப்பொங்கல். அந்த தோட்டமே களைகட்டும். முப்பது நாள் பஜனை வேறு, நாளை இராம பிரானை ஏந்திய சப்பரமும் வலம் வரும். ஒரே கொண்டாட்டம் தான். சற்று நேரத்தில் கணவனும் பிள்ளைகளும் வீட்டுக்குள் நுழைந்தார்கள், "அம்மா.. அம்மா பொங்கல் இல்லையாம்..” பிள்ளைகள் இருவரும் சலிப்போடுச் சொல்ல சிவகாமி ஆச்சரியத்தோடு கணவனைப் பார்த்தாள்.  

"என்னங்க... சிவகாமி என்னங்க என்னாச்சி... ஏன் ஒரு மாதிரியா வாரீங்க... ஏதாவது பிரச்சினையா...?"  

“இல்ல புள்ள நாம் பொங்கலைக் கொண்டாடக் கூடாதாம்... கொரோனா கூடிப் போச்சாம். நம்ம தோட்டத்துல விசேசமா கொண்டாடப் போறாம்னு யாரோ சுகாதார கந்தோருக்கு பெட்டிசன் வேற போட்டிருக்காங்கலாம். நாளைக்கு சுகாதார அதிகாரிகளும், பொலிசும் நம்ம தோட்டத்துக்கு வருதாம்.. டவுனுல பேசிக்கிட்டாங்க..." பொன்னையா கூறியதை ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி, 

"என்னங்க இப்படி ஒரு கல்லத்தூக்கி போட்டுட்டீங்க" என்றாள்.  

"இல்ல புள்ள... இது நமக்கு மட்டுமில்ல.. எல்லோருக்கும் தான். சரி விடு புள்ள... பொங்கல இந்தமுறை இல்லாட்டி அடுத்த முறையாவது கொண்டாடிக்கலாம்.. சரி சரி.. நீ வீட்ட துப்புறவு பண்ணிட்டு மஞ்சத்தண்ணி தெளி... நான் மேட்டு லயத்துக்கு போய் குப்புசாமி அண்ண வீட்டுல கொஞ்சம் வேப்பிலை ஒடிச்சுக்கிட்டு வாரேன்.." என்று பொன்னையா புறப்பட்டுச் செல்ல சிவகாமி அப்படியே அசந்து போய் நின்றாள்...  

“அம்மா... அம்மா விடுங்கம்மா... அடுத்த வருசமாவது பொங்கல பொங்குவோம்... இப்போ இந்த கொரோனாவை வெறட்டப் பாப்போம் " என்று மகள் பிரியா சொல்ல. ரமேஷும் சுரேஷும் அதை ஆமோதிப்பது போல் தலையசைக்க அவளுக்கு கண்ணீர் பீறிட்டு வந்தது. "அம்மா மாரியாத்தா 16தான் எல்லோரையும் காப்பாத்தனும்" என்று தனது பிள்ளைகள் மூவரையும் அப்படியே அணைத்துக் கொண்டாள்.  

வீட்டுக்கு முன்னால் மாவிலை தோரணம் போட்டு அலங்கரிப்பதற்கு பதிலாக வேப்பிலைக் கொத்து உள்ளேயும் வெளியேயும் கட்டப்பட்டது. மாக்கோலம் போட இருந்த நேரத்தில் மஞ்சள் தெளிக்க வேண்டியதாயிற்று. வெட்டி வைக்கப்பட்டிருந்த செங்கரும்பு வாடிப்போய் எறும்புகள் மொய்க்கத் தொடங்கின. 

பசறையூர்
ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments