செல்லாக் காசு | தினகரன் வாரமஞ்சரி

செல்லாக் காசு

பச்சைக் கம்பளமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்த அழகான தேயிலை தோட்டம். அதற்கு மத்தியிலே அரை, குறையாகவும், அலங்கோலமாகவும் ஒரு லயன். அந்த லயன் திண்ணையில் பரட்டை தலையுடனும், காய்ந்து போன முகத்துடனும் தனது முன்னங்கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு களைத்துப் போனவளாய் அமர்ந்திருந்தாள் மங்களம். தனது கணவன் மாடசாமியின் வருகையை எதிர்பார்த்திருந்தன மங்களத்தின் மங்கிய விழிகள். தோட்ட வேளைகள் முடிந்து மாடசாமி வருவதற்கு ஐந்து மணிக்கு மேலாகிவிடும் என்பது மங்களத்துக்கு தெரியும். இருந்தாலும் தனது தலைவனின் வருகைக்காக காத்திருப்பதிலும் ஒரு தனி சுகம் இருப்பதாகவே அவள் உணர்ந்தாள். இதனால் அவளுக்கு உடல் வலிகள் விளங்கவே இல்லை. எனினும் இடைக்கிடை வரும் இருமலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வலிகளின் மிகுதியால் அவளையும் அறியாமல் எழுந்து வந்த மங்களத்தின் முனகல் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறாள் இளைய மகள் தர்ஷனி.

'அம்மா இவ்வளவு நேரமா காய்ச்சல்ல அவதிப்பட்டு போட்டு இப்ப இங்க என்ன செய்ற. வெளிய கனக்க காத்தும் வீசுது. எழும்பி உள்ள வாயேன்.'

'இல்ல மகள் நான் பெனடோல் ரெண்டு போட்டன். இப்ப கொஞ்சம் சொகமா இருக்கு. மூச்சுதான் சரியா வர மாட்டேங்குது'

'உனக்கு சளி வந்து நல்லா முத்திப் போச்சு அம்மா. அதுதான் மூச்செடுக்க ஏலாம இருக்கு. வெளிய குளிராவும் இருக்கு நீ உள்ளால வந்து இரு'

'எங்களுக்கு உள்ள, வெளிய ரெண்டும் ஒன்டுதானே மகள். வெளிய வீசுற குளிர் காத்து கூரைக்கால உள்ளுக்குத்தானே வீசுது.'

மங்களம் இப்படி சொன்னதும் அவளுடைய மகளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்குள் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள் தர்ஷனி. இதை அவதானித்த மங்களத்தின் கஷ்டம் இரட்டிப்பானது போலிருந்தது. காய்ச்சலின் வேதனை ஒரு புறம். வறுமையின் ரணம் மறு புறம். எண்ணிப் பார்த்த போது அவளின் இதயமே வெடித்து விடும் போல் இருந்தது.

ஆமாம் மாடசாமியும்,மங்களமும் இல்லற வாழ்வினுள் நுழைந்து இருபது வருடங்கள் கழிந்து விட்டன. இதற்குள் கண்டதெல்லாம் நான்கு குழந்தைகள் மட்டுமே. தனிக்குடித்தனம் நடத்த தொடங்கிய நாள் தொட்டே வறுமை அவர்களை வாழ்த்தி கொண்டிருந்தது. இத்தனைக்கும் மாடசாமியை சொல்லியும் குற்றமில்லை. ஏனெனில் அவனும் ஓயாது மாடாக உழைத்தான். இதனால் அவனைப் போலவே அவனது வாழ்க்கையும் தேய்ந்தது. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாத இந்த தோட்டத்து ஊழியனான மாடசாமியால் மீட்சி பெறவே முடியவில்லை.

இந்நிலையில் ஒருநேரம் சாப்பிட்டாலும் கூட மாடசாமியின் மனநிலை மட்டும் உறுதியாகவே இருந்தது. எனினும் ஒரு நேரம் கூட நிரம்பாத அந்த சின்னஞ்சிறுசுகளின் வயிறுகள் வறுமைக்கு வரைவிலக்கணம் கூறிக்கொண்டிருந்தன. இந்நிலமைகளை நிவர்த்திக்க அந்த தோட்டத்து துரையின் பங்களாவுக்கு வேலைத்தேடிச் சென்றாள் மங்களம். அங்கு துரையின் வேண்டுதலுக்கிணங்க அடுப்படி வேலைகளை செய்து கொடுத்து ஒரு சொற்ப வருமானத்தையும் சம்பாதித்தாள்.

என்னதான் விசேஷ திருநாட்கள் வந்து போனாலும் அவர்கள் வாழ்வில் மட்டும் வித்தியாசம் தெரிவதே இல்லை. நோயொன்று வந்தால் கூட மருந்து வாங்க யாரிடமாவது கைநீட்ட வேண்டியநிலை. இதனால்தான் இரண்டு நாட்களாக மங்களத்தை வாட்டும் கடுமையான காய்ச்சலுக்கு மருந்தெடுப்பதற்கும் வழியின்றி தடுமாறினான் மாடசாமி. பசியும் நோயும் இணைந்து மனைவி படும் அவஸ்தைகள் அவனுக்கு அழுகையை வரவழைத்தது.

இத்தனைக்கும் இரண்டு பெனடோல் வாங்கிக் கொடுக்கவும் அவனுக்கு வழி இருக்க வில்லை. இதனால் அடுத்த வீட்டு வேலுவிடம் ஐந்து ரூபா வாங்கி அதற்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்தான். அந்த மாத்திரைகளுக்கு கொஞ்சம் தாக்குப் பிடித்த மங்களம் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டாள். அவள் சிந்தனைகள் சிறகு கட்டிப் பறந்தன. இன்றைக்காவது ஏதாவது வாய்க்கு ருசியா சாப்பிட கிடைக்குமா என எதிர் பார்த்திருந்தாள்.

தூரத்தே மாடசாமி வருவது அவளது கண்களுக்கு மங்கலாகத் தெரிகிறது. கையில் ஏதாவது கொண்டு வருகிறானா என்று நெற்றியில் கரங்களை வைத்து மறைத்து பார்க்கிறாள். மண்வெட்டியை தவிர அவன் கையில் எதுவும் தென்படவில்லை. அவளை அறியாமல் ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்படுகிறது.

'என்ன மங்களம் காய்ச்சல் இப்ப எப்படி இருக்கு? ஏதாச்சும் சாப்புட்டயா?' எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தான் மாடசாமி. 'இப்ப கொஞ்சம் பரவாயில்ல. வாங்க...வந்து முதல்ல ஏதாச்சும் குடிங்க' என்றவளாய் அவனை உள்ளே அழைத்து சென்றாள். வெறும் சாயத்தை மட்டும் உறிஞ்சி குடித்தான் மாடசாமி. அவனது கண்களில் மனைவியினதும் பிள்ளைகளினதும் ஒட்டிய வயிறுகள்தான் பட்டன. 'என்னங்க யாரிடமாவது கடனுக்கு ஏதாச்சும் கேட்டுப்பார்த்தா என்னங்க' என பேச்சுக் கொடுத்தாள் மங்களம். 'ச்சே இந்த நிலமையில யார்தான் கடன் தரப்போரா' என நினைத்தாலும் அவன் அதை வெளிக்காட்டவில்லை. அந்த லயத்தில் வாழும் அனைவரின் கதையும் ஓரே மாதிரியாக இருக்கும் போது யாரு யாரிடம் கடன் கேட்பது. இதைப்பற்றி நன்கு தெரிந்திருந்தும் மங்களத்தை சமாதானப்படுத்துவதற்காக 'நான் எத்தனையோ பேரிடம் கேட்டுப் பார்த்துட்டன் மங்களம் ஆனா யாருமே உதவி பண்ணல.' என்று தட்டுத் தடுமாறி கூறிவிட்டு உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்தான்.

ஒருவாறாக அன்றைய இரவு கழிகிறது. இரவு முழுக்க விழித்திருந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் மண்வெட்டியை தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு போனான் மாடசாமி. ஒருவாறாக நேரமும் கடந்து செல்ல வேலை முடிந்து வரும் மாடசாமி தனக்கு தெரிந்தவர் களிடம் தன் சோகக் கதையை சொல்லி கடன் கேட்டான். எப்படியாவது இன்று மங்களத்துக்கு மருந்தெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இறுதியாக துரையிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே விடையாக கிடைக்க வேதனைப்பட்டான்.

இந்த நிலையில் மங்களத்தின் முகத்தைக் கூட பார்க்க வெட்கப்பட்டு போனவனாய் வீட்டுக்குள் நுழைகிறான். ஆனால் மாடசாமியின் எண்ணத்துக்கு மாறாக மங்களத்திற்கு ஓரளவு காய்ச்சலும் குணமாகி இருந்தது. இதனால் அவன் மனம் சற்று ஆறுதலடைந்தது. இந்த திருப்தியில் மாடசாமி நேரத்தோடு தூங்கிவிட்டான். இரவு ஒரு மணியிருக்கும் களைப்பின் மிகுதியில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மாடசாமி மங்களத்தின் முனகல் சத்தம் கேட்டு கண் விழித்தான்.

'மங்களம்...மங்களம் உனக்கு என்னம்மா செய்து? ஏன் இப்படி உளர்ர? என அவளை தட்டியெழுப்பியவன் அதிர்ந்து போனான். மேனியெல்லாம் நெருப்பாக கொதிக்க ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாதவளின் விழிகள் மட்டும் மாடசாமியையே நோக்கிக் கொண்டிருந்தன. அடுத்தகணம் 'மங்களம் இது என்ன மங்களம் என்னைப்பாரேன் ஏதாவது பேசேன்' என மாடசாமி பதற பிள்ளைகளும் விழித்துக் கொண்டனர். அனைவரும் போட்ட கூச்சலினால் சற்று நேரத்தில் பெரியதொரு கூட்டமே கூடிவிட்டது. மாடசாமியின் இதயம் வேகமாக அடித்தது.

'என்னய்யா இப்ப பதறி என்ன லாபம் விடியட்டும் ஏதாச்சும் செய்வம்' என்றான் பக்கத்தில் வசிக்கும் ஒருவன்.

'மாடசாமி நேரங்காலத்தோட ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ உனக்கு அறிவில்லையா?' என்றான் இன்னொருவன்.

'உங்களுக்கெல்லாம் எப்பதான் புத்தி வருமோ தெரியல' இது இன்னொருவன்

மாடசாமியின் நிலைமை புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். ஆனால் அடுத்த வீட்டு வேலு மட்டும் கொஞ்சம் மனமிரங்கி 'அண்ண விடியும் வரை பார்த்துக்கிட்டிருக்க முடியாது. அக்காவ இப்பவே ஆஸ்பத்திரிக்கு கூட்டி போகணும் அதனால நம்ம துரை கிட்ட போய் கொஞ்சம் காரை கேட்டுப் பார்த்தா என்ன?' என்ற யோசனையை முன்வைத்தான். வேலுவின் பேச்சில் மாடசாமிக்கும் நம்பிக்கை பிறந்தது. உடனே இருவரும் அந்த பங்களா நோக்கி புறப்பட்டனர்.

அங்கே அந்த பங்களாவை மயான அமைதி சூழ்ந்திருந்தது. துரை வீட்டு நாய் மட்டும் விழித்துக் கொண்டு கத்த தொடங்கியதும் துரையும் விழித்துக் கொண்டார். முன் லயிட்டை போட்ட துரை ஜன்னலால் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. மாடசாமி மெதுவாக ஜன்னல் அருகில் செல்கிறான். ஜன்னலைத் திறந்த துரை கடும் சினத்துடன் இருப்பது தெரிந்தது. அவரிடம் வீசிய சாராய வாசைனயை பொருட்படுத்தாத மாடசாமி

'ஐயா...ஐயா என் மங்களம் உயிருக்காக போராடிக்கிட்டிருக்கா ஐயா. அவள இப்பவே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகனும் ஐயா. உங்கட கால்ற விழுந்து கெஞ்சுறன் உங்க கார தந்து உதவிபண்ணுங்க தயவு பண்ணி முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதிங்க ஐயா?' மாடசாமி கெஞ்சிக் கொண்டே இருந்தான். ஆனால் துரையின் உள்ளக்கதவுகள் திறப்படவே இல்லை. படாரென ஜன்னலை சாத்தியவர் விளக்கை அணைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். மாடசாமிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அவனை தாங்கிப் பிடித்துக் கொண்ட வேலு 'அண்ண..அண்ண கடவுள் கைவிட மாட்டார் அண்ண' என ஆறுதல் சொல்லிக் கொண்டே வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வேதனையுடன் பக்கத்துக் கடையைத் தட்டி இரண்டு மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இருவரும் வீடு நோக்கி வேகமாக நடந்தனர். வீட்டுக்குள் இருந்து வந்த சத்தம் மாடசாமியை பதற வைத்தது. 'அம்மா.. அம்மா எங்கள பாரம்மா. பேசம்மா' என்று பிள்ளைகள் கதறும் சத்தம் மாடசாமியை உலுக்கியது. ஓடிச் சென்றவனின் கண்களில் மங்களத்தின் உயிரற்ற உடல்தான் தென்பட்டது. ஆமாம் மங்களம் நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். பிள்ளைகளோடு சேர்ந்து அவனும் கத்தினான் கதறினான் அந்த தோட்டத்து மக்கள் அனைவரும் அழுது தமது சோகங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் அடங்கியது. இரண்டு நாட்களில் மங்களத்தின் இறுதி கிரிகைகளும் நடந்தேறின. அதற்குள் வேலுவின் வேண்டுதலுக் கிணங்க தோட்டதுரை தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை யாரும் வேலைக்கு செல்வதில்லை என முடிவு செய்தனர்.

'வேலு நாம இப்படி செய்றதால நமக்குதானப்பா நஷ்டம்' என கவலைப்பட்டான் மாடசாமி. 'இல்ல அண்ண, நாங்களும் மனுஷங்கதான் என்கிறத அந்த கல் நெஞ்சக் காரனுக்கு உணர்த்தியாகனும்' என இளமையின் வேகத்தில் சூடாக பதிலளித்தான் வேலு. அதற்கு மேல் மாடசாமி எதையுமே பேசவில்லை. நாட்களின் நகர்வில் வேலை நிறுத்தம் ஆறாவது நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த லயன் மக்களின் வயிறுகள் ஒட்டிப்போய் விட்டன. ஆனால் துரையின் மனம் தளரவில்லை மாறாக இன்னும் ஒரு நாளைக்குள் வேலைக்கு வராவிட்டால் வேறு இடத்திலிருந்து தொழிலாளர்களை கொண்டு வரப்போவதாக அறிவித்தல் கொடுத்தார். இதற்கு ஈடுகொடுத்து செயற்பட முடியாதளவுக்கு அந்த மக்களை வறுமை வாட்டி எடுத்தது. இந்த ஒரு சில நாட்களுக்குள் மாடசாமிக்கும் பெரும் கஷ்டமாகிவிட்டது. பிள்ளைகளின் நிலை அவனுக்கு வேதனையைக் கொடுக்கவே ஒரு முடிவுக்கு வந்தான். அதாவது இனியும் வேலைக்குச் செல்லாமல் இருந்தால் தனது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அந்த மக்களுக்கு உணர்த்தினான். மாடசாமி சொல்வது அனைவருக்கும் சரியாகப்பட நாளைக்கே வேலைக்கு செல்வதென முடிவு செய்தனர். வேலுவாலும் இனி எதுவுமே செய்ய முடியாத நிலை. மறுநாள் பொழுது விடிகிறது. அங்கே உதிரங்களை வியர்வையாக்கி பிறரை வாழ வைக்கும் அந்த வஸந்தம் காணாத வள்ளல்கள் மண்வெட்டியுடனும், கூடைகளுடனும் மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.

வரக்காமுறையூர் ராசிக்

Comments