
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழ் மக்களது மரபுவழி வந்த ஒரு முதுமொழியாகும். இதனை நம்பிக்கையுடன் இன்றும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கை ஒரு விடயத்தில் மட்டும் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் இன்னமும் நிறைவேறாது தள்ளித் தள்ளிப் போவதுதான் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.
அதாவது சுமார் முப்பது வருடகால யுத்தம், அதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த சுமார் 12வருடங்களுக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும் எனும் நம்பிக்கையில் பல தை மாத பிறப்புகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு தை மாதப்பிறப்புக்களின் போதும் வாழ்த்து தெரிவிக்கும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் தலைமைகளால் அடுத்த தை மாதப் பிறப்பிற்கு முன்னதாக தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென மக்களுக்கு உறுதிமொழி அளிக்கப்படுகிறது.
ஆனால் அவை இன்னமும் நிறைவேறவில்லை, அல்லது நிறைவேற்றப்படவில்லை, அல்லது நிறைவேற்றப்படுவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். அதுவே உண்மையும் கூட.
இந்தத் தவறுக்கு யார் காரணம்? தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனும் முதுமொழி பொய்யாக உண்மையில் யார் காரணம்? இதுபற்றி இனியும் நாங்கள் சிந்திக்காமல் இருந்தால் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையில் இது ஒரு விடை காணாத வினாவாகவே இருந்துவிடப் போகிறது.
பேச்சு நடத்த வாருங்கள், எமக்கிடையேயான பிணக்குகளை நாமே பேசித் தீர்ப்பமென வருந்தி அழைக்கும் இன்றைய அரசாங்கத்தின் தொடரான அழைப்புக்களை கருத்திற் கொள்ளாது பாரதப் பிரதமர் மோடிக்கு ஆவணத்தை சமர்ப்பித்து இனி வரும் தை மாதப்பிறப்புக்களையும் ஏமாற்றம் தரும் மாதப்பிறப்புக்களாக மாற்ற வேண்டுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். தீர்வுக்கான கை கூடக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்நாட்டிலேயே இருக்கின்றபோது அயல்நாடுகளில் தேடி காலத்தைக் கடத்தி மக்களை ஏமாற்றும் முயற்சிகளை தமிழ் தலைமைகள் கைவிட வேண்டும்.
சர்வதேசம் எமது பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்யும் என்று மேலைத்தைய நாடுகளை நம்பிக் கெட்ட உண்மைகளையும் நாம் மறந்து விடக்கூடாது.
இனி அடுத்து வருகின்ற தை மாதப்பிறப்புக்குள் அரசுடன் பேசி சமரசமான தீரவைக் காண திடசங்கற்பம் கொள்வோம். அதுவே நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இந்த இனப் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வாக அமையும் என்பதே எமது கருத்தாகும்.