இணக்கப்பாடின்றி தயாரிக்கப்பட்ட இந்தியப் பிரதமருக்கான ஆவணம் | தினகரன் வாரமஞ்சரி

இணக்கப்பாடின்றி தயாரிக்கப்பட்ட இந்தியப் பிரதமருக்கான ஆவணம்

தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள், நீண்ட கால முடக்க நிலைமைக்குப் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக வேகம் பிடித்துள்ளமை தமிழ் சமூகத்துக்கு புத்துணர்வை அளிப்பதாக உள்ளது. புதிய அரசியலமைப்பு வரைவு தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்த பின்னரே, 13ஆம் திருத்தச் சட்டம் அவ்வரைவில் உள்ளடக்கப்படாமல் போகலாம் என்ற சந்தேகம் தமிழர் தரப்புக்குள் எழுந்துள்ளது.  

அதனையொட்டியதாக ரெலோவின் அனுசரணையில் சகல விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைத் தயாரித்து, அதில் சகல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் கையெழுத்திட்டு பாரதப் பிரதமருக்கு அனுப்பி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பாரதப் பிரதமருக்கான வரைவில் எவற்றை சேர்த்துக் கொள்வது, எவற்றை கைவிடுவது என்பது தொடர்பாக நெடிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முதல் வரைவுக்கான தீர்மானங்கள் எட்டப்பட்டன.  

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசனும் கலந்து கொண்டிருந்தனர். இந்தியப் பிரதமருக்கான இவ்வரைவு கட்சித் தலைவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, மலையக மற்றும் முஸ்லிம் சமூகங்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் போதுமான கரிசனை செலுத்தப்படவில்லை எனக் கருதப்பட்டதால் பிறிதொரு ஆவணம் தயாரிக்கப்பட்டு அதுவும் தலைவர்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டது.  

எனினும் தமிழரசுக் கட்சி அதை நிராகரித்ததால் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி சுமந்திரனின் கொழும்பு இல்லத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வரைபு முடிவு செய்யப்பட்டு தலைவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அதில் கையெழுத்திட்டு விட்டார். அடுத்த சில தினங்களில், ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை- இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பிலான இந்த ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டு பாரதப் பிரதமரின் பார்வைக்கு அனுப்பப்படவுள்ளது.  

சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததோடு தலைமன்னாரில் இருந்து இராமர் பாலம் வரை படகில் சென்று பார்வையிட்டுத் திரும்பியதையும், பின்னர் “இது முடிவல்ல; ஆரம்பம் மட்டுமே” எனக் கூறியதும் இந்தியாவினால் அரசியல் ரீதியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்குமென்பதில் ஐயமில்லை. அதேசமயம் சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார் என்பதும் கவனத்திற்குரியது.  

இப்பின்னணியில் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் பிரச்சினைகளை இந்திய அரசிடம் தெரிவித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் தரச் சொல்வதற்கான சரியான தருணம் இது என்று தமிழ்த் தலைவர்கள் கருதியதில் தவறிருக்க முடியாது. ஆனால் இந்த ஆவணம் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருத்தத்துக்குரியது என்பதோடு, இது இனப்பிரச்சினை வரலாற்றில் மற்றொரு வரலாற்றுத் தவறாகவும் அமையவுள்ளது.  

இந்த இறுதி ஆவணத்தில், மலையக சமூகத்தின் பிரதிநிதியாக செயல்பட்ட மனோ கணேசனும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக ரவூப் ஹக்கீமும் கையெழுத்திடவில்லை. அச்சமூகங்களின் அபிலாஷைகளை உள்ளடக்குவதில் பிரச்சினைகள் தோன்றியதாலும், உள்ளடக்குவது தொடர்பாக தொடர்ந்து பேசுவதால் காலதாமதம் ஏற்படும் என்பதாலும் மனோவும் ஹக்கீமும் விலகிக் கொண்டு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக நல்ல உள்ளத்துடன் கூறியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களுக்கும் உரிமைகளுக்கும் தொடர்ந்து மலையக மக்கள் ஆதரவு தந்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து நல்குவோம் என்றும் மனோகணேசன் கூறியுள்ளார்.  

மேலும் வடக்கின் சில முக்கிய தமிழ்க் கட்சிகளும் இந்த ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சைப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் இலக்கை ஏன் அடையத் தவறின என்பதற்கான காரணம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த குரலாக அது அமையவில்லை என்பதுதான். இதுதான் தமது நிலைப்பாடாக இருக்கும் என்பதை முன்னரே புரிந்து கொண்டு தமிழ்க் கட்சிகள் மனோ, ஹக்கீமை சேர்த்துக் கொள்ளாமல் விட்டிருக்கலாம். மனக்கசப்பு ஏற்பட்டிருக்காது. எனினும் ‘ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு’ என்பதை மறந்து விடலாகாது.

Comments