முஸ்லிம் கட்சித் தலைமைகளிடம் முஸ்தபா முன்வைத்த கோரிக்கை! | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் கட்சித் தலைமைகளிடம் முஸ்தபா முன்வைத்த கோரிக்கை!

முன்னாள் அமைச்சரும் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவருமான பைசர் முஸ்தபா கடந்த வாரம் நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கு முன்வைத்த ஒரு கோரிக்கை, தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பான பேசுபொருளாகக் காணப்பட்டது.

அதாவது, முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அமைச்சுப் பதவிகளை எதிர்பாராது, நாட்டினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்பதே பைசர் முஸ்தபா முன்வைத்த கோரிக்கை அழைப்பாக இருந்தது.

அதிலும் பைசர் முஸ்தபா, தனது கருத்தில் விசேடமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு முஸ்லிம் கட்சித் தலைமைகள் செயற்பட வேண்டுமென்றும் ஆலோசனையையும் முன்வைத்திருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியல்ல.

அவர்கள் தமது மக்களது தேவைகளை நிறைவேற்றுவதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகளை கண்டறிவதிலும் அன்றிலிருந்து இன்றுவரை ஒரேவிதமான கொள்கையை கடைப்பிடித்து வருவதையே பைசர் முஸ்தபா முன்னுதாரணமாக சுட்டிக் காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.

உண்மையில் பைசர் முஸ்தபாவின் கருத்தை முஸ்லிம் கட்சித் தலைமைகள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டுமென்பதுதான் சமகால யதார்த்தம். இன்று எதிரணியில் இருக்கின்ற முக்கியமான முஸ்லிம் கட்சிகள் பலவும் கடந்த தேர்தலில் இன்றைய அரசாங்கத்துக்கு எதிராக நின்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டமை வரலாறு. ஆனால் அந்த முஸ்லிம் கட்சிகளின் இலக்குகள் நிறைவேறாமல் போனதே உண்மை.

இந்நிலையில், எதிர்வரும் பதினைந்து, இருபது வருடங்களுக்கு இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சியே தொடரும் எனும் மக்களது கருத்தை சரியாக அறிந்து கொண்டே பைசர் முஸ்தபா, இத்தகைய ஒரு கருத்தை தான் சார்ந்த சமூகத்தின் நலன் கருதி நிச்சயமாக முன்வைத்திருக்கக் கூடும்.

எனவே முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இந்த விடயத்தில் தீவிரமாக சிந்தித்து செயற்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளைத் தவிர, அவற்றில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் இன்று அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுகிறார்களென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதில் ஒளிவுமறைவுக்கு எதுவுமில்லை.

இந்நிலையில், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தமது கடந்த காலத்தையும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று அரசாங்கத்தை வீம்புக்காக எதிர்த்து நிற்கும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தினதும் தலைவர்கள், இன்று ஆட்சியிலிருக்கும் தலைமைகளுடன் கடந்த காலங்களில் ஒன்றாக ஒரே அமைச்சரவையில் அமர்ந்திருந்து பணியாற்றியவர்களென்பது உலகறிந்த உண்மை. ஆனால் இன்று அதே தலைமைகளை காரணம் தெரியாது விதண்டாவாதமாக விமர்சிக்கும் ஒரு கைங்கரியத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். இன்றைய ஆட்சியாளர்களின் திறமைகளை அன்று இதே முஸ்லிம் கட்சித் தலைமைகள் பாராட்டிப் பேசிய, புகழ்ந்து தள்ளிய வரலாறுகளுக்கு ஊடகங்கள் இன்றும் சாட்சியாக உள்ளன.

அரசாங்கத்தை எதிர்ப்பதும், அதற்காக மக்களைத் தூண்டி விடுவதும், ஊடகங்களில் தம்மை காரணமின்றி விளம்பரப்படுத்துவதும் மட்டுமே இன்றைய எதிர்க்கட்சியின் செயல்பாடாக உள்ளது. ‘அவ்வாறான எதிர்க்கட்சியில் இனியும் நீங்கள் அங்கம் வகித்து சமூகத்துக்கு எதனையுமே செய்யாது இருக்க வேண்டுமா?’ என்ற வினாவே பைசர் முஸ்தபா முன்வைத்த கருத்தின் சாராம்சமாக உள்ளது.

இதனை ஏற்றுக் கொள்வது முஸ்லிம் கட்சி தலைமைகளின் பொறுப்பும் அவசியமுமாகும். அரசாங்கத்துடன் முஸ்லிம் கட்சித் தலைமைகள் இணைவது, இணைந்து செயற்படுவது என்பது அவர்களுக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே இருந்த இடத்துக்கு மீண்டும் வந்து சமூகத்துக்குச் சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக அதனைக் கருத வேண்டும். அந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், இந்தக் கட்சிக்கு தாவி ஆதரவு கொடுப்பதும் என்பதுமாக பெரும்பான்மைக் கட்சிகளை தராசில் போட்டு எடை பார்க்காமல், சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்பதே பைசர் முஸ்தபாவின் எண்ணமாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய பைசர் முஸ்தபாவின் கருத்து முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது தாம் சார்ந்த தமிழ் மக்களுக்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி கொள்கைகளுக்காக ஒரே நிலைப்பாட்டிலிருக்கும் அவர்களது மனநிலையை பைசர் முஸ்தபா பாராட்டி இருக்கலாம். அது உண்மையும் கூட.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலமாக அரசியலுக்கு வந்த பைசர் முஸ்தபா, மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் சார்ந்த முஸ்லிம் மக்களை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லையெனக் கூறி அங்கிருந்து வெளியேறி தனது எதிர்ப்பைக் காட்டியவர்.

அதன் பின்னர் தேசியக் கட்சியில் இணைந்து தனது சமூகத்திற்காக பதவியிலிருக்கும் போதும், பதவி இல்லாத போதும் குரல் கொடுத்து வருகின்றார். எனவே அவரது அழைப்பை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அலட்சியப்படுத்தாது, கரிசனையுடன் கருத்தில் கொண்டு செயல்பட முன்வருவது அவசியமென்பதே எமது கருத்தாகும்.

Comments