கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

கடந்த ஞாயிறு பொழுதில்,  வடபகுதித் தமிழ் வார இதழ்களைத் தவிர்த்து தலைநகரில் வெளியாகும் அனைத்து வெளியீடுகளையும் புரட்டிக்கொண்டிருந்த பொழுது  ஒரேயொரு இதழில் மட்டும் இலக்கியப் பிரியர்களுக்கு இனிப்புச் செய்தி ஒன்று இருந்தது. ஒருவேளை இன்றைய ஞாயிறு வெளியாகி இருக்கலாம். 

எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை நாடளவிய ரீதியில் கவிதை மற்றும் சிறுகதை போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில்,  15வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியும். 

தங்களது சொந்த படைப்பாகவும் முன்னர் வேறு எதிலும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும். பெண்களை மையக் கருவாகக் கொண்டு கவிதை மற்றும் சிறுகதை எழுதப்பட வேண்டும்.  

சிறுகதை 1000சொற்களுக்குள் அமைய வேண்டும். (ஏ4பத்து பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.)  

கவிதை 40அடிகளுக்குள் அமையலாம். (ஏ4மூன்று பக்கங்களுக்குள்) 

-தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை மற்றும் சிறுகதைகளை எழுத முடியும். 

முடிவுத் திகதி : பெப்ரவரி 15  

போட்டி ஒருங்கிணைப்பாளர், முஸ்லிம் சேவை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், த.பெ.இலக்கம் 574, கொழும்பு 7அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.  

மேலே காணப்படும் செய்தியில் நிறைய இனிப்புகள். இருந்தாலும் கசப்புகளும் உள்ளனவே! 

*ஒரு போட்டி என்று ஏற்பாடு செய்தால் செய்தி வெளியிட்டால், பரிசு விவரங்கள் தெரிவிப்பது கடமை அல்லவா? அதாவது, எத்தனை பரிசுகள், பணமாகவா? பாடசாலை அப்பியாசப் புத்தகங்களா? அல்லது வேறெதுவும் பொருட்களா? 

போட்டியை நடத்துவது வானொலி முஸ்லிம் சேவை. அது தமிழில் மட்டுமே ஒலிபரப்பாகிறது.

அப்படியானால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் படைப்புகளை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. இது ஏன்? 

* ’15வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்க முடியும்’ என்றால் ஆண் வாலிப சிங்கங்கள் அம்போவா? இப்படி ஒரு நிபந்தனையைப் போடுவதால் ஆண்கள் பங்கேற்க இயலாது என்று அர்த்தப்படுகிறதே...? “15வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்கலாம்” என்று பதித்திருந்தால் பளிச்! மண்டைப்பாரம் ஏற்படாதே...!?  

கடைசியாகக் குறிக்கப்போவது தான் மிகுந்த கவலையைத் தருகிறது. 

போட்டி நடத்தப்போகிற முஸ்லிம் சேவை, கவிதையையும் கதையையும் மட்டும் சேர்த்துக் கொண்டு நாடகத்தை மட்டும் கைகழுவி விட்டது புதிரோ புதிர்! அந்தத் துறை ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) என மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறதா? அதுவும், நாடக ஆர்வலர்கள் சிலர் ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் பரிசுத் தொகை வழங்குவதாக பரிசுத் தொகை வழங்குவதாக நேரில் தெரிவித்த பிறகும்...? நாடக எழுத்தாளர்கள், கலைஞர்களின் கண்ணீரே காணிக்கை!  

இனிப்பு-1

தமிழக இந்துப் பெருமக்களுக்கு இந்த ஆங்கில ஜனவரி பிறந்தாலே தைப் பொங்கலும், பழனி முருகன் தரிசனமும், மலையாளக் கரையோர சபரிமலை ஐயப்பன் தரிசனமுமே இனிப்பு இனிப்பாக சுவைக்கும். 

இம் மூன்றிலும் ஒன்றில் தொக்கி நிற்கும் இன்னுமொரு இனிப்பை இங்கே ருசியுங்கள்.  

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கச் செல்வோர் முதலில் தரிசிப்பது எருமேலிப் பேட்டை ‘வாவர் தர்ஹா’வையே!  

இது, ஒரு முஸ்லிம் மகானின் அடக்கத் தலத்தைக் கொண்டுள்ள சிறு பள்ளிவாசல். 

இங்கே, ‘வாவர்’ என்ற பெயர் கொண்ட ஒரு முஸ்லிம் ஞானி (அவுலியா’ அறபு மொழியில்) நிஷ்டையில் உள்ளார். அதாவது, நிரந்தரமான ஓய்வுறக்கம். 

இந்தப் பள்ளிவாசல் பாதை வழியே தான் மலையேறி ஐயப்ப சுவாமிகளைத் தரிசிக்கவேண்டும். 

தனது ஆயிரமாயிரம் பக்த சிகாமணிகளுக்கு ஐயப்ப சுவாமிகள் இட்டிருக்கும் கட்டளை” என்னைக் காண்பதற்கு முன்வாவர் மகானைக் கண்டு விட்டே வரவேண்டும்!”  

இது கற்பனையே அல்ல. வரலாற்றுப் பதிவு. 

பாரம்பரியமாகப் பக்த கோடிகள் கடைப்பிடித்துத் தொழுவது. 

இதற்காக அவர்கள் “வாவர் பள்ளிவாசல்” நீர்த்தடாகத்தில் (‘ஹவுள்’ என அறபு மொழில் சொல்லப்படுகிறது) கை – கால் முகம் சுத்தம் செய்து கொண்டு, (இதை, அறபில் ‘உலூ’ என்பர்) அங்கே நிரந்தர நிஷ்டையில் (ஓய்வுறக்கத்தில் இருக்கும் வாவர் மகானுக்கு நினைவஞ்சலி செலுத்தி விட்டுப் சபரிமலை செல்லப் படியேறுவர். 

மேற்குறித்த நீர்த்தடாகத்தில் கை, கால் முகம் சுத்தம் செய்வதற்கும் காரணம் ஒன்றுண்டு. 

இஸ்லாமிய மார்க்கத்தில் முதற்படிப்பினை தூய்மை. இறைவணக்கத்திற்கு (தொழுகை) முன் தூய்மைப்படுத்தல் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

அது போலவே பள்ளிவாசல் (மசூதி) ஒன்றில் நுழைய முன் தன் உடல் அவயங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

ஆகவே ஐயப்பப் பக்தர்களும் அதைச் செய்து கொண்டு தான் வாவர் மகானுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள். 

அம்புலப்புழை, ஆழங்காடு ஊர்களின் சங்க அங்கத்தவர்களும் பக்தர்களும் வாவர் பள்ளிவாசல் முன்றலில் கொடியேற்று வைபவம் நடத்தி மகானுக்கு நினைவேந்தல் அஞ்சலி செய்து சிறப்பிப்பார்கள். 

அதன்பின் பாரம்பரியப் பெருவழிப் பாதையான எருமேலி வாவர் பள்ளிவாசல் வழியில், களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலைக் காட்டுக் கிராமங்களைக் கடந்து சபரிமலை சந்நிதானம், நோக்கி மேலே... மேலே...! 

மத நல்லிணக்கக் கோட்பாட்டுக்கு சபரிமலை ஐயப்பனும், வாவர் மகா ஞானியும் நல்ல உதாரணப் புனிதர்கள்! 

இங்கே அபிமானிகள் பார்க்கும் "வாவர் பள்ளிவாசல்” நிழற்படமும், சில தகவல்களும் நாகர்கோவில் கோட்டார் பேரெழுத்தாளர் “அபூ- ஹாஷிமா” உதவியால் பெற்றவை. நன்றி. 

இனிப்பு-2

 "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும் 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! 

தமிழணங்கே! 

உன் சீரிளமைத் திறம்வியந்து 

செயல்மறந்து வாழ்த்துதுமே! 

வாழ்த்துதுமே!! 

வாழ்த்துதுமே!!!"  

மேலே காணப்படும் வரிகளை வெறுமனே வாசித்தாலே உள்ளத்திலும் உடம்பிலும் உணர்ச்சிப்பிராவகம் ஏற்பட்டு விடும். 

ராகம் இட்டுப் பாடினோலோ, கேட்டாலோ மெய்சிலிர்த்துப் போவோம்.  

எனக்கு அந்த அனுபவம் கொழும்புத் தமிழ் சங்க மண்டபத்திலே பலவேளைகளில் ஏற்பட்டிருக்கிறது. 

தமிழ் நாட்டவர் அனைவருக்கும் அப்படியொரு சிலிர்ப்பும் உணர்வும் ஏற்பட வேண்டுமென்பதற்காக தமிழக முதல்வர் ஓர் அதிரடிக் கட்டளையை இட்டிருக்கிறார். 

“இனி, அனைத்து, அரச நிகழ்ச்சிகளில் ‘நீராரும்’கடலுடுத்த தமிழன்னை வாழ்த்து மோகன ராகத்தில் 55வினாடிகளில் துல்லியமாகப் பாடப்பட வேண்டும். கூடியிருப்போர் எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும்!” 

ஆஹா! கட்டளை கூட உணர்வலைகளைத் தூண்டி என் பேனையை என்னவோ செய்கின்றது. 

அத்தோடு, “தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும். முக்கியமாக பாடலை இசை தட்டுகள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து. பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடவேண்டும்.” என்ற பணிப்பும் வழங்கியுள்ளார். பாடலுக்கு ஒரு பின்னணி வரலாற்றுத் தகவலும் உள்ளது. 

இந்த வாழ்த்து நூற்றாண்டு வரலாறு கொண்டது. இயற்றியவர் மனோன் மணியம் சுந்தரனார். முதன் முதல், தஞ்சாவூர் கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டறிக்கையில் இப்பாடல் வெளிச்சமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 1914ஆண்டு முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தாரின் அனைத்து நிகழ்வுகளும் இந்த வாழ்த்தைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. 

பேரறிவுர் அண்ணாதுரை  1967களில் தமிழக முதல்வரான பொழுது மேற்குறித்த சங்கத்தார் உத்தியோகபூர்வ விழாப் பாடலாக அரசாணைப் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றுவதற்குள் நிரந்தர ஓய்வுறக்கம் கொண்டார் அண்ணா. 

1970நவம்பரில் கலைஞர் முத்துவேல் கருணாநிதி பதவி ஏற்றதும் “நிறைவேற்றுவேன்” என்றார். விஸ்வநாதன் சௌந்தரராஜன் சுசீலாவைக் கொண்டு பதிவான பாட்டு அரசு விழாக்களின் ஆரம்பமாக அமைந்தது. 

அப்புறம், எம்.ஜி.ஆர், ஜெயா அம்மு, எடப்பாடியார் காலங்களில் வாழ்த்துக்கு மௌசு குறைந்தது என்பதோடு பழைய வரலாற்றை நிறுத்திக் கொள்கிறேன். இப்பொழுது மீண்டும் தமிழன்னையை அரியாசனத்தில் ஏற்றி வைத்திருக்கும் முத்துவேலர் கலைஞரின் இரத்தத்திற்கு “நன்றி நன்றி” என நவில்கின்றது மூத்த பேனை!  எவ்வாறாயினும், அடக்க முடியாத ஓர் ஆசை.  தமிழக அனைத்து விழாக்களிலும் ஆரம்ப வாழ்த்தாக அமைகின்ற நேரத்தில், கலந்து கொண்டிருக்கிற அனைவருமே ஒரு சேரப்பாடி குதூகலிக்க வேண்டும்!  எப்படி இருக்கிறது நம்ம தமிழ் நேயர் விருப்பம்? 

குறிப்பு – இச்சித்திரம் ‘தினத்தந்தியில் வெளியானது மறுபிரசுரம் நன்றி.

Comments